திடீரென ஒரு போன் கால் திரு ஜம்பு அய்யவிடமிருந்து. புதிதாக துவக்கப்படும் எம்.எட். வகுப்பறைகள் திறப்பு விழாவிற்காக புதுகை கல்வியியல் கல்லூரிக்கு வருவதாக கூறினார். சில விசயங்களை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றும் சில இடங்களை உங்களை அழைத்துப்போய் காட்டவேண்டும் தம்பி என்றும் கூறினார்.
பேரா. ஜம்புநாதன் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் ஆதர்சம். பலருக்கு அவரை ஒரு கடவுள் நிலையில் வைத்துதான் பார்த்து பழக்கம். எனக்கு அவரைப்பற்றிய இன்னொரு முகம் தெரியும் என்பதால் சிறிய படபப்பு ஒட்டிக்கொண்டது.
புதுகையின் பிரதான ஆறான வெள்ளாறு உற்பத்தியாகும் பகுதியிலிருந்து அதன் முகத்துவாரம் வரை ஆற்றுப்படுகையில் நடந்தே சென்றவர். பல ஆய்வுகளை மேற்கொண்டவர். இதுகுறித்த ஒரு விரிவான நூலை "இந்திய நதிகள்" என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டவர்.
நிச்சயமாக ஒரு புதிய தகவல் உறுதி, அப்புறம் என்ன என்று பேராசிரியரைப் பார்க்க விரைந்தேன். எதற்கென்றே சொல்லாமல் ரயில்நிலைய லெவல் க்ராசிங்கை கடந்தோம். பின்னர் சொன்னார் இங்கே ஒரு பழங்கால நினைவுச் சின்னம் இருக்கிறது தெரியுமா? என்றார். அவர் சொன்ன இடத்தின் அருகில் சுடுகாடு இருப்பதுதான் தெரியும்.
நேராக சென்ற பாதையில் அகரப்பட்டி பாதையில் போகசொன்னார். சிறிதுதூரம் சென்றபின் ஒரு முள்புதரைக் காட்டி வண்டியை நிறுத்திவிட்டு வாங்க என்றார்.
நீங்கள் பார்த்திருப்பீர்கள் மிக நீண்ட நிலப்பரப்பில் திடீரென்று ஒரு சிறிய மரத் தோப்பு இருப்பதை. அவை வேறொன்றும் இல்லை ஒருகாலத்தில் அந்த நீண்ட பரப்பில் பரவியிருந்த காட்டின் எஞ்சிய மரங்கள் தான். காட்டை அழித்த மனிதர்கள் இந்த சொச்ச மரங்களை மட்டும் ஏன் விடவேண்டும்? கொஞ்சம் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கிப்போய் பார்த்தால் தான் தெரியும் உள்ளே ஒரு அய்யனாரோ, காளியோ உட்கார்ந்திருப்பது. காட்டை அளித்த சுயநலம் இந்த சிறுதெய்வங்களின் முன் பக்தியும் பயமுமாய் பம்மியிருப்பது புரியும்.
அது போன்ற ஒரு முட்புதரை காட்டவும் நான் உள்ளே ஒரு அய்யனார் இருப்பார் என நினைத்தேன். ஆனால் பக்கத்தில் போய் பார்த்தல் புதருக்கு மத்தியில் ஒரு நெட்டைக்கல் நின்றுகொண்டிருந்தது எனது பார்வைக்கு ஒரு மிகச்சாதரணமாக தெரிந்த அந்தக் கல் திரு ஜம்பு அய்யாவின் விவரணையில் மெல்ல மெல்ல மறந்துபோன அல்லது மறக்கடிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் வரலாறு என்பது புரிந்தது.
உள்ளூர்வாசிகள் அதை நெட்டைக் காளி என்று கூறி வேண்டுதலை செய்துவருகின்றனர். காசப் போடுங்க என்னவெண்டாலும் செய்யும் என்று சான்று வேறு தருகிறார்கள்.
சற்று மூத்த தலைமுறையோ அதனை காராள வெள்ளாளன் கேணி என்று அழைக்கின்றனர். அந்த வயலை ஒட்டி ஒரு கேணி இருந்ததாகவும் புதுக்கோட்டையின் செல்வந்தர் ஒருவர் அந்த வயலை வாங்கி கேணியை தூர்த்தபின் நொடித்துப் பொய் வயலை கடனுக்கு அடமானமாய் இழந்திருக்கிறார் என்றும் சொன்னார் ஒரு பெரியவர்.
தமிழகத்தின் இருண்ட காலம் என்று தவறாக பதியப்பட்ட காராளர் ஆட்சியுடன் நேரடி தொடர்புடையது இந்த கேணி என்று சொன்னார் ஜம்பு அய்யா.
எப்போதோ இருந்த கேணியின் மிச்சாமாய் இருப்பது ஒரு நெட்டைக்கல் மட்டுமே. ஒற்றைக் கல்லை வைத்துக்கொண்டு எப்படி தண்ணீர் சேந்த முடியும்? இதற்கு பதிலை சொல்லுங்க நான் உங்களை அடுத்த முக்கிமான இடத்திற்கு அழைத்து செல்கிறேன் என்றார் அய்யா.
ஏற்றம் என்பதை தவிர வேறு பதில்கள் பிடிபடமாட்டேன் என்கிறது. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.
அன்பன்
மது
Comments
Post a Comment
வருக வருக