ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை

 
 வகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.

மாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.

இனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.

குப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.

அதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் "" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே! இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்'' என்று பல முறை சொல்லியும் அந்த மாணவர் அழுக்கான குல்லாவையே அணிந்து வந்தாராம். இதைச் சகித்துக் கொள்ள முடியாத அந்த ஆசிரியர், மாணவரின் தலையிலிருந்த குல்லாவை அவரே எடுத்துக்கொண்டு போய் சுத்தமாகத் துவைத்துக் கொண்டு வந்து கொடுத்தாராம்.

ஆசிரியரே தனது அழுக்குக் குல்லாவைத் துவைத்துச் சுத்தமாக்கிக் கொண்டு வந்து கொடுத்ததைக் கண்டதும் அந்த மாணவர் வெட்கித் தலைகுனிந்தார். அதன் பிறகு அந்த மாணவர் குல்லாவை எப்போதும் சுத்தமானதாகவே அணிந்து வந்தாராம்.

கல்வியை மட்டும் மாணவருக்குக் கற்றுத் தராமல் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் சேர்த்துக் கற்றுத்தந்த இந்த ஆசிரியர் யார்?

தில்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தை நிறுவி அதன் துணைவேந்தராக இருந்தவர். ஜெர்மன் நாட்டுக்குச் சென்று படித்து பி.எச்டி. டாக்டர் பட்டம் பெற்றவர். மிகச் சிறந்த கல்வியாளர். அவர் தான் டாக்டர் ஜாகீர் ஹுசைன்.
அவர் நடத்தி வந்த பல்கலைக்கழகத்துக்கு காந்தி, நேரு போன்ற தேசியத் தலைவர்கள் உள்பட பலரும் நிதியுதவி செய்து வந்துள்ளனர். இவரது பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவி செய்தவர்களில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இருந்த பலரும் திடீரென நிதியுதவி செய்வதை நிறுத்திவிட்டனர்.

நிதி நிலைமை மோசமான நிலையிலும்கூட கல்விக் கொள்கையை மாற்றிக் கொள்ள விரும்பாத ஜாகீர் ஹுசைன், நிதி நிலைமையைச் சரிசெய்ய தன்னுடைய சம்பளத்தையும் மற்ற ஆசிரியர்களின் சம்பளத்தையும் குறைத்துக் கொள்வதென முடிவு செய்தார். அவரிடம் பணிபுரிந்த ஆசிரியர்களும் அதற்கு உடன்பட்டார்கள் என்பதுதான் வியப்புக்குரிய விஷயம்.

அனைவரும் மாதம் ரூ.300 சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்தார்கள். ஆனால் மற்ற பல்கலைக்கழகங்களில் பணி செய்த ஆசிரியர்களின் சம்பளமோ ரூ.1000 முதல் ரூ.2000 வரை இருந்த நிலையில், ஜாமியா மிலியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் ரூ.300 மட்டுமே சம்பளமாகப் பெற்றுக்கொள்ள முடிவு செய்த செய்தி மிகப்பெரிய தியாகமாகப் பேசப்பட்டது.

ஊதியக் குறைவுக்காக எந்தவித ஆர்ப்பாட்டங்களோ, பேரணிகளோ நடத்தவில்லை. அப்படி இருந்தும் அந்தப் பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமை மேலும் மோசம் அடைந்தது. மாதம் ரூ.300 சம்பளமாகப் பெறும் தொகையையும் குறைத்துக் கொண்டு ரூ.200 சம்பளமாகப் பெற்றனர். இதுவும் அதைவிட பெரிய தியாகச் செயலாகப் பேசப்பட்ட நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு நிதி நிலைமை மேலும் மோசமாகவே ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தை ரூ.150 ஆகவும் குறைத்துக் கொண்டனர்.

ஆனால் ஜாகீர் ஹுசைனோ தனது சம்பளத்தை ரூ.95 ஆக குறைத்துக் கொண்டார். இந்த 95 ரூபாய் மாதச் சம்பளத்தில் தான் சுமார் 20 ஆண்டுகள் அதே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்தார்.

இந்த தேச உணர்வும், தியாக உணர்வும் இருந்த கல்வியாளரைத்தான் இந்தியா தனது குடியரசுத் தலைவருக்கான கட்டிலில் மூன்றாவது முறையாக அமரவைத்து அழகு பார்த்தது.

இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த முதல் இஸ்லாமியர். கீழே இருப்பவர் மேலே போக ஏறிச்செல்ல உதவும் ஏணியும், இக்கரையில் இருப்பவர் அக்கரைக்குச் செல்லத் தோணியும் உதவுவதைப் போல மாணவச் செல்வங்களுக்காகவே தங்களை உருக்கிக் கொண்டு வெளிச்சத்தைத் தந்து கொண்டிருக்கும் இந்த மெழுகுவர்த்திகள் போற்றுதலுக்குரியவர்கள். வணக்கத்துக்கு உரியவர்கள்.

ஆசிரியர் மட்டும் மனது வைத்துவிட்டால் அனைத்து மாணவர்களையும் அப்துல் கலாம்களாக மாற்றி விட முடியும். அவமானங்களும், அலட்சியங்களும் விண்ணைத் தொடும் வெற்றிகளுக்கான எரிசக்திகள் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

சம்பவங்கள் மூலம் விளக்கி அவர்களை உருக வைக்க முடியும்.மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் மகத்துவத்தை வெளிக்கொண்டு வரும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்துவோம்!
Post by கே. பாலா
 from  Asiriyar Kural facebook

Comments