த சிசிலியன் ஒரு ஆங்கில நாவலும் இரண்டு தமிழ்த் திரைப்படங்களும்


சிசிலியின் தெற்கு பகுதியான  பியற்றாடிபூசியில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஒரு ஏழைக் குடும்பத்தின் நான்கு குழந்தைகளில் ஒருவர் மரிய பூசோ. அமெரிக்காவின் தொடர்வண்டி பாதைகளை நிர்மாணிக்கும் பணியில் தந்தையுடன் உழைத்தவர்.


ஹெல்ஸ்  கிச்சன் பகுதியின்  நூலகங்கள் இவருக்கு வாசிப்பை அறிமுகம், செய்ய கிடைத்த அனைத்து உலக இலக்கியங்களையும் படித்துத் தீர்த்தார். எப்படியாவது தனது மகன் ஒரு தொடர்வண்டித்துறை கணக்கராக மாறிவிடுவான் என்ற இவரது அன்னையின் கனவிற்காக சிறிது காலம் தொடர்வண்டித் துறையிலும் பணிபுரிந்தார். பின்னர் இரண்டாம் உலகப் போரில் பங்கெடுக்க இராணுவத்தில் சேர விளைந்தார். ஆனால் பார்வைத் திறன் குறைபாட்டின் காரணமாக களவாய்ப்பு கிடைக்கவில்லை. போரில் ஒரு முறைகூட சுடவில்லை எனினும் பல ராணுவ விருதுகளைப் பெற்றார்.

பல நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதிய இவர் விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் பொருளாதார நிலை என்னவோ சுமார்தான். “எனது குழந்தைகளுக்காக பொருளாதாரரீதியில் வெற்றி பெரும் ஒரு நல்ல நாவலை எழுதும் அவசியத்தில் நான் இருக்கிறேன். ஒரு அரசு கணக்கர் அளவிற்காது நான் பொருளீட்ட வேண்டும்” என்று சொன்ன பூசோ எழுதிய நாவல் த காட்பாதர்.

அந்த நாவல் தொடர்ந்து அறுபத்தி இரண்டு வாரங்களாக நியுயார்க் பெஸ்ட் செல்லர் வரிசையில் முதலிடத்தில் இருந்தது. அதன் திரைக்கதைக்காக இவருக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் பெற்று தந்தது.

இந்த வரிசையில் இவரது இரண்டாவது ஆகச் சிறந்த நாவலாக கருதப் படுவது த சிசிலியன். இதன் முக்கிய கதாபாத்திரம் உண்மையில் சிசிலியில் வாழ்ந்தவர் என்பதும் இருபதாம் நூற்றாண்டின் ராபின் ஹூட் என்று அழைக்கப்பட்டு சிசிலியின் பெருந்திறள் மக்களால் இன்றளவும் கொண்டாடப் படும் டுரி என்கிற சால்வடோர் கிலானோ என்பதும் ஆச்சர்யமான தகவல்கள்.
கருப்பு கோட்டில் அஸ்பானு பிசியாட்டா மற்றும் சால்வடோர் கிலியானோ


நிழலாகிய நிஜ மனிதர்கள்

நாவலின் முக்கிய கதாபாத்திரம் சால்வடோர் கிலானோ ஊர்மக்களால் செல்லமாக டுரி என்று அழைக்கப்படும் ஒரு சாதாரண கிராமப்புற இளைஞன். தனது இருபதாவது வயது வரை வெகு சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்துவருகிறான். தனது தமக்கையின் திருமண நாளுக்காக கள்ளச் சந்தையில் அரைப் பவுண்டு பாலாடைக் கட்டியை வாங்கி அதை தனது கழுதையின் வயிற்றில் கட்டிக் கொண்டு தனது உயிர் நண்பன் அஸ்பானு பிசியாட்டாவுடன் வீட்டுக்கு திரும்பி வருகிறான்.

ஊழல் மலிந்த இத்தாலிய போலிஸ் தனது சம்பளத்தை பெரிய கள்ள சந்தை வியாபாரிகளிடம் இருந்தே பெறுகிறது. பெரிய திமிங்கிலங்களை தப்ப விட்டு சிறிய மீன்களை பொறிவைத்துப் பிடிக்கும் கலையில் சிறந்தவர்கள்!? இவர்களிடம் சால்வடோர் கிலானோ பிடிபடுகிறான்.

காவல் அதிகாரியிடம் இருந்து தப்ப முயலும் கிலானோ ஓடுகிறான். அவனை நோக்கிச் சுடும் காவல் அதிகாரிகளின் குண்டில் இருந்து தப்பிக்க கவையாக விரிந்த ஒரு மரக் கிளையில் தாவி காற்றில் சுழன்று கவையில் திரும்பி நின்றவாக்கில்  துப்பாக்கியை குறிபார்த்து இயக்க ஊழல் அதிகாரியின் கண்ணைத்துளைக்கிறது குண்டு! அதே வேளையில் ஒரு குண்டு கிலானோவையும் துளைக்கிறது.

அரைப்பவுண்டு பாலாடைக் கட்டிக்காக ஒருவனை சுட முடியுமா என்ற அதிர்ச்சிக் கேள்வியுடன் நினைவிழக்கிறான் கிலானோ.

உயிர் நண்பன் அஸ்பானு பிசியாட்டாவின் தொடர்புகளால் ஒரு பாதிரியார் தனது தேவாலயத்திலேயே கிலானோவிற்கு மருத்துவ உதவிசெய்து கிட்டத்தட்ட மரித்துப்போன அவனை உயிர்மீட்கிறார். உயிர் நண்பன் அஸ்பானு பிஸியாட்டாவின் கையைப் பிடித்துக்கொண்டு கிலானோ பேசும் வசனங்கள் நாவலின் உணர்ச்சிகரமான பகுதிகள்.

ஊரில் கிலானோவை ஒப்படைக்காததால்  பலர் சிறைபிடிக்கப்படுகிறார்கள். தனது நண்பர்களோடு அவர்களை அரசுச் சிறையிலிருந்து மீட்கிறான் கிலானோ. அப்போது ஒரு காவல் அதிகாரி கிலானோவின் நெற்றியில் தனது கைத்துப்பாக்கியை வைத்து சுடுகிறான். ஆனால் அது வெடிக்காமல் போய்விடுகிறது. துப்பாக்கி தலையில் வைக்கப் பட்ட பொழுதும் விசையை அழுத்தும் பொழுதும் சலனமில்லாமல் புத்தனின் முகமாய் இருக்கிறது கிலானோவின் முகம். ஊர் மக்கள் மரணம் குறித்து எந்தவித பயமோ சலனமோ இல்லாத கிலானோவை யுக புருசனாக கொண்டாட இந்த நிகழ்வு காரணமாக அமைகிறது.

மேலும் இந்த நிகழ்வில் கிலானோவால் விடுவிக்கப் பட்ட இருவர்  அவனுக்குத் தளபதிகளாக செயல்படத்துவங்குகிறார்கள். 

செல்வந்தர்களின் செல்வத்தை கொள்ளையிட்டு அதை ஏழைகளுக்கு வழங்கத் துவங்குகிறான் கிலானோ. சிசிலி மக்களின் நாயகனாக கொண்டாடப்படும்  கிலானோ அரசினால் தேடப்படும் பெரும் குற்றவாளியாகமாறிப் போகிறான்.

ஆனால் சிசிலியில் ஒன்றும் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. அரசு, காவல்துறை அனைத்தும் இத்தாலியின் தாதாக்களின் தாதாவான டான் க்ரூஸ் கட்டுப்பாட்டில். டான் க்ரூஸ் இத்துணைக் காலம் கிலானோவை விட்டு வைத்திருப்பது என்றாவது ஒரு நாள் அவனைத் தனது வழியில் கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையில்தான்.  

ஆனால் கிலானோவோ மாஃபியா உலகினை இத்தாலியில் இருந்து அறவே அழிக்கத் துடிப்பவன். டான் குருரமான நிழல் உலகின் தலைவன். கிலானோவின் கனவோ ஏழைகளின் துயர் துடைப்பது. டான் ஏழைகளின் இரத்தம் குடிப்பவன். இருவருக்குமான யுத்தம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

காவல் துறையோ டானின் விழியசைவிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் ஏழை மக்களின் துயர் துடைக்க, தீவில் புதிய கட்சி ஒன்று வருகிறது. பொதுவுடமை பேசும் அந்தக் கட்சி வளர்ந்தால் தனது இருப்பு கானலாகிவிடும் என்று உணரும் டான் ஒரு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்கிறான். குள்ளநரித்தனத்தை உணராத கிலானோ பேச்சு வார்த்தைக்குப் போகிறான். 

கம்யுனிஸ்ட் கட்சியின் ஆதரவோடு உழவர்கள் ஒரு திடலில் திருவிழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த விழா நடந்தால் கட்சி தீவில் காலூன்றிவிடும் என்று உணர்ந்த டான் கிலானோவை நிகழ்வை சிதைக்க சொல்லி உத்தரவிடுகிறான். கிலானோ கம்யுனிஸ்ட் கட்சி தனது மதத்தின்  பிரார்த்தனையை வெறுப்பதால் திட்டத்திற்கு சம்மதிக்கிறான்.

உழவர் நிகழ்வு நடைபெறும் திடலின் அருகே உள்ள மாடியில் இரண்டு குழுக்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பிகின்றன. இதில் கிலானோ எதிர்பார்த்ததற்கு மாறாக பெண்கள் குழந்தைகள் உட்பட அப்பாவிகள் பலர் குண்டுபட்டு சாகின்றனர்.

அதுவரை கிலானோவை கொண்டாடிய சமூகம், தூற்ற ஆரம்பிக்கிறது. டான் க்ருசிடம் பணம் பெற்றுக்கொண்டே தனது தளபதி ஒருவன் அப்பாவிகளை சுட்ட விஷயம் தெரிந்த உடன் அவனை சுடுகிறான் கிலானோ.

இந்நிகழ்வு கிலானோவின் மாஃபியா வெறுப்பை உச்சத்திற்கு கொண்டு செல்ல இத்தாலியின் முக்கியமான டான்கள் ஆறுபேரை சுட்டுத் தள்ளுகிறான் கிலோனோ.

பின்னர் டான் க்ரூசிடம் பாதுகாப்புப்பெற்ற ஒரு இளவரசனை கடத்தி, டான் க்ரூசிடம் இருந்தே பணயத் தொகையைப் பெறுகிறான் கிலானோ. இதன் மூலம் பெருந்திறள் மக்களின் நாயகன் என்கிற தனது பிம்பத்தை காத்துக்கொள்கிறான். பின்னர் கார்டினல் (டான் க்ரூஸின் சகோதரர்) ஒருவரைக் கடத்த, தேவாலயம் பணயத் தொகையைப் தந்து கார்டினலை மீட்கிறது.

இதற்கு மேல் பொறுக்க முடியாத டான் கிலானோவை அவனது ஆத்ம நண்பன் அஸ்பானு பிசியாட்டா மூலம் கொல்கிறார். பின்னர் அஸ்பானுவை சிறைக்கு அனுப்பி அவனையும் கொல்வதில் முடிகிறது கதை.

படித்துப் சில வாரங்களுக்கு வாசகனின் மனதைப் பிராண்டிக் கொண்டிருக்கும் கதை. உயிர் நட்பின் எதிர்பாரா துரோகம் என்கிற ஒற்றை இழை நாவலின் ஆதார சுருதி. நல்லவர்கள் வல்லவர்களாகவும் இருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தும் புதினம் இது.

நாவலைப் படித்த எவரும் தமிழ் திரையில் வெளிவந்த பீமாவை வெகு எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம்.

ஏழைகளுக்காக ஆயுதம் எடுக்கும் சின்னா, அவனை தனது ஆதர்சமாக கொண்டு வளரும் சேகர்(பீமா) இவர்களை அழிக்கத் துடிக்கும் பெரியவர் என அப்பட்டமான தழுவல். ஆனாலும் திரைக்காக சில மாற்றங்களை முயற்சித்ததில் நாவலில் வரும் எதிர்பாரா அதிர்ச்சியையும் ஆற்றாமையையும் படம் கையாளத் தவறிவிட்டது. படம் தமிழ் திரையில் ஒரு தவிர்க்க முடியாத படமாக (ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவினால்) இருந்தாலும் உணர்வுகளை சரியாக கையாளாததால் ஊற்றிக் கொண்டது.

ஆனால் கதையின் அடிப்படையான உயிர் நட்பின் துரோகம் என்கிற வாசகனின் மனதைப் சிலகாலமாவது பிசையும் விசயத்தை வெகு சரியாக பயன்படுத்தி காட்சிப்படுத்திய சுப்ரமணியபுரம் என்ற படத்தின் அதிரி புதிரி வெற்றியும் அமெரிக்க இறக்குமதியே.

இரண்டு படங்கள் ஒரே நாவலில் இருந்து ஒன்று ஊற்றிக் கொள்ள ஒன்று அதிரி புதிரி வெற்றியடைந்தது உண்மையில் உணர்வுகளை திரையில் பார்வையாளனுக்கு புரியும்விதத்தில் காட்டுவதற்கு கிடைத்த வெற்றியே.

குறிப்பாக மலைக்கோவிலில் கதாநாயகி அழுதுகொண்டே இருக்க புரியாத நாயகன் ஏன் அழுகிறாய் என்று மீண்டும் மீண்டும் கேட்கும் பொழுது ஓடிடுடா ஓடிடுடா என்று பார்வையாளர்களை கூவ வைத்ததில்  இருந்தது சுப்ரமணியபுரத்தின் வெற்றி.

இன்னும் கொஞ்சம் மரிய பூசோ


பின்னால் நடப்பதை முன்னால் அறிவிப்பவர்கள் தீர்க்கதரிசிகள். பூசோ தனது நாவல் ஒன்றில் கஞ்சா விற்பதை சட்டபூர்வமாக்க முயற்சிக்கும் ஒரு டானைப் பற்றி எழுதியிருப்பார். இன்று அமெரிக்காவின் பல மாகாணங்களில் கஞ்சா சட்டப்படி விற்கப்படுவது மரிய பூசோவை ஒரு தீர்க்கதரிசி ஸ்தானத்திற்கு உயர்த்தியிருப்பதாக நான் கருதுகிறேன்.

இந்த நாவலின் கதாநாயகன் கிலானோவை நாம் மேதகு பிரபாகரனோடும் பொருத்திப் பார்க்கமுடிவதும், கருணாவின் துரோகம் உணர்வாளர்களின் நெஞ்சை அறுப்பதையும் இந்த இடத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
வாழ்நாளில் கொஞ்சம்கூட சுயநலமின்றி வன்முறையால் சமூகத்திற்கு நன்மை செய்ய விரும்பும் எவரும் கிலானோவின் வாழ்வைத்தான் மீண்டும் வாழ்கிறார்கள் என்றுபடுகிறது எனக்கு.

அவர்கள் கிலானோவைப்போல்தான் வாழ்கிறார்கள் கிலானோபோல்தான் சாகிறார்கள்.

தழுவல்களின் வெற்றியை அவற்றின் மூலம் அறியாது கொண்டாடும் போக்கு மூலப் படைப்பாளிக்கு செய்யும் துரோகம் என்பது என்கருத்து. மூலத்தை அறிமுகம் செய்ய எனக்கு வாய்ப்பளித்து உங்களின் மதிப்புமிக்க நேரத்தையும் எனக்களித்த உங்களுக்கு என்னுடைய பெருநன்றிகள்.

வாய்ப்பளித்த வீதிக்கு நன்றி.

வணக்கம்

அன்பன்    

மது
www.malartharu.org


டிஸ்கி

மூன்றவதாக ஒரு படத்தை சேர்க்க மறந்துவிட்டேன் அதுதான் முதலாவது தழுவல். அது பாரதிராஜாவின் என்னுயிர்த் தோழன் !

இதை அப்படியே படித்தால் மொத்தி இருப்பார்கள் எனவே இதை அச்சிட்டு உறுப்பினர்களின் கையில் கொடுத்துவிட்டு இது குறித்து பேசினேன். எனவே ஒரளவு தாக்குப் பிடிக்க முடிந்தது. இந்த ஆலோசனையை சொன்ன திரு. ஆண்டனி அவர்களுக்கு நன்றி.

Comments

  1. முதலில் இருந்து இறுதி வரை விறுவிறுப்பாக இருந்தது உங்கள் பதிவு..கதை கண்முன் விரிந்தது..பீமா பார்க்கவில்லை..சுப்பிரமணியபுரம் பார்த்திருக்கிறேன்..
    அருமையான தகவல் கட்டுரைக்கு நன்றி மது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிஞரே

      Delete
  2. மரியோ பூசோவின் நாவல்களைப் படித்திருக்கின்றேன் நண்பரே
    அருமையான செய்திகள்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  3. நல்லாவே 'சுட்டு'ள்ளார்கள்...

    ReplyDelete
  4. மூலக் கதையை அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. ஒரு ஆச்சரியம்...

    நட்பின் துரோகம் என்ற வரிகளை படிக்கும்போதே எனக்கு சுப்ரமணியபுரம் தான் ஞாபகம் வந்தது ! அப்படி வர வைக்கும் அளவுக்கு அதன் திரைக்கதை அமைந்தது தான் அதன் அதிரிபுதிரி வெற்றிக்கான காரணம் !

    ...கிலானோவை நாம் மேதகு பிரபாகரனோடும் பொருத்திப் பார்க்கமுடிவதும், கருணாவின் துரோகம் உணர்வாளர்களின் நெஞ்சை அறுப்பதையும் இந்த இடத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன்....

    ஜூலியஸ் சீசர்... ஏன் அதற்கு முன்னரே தோன்றியதல்லவா ந‌ட்பின் துரோகம் ?!

    நல்ல பதிவு

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete

Post a Comment

வருக வருக