சிதம்பரம் தாலுகாவில் உள்ள விளாகம் பகுதியில், 13 நூற்றாண்டைச் சேர்ந்த கேணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேணியை சுற்றி அமைந்துள்ள, கடல் மண்ணை ஆய்வு செய்த போது, 1,300 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் சுனாமி தாக்கியது, தெரிய வந்துள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுகாவில் அமைந்துள்ளது, விளாகம் கிராமம். இவ்வூரில், இரண்டு வாரங்களுக்கு முன், மஞ்சாங்குட்டை என்ற இடத்தில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், வேலை செய்த போது, பழங்கால கிணறு வடிவிலான பொருள் இருப்பதை, தொழிலாளர்கள் கண்டனர்.
உடனடியாக, அப்பகுதி ஊராட்சி தலைவர், பிரபாகரன், சிதம்பரம் அண்ணாமலை பேராசிரியர், சிவராமகிருஷ்ணன், கலைச் செல்வன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.பேராசிரியர்கள், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, பல்வேறு தகவல்கள் வெளியாகின.இதுகுறித்து, பேராசிரியர்கள் கூறியதாவது:
கேணியின், செங்கற்களின் நீளம், 24 செ.மீ., அகலம், 16 செ.மீ., உயரம், 4 செ.மீ., கொண்டதாக அமைந்துள்ளது. 12ம் நூற்றாண்டு வரை, சுடுமண்ணால் செய்யப்பட்ட கற்களால் அமைக்கப்பட்ட உறை கேணி மூலம், தண்ணீர் பெறும் மரபே, நம்மிடம் இருந்து வந்தது.பின், 13ம் நூற்றாண்டில், செங்கற்களால் செய்யப்பட்ட கேணிகளை பயன்படுத்தும் நடைமுறை உருவானது. 10 வீடுகள் கொண்ட இடத்தில், ஒரு கேணி அமைக்கப்பட்டது. இதிலிருந்து, அனைவரும் நீர் எடுத்துக் கொள்வர். தற்போது, கேணி கண்டெடுக்கப்பட்ட இடத்தில், கேணியை சுற்றி, கடல் மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
10 அடி ஆழத்தில் அமைந்துள்ள கேணியில், ஐந்து அடிக்கு மேல், முழுக்க களிமண்ணாகவும், ஐந்து அடிக்கு கீழ், கடல் மண்ணாகவும் இருந்துள்ளது. கேணி அமைந்துள்ள இடத்தில் இருந்து, 18 கி.மீ.க்கு அப்பால், கடல் இருந்துள்ளது. எனவே, இங்கு எப்படி, கடல் மண் வந்தது என்பது குறித்து அறிய, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மண்ணியல் துறை மூலம் ஆராய்ந்த போது, 1,300 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை வந்தது, தெரியவந்துள்ளது.கடந்த, 1,300 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில், கடல் இருந்ததற்கான தடயங்கள் இல்லை. எனவே, இது ஆழிப்பேரலையால் கொண்டு வரப்பட்ட மண் என்பது, ஆய்வின் மூலம் தெரியவந்தது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Source : http://www.seithy.com/breifNews.php?newsID=93493&category=IndianNews&language=tamil
அருமையான வரலாற்று தகவல்
ReplyDelete