மறுமுகம் !


சமீபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக கவிஞர் தங்கம் மூர்த்திக்குப் பாராட்டுவிழா நடைபெற்றது. கவிஞர் தங்கம் மூர்த்தியை எனக்கு அறிமுகம் இல்லை. என் நண்பர்கள் அடிக்கடி அவரின் பெயரைப் பயன்படுத்தும் போது என் மனது இயல்பானதாகவே இருக்கும். அவருக்கு அண்மையில் நடுவண் அரசு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கிச் சிறப்பித்த செய்தியும் செவிசார் மிகைச் செய்தியாக எனக்குப் படவில்லை. ஏனெனில் எங்களது ஆசிரியர் வட்டத்தில் இவ்விருது சார்ந்த மதிப்பெண்ணங்கள் குறைவாக இருந்தது கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். ஒரு தனியார் பள்ளித் தாளாளர் என்ற முகம் எங்களை அவர்பால் இடைவெளிகளை ஏற்படுத்தி இருந்ததாகக் கூட இருக்கலாம்.
அவரின் பொழிவினில் இலயித்த நிகழ்வு சுபபாரதிக் கல்லூரியில்
எனக்குக் கிட்டியது. அவரின் பொழிவில் சுகமும் மகிழ்வும் மிகுந்திருந்தது. ஆழத்தின் சாயல் ஆங்காங்கே கிளைத்துச் சென்றது. இருப்பினும் அவர்பால் எனக்கு இலயிப்பு ஏற்பட மனம் முரண்பட்டது. காரணம் எதுவென்று என்னால் கண்டறிய இயலவில்லை. கந்தர்வன் நூலக விழாவிலும் அவரின் பொழிவுச் சூழலின் அருகாமை எனக்குக் கிட்டியது. அன்றும் பொழிவு முடிந்த அடுத்த நொடியில் அவர் முகம் என்னுள் சிறைப்படவில்லை.
அன்று அந்தவிழாவில் நான் கலந்து கொண்ட முதன்மைக் காரணம் மூத்த கவிஞர் முத்துநிலவனின் பொழிவினைக் கேட்கும் அவாவில் தான். அவரின் பொழிவில் வசப்படுத்தும் எடுத்தலும் அருவிநடைத் தொடுத்தலும் மிகையிலா முடித்தலும் சமப்பாதையில் பயணிக்கும். என்னைப் பார்வையாளர் தளத்திலிருந்து கருத்தாளர் தளத்திற்கு இட்டுச் சென்ற வழிமுனைப்புத் தடமும் அதுதான். என்னுடன் செழுமைச் சந்திப்புகளை நிகழ்த்தும் புலவர் மகாசுந்தரும் இவ்விழா சார்ந்த உயர்மதிப்புகளை என்னுள் ஏற்படுத்தியமையும் இவ்விழாப் பார்வையாளனாய் என்னை ஈர்த்தது.
கவிஞர் சுவாதியின் மிகைத் தொகுத்தல், சந்தைப்பேட்டை ஆசிரியரின் இயல்புக்கவிதை, பின் வந்த கவிஞர்களின் சொல்வாசிப்புகள் என்று விழா, நகரப்பேருந்தின் பயணமாய் மெல்ல நகர்ந்தது.
எனக்கு முன்பிருந்த எங்கள் தமிழாசிரியர் கழகத் தலைவரின் மகள், பாரதி விழாவில் பாரதியைக் காணவில்லையென்று தன் தந்தையைக் கேட்டுக் கொண்டிருந்த செல்நிலை மனோபாவச் சூழலை மூத்த கவிஞர் முத்துநிலவனின் முத்துரை நீக்கியது.
இறுதியாக ஒரு கவிஞரின் மறுமுகத்தைக் கேட்க நேர்ந்த தருணம் ஒலிக் கோடுகளில் ஒரு நிசப்தத்தை நிறுவியது. அத்தருணம் கவிஞர் தங்கம் மூர்த்தியின் அருகமை, நெருக்கத்தின் உணர்வாய் அமைந்தது. செல்நிலை மனோபாவம் மறைந்து என் கேட்புச் சூழலை ஆழப்படுத்தியது. ஒரு நல்ல ஆசிரியனின் வெற்றி அனுபவங்களை கேட்ட நான் முதல் முறையாக தோற்றுப்போனேன். என் வகுப்பறை வெற்றிகளின் மீது கர்வம் கொண்டிருந்த என் தலைகனம் நொறுங்கிப்போவதை உணர்ந்தேன். பூக்களாய்ப் பாவிக்கும் மென்மை மாணவச் சந்திப்புகளின் பரந்த பாதையில் அவர் பயணித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து வியந்தேன். சொல் வடிவங்களை மாற்றித் தான் படிப்பது மட்டுமே நல்ல கவிதையென்று உலகு அங்கீகரிக்க வேண்டுமென்ற குறைநிலை நிழல்கவிஞர்கள் மத்தியில் தங்கம் மூர்த்தி விலகி இருப்பதை நான் கண்டேன்.
உயர்கல்வியாளனின் சமூகப் பார்வையை நான் இரசித்தேன். எளிய கவிஞனின் அமைதியான மலர்ப்பாதை என்னை வெகுவாய்க் கவர்ந்தது.. பணப்பற்றுதலில்லாத சமூக அக்கறையுள்ள தனியார் பள்ளித் தாளாளர் ஒருவரை நான் அன்று தான் முதன்முறையாகக் கண்டேன். சட்டை கிழிந்த என் ஏழை மாணவனுக்கு வாழ்வுக் கல்வியைத் தரஇயலாத புள்ளியில் நின்று கொண்டிருக்கும் எனக்கு போராடிக்கொண்டிருக்கும் எனக்கு கவிஞக்கல்வியாளர் தங்கம் மூர்த்தியின் அருகாமை ஆறுதலைத் தந்தது.
என் இலக்கிய வாசிப்பிலும் ஆய்வு அனுபவங்களிலும் என்னை மறுசுழற்சிக்கு உள்ளாக்கிய என் எண்ணக்கிளர்ந்தாளர் பேராசிரியர் தொ.ப. என்னுள் முதலில் கவிஞர் தங்கம் மூர்த்தியைப் போலவே இடைவெளிகளுக்குப் பின் நுழைந்த நிகழ்வு எனக்கு நினைவிற்கு வந்தது.
சிலிர்ப்பான மறுமுகத்தைப் பார்த்த மகிழ்வில் என் மாலைநொடிகளுக்குச் சிறகுகள் முளைத்தன.. விருதின் எதிர்மறை எண்ணங்கள் விலகிய பின் தருணங்களில் கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதையை புத்தக அலமாரியில் என் விரல்கள் தேடின.
கவிஞர் தங்கம் மூர்த்தியின் மனத்துள் நற்கல்விச்சமூக மாற்றத்திற்கான வல்லமை வேர்கள் விழுதூன்றிட புதுக்கோட்டை மாவட்டத் தமிழாசிரியர் கழகம் வாழ்த்துகிறது. அவரின் ஆசிரியத்தை வணங்குகிறது.
சி.குருநாதசுந்தரம்,
மாவட்டச்செயலர்,
தமிழகத் தமிழாசிரியர் கழகம்.


மூலம் : சி.குருநாதசுந்தரம்,

Comments