என்ன ஒரு கவிதை...(Nanthan Sridaran-Tasmac)

பிரியமானவளின் முத்தத்தை
பாதியில் பிரிபவனைப் போலும்

எண்ணித் தீராத முயக்கங்களின்
பின்னும்
ஏக்கத்தோடலைபவனைப் போலும்

உண்டாலும் பசியடங்காத
நோயாளனைப் போலும்

அந்த பிளாஸ்டிக் நாற்காலிகளையும்
மூத்திர நாற்றமும்
வாந்தி நாற்றமும் கலந்து வீசும்
அச் சிறு பரப்பின் வசீகரத்தையும்
சில சண்டைகளையும்
சில அழுகைகளையும்
சில கதைகளையும்
யாருமற்ற இரவின் தனிமையில்
விட்டுப் போக தயங்குகிறார்கள்
அவர்கள்..

எழுபத்திரண்டோ
நூற்று நாற்பத்தியைந்தோ
இவற்றுக்கிடையில் ஊசலாடும் விலையில்
கிடைத்துவிடுகின்றன
அவர்களுக்கான விடுதலைகள்..

பிரியமுடியாப் பேரன்புடன்
அந்த
மதுச்சாலையைப் பிரியும்
எந்தவொரு குடிகாரனும்
நாளை கடை திறக்கப்படும் வரை
உயிரோடிருப்பதற்கான
உத்தரவாதங்கள் ஏதுமில்லை..

தன் கடைசி வாழ்நாளை
கொண்டாடி முடித்துவிடும்
ஒரு துறவியைப் போல

தினந்தோறும்
தம் மரணத்தைத் தேடி
வந்தபடிதான இருக்கிறார்கள் அவர்கள்..



திரு. நந்தன் ஸ்ரீதரன் அவர்களின் இந்தக் கவிதை எனது மனச் சுவர்வர்களின் எழுப்பிய அதிர்வுகளும் திறந்த சாளரங்களும், அறைந்த ஆணிகளும் எழுத்தில் வருபவையா அவை... 

எனக்கு மிகவும் பிடித்திருகிறது.... உங்களுக்கு? 


ஒரு மென்சோக உணர்வுடன் 
மது

Comments

  1. மேற்கத்திய கலாச்சாரம் மழிந்து விட்ட இந்நாட்களில் இளைஞர்கள் படிக்க வேண்டிய கவிதை.

    ReplyDelete

Post a Comment

வருக வருக