Skip to main content
கடலும் கிழவனும்- - நோபல் பரிசு பெற்ற கதை old man and the sea
அந்த கிழவன் ஒரு மீனவன். பெயர் சாந்தியாகோ. பெரிய மீன்களைப் பிடித்து விற்பதுதான் அவன் தொழில். ஆனால் பெரிய மீன்கள் அவ்வளவு எளிதாக சிக்குவதில்லை. இப்போதும்கூட, பெரிய மீன் ஒன்றைப் பிடிப்பதற்காக அதே கிழவன்
முயற்சி செய்து கொண்டிருக்கிறான். தினந்தோறும், நடுக்கடல் வரைக்கும் சென்று திரும்பினாலும், ஒரு பெரிய மீன்கூட அகப்படவில்லை. இன்றோடு, எண்பத்தி நான்கு நாட்கள் ஆகிவிட்டன. முயற்சிகள் எல்லாமே வீண். இருந்தாலும் மனம் தளராமல் அவன்
உற்சாகமாகவே இருந்தான். ஏனென்றால் இது போன்ற அனுபவங்கள் அவனுக்கு நிறைய உண்டு.
எதிர்பார்ப்புகள் பெரிதாக இருக்கும்போது, அதனை அடைவதற்கான கால அளவும் அதிகமாகத்தானே இருக்கும்!
கரைக்குத் திரும்பிய கிழவனை சிறுவன் ஒருவன் வரவேற்கிறான். அந்தச் சிறுவன் இதற்கு முன்னால் கிழவனோடு மீன்பிடிக்க வந்து கொண்டிருந்தான். கிழவனுக்கு மீன்கள் கிடைப்பதில்லை என்று சிறுவனின் அப்பா புரிந்துகொண்டார். உடனே அவனை வேறொரு மீனவனிடம் வேலைக்கு அனுப்பிவிட்டார். குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது என சட்டம் எதுவும் போடவில்லை. சட்டம் போட்டபிறகும்
குழந்தைகளை வேலைக்கு அனுப்புவத சிறுவன்மீது கிழவனுக்கும், கிழவனின்மீது சிறுவனுக்கும் பாசம் அதிகம். பசியுடன் கரை திரும்பிய கிழவனுக்கு தான் சேர்த்து வைத்திருந்த பணத்தில் சாப்பாடு வாங்கிக் கொடுத்தான் சிறுவன். மறுநாள் அதிகாலையிலேயே கிழவன் எழுந்துவிட்டான். துடுப்பால் படகைச் செலுத்தி கடலுக்குள் மீன் பிடிக்க கிளம்பிவிட்டான்.
மீனை கவர்வதற்காக புழுவையும், சிறு மீன்களையும் தூண்டிலில் மாட்டி, கடலுக்குள் இறக்கிவிட்டான். தூண்டிலோடு இணைக்கப்பட்ட கயிறு இழுக்கப்பட்டால் மீன்
சிக்கிவிட்டது என்று அர்த்தம். உடனே கயிற்றை மேலே இழுத்து ஈட்டி மீனைக்குத்தி படகுக்குள் இழுத்துப் போடவேண்டும்.
ஒரு நாள் முழுவதும் காத்திருந்த பிறகே, தூண்டிலின் கயிறு அசைய ஆரம்பித்தது. ஆனால் கிழவனால் மீனை இழுத்து மேலே கொண்டு வர முடியவில்லை. பெரிய மீன்...மிகவும் பெரிய மீன்! இதுவரை கிழவன் அவ்வளவு பெரிய மீனை பார்த்ததே இல்லை.
தனி ஒரு ஆளாக நின்று அந்த மீனை பிடிப்பது என்பது எளிதான காரியமல்ல. இருந்தாலும் கிழவன் நம்பிக்கையோடு இருந்தான். அந்த மீன் தானாகவே மேலே வரும் வரைக்கும் காத்திருந்தான். சிறுவன் இப்போது தன்னோடு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என யோசித்தான். தனது இளமைக்காலத்தில் பயில்வான் ஒருவனின்
கையை மடக்கி அவனை வெற்றி கொண்ட அவனுக்கு இப்போது வயசாகிவிட்டது. உடலில் அவ்வளவு வலிமை இல்லை. தூண்டிலில் சிக்கிக்கொண்ட மீன் மிகவும் பெரியது என்பதால், கயிற்றை தன் போக்கில் அது இழுத்துப் போக ஆரம்பித்தது. எனவே படகும் அதனை பின் தொடர்ந்து போனது.
இப்படியே மற்றொரு நாளும் முடிந்துவிட்டது. மேலே வந்த மீன் படகைச் சுற்றி வட்டமடித்தது. அதன் உடலில் ஈட்டியை பாய்ச்சினான் கிழவன். வலி கண்ட மீன் துள்ளலில் நீர்ப்பரப்பு மேலே எழுந்து அடங்கியது. கிழவனுக்கு நடப்பதை நம்பவேமுடியவில்லை. படகை விடவும் இரண்டு மடங்கு பெரிய மீன்! தூண்டில்
கயிற்றை படகோடு இணைத்துக் கட்டினான்.
பெரிய மீனின் காயத்திலிருந்து வழிந்த ரத்தத்தை ஒரு சுறாமீன் மோப்பம் பிடித்துவிட்டது. அதைத் தின்பதற்காக, உடனே அது படகை நெருங்கி வந்தது. கிழவன் சுறாமீன்
மீது ஈட்டியை வீசி அதைக் கொன்றான். இறந்துபோன சுறா, கிழவனின் கையில்
சிக்காமல் காணாமல் போய்விட்டது.
கூடவே பெரிய மீனின் உடலில் ஒரு பாகத்தையும் அந்த சுறா மீன் தின்று போய்விட்டது.
அடுத்தும் இரண்டு சுறாமீன்கள் படகை நெருங்கி வந்தன. கிழவன் அவற்றை சிரமப்பட்டு விரட்டியடித்தான்.
மிச்சமிருக்கும் மீனையாவது உடனடியாக கரைக்குக் கொண்டு சேர்க்கவேண்டும். ஆனால் சுறாக்கள் பெரும் கூட்டமாக வந்து தாக்க ஆரம்பித்தன. மீனின் பெரும்பகுதியை சுறாமீன்கள் கூட்டம் தின்றுவிட்டது. கடைசியாக வந்த சுறா மிச்சமிருந்த மீனின் தலையையும் ருசி பார்த்துவிட்டது.
படகு கரையை நெருங்கியது. கிழவன் மிகவும் சோர்ந்து போய் இருந்தான். எப்படியோ, தட்டுத் தடுமாறி வீடு போய் சேர்ந்தான். மறுநாள் காலையில் சிறுவன், கிழவனின் வீட்டிற்கு வந்தான். கிழவனின் உடல்முழுவதும் காயங்கள்...சிராய்ப்புகள். சிறுவன்
அதை பார்த்து அழுதேவிட்டான். கிழவனுக்கு 'காபி' வாங்கி வந்தான். நீண்டநேரம் கழித்துதான் கிழவன் படுக்கையிலிருந்து எழுந்தான். சிறுவன் கொடுத்த 'காபி'யை குடித்தான். சிறுவன், இனிமேல் தானும் மீன்பிடிக்க வருவதாகச் சொன்னான். இருவரும்
சேர்ந்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர்.
அதிர்ஷ்டம் தானாகவே வந்து சேரும் என்று சும்மா இருக்கக்கூடாது. நமது கடமையை ஒழுங்காக செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் 'கடலும் கிழவனும்'
நாவலின் சாராம்சம்!
இதை எழுதியவர் ஆங்கில எழுத்தாளரான எர்னெஸ்ட் ஹெமிங்வே. இவர் 1899-ல் அமெரிக்காவின் இலியானா மாகாணத்தில் பிறந்தார். இவர் எழுதிய உலக புகழ்பெற்ற 'கடலும் கிழவனும்' நாவலுக்காக அவருக்கு 1954-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மூலம்
வணக்கம் அய்யா, தங்களது தளத்திற்கு எனது முதல் வருகை. அழகான தன்னம்பிக்கை ஊட்டக்கூடியக் கதையைப் பகிந்தமைக்கு நன்றிகள். கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போனதே என வருத்தம் வந்தது ஆனால் கடைசியில அடிச்சாருல நோபல் பரிசை.. பகிர்வுக்கு நன்றிங்க அய்யா. தொடர்ந்து வருகை தருவேன். சந்திப்போம் அய்யா.
ReplyDelete