மனிதம் மரித்த சென்னையில் ஒருநாள் !

அது ஒரு உச்சிவெயில் நேரம். ஒரு வேலையாக வில்லிவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தபோதுதான் அயனாவரம் ஜாயிண்ட் ஆபிஸ் பேருந்து நிறுத்தத்தில் தான் அந்த மனிதம் மரித்த துன்பகரமான காட்சி என் கண்ணில் பட்டது. கடைகளும் ஆட்களும் வந்துபோகும் நெருக்கடியான நடைப்பாதையில் அலங்கோலமாக விழுந்து கிடந்தார் ஒரு பெண்மணி.

அவரைச் சுற்றி சில பெண்களும் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார்கள். பக்கத்தில் கடைகள் இருக்கின்றன.. ஆட்கள் வந்து போய் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் தரையில் கிடக்கும் அந்த பெண்மணி ஒரு பொருட்டாக படவில்லை. எல்லோரும் அவரை கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

மனசு கேட்காமல் வண்டியை நிறுத்திவிட்டு பக்கத்துலப்போய் மூச்சு இருக்கானு பார்த்தேன். வயிறு ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. குடி போதையில் தன்னிலை மறந்து மயங்கிக் கிடக்கிறார் என்பது தெரிய வந்தது. உடனே ஒரு தண்ணீர் பாக்கெட் வாங்கிக் கொண்டு அவரை தட்டி எழுப்பினேன்.

எழுந்து உட்கார்ந்து மடக் மடக்கென்று தண்ணீரைக் குடித்து முடித்தவர், திடிரென என் கால்களைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார். எனக்கு சங்கடமாய்டுச்சு. காலை அவரிடமிருந்து விடுவித்துக் கொண்டு,

``எந்திரிங்க..’’ என்றேன்.

``இவ்வளவு நேரம் இங்கேயே கிடக்கேன்.. ஒருத்தரும் என்னை பார்க்கல.. நீ நல்லாருக்கணும் தம்பி..'' என்றபடி கலங்கிய கண்களுடன் எழுந்து தள்ளாட்டத்துடன் நடக்க ஆரம்பித்தார். எனக்கு அந்த கண்ணீர் என்னவோ பண்ணியது.

அவர் போதையில் தான் இருந்தார்.. ஆனால் நிச்சயம் அந்த கண்ணீர் போதையினால் மட்டும் வந்ததல்ல..

இந்த சம்பவம், சென்னையில் ஒரு நாள் எவ்வளவு பேர் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

இதற்காக`சென்னையில் ஒரு நாள்’ சும்மா ரவுண்ட் வந்தேன். அதில் என் கேமராவில் சிக்கிய படங்களில் சிலவற்றை தான் இங்கு நீங்கள் காண்கிறீர்கள். இந்த படங்களை எடுக்க சென்னை முழுக்க நான் சுற்றவில்லை. இரண்டு மூன்று பகுதிகளில் சுற்றியதிலேயே ஏகப்பட்ட படங்கள் கிடைத்தன. ஒரு கிலோமீட்டர் இடைவெளிக்குள் குறைந்த பட்சம் நான்கைந்து பேர் விழுந்து கிடக்கிறார்கள்.

முன்பெல்லாம் குடி பழக்கமிருப்பவர்கள் மீது குடிகாரன் என்ற ஏளனப்பார்வை இருக்கும். சமூகத்தில் மரியாதை இருக்காது. கள்ளச்சாராய வியாபாரி ஊருக்கு ஒதுக்குப்புறமாக போலீசுக்கு பயந்து ரகசியமாக விற்றுக் கொண்டிருப்பார். அதனால் ரிஸ்க் எடுத்து சென்று குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இப்போது அரசே சாராய வியாபாரம் செய்வதால், குடிகுறித்த எந்த அவமானங்களும் இல்லை. பள்ளி மாணவர்களோ, பெண்களோ யார் வேண்டுமானாலும் காசை நீட்டினால் சாராயம் வாங்கலாம்..

குடியை ஆதரிக்கும் சில நண்பர்கள் மற்றும் வீணாய்போன `குடிகார எண்ட்டலெக்ச்சுவல்கள்’, ``அரசாங்கம் உங்க கையை பிடிச்சா குடிக்க கூப்புடுது” என்று புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு கேட்கிறார்கள்.

இப்படி கேட்கும் குடியை ஆதரிப்பவர்கள் எல்லாம் ஓரளவுக்கு நல்ல வருவாய் கொண்டவர்கள் மற்றும் வாரத்திற்கு ஒருமுறையோ பலமுறையோ குடித்தாலும் டீசண்ட்டாக வீடு போய் சேரும் அளவுக்கு தங்கள் குடி பழக்கத்தை கண்ட்ரோலில் வைத்திருப்பவர்களாக இருப்பார்கள்.

தங்களை அளவுகோலாக வைத்துக் கொண்டே தினமும் நூறோ இருநூறோ சம்பாதிக்கும் கூலித்தொழிலாளிகளையும் ஒரே தராசில் வைத்து பேசுகிறார்கள். அதோடு அரசுக்கு வருமானம் வருகிறது.. அதனால் விற்பதில் தவறில்லை என்கிறார்கள்.

எவ்வளவு அசிங்கமான வாதம். ஆதிகாலம் தொட்டே போதை மனிதனோடு இருக்கிறது. அவையெல்லாம் கள் போன்ற இயற்கையோடு சம்பந்தப்பட்டவைகளாக இருந்தன. அதையும் இன்றையை சரக்குகளையும் ஒப்பிடவே முடியாது. அதோடு கள்ளச்சாராயம் விற்றபோது குடித்தவர்கள் எண்ணிக்கையும், இன்று அரசே விற்க ஆரம்பித்தப்பிறகு குடிப்பவர்களின் எண்ணிக்கையும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக இருக்கிறது.

அதோடு ஒரு குடிமகனுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுத்துவிட்டு அவன் பாக்கெட்டிலிருந்து 100 ரூபாயை எடுத்துக் கொண்டு, அதில் பிச்சைக்காசாக ஒரு ரூபாயை அவன் குடும்பத்திற்கு இலவசமாக வழங்குகிறது அரசு.

அரசு குடிக்க கையைப் பிடித்து இழுக்க வேண்டியதில்லை. ஆனால் மக்கள் மனநிலையில், குடிப்பது அவமானமாக இருந்ததை ``இப்போ நாட்டுல எவங்க குடிக்கல..” என்று சமாதனப்படுத்திக் கொள்ளும் சமரச மனநிலையை உருவாக்கிய சாதனை தான் தமிழகத்தை மாறி மாறி ஊத்திக்கொடுத்த ஜெயா கருணாவின் சாதனை.

முன்பு குடித்துவிட்டு யாரோ ஒருவர் ரோட்டில் கிடக்கிறார் என்றால், அவர் மீது பரிதாபப்பட்டு சிலர் தண்ணீர் ஊற்றி எழுப்பிவிடுவார்கள். ஆனால் அரசே சாராய வியாபாரம் செய்வதாலும், நிறையபேரை குடிக்க வைத்து விற்பனையை பெருக்க வேண்டும் என்று அரசே ஊழியர்களை தூண்டுவதாலும் இப்போது இப்படி குடித்துவிட்டு விழுந்து கிடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் அது சகஜமான விசயமாகிவிட்டது. ஒருத்தரா.. இருவரா.. எத்தனைபேரை தான் தண்ணி தெளித்து எழுப்ப முடியும்.

பெரும்பாலும் யாரும் இப்படி விழுந்து கிடப்பவர்களை பொருட்படுத்துவதில்லை. இப்படி ரோட்டில் விழுந்து கிடப்பவர்கள் எல்லோரும் குடிகாரர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற மன நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இந்த படங்கள் எடுக்க சுற்றி வந்தபோது உணர முடிந்தது. இது எனக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணியது.

காரணம், சாலையில் நடந்து செல்லும் யாரோ ஒருவர் மாரடைப்பு வந்தோ, வேறு நோயால் மயக்கம் வந்தோ ரோட்டில் விழுந்து கிடந்தால் அதை பார்க்கும் சாதாரண மக்கள் `குடித்துவிட்டு கிடக்கிறார்' என்று ரோட்டில் கிடப்பவர்கள் எல்லோரையும் குடிகாரர்கள் என்று நினைத்து கடந்து சென்றால் என்னாவது.

இதை சோதித்துப்பார்க்க விரும்பினேன்.

இதற்காக ரோட்டில் மயங்கி கிடப்பவர் போல் நடிக்க சமூக பிரச்னைகளில் ஆர்வம் கொண்ட நண்பரும் bsnl-ல் அதிகாரியாக பணிபுரிபவருமான ஆறுமுகம் முன் வந்தார். இதற்காக சென்னையின் இரண்டு முக்கிய இடங்களை தேர்வு செய்தேன். முதலில் கீழ்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் மயங்கி கிடப்பதுபோல் நடிக்க ஏற்பாடு செய்திருந்தோம். சும்மா சொல்லக்கூடாது.. அவரும் தயங்காமல் கொளுத்தும் வெயிலில் அலங்கோலமாக விழுந்து கிடந்தார்.

தூரத்திலிருந்து என்ன நடக்கிறது என்பதை நானும், செந்தில்நாதனும் ரகசியமாக கவனிக்க ஆரம்பித்தோம். ஒருவரும் கண்டுக்கொண்டதுபோல் தெரியவில்லை. அந்த வழியாக பைக்கில் போன ஒரு சிலர், இந்த காட்சி சகஜம் என்பதுபோல் போகிறப்போக்கில் ஒரு பார்வை பார்த்துவிட்டு கடந்து சென்றார்கள். அவர்களாவது பரவாயில்லை ஒரு பார்வை பார்த்தார்கள். காரில் செல்பவர்கள் அது கூட செய்யவில்லை. நேரம் சென்றுக் கொண்டிருந்தது. விட்டால் ஆறுமுகம் நிஜமாகவே மயங்கிவிடுவார் என்பதால் அவரை தட்டி எழுப்பிவிட்டு ஏமாற்றத்துடன் அடுத்த ஸ்பாட்டான புரசைவாக்கத்திற்கு சென்றோம்.

தானா தெருவிலிருந்து நடந்து வந்த ஆறுமுகம், பாலத்தை ஒட்டி ரோட்டோரப்பகுதியில் முதலில் சோர்வாக அமர்ந்தார். யாரும் கண்டுக்கொள்ளவில்லை. அடுத்த நிமிடம் அப்படியே மயங்கி கிடப்பதுபோல் படுத்துவிட்டார். இயந்திரக்கதியான மக்கள் ஓட்டமும் நடையுமாக கடந்து சென்றுக் கொண்டிருந்தார்கள்.

நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. சரி இங்கும் ஏமாற்றம் தான். அவரை இதற்கு மேல் துன்பப்படுத்தாமல் எழுப்பி விட்டுவிடலாம் என்று நாங்கள் நினைத்த நேரத்தில் தான், பக்கத்து கடையில் வேலைப்பார்க்கும் ஒரு பெண்மணி தற்செயலாக எட்டிப்பார்த்தார். உடனடியாக உள்ளே சென்று, யாரோ மயங்கி கிடக்கிறார்கள் என்று கடையிலிருந்த மற்றவர்களிடம் விபரம் கூறியிருப்பார் போல.. இளைஞர் ஒருவர் வெளியே வந்து எட்டிப்பார்த்தார். பின்னர் உள்ளே சென்று தண்ணீர் பாட்டலுடன் ஓடி வந்தார். தட்டி எழுப்பி குடிக்க தண்ணீர் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து அதுவரை குடிகாரர் என நினைத்து ஒதுங்கி நின்ற வேறு சிலரும் நெருங்கி வந்து விசாரிக்க ஆரம்பித்தார்கள். இதை புகைப்படக்கலைஞர் செந்தில்நாதன் படம் எடுக்க ஆரம்பித்தார். இளைஞர் ஒருவர் ``அவர் மயங்கி கிடக்கிறார்.. ஆம்புலன்ஸ்க்கு போன் போடாமல் படம் எடுக்கிறீங்களே.. '' என்று கோபப்பட்டார். மறுபுறம் நமது நடிகருக்கு தண்ணீர் கொடுத்து முகம் கழுவி ஆசுவாசப்படுத்த ஆரம்பித்திருந்தார்கள். இறுதியாக அப்படி உதவியவர்களிடம், ``நடிப்புக்காக'' என்று சொல்லி நோகடிக்க விரும்பாமல், அத்தனைப்பேருக்கும் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினார் ஆறுமுகம்.

இந்த சம்பவத்தில் உதவியவர்கள் அத்தனைபேரும் சாதாரண மக்கள் தான். மெத்தப் படித்த எந்த மேதாவிகளும் இல்லை என்பதை காண முடிந்தது.

மனிதம் மரித்த சென்னையில் ஒருவருக்கு ஆபத்து என்றால் உதவுவதற்கு ஓடிவர கொஞ்சம் கடவுள்களும் இருக்கத்தான் செய்கின்றன.. நன்றி கடவுள்களே.. அப்படியே கடவுள்கள் எல்லாம் சேர்ந்து இந்த டாஸ்மாக் சனியனுக்கும் முடிவு கட்டுங்கள்.. !


-கார்ட்டூனிஸ்ட் பாலா
24-9-13

(இந்த படங்கள் எல்லாம் குடியை ஆதரிக்கும் என் நண்பர்களுக்கு சமர்ப்பணம்.

இது தொடர்பான கட்டுரை ஒன்றை 18-9-13 குமுதம் இதழில் எழுதியிருந்தேன். நன்றி: குமுதம் )
 

Comments

  1. அடடா... கதைபோல ஆனால் ஏதோ துப்பறியும் கதைபோல சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள் கஸ்தூரி என்று பின்னூட்டம் இடப்போனேன். அப்பறம்தான் தெரிந்தது இது யாரோ ஒரு நல்ல குடிமகன் எழுதியது என்று. பாராட்டுஅவருக்கு, நன்றி உங்களுக்கு. ”இந்த சம்பவத்தில் உதவியவர்கள் அத்தனைபேரும் சாதாரண மக்கள் தான். மெத்தப் படித்த எந்த மேதாவிகளும் இல்லை என்பதை காண முடிந்தது.” அதுதான் உண்மை. ”அதுஇருந்தா இதுஇல்லை, இது இருந்தா அது இல்ல” -ம.க.ப.கோ.க.சு.

    ReplyDelete

Post a Comment

வருக வருக