நட்சத்திரங்களை நோக்கி ஒரு பயணம்.


இன்றைய சமூகத்தின் கீழ்மைகளில் சகிக்க முடியாதது நல்லது கெட்டது குறித்த கவலையற்று இருப்பதே.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழமை  தோய்ந்த நமது கலாசாரத்தின் அடையாளமாகவே இது இருந்து வந்திருப்பதை நாம் உணரலாம்.

இத்தகு சூழலில் நன்றையும் தீதையும் ஆன்ம பலத்தோடு சார்பில்லாது, சமரசமில்லாது சொல்பவர்கள் சிலரே.


மழைத் தாரையில் நமது நாசிக்கு வரும் மண்வாசனையைப் போல இவர்கள் நமது வரலாறெங்கும் இறைந்து கிடக்கிறார்கள். மின்மயமாகிப் போன நமது இரவுகளில் நாம் நட்சத்திரங்கள் குறித்து கவனமற்று இருப்பதொன்றும் புதிதல்ல. நமது கவனத்தில் இல்லை என்பதால் அவை சுடர்விட மறுப்பதும் இல்லை.

நம்மோடு சக மனிதர்களாக வாழ்ந்தாலும், நமக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மரித்திருந்தாலும் அவர்கள் ஒரு  சுடர் போல் நமக்கு ஒளியூட்டி வழிகாட்டுவதை உணரலாம்.

இந்தப் பதிவின் நட்சத்திரம் ஒரு 1845இல் மே,  இருபதில் கோவையின் ஒரு கிராமத்தின் தலித் குடும்பத்தில் உதித்த காத்தவராயன்.
அயோத்தி தாஸ் (Iyothee Thass) 

1845இல் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தால் என்ன நடக்கும் என சொல்லத் தேவையில்லை. ஆனால் காத்தன் அதிர்ஷ்டக்காரன். காத்தனின் தாத்தா ஆர்லிங்டன் பிரபுவிடம் பணியாற்றி வந்தார். இதனால் பல அனுகூலங்கள் காத்தனுக்கு கிடைத்தன.

இந்த தொடர்பின் மூலம் தமிழ் இலக்கியத்தில் விற்பண்ணன் ஆனான் காத்தன். பின்பு தத்துவத்தை தொட்டார், பின்பு இந்திய சித்த மருத்துவம் என இவர் தொட்டதெல்லாம் துலங்கியது.


தமிழ், ஆங்கிலம், பாலி மற்றும் சமஸ்கிருதத்தையும் நன்கு கற்று தேர்ந்த இவர் தனது பெயரை அயோத்தி தாச பண்டிதர் என மாற்றிக் கொண்டார்.

1870இல் நீலகிரியின் தோடர்களை(இனக்குழு)  ஒன்றிணைத்து செயல்திறம் மிக்க ஒரு அமைப்பை உருவாக்கினார். இதன் தலைவராகவும் தீரத்துடன் செயல்பட்டார்.

1876இல் அத்வைதானந்தா சபையை நிறுவினார். பாதிரியார் ஜான் ரெத்தினத்துடன் இணைந்து திராவிடப் பாண்டியன் என்ற  இதழை நடத்தினார்.

1886இல் அயோத்திதாசர் தீண்டத்தகாதோர் யாரும் ஹிந்துக்கள் கிடையாது என்ற புரட்சிகர அறிவிப்பை செய்தார். இவரது பிரிவினர் (பறையர்கள்)பூர்வ பவுத்தர்கள் என்பது இவரது கருத்து.

இதனைத் தொடர்ந்து திராவிட மஹாஜன சபாவை 1891இல் நிறுவினார். அவ்வாண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தலித்துகள் தங்களை சாதியில்லா திராவிடர்கள் என பதிவிடுமாறு அறைகூவல் விடுத்தார்.

தலித்துகளுக்கான வழிபாட்டு உரிமையைக் கோரியபொழுது  மேல்தட்டு (என்று தங்களை நிறுவிக்கொண்ட)பண்டிதர்கள்   "நீங்கள் உங்கள் கருப்பனையும் காளியையும் மட்டும் வணங்கினால் போதும், பெருமாள், சிவன் கோவில்கள் உங்களுக்கு எதற்கு?" என்று பெருந்தன்மையோடு கூறினார்கள்.

தலித்துகளுக்கான கல்வியை இவர் கேட்டது இதனினும் சிறப்பு. "அப்படி என்றால் உங்கள் தெய்வங்கள் எங்களுக்கு வேண்டாம். எங்கள் குழந்தைகள் இலவசமாக கற்க பள்ளிகளை தாருங்கள். எங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் சாதியிலேயே ஆசிரியர்களும் நியமிக்கப் படவேண்டும்" என்றும் வேண்டினார்.

நிறைவேறிவிடுமா என்ன?

புத்த மதத்திற்கு மாறுதல்



கானல்  ஹெச்.எஸ். ஆல்காட்டை சந்தித்த அயோத்தி தாசர் தனது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தை தழுவ உதவுமாறு வேண்ட, ஆல்காட் அவரை இலங்கைக்கு அனுப்பினார். அங்கே சுமங்கள நாயகே என்கிற புத்த பிக்குவிடம் தீட்சை பெற்று திரும்பிய அயோத்தி தாசர் சென்னையில் 1898இல் சாக்கிய புத்த நிறுவனத்தை தொடங்கினார். இது பின்னர் தென்னிந்தியா முழுமைக்கும் பரவியது. தற்போது இந்திய புத்த நிறுவனம் என்றும் அறியப்பெறுகிறது.



ஜூன் 19, 1907இல் அயோத்தி தாசர் ஒரு பைசா தமிழன் என்கிற செய்தித் தாளை  நிறுவி நடத்தினார்.

1914ம் ஆண்டு தனது 69ம் வயதில் அயோத்தி தாசர் இம்மண்ணை விட்டு மறைந்தார்.

கடந்த 2005ம் ஆண்டு செப்டெம்பர் மூன்றாம் தேதியில் நடுவண் அரசு தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்தவ கழகத்திற்கு இவரது பெயரைச் சூட்டி மகிழ்ந்தது.

2005ம் ஆண்டு அக்டோபர் 21இல் இவரது நினைவைப் போற்றும் வகையில் ஒரு தபால் தலை ஒன்றும் வெளியிடப் பட்டது.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலித்துகளை தடுத்தவர் என்பதால் இவரை கடுமையாக விமர்சிப்பவரும் உண்டு.

இன்றளவும் தீண்டாமை கொடுமைகள் நம்மிடம் ஊறிப்போய்க் கிடப்பதை பார்த்தால் இவர் செய்தது நியாமானதே என்று ஏற்றுக்கொள்ள முடியும்.

எரிந்து போன ராமையாவின் குடிசையில் சாம்பலான   நாற்பத்தி நான்கு உயிர்களுக்கு என்ன பதில்?



தனது இடத்தை ஆதிக்க சாதியினருக்கு தர மறுத்ததால் பதினான்கு முறை கற்பழித்து கொலைசெய்யப்பட்ட பிரியங்காவின் ஆன்மாவிற்கு என்ன பதில்? (Click the link to know more)

இணைப்பு  மூன்று

இணைப்பு நான்கு

இரயில் தண்டவாளத்தின் அருகே பின்னங்கைகள் திருப்பப்பட்டு கிடந்த இளவரசனின் மரணத்திற்கு என்ன பதில்?

இப்போ சொல்லுங்க அயோத்தி தாசர் தலித்துகளை விடுதலைப் போரில் இருந்து தள்ளி நிற்க சொன்னது சரியா தவறா?

இன்று நாம் மௌனிக்கும் இந்த இடத்தில் 1845இல் ஒரு சிங்கம் கர்ஜித்திருக்கிறது!


சந்திப்போம்
அன்பன்
மது

Comments

  1. அயோத்தி தாசரைப் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி மது..உங்கள் மூலமாக இப்படி பெரியோர் சிலரை அறிய முடிகிறதே. விடுதலை பெற்று இன்னும் மோசமாகதான் ஆகியிருக்கிறது இந்த விசயம்....

    ReplyDelete
    Replies
    1. மனிதம் மலர்வது குறித்து கவலைகொள்ளும் ஆசிரியர்களால்தான் மாற்றங்கள் சாத்தியமாகும்.

      Delete
  2. மிக நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் மகிழ்வுடன் பெறப்பட்டன
      நன்றி..

      Delete
  3. தந்தை பெரியாருக்கு முன்பே இந்த மண்ணில் தலித்துகளுக்கான சலுகை மற்றும் இடஒதுக்கீடு பற்றிய சிந்தனைகளைத் தந்தவர் அயோத்திதாசர். அவரைப் பற்றிப் பேசுவதும், அவரது சிந்தனை செயல்பாடுகளைப் பரப்புவதும் இன்றைய நம் கடமை. ஆனால் தலித்தியச் செயற்பாட்டாளர் பலருக்கும் இவரைப் பற்றித் தெரியாதிருப்பதுதான் நம்மைப் பிடித்த அரசியல் கேவலம். அரிய தொகுப்பு மது! தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா..
      தொடர்வேன்..

      Delete
  4. புதிய தகவல்கள் பெரியோர்களை அறிமுகப் படுத்துவது நன்றே நன்றி சகோ! வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி

      Delete
  5. அயோத்தி தாச பண்டிதரைப் பற்றி அறியாதன அறிந்தேன் நண்பரே நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா
      வருகைக்கும் கருத்துக்கும்

      Delete
  6. இன்றளவும் தீண்டாமை கொடுமைகள் நம்மிடம் ஊறிப்போய்க் கிடப்பதை பார்த்தால் இவர் செய்தது நியாமானதே என்று ஏற்றுக்கொள்ள முடியும்.//

    100% சரியே!

    நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்துமே மிக மிக நியாயமானக் கேள்விகள்!

    யாரிடம் இருக்கிறது பதில்?? நாம் எல்லோருமே வெட்கித்தலை குனிய வேண்டியதுதான்!...ஏனென்றால் நம்மால் மௌனசாட்சிகளாய்தானே இருக்க முடிகின்றது!? இந்த சமுதாயத்தைத் திருத்த முடியவில்லையே என்று! அதுதான் கசப்பான உண்மை!

    நல்ல அருமையான ஒரு தகவல்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நாம் என்று பொதுவாக சொன்னால் எப்படி ...
      ஆசிரியர்களாகிய நாம் என்றுதான் சொல்ல வேண்டும்
      கற்பித்தலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நமது கடமை அல்லவா ...
      பொதுச் சமூகத்தை குறை கூறுதல் சரியல்ல என்பது எனது கருத்து...தவறாக இருந்தால் மன்னிக்கவும்..

      Delete
  7. அயோத்தி தாசரைப் பற்றி தெரிந்துக்கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. எனக்கு தெரிந்த பொது வரலாற்றில் இதுவரை மறைக்கப்பட்ட மாமனிதரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருதுக்கம் மிக்க நன்றி தோழர்..

      Delete
  9. சாதி குறித்த அயோத்தி தாசரின் பார்வை நியாயமானது . ஆனால் தீபாவளி பண்டிகை குறித்த இவரது பார்வை ??? புத்தசமய கருத்துகளை தனக்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொன்டார் எனும் குற்றச்சாட்டும் உள்ளதே !

    ReplyDelete
    Replies
    1. அவா சொல்றதையெல்லாம் கேட்கவேண்டிய அவசியம் இல்லை ...
      அப்படியே மாற்றியிருந்தாலும் நல்லதே.. அவர் படித்த அளவு நான் படிக்கவில்லை என்பதே உண்மை.

      அப்புறம் பூர்வ குடிகளின் பழக்க வழக்கங்களை உள்ளீர்த்தே பிராமணீயம் வளர்ந்தது.

      சரித்திரம் சமயம் என அனைத்தையும் அவர்கள் விருப்பத்திற்கு அவர்கள் மாற்றுகிற பொழுது ... அயோத்தியாருக்கு அவ்வுரிமை இல்லையா?

      Delete

Post a Comment

வருக வருக