Skip to main content
ஜோரான முகநூல் பகிர்வு- குமரேசன் அசாக்
பெருகும் மரியாதையும், கூடவே ஒரு ஏக்கமும்
=====================================
ஸ்டீபன் ஹாக்கிங் - மரியாதைக்குரிய ஒரு அறிவியலாளர். இந்த பிரிட்டிஷ்
ஆராய்ச்சியாளர் தன் ஒரு குணப்படுத்த இயலாத நோயின் காரணமாக உடலின் மோட்டார்
இயக்கங்கள் முடங்கிப்போனவர். ஆனால் மூளையின் இயக்கத்தை மிகவும்
கூர்மையாக்கிக்கொண்டவர். பேசுவது கூட, தனது சக்கர நாற்காலியில்
இணைக்கப்பட்ட கணினியின் உதவியோடு எந்திரக் குரலில்தான் பேச முடியும்
இவரால்.
இவரது புகழ்பெற்ற
புத்தகம்: ‘எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ (காலத்தின் சுருக்கமான வரலாறு).
“கடவுளின் மனதை அறிவதே என் நோக்கம்” என்பதாக அந்தப் புத்தகத்தைத் தொடங்கி,
நம் பூமி உள்ளிட்ட கோள்கள், சூரியன் உள்ளிட்ட நட்சத்திரங்கள், இவற்றைக்
கொண்டுள்ள பால்வெளி மண்டலம் உள்ளிட்ட பேரண்டம்... இவை எப்படி இயங்குகின்றன,
எப்படி உருவாகின என்ற ஆராய்ச்சிக்குள் இறங்கியிருப்பார்.
அண்மையில் வெளியிட்ட இரண்டாவது புத்தகம் ‘எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் -
பார்ட் 2 (காலத்தின் சுருக்கமான வரலாறு - பாகம் 2). அந்தப் புத்தகத்தில்
ஆராய்ச்சியை விரிவு படுத்தி இறுதியில், “இந்த இயற்கையான பேரண்டத்தைப்
படைக்க கடவுள் எனப்படுகிற ஒருவர் தேவையில்லை,” என்று அறிவித்திருப்பார்.
கடவுளால் படைக்கப்பட்டதல்ல இந்தப் பேரண்டம், கடவுள் என்கிற சங்கதியே இல்லை
என்ற உண்மை இவரது ஆராய்ச்சியால் மேலும் வலுப்பெற்றது.
உடலின்
ஒத்துழையாமையை மீறிய தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பு, அறிவியல் உண்மையை
உரக்கக் கூறிய முனைப்பு ஆகிய காரணங்களால் என் மரியாதைக்குரிய அறிவியலாளர்
இவர்.
இப்போது இவர் மீதான என் மரியாதை மேலும் அதிகரித்திருக்கிறது.
இஸ்ரேல் அரசின் சிறப்பு அழைப்பாளராக ‘ஃபேசிங் டுமாரோ’ (நாளையை
எதிர்நோக்கி) என்ற ஒரு மாநாட்டில் அடுத்த மாதம் உரையாற்றவிருந்தார்
ஹாக்கின்ஸ். இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரேஸ் ஆண்டுதோறும் நடத்துகிற இந்த
உயர்மட்ட மாநாட்டில் முந்தைய ஆண்டுகளில் டோனி பிளேர், ஜார்ஜ் புஷ், ஹென்றி
கிஸ்ஸிஞ்சர் போன்ற பெருந்தலைகள் உரையாற்றியிருக்கிறார்கள்.
இப்போது ஹாக்கின்ஸ் இந்த மாநாட்டில் பங்கேற்கவோ உரையாற்றவோ இயலாது என்று
அறிவித்திருக்கிறார். பாலஸ்தீன மக்களின் மனித உரிமைகைளைக் காலில் போட்டு
நசுக்கிக்கொண்டிருக்கும் இஸ்ரேல் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத்
தெரிவித்து இந்த முடிவை எடுத்திருக்கிறார் அவர். பாலஸ்தீனர்களின் நேற்றைய,
இன்றைய, நாளைய வாழ்க்கையை இருட்டாக்கியிருக்கிற இஸ்ரேல் அரசின் ‘நாளையை
நோக்கி’ மாநாட்டில் உரையாற்ற ஒப்புக்கொண்டது தவறு என்ற மனசாட்சியின்
தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு சரியான முடிவை எடுத்திருக்கிற ஹாக்கிங் மீது
எனது மரியாதையும் நேசமும் பலமடங்காகப் பெருகாமல் இருக்குமா?
அறிவியல் வல்லுநர்கள், தொழில்நுட்ப மேதைகள், ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்
பெருமக்கள் என்றால் உலக அரசியல், சமுதாய நிலைமைகள் பற்றியெல்லாம்
அலட்டிக்கொள்ளாமல் இருப்பவர்கள் என்ற எண்ணத்தை பலரும்
ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்த எண்ணத்தை மாற்றுகிற சிலரோடு சேர்ந்துள்ள
ஸ்டீஃபன் ஹாக்கிங்கைக் கட்டியணைத்துக்கொள்ள முடியவில்லை என்கிற ஏக்கம்தான்
எனக்கு.
நன்றி
Comments
Post a Comment
வருக வருக