கருப்பாயி என்கிற நூர்ஜஹான்

வாசிப்பு அனுபவப்பகிர்வு

நாவல்


1940களில் மீசை வளர்த்த தொல்தமிழ் பூர்வகுடிகளின் கிராமம். உழைப்பில் சிகரம்-சாதியில் தரைதட்டு உலகிலே இல்லாத நடைமுறையாய், உழைப்பவனை “கீழ்சாதி பயலுவ” என்று அடைமொழி கொடுத்த இந்தியப் பெருந்தேசம் முன்னொரு காலத்தில் அப்பூர்வகுடிகளின் பூமியாக இருந்ததை வெகு கவனமாய் மறந்துவிட்டது.

பேருந்து பயணங்களின் போது கூட்ட நெரிசலில் நமது கால் பல முறை மிதிபடும் சிலசமயம் மிதிப்பவர் நமது மிதிபட்ட விரல்களில் இருந்து எடுக்க தாமதம் ஆகும். இன்னும் சிலர் அவர்கள் கால் நம்பி காலை மிதித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தும் காலை எடுக்க தாமதம் செய்வார்கள். நாம் நாகரீக முகமூடி விலக்கி சார் காலை எடுங்க பிளீஸ் என்று சொல்லும் வரை கண்களை திறந்த வாக்கில் ஒரு தியானத்தை செய்வார்கள். வலிக்கிறவர்கள் சொல்லாத வரை வலி தொடரத்தான் செய்யும்.

அன்வர் பாலசிங்கம் தனது சமூகத்தின் வலியினை ஒரு கதறலாக பதிவிட்ருக்கிறார். விடிவெள்ளி என பயணத்தை துவங்கியவர்களின் வானில் சூரியன் தட்டுப்படாமல் போனாலும் சரி ஒளிந்துகொண்டு வருவேனா என முரண்டு பிடித்தால் வாழும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் நரகமாகி விடாதா? 97 பக்க நாவலை முடிக்கும் முன் நமது இதயம் எத்துனை முறை அதிர்கிறது. காற்றுவாக்கில் கால் நூற்றாண்டிற்கு முன் கேட்ட செய்தி இன்று இப்படி ஒரு விபரீத கோணமடுத்து நிற்கிறது.

பாசமிகு மகள் தனது தந்தைக்கு எழுதும் கடிதமாக தொடங்கும் நாவல் தற்கொலை கடிதம் என்ற போது வெடித்துத் தொடர்கிறது. பிலால் நகரின் சுமார் 40 பெண்கள் தங்களது 40 வயதிலும் திருமணம் மறுக்கப்பட்டவர்களாக வாழ்கிறார்கள். அதில் ஒருத்தியாக வரும் நூர்ஜகான் என்கிற கருப்பாயியின் வதைப்பட்ட வாழ்வே இந்நாவல்.

ரொம்ப குழம்ப வேண்டாம். நூர்ஜகான் ஒரு முதல் தலைமுறை முஸ்லீம், போதாகுறைக்கு அவள் ஒரு முன்னால் தலித் தந்தைக்கு பிறந்தவள். நாவலை வாசித்து பலநாட்கள் ஆனபின்பும் நெஞ்சை விட்டு நீங்காத உளுந்து மூட்டை காதர், தந்தையை தர்மசங்கடப்படுத்தாமல் தான் தற்கொலை செய்துகொண்ட நூர் என பல அழுத்தமான பாத்திரங்கள் இந்நாவலின் பலம். இதைப்போய் எப்படி சொல்ல என்று விட்டுவிடாமல் மிக முதிர்ந்த பக்குவத்தோடு படைக்கப்பட்ட இந்நாவல் அன்வருக்கு ஒரு தனித்த அடையாளத்தை பெற்றுத்தரும். நூர்ஜஹனை இரண்டாம் தாரமாக கேட்ட அசரப்பின் அரக்க சிரிப்பு நம்மை வதைக்கிறது.

மார்க்கங்கள் காட்டும் வழி மனிதவிழிகளுக்கு புலக்படததால் ஏற்படும் குழப்பத்தின் குரூர விளைவே இந்நாவல். தலித்துகளுக்கு மட்டுமல்ல இஸ்லாமிய நண்பர்களும் அவசியம் படிக்க வேண்டிய நாவல் இது.

நம் வாழ்க்கையினை நாம் அதுவாக இதுவாக வேறு ஏதாவதாகவும் வாழமுற்படுகிறோம். ஒரேமுறை கிடைக்கும் இந்த வாழ்க்கை வரத்தை மனிதனாக வாழ முற்படுவதில்லை பலரும். வரத்தை சாபமாக்கும் அறியாமை மனிதர்கட்கே உரியகுணமா?


கலங்கைப் பதிப்பகம்-யாதுமாகிப் பதிப்பகம் செங்கோட்டை, திருநெல்வேலி
கலங்கைப் பதிப்பகம்
புதுக்காலனித் தெரு, கலங்காத கண்டி
பூலன் குடியிருப்பு அஞ்சல்
செங்கோட்டை,(தாலுகா)
திருநெல்வேலி 627813
தொடர்புக்கு : 9445801247
9791498999

04/03/2012

Comments

  1. கருப்பாயி என்ற நூர்ஜஹான் நாவல் ஆசிரியருடன் நேருக்கு நேர், கள ஆய்வுகளின் தொகுப்பு
    http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/27556-2014-12-22-05-41-53

    ReplyDelete

Post a Comment

வருக வருக