கடும் மனித எத்தனங்களோடு நடைபெற்ற நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா 2020 மூன்றாம் நாள் மாலை சிறப்பு நிகழ்வுகள் சிறப்புற நிகழ்ந்தன.
நேமிநாதம் காலத்தின் பிரதி என்கிற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் ஆய்வு நூல் இது.
எல்லோரும்தான் வாசிக்கிறார்கள், ஆய்வு செய்கிறார்கள் இதில் என்ன சிறப்பு இருந்துவிட முடியும் என்கிற கேள்விகள் இருந்தால் அசுரத்தனமான வாசிப்பு என்றால் என்ன என்பதற்கு இங்கே (இணைப்பை சொடுக்கவும்) சென்று பார்த்து அதிர்ந்தால் நான் பொறுப்பல்ல. இவ்வளவு நுட்பமாக ஒரு நூலை படித்தவர், மேலும் ஒரு நூலை ஆய்வு செய்ய வேண்டும் என்றால் எப்படி அந்த நூலை பிரித்து மேய வேண்டும் என்பதற்கு சமகாலத்தின் உச்சகட்ட உதாரணம் இந்தக் கட்டுரை.
வீதி இலக்கியக் களத்தின் நிறுவனர், புதுகை கணிணித் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் என்பதெல்லாம் நீங்கள் அறிந்ததே. ரசிகமணியை போல நல்ல வாசிப்பை அணுக, படைப்பை தொடங்க ஒரு பயிற்சிக் களமாகத்தான் இவற்றை துவங்கினார் முனைவர்.அருள்முருகன்.
மேலும் முனைவர்.பா.மதிவாணன் அவர்களின் உரையோடு வெளியாகும் நூல் என்றுவேறு அறிவிப்பு. இவர் இன்னொரு தமிழ் இமயம்.
ஆனால் நூல் ஆசிரியர் தேர்வுத் துரையின் இணை இயக்குனராக இருப்பதால் திடுமென விருதுநகர்வரை செல்ல வேண்டிய நிலை. அவருடைய வருகைக்கு முன்னதாகவே நிகழ்வை துவக்கவேண்டிய கட்டாயம்.
அய்யா மதிவாணன் அவர்களின் உரையை முழுமையாக கேட்க முடிந்தது.
மண்ணின் மைந்தர் ஓவியர் மாருதி அவர்களும் சிறப்பிக்கப்பட்டதால் கொஞ்சம் அப்படி இப்படி நேரத்தை நிர்வாகம் செய்து நூலாசிரியர் வரும் வரை நீட்டித்து ஏற்புரையை கேட்க இயன்றது.
அவையில் குறைந்த நபர்களே இருந்த மாலை நேரத்தின் பின் பகுதியில் ஒரு நீண்ட ஆய்வுரையை வழங்கினார் அய்யா அருள்முருகன்.
இரண்டு பிரதிகள் வாங்கிக்கொண்டோம், ஆசிரியரின் கையொப்பத்தோடு.
இனிய சந்திப்பாக தமிழாசிரியர் அண்ணா ரவி அவர்கள் வருகை தந்திருந்தார். அவருக்கு ஒரு நூலை பரிசளிக்க அவரோ அவர் ஏற்கனவே வாங்கிய நூலை பரிசளித்து சென்றார்!
தமிழ் இலக்கிய (இலக்கண) வரலாற்றில் தவிர்க்க முடியாதா ஒரு ஆய்வு நூலை வெளியிட்ட பெருமையை புத்தகத் திருவிழா 2020 தக்கவைத்துகொண்டது.
Comments
Post a Comment
வருக வருக