தமிழ் கற்பித்தலுக்கான வகுப்பறை உத்திகள் III (Part III/III )




மொழிக் குறிக்கோள்கள்
 
1செய்யுளுக்குரிய ஓசையை அறியச் செய்தல்
  தமிழ் செய்யுள்களுக்கு ஓசை சிறப்புண்டு. அந்தந்த செய்யுளுக்குரிய ஓசையுடனேயே செய்யுளைப் படிக்க வேண்டும். செய்யுளின் அடி தோறும் அமைந்துள்ள சீர்களின் அமைப்பிற்கு ஏற்ப ஓசை பிறக்கும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நான்கு வகைப் பாக்களுக்கு  முறையே செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை ஆகியவை பெற்று வரும். இவ்வோசை நயம் பாவின் வேறுபாட்டைக் காட்டுவதோடு, கற்பார்க்கு ஆர்வமும் சுவையும் ஊட்டுவதாகும். இப்பாடல் கலிப்பாவின் இனமான கலிவிருத்தம் எனப்படும். கலிப்பாவுக்குரிய துள்ளலோசை இப்பாடலில் அமைந்துள்ளதை மாணவர்களுக்கு உணர்த்தவும். இதை உணர்த்த பாடலை ஓசையுடன் படித்துக் காட்டவும். படித்துக்காட்டும் போது செய்யுளடிகளை கீழே பிரித்துக் காட்டியவாறு கோடிட்ட இடங்களில் சிறிது நிறுத்தி படித்துக் காட்டுதல் நன்று. 

  உயர்/வர- உயர்/நலம்- உடை/யவன்- யவ/னவன்     

ஒவ்வோர் அசையும் நிரை அசையாக அமைந்திருப்பதால் ஒருவகை ஒசையமைவதை ஆசிரியர் உணர்ந்து படிப்பதுடன், மாணவர் அவ்வோசையை கருத்தூன்றிக் கேட்கச் செய்தல் வேண்டும். இவ்வாறே செய்யுளின் பிற அடிகளையும் படித்துக் காட்டவும்.

2.       செய்யுட்குரிய ஓசையோடு செய்யுளைப் படிக்கச் செய்தல்
   செய்யுளின் ஒவ்வோர் அடியையும், சீர்களைச் சிதைக்காமல் முழுமையாகப் பாடிக்காட்டி, இச்செய்யுளுக்குரிய துள்ளலோசையை மாணவர்கள் அறியச் செய்யவும். மாணவர்களையும் அவ்வாறே படிக்க செய்யவும்.

3.       செய்யுளிலுள்ள சொற்களை பிரித்துப் படிக்கச் செய்தல்
   இப்பாடலின் பொருளை மாணவர்கள் ஓரளவு தாமே புரிந்து கொள்ளத் துணை செய்யும் வகையில் பிரித்துப் படித்துக் காட்டவும். பின், மாணவர்களையும் அவ்வாறே படிக்கச் செய்யவும்.
 துணைக் கருவி: செய்யுளைக் கரும்பலகையில் பிரித்தெழுதிக் காட்டுதல்.

4.       செய்யுளை அன்வயப்படுத்த அறிந்து கொள்ளச் செய்தல்
   அன்வயம் என்பது, செய்யுளிலுள்ள சீர்களைப் பொருளுக்கு ஏற்ப முன்பின்னாகக் கொண்டு கூட்டிச் செல்லுதலாகும். செய்யுளை அன்வயப்படுத்திக் படித்துக் காட்டவும். பின் மாணவர்களையும் அவ்வாறே படிக்கும்படி கேட்கவும்.

5.       செய்யுளிலுள்ள பொருட்செறிவு வாய்ந்த சொற்களை அறியச் செய்தல்
   இச்செய்யுளில் வரும் மயர்வு, துயர், சுடர் என்ற சொற்கள்
பொருட்செறிவு வாய்ந்தன. அதாவது, ஆழமான, நுட்பமான பொருள்களைக் கொண்டுள்ளன என்பதை மாணவர்களுக்கு விளக்கவும்.
   மயர்வு: இச்சொல் மயக்கம், அறியாமை என பொருள்படும். மக்களுக்கு பிறவியிலேயே அறியாமையாகிய மயக்கம் அமைந்துள்ளது. இந்த அறியாமையை நீக்கியவன் இறைவன்.
   துயர்: இச்சொல் பொதுவான நலிவு, வறுமையாகிய துன்பங்களைக் குறிப்பதாயினும் ஈண்டு இது பிறவித் துன்பத்தை அதாவது இவ்வுலகில் பிரப்பதாகிய துன்பத்தைக் குறிக்கிறது. இவ்வுலகில் பிறப்பதும் இறப்பதும் துன்பச்செயல் என சான்றோர் கருதுவர்.
   சுடர்: சுடர் என்பது ஒளியைக் குறிக்கும். இங்குச்சுடர் என்பது அருளைக் குறிக்கிறது. இறைவன் திருவடிகள் அருள் வழங்கும் தன்மையுடையன. அறியாமை என்னும் இருளில் வழியறியாது மயங்கும் உயிர்களுக்கு வழிகாட்டுவதாதலின் ஒழி பொருந்திய அடிகள் எனக் கூறப்பட்டது.

6.       செய்யுளின் சுவையான பகுதிகளை அறிந்து கொள்ளச்செய்தல்
   கீழ்க்காணும் தொடரில் அமைந்துள்ள பொருட்சுவையை மாணவர்களை அறியச்செய்யவும்.
உயர்வற உயர்நலம்: உலகிலுள்ள அனைத்துப் பொருள்களின் மேன்மைஎல்லாம் அற்றுப்போகுமாறு செய்யும் வல்லமையுடையது, இறைவனின் உயர்ந்த பண்பு நலம். அது பிற நலன்களைஎல்லாம் சிறிதாக்கி விடும். இறைவனின் ஆற்றலுக்கு ஈடு இணை கிடையாது. இவற்றைக் குறிப்பிடத்தான் நம்மாழ்வார் இறைவனை உயர்வற உயர்நலம் உடையவன் எனக் குறிப்பிடுகிறார்.

7.       சொல்லாட்சித் திறனை அறியச்செய்தல்                   
    செய்யுளில் சில சொற்களை மிக சிறப்பான முறையில் பயன்படுத்தியிருக்கும் சிறப்பே சொல்லாட்சி ஆகும்.
    தொழுதெழு (தொழுது எழு): இறைவனை தொழுது அவன் அருளைப் பெறுதற்கு உள்ளங்கிளர்ந்து எழு. முனைந்து ஆர்வத்துடன் எழு என்னும் பொருள்படத் தொழுதெழு என்பது ஆளப்பட்டிருப்பதை மாணவர்களுக்கு உணர்த்தவும்.

8.       செய்யுளில் அமைந்த எதுகையை அறியச்செய்தல்
   சொல் நயம் பொருள் நயங்களோடு ஓசை நயம் உடையதாகவும் செய்யுள் இயற்றப்படுதல் வேண்டும். படிப்பவர், கேட்பவர் மனத்தைக் கவரச்செய்வது ஓசை நயமேயாகும். செய்யுளுக்கு ஓசை நயம் தருவன எதுகை, மோனை என்பன.
    செய்யுளிலுள்ள அடிதோறும் முதற்சீரின்; முதலெழுத்து ஒத்த அளவுடையதாயிருக்க அச்சீரின் இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது எதுகை ஆகும்.
    பாடப்பகுதி செய்யுளில் அடிதோறும் முதற்சீரின் இரண்டாவது எழுத்து ய ஒன்றி இருப்பது எதுகை என மாணவர்களை அறியச்செய்யவும்.

9.       செய்யுளில் அமைந்த மோனையை அறியச்செய்தல்
    செய்யுளிலுள்ள அடிதோறும் முதற்சீரின் முதலெழுத்து ஒரே எழுத்தாய் வருவது அடி மோனையாகும். ஓரடியிலேயே முதற்சீரின் முதலெழுத்து அவ்வடியிலுள்ள ஏனையச்சீர்களில் ஒன்றி வருவது சீர்மோனை எனப்படும்.
    பாடப்பகுதி பாட்டில் முதலடியின் முதல் மூன்று சீர்களிலும் உயர்வற உயர்நலம் உடையவன் என ‘உகரம்’ வந்துள்ளதையும், இரண்டாமடியின் முதற்சீரிலும் இரண்டாம் சீரிலும் மயர்வற மதிநலம் என ‘மகரம்’ வந்துள்ளதையும், மூன்றாமடியின் முதல் மூன்று சீர்களில்     அயர்வறும் அமரர்கள் அதிபதி என ‘அகரம்’ வந்துள்ளதையும் நான்காவதடியில் முத்ர்சீரிலும் நான்காம் சீரிலும் துயரறு சுடரடி தொழுதெழு என் எனத் தொ என்பது வந்துள்ளதையும் மாணவர்கள் அறிந்து கொள்ளச்செய்யவும்.

10.   செய்யுளின் பாவகையை அறியச்செய்தல்
   தமிழ்ப்பாக்கள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப்படும் என்பதை நினைவுபடுத்தவும், பிற்காலத்தில் விருத்தப்பா என்றொரு வகை தோன்றிற்று. இது ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், வஞ்சி விருத்தம் என மூன்று வகைப்படும். கலி விருத்தம் என்பது ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள் அமைய நான்கு அடிகளை உடையதாய், துள்ளல் ஓசை பெற்று பாடப்படுவதாகும்.

11.   செய்யுளின் பொருள் உணர்ச்சிக்கேற்ப குரல் ஏற்ற தாழ்வுடன் படிக்க அறியச்செய்தல்
     செய்யுள் அடிகளின் பொருள் உணர்ச்சிக்கு ஏற்ப, குரல் ஏற்றத் தாழ்வுடன் படித்துக் காட்டவும், மாணவர்களையும் அவ்வாறே படிக்க செய்யவும்.

12.   சரியாக உச்சரிக்க இயலாத ஒலிகளுக்கு பயிற்சி அளித்தல்
      ல, ள, ழ என்ற எழுத்துக்களை மாணவர்கள் தவறாக உச்சரிப்பதுண்டு. இந்த எழுத்துக்களை தனித்தனியாக உச்சரிக்கச்சொல்லிக் கேட்கவும். இவ்வெழுத்துக்கள் வரும் சில நடைமுறை சொற்களைக் கொடுத்து உச்சரிக்கச்சொல்லவும். பின், செய்யுளில் வரும் சொற்களை உச்சரிக்கச்சொல்லவும்.

13.   சொற்களஞ்சியம் பெருக்கச்செய்தல்
      மாணவர்கள் செய்யுளைப் படிக்கும்போது அதில் அவர்கள் முன்பறிந்த புது சொற்கள் சில காணப்படும். கீழ் வருவன இச்செய்யுளில் வரும் அருஞ்சொற்கள் என்பதை உணர்த்தி அவற்றின் பொருளை அறியச் செய்வதின் மூலம் மாணவர்கள் சொற்களஞ்சியத்தைப் பெருக்கச்செய்யலாம்.
அற = அற்றுப்போகுமாறு               அயர்வு = சோர்வு
மயர்வு = அறியாமை                   அமரர்கள் = தேவர்கள்
மதி = அறிவு                           அதிபதி = தலைவன்

14.   சொற்களின் உருமாற்றத்தை அறியச்செய்தல்
       செய்யுளில் சில சொற்கள் தம் உருவம் மாறி நிற்கும் முறையை மாணவர்கள் அறியச்செய்யவும். கவிஞர்கள் தாங்கள் இயற்றும் செய்யுளில் எதுகை, மோனை அமையவும், ஓசை மாற்றங்களை செய்வது செய்யுள் விகாரமாகும்.
      யாவன் எனும் சொல் இச்செய்யுளில் யவன் என உருமாறி நிற்கிறது என்பதை அறியச்செய்யவும். மனம் என்ற சொல் மணந என வந்துள்ளது என்பதை உணரச்செய்யவும். இது ஈற்றுப்போலி. நிலம் என்பது நிலன் என வருவது கடைப்போலி அல்லது ஈற்றுப்போலி என்று முன் வகுப்பில் படித்ததை நினைவுபடுத்தவும்.

15.   இச்செய்யுளில் அற எனும் சொல் அமைந்துள்ள முறையை சரி செய்தல்
   அற என்பதற்கு அற்றுப்போதல் என்பது பொருள். இச்செய்யுளில் உயர், மயர், துயர் என்ற சொற்களுடன் அற என்பது சேர்ந்து நிற்பதைக் கூறச்செய்யவும், (எ.கா. பிழையற)
பாடப்பொருள் குறிக்கோள்கள்
1.       நூலாசிரியர் வரலாற்றை அறியச்செய்தல்
     இச்செய்யுளின் அறிமுகப்பகுதியைக் காண்க.
2.        நூலின் அமைப்பை அறியச்செய்தல்
     இச்செய்யுளின் அறிமுகப்பகுதியில் காண்க
3.        இறைவன் பண்புகளை அறியசெய்தல்                     
  .   நம்மாழ்வார் இச்செய்யுளில் தம் மனத்திடம் மனமே தன் சிறப்பின் முன் பிறர் சிறப்பைஎல்லாம் அற்றுப்போகச்செய்யும் உயர்ந்த நற்பண்புகளையுடையவனும், உயிர்களின் அறியாமையாகிய மயக்கம் நீக்குமாறு அறிவாகிய நலத்தை கொடுத்து உதவியவனும், தேவர்களின் தலைவனுமாக இருக்கும், பிறவித் துன்பத்தைப் போக்கும் ஒழி பொருந்திய இறைவன் திருவடியை வணங்கி உயர்வு பெறுவாயாக என்று கூறுகிறார்.
     சிறிய வினாக்களை மாணவர்களிடம் கேட்டு அதற்கு விடையளிக்கச்செய்து இப்பாடலின் பொருளை மாணவர்களுக்கு உணர்த்தவும். இறைவன் இதை உடையவன், என்ன அருளினான், யாருக்கு அதிபதி, இறைவன் திருவடி எத்தகையது போன்ற வினாக்கள் வினாவலாம்.
         கீழ்வகுப்பில் படித்த வாழ்த்துப் பாடல்களை நினைவு கூறச்செய்தல்
    ஆறாம்/ஏழாம் வகுப்புப் பாட நூல்களில் வாழ்த்துப் பகுதியில் வரும் பாடல்களில் இராமலிங்க அடிகள் கூறும் இறைவன் தன்மைகளை மாணவர்களுக்கு நினைவுபடுத்தவும்.
பயிற்சிகள்
வாய்மொழிப் பயிற்சி
v  செய்யுளை அதற்குரிய ஓசையோடு படிக்க.
v  செய்யுளைப் பிரித்துப் படிக்க.
v  செய்யுளை அன்வயப்படுத்திப் படிக்க.
v  செய்யுளின் பொருளுணர்ச்சிக்கு ஏற்ப குரல் ஏற்றத்தாழ்வுடன் படிக்க.
v  செய்யுளை மனப்பாடமாக கூறுக.
v  கீழ்வரும் சொற்களை சரியாக உச்சரிக்க: நலம், தொழுது, எழு, அருளினன்.

எழுத்துப் பயிற்சி
v  செய்யுளைப் பிரித்து எழுதுக.
v  செய்யுளை அன்வயப்படுத்தி எழுதுக
v  கீழ்வரும் சொற்களின் பொருள் செறிவை எழுதுக.மயர்வு, துயர்வு, சுடர்
v  கீழ்வரும் சொற்றொடரின் சொல்லாட்சித் திறனை எழுதுக. தொழுதெழு
v  கீழ்வரும் சொற்களை வாக்கியத்தில் அமைத்து எழுதுக. உயர்நலம், அமரர், சுடர்
v  கீழ்வரும் சொற்களுக்குப் பொருள் தருக. அற, அதிபதி, சுடரடி, மயர்வு, அயர்வு
v  கீழ்வரும் சொற்களின் பொருளை அகராதியில் கண்டறிந்து எழுதுக.
v  அருளுதல், எழல்
v  செய்யுளில் வரும் சுவையான பகுதியைத் தேர்ந்தெடுத்து நயத்தை விளக்குக.
v  செய்யுளில் வரும் எதுகையை எழுதுக
v  செய்யுளில் வரும் மோனையை எழுதுக
v  செய்யுளின் பாவகையை எழுதுக.
v  கீழ்வரும் சொற்களுக்கும் தொடர்களுக்கும் இலக்கணக்குறிப்பு தருக.
v  கீழ்வரும் சொற்களின் உருமாற்றத்தை எழுதுக. யாவன், மனன்.
v  செய்யுளின் ஆசிரியர் பற்றிக் குறிப்பு வரைக.
v  செய்யுள் அமைந்துள்ள நூலைப் பற்றிக் குறிப்பு வரைக.
v  நம்மாழ்வார் தம் மனத்துக்கு கூறுவது யாது?

உரைநடை
மொழிக் குறிக்கோள்
v  பாடப்பகுதியைக் கேட்டு மையக் கருத்து அறிதல்
v  பாடப்பகுதியைக் கேட்டு சுருக்கத்தை அறிதல்
v  பாடம் கேட்டு குறிப்பெடுக்கும் திறனை வளர்த்தல்
v  சரியான ஒழிப்போடு படிக்கும் திறனை வளர்த்தல்
v  நிறுத்தற்குறிகளை மனதில் கொண்டு படிக்கும் திறன் வளர்த்தல்
v  பொருள் உணர்வுக்கு ஏற்ப குரல் ஏற்றத்தாழ்வுடன் படிக்கும் திறன் வளர்த்தல்
v  புதிய சொற்களின் பொருள் அறிதல்
v  சொற்களஞ்சியப் பெருக்கம்
v  அரிய சொற்றொடர்களை அறியச்செய்தல்
v  பாடப்பகுதியில் வரும் மரபுத் தொடர்களை அறியச்செய்தல்
v  பாடப்பகுதியில் வரும் பழமொழிகளை அறியச்செய்தல்
v  பாடப்பகுதியில் உள்ள வாக்கிய வகைகளை அறியச்செய்தல்
v  பிற மொழி சொற்களுக்கு ஏற்ற தமிழ் சொல் அறிதல்
v  பாடத் தொடர்பான பிற நூல்களைப் படிக்கும் ஆர்வத்தை தூண்டுதல்
v  அருஞ்சொற்களின் பொருளறிய அகர முதலியைப் பார்க்கும் பழக்கத்தைத் தூண்டுதல்
v  சொல்வதை எழுதுதல் – பயிற்சி தர வேண்டும்
v  பார்த்துப் படித்தல் பார்த்து எழுதுதல் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
தற்காலிகமாக முற்றும் 

நன்றி

பள்ளி நடைமுறை வழிகாட்டி நூல்

வெளியீடு தமிழ் நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம்

சென்னை – ஆறு

Comments