ஹெர்குலிஸ்




கிரேக்க காவியங்கள் இன்றளவும் ஆங்கில படைப்புலகை தங்களின் வசியத்திற்குள் வைத்திருப்பதின் சமீபத்திய சாட்சி இயக்குனர் பிரட் ராட்னரின் இந்தப் படம்.  

ஹெர்குலிஸ் ஒரு டெமிகாட் பாதி மனிதன் பாதி கடவுள். கடவுள் சீயஸ், அல்காமேன் என்கிற மனிதப் பெண்ணுடன் காதலுற்று பிறந்தவன்.
கடவுளுக்கு நிகரான பலம் கொண்டவன். 


இவனது பன்னிரண்டு சாதனைகள் இவனை புகழின் உச்சிக்கு கொண்டுசெல்கின்றன. 

ஏதென்ஸ் அரசன் எரித்தீசியஸின் புகழைவிட ஹெர்குலிஸ் புகழ்பெற்று விளங்குகிறான். ஹட்ராவின் தலைகளை கொய்துவரும் ஹெர்குலிசை பாராளுமன்றமே எழுந்து நின்று வரவேற்கிறது. பெரும்திரள் மக்கள் ஆரவாரித்து வரவேற்கிறார்கள். பார்த்துகொண்டிருக்கும் எரித்தீசியஸ் இப்படி ஒரு ஆரவரிப்பு உன்னை கடவுள் மாதிரி உணரவைக்குமே என்று கேட்கிறான். சிரித்து மறுக்கிறான் ஹெர்குலிஸ். 

தொடரும் நிகழ்வுகள் ஹெர்குலிஸ்ஸின் குடும்பத்தை அவனிடமிருந்து பிரிக்கிறது. கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் ஹெர்குலிஸ் கூலிப்படை தளபதியாக மாறிப்போகிறான். 


ஐயோலஸ் என்கிற கதைசொல்லி, ஆம்பியாராஸ் என்கிற தீர்க்க தரிசனம் சொல்லும் மடக்கு கத்தி வீரன், ஆட்டோலிகஸ் என்கிற வீசுகத்தி வித்தைக்காரன், அட்லாண்டா என்கிற வில்வித்தை பெண், டைடீயஸ் என்கிற கோடரி வீரன் என ஐவர் கொண்ட படைக்கு தளபதியாக ஹெர்குலிஸ். தங்கம் பணம் என்று பொருளுக்கு யுத்தம் செய்யும் இந்தக் குழுவிற்கு மரணத்தின் நிழலில் போர்களத்தில் மட்டுமே அமைதி கிடைக்கிறது. 

த்ரேஸ்நாட்டின் கொட்டியாஸ் என்கிற தளபதி ஹெர்குலிஸ்சை அழைக்கிறான். எடைக்கு எடை தங்கம் தருகிறேன் என்நாட்டை காப்பாற்று என்று சொல்லி ஹெர்குலிஸ்சை வேண்டுகிறான். 

இதன் தொடர்ச்சியாக விரிகிறது கதை. 

 படத்தின் பலங்கள் சில 

பெர்னாண்டோ வேலியாஸ்குவஸின் இசை. குறிப்பாக ஹெர்குலிஸின் சாகசங்களின் பொழுதும், அரசனை சந்திக்க ஏதன்ஸ் நகருக்கு வரும்பொழுதும், தீசியசின் அரண்மனையிலும் ஒலிக்கும் இசை கொஞ்ச நாட்களுக்காவது உங்கள் காதுகளில் இருக்கும்.

இது ஒரு முப்பரிமாணப்படம் எரிமாந்திய காட்டுப் பன்றியை ஹெர்குலிஸ் மோதும் இடம் த்ரீ டியில் ரொம்ப அருமையாகவே வந்திருக்கிறது. பல காட்சிகளில் ஈட்டிகள் முகத்துக்கு நேராய் நீட்டப்படுகின்றன.
பாதி குதிரை பாதி மனிதனாக திரியும் செண்டார்கள் யார் என்று தெரியும் பொழுது ஒரு வாவ். 

ஐயோலஸ் பங்கிற்கு ஹெர்குலஸ் பற்றி இமேஜ் பில்டிங் செய்ய, அதேபோல் எதிரிகளும் ஏகப்பட்ட இமேஜ் பில்டிங். (இக்கால அரசியல் அக்காலத்தில் இருந்தே...!) ஒளிவீசும் மாநிலத்தின் முதல்வர் என்ற வாசகம் நினைவில் வந்தது.

கிளைமாக்சில் தனது குடும்பம் அழித்ததற்கு ஏதன்ஸ் அரசனே காரணம் என்று உணரும் ஹெர்குலிஸ் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறான். அவனை நெருங்கும் எரித்தீசியஸ் (ஏதென்ஸ் அரசன்) எப்படி ஹெர்குலிஸின் இமேஜை அழித்தேன் என்று விளக்க வெறியாகிறான் ஹெர்குலிஸ். 

இந்த காட்சியில் எரித்தீசியஸ் பேசும் வசனம் ஒரு வாவ். நீ அசுர பலம் கொண்டவன் ஆனால் லட்சியம் இல்லாதவன். அதுதான் நீ செய்த பாவமே. லெட்சியம் இல்லாத பலசாலிகள் ஆபத்தானவர்கள் எனவே உன் குடும்பத்தை அழித்தேன் என்று சொல்லும் எரித்தீசியஸ் தற்கால அரசியல்வா(வியா)திகளின் குரு. 

இந்த நிலையில் ஆம்பிபேரஸ் ஹெர்குலிசை வெகு திறமையாக உருவேற்றி எதிரிகளை அழிக்கவைக்கிறான். 

பெண் தெய்வம் ஹீராவின் சிலையை தகர்த்து எதிரிகளை அழிக்கிறான் ஹெர்குலிஸ். உருளும் சிலையின் தலை கொட்டியாசை நசுக்கி பள்ளத்தாக்கில் வீசுகிறது. 

பலரும் பலவிதத்தில் சொல்லப்பட்ட புராணக் கதையை எப்படி திரைகதையாக்குவது என்பதைத் தெரிந்து கொள்ள இந்த படத்தை நான் பரிந்துரைக்கிறேன். 

கட்டாயம் குழந்தைகளையும் அழைத்து செல்லலாம்.

ஹெர்குலிஸ் ஆவது என்றால் சும்மாவா?

Comments

  1. பார்க்கத்தூண்டும் விமர்சனம் !

    நமது காவியங்களில் ‍ஹெர்குலிஸ் போன்ற பல சுவாரஸ்ய கதாபாத்திரங்கள் உண்டு ! அந்த பாத்திரங்களை கொண்டு மிக சிறந்த படங்களை படைக்க முடியும் ! முயற்சிப்பார்களா நம் இயக்குநர்கள் ?!

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : விடுமுறை விண்ணப்பம் !

    http://saamaaniyan.blogspot.fr/2014/08/blog-post.html

    ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சாம். மணிரத்தினம் அடிக்கடி சொல்வார் செய்வர்.

      வருகிறேன் சாம் ..

      Delete
  2. 3 D ந்னா நாமும் குழந்தைதான்......கிரேக்கர்களும் நம்மைப் போல் புராணக் கதைகள் சொல்லுவதில் கில்லாடிகள்தான்....

    அழகான விமர்சனம்...
    பார்க்கிறோம்!

    ReplyDelete
  3. ஹெர்குலிஸ் ஆங்கிலப் பாடத் திட்டத்தில் உலா வரும் ஹீரோதான். பள்ளிப் பாடத்தில் படித்திருக்கின்றோம். ஆனால் இப்போது இந்த ஹீரோ பாடத் திட்டத்தில் வருவது குறைந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. உடன் வந்து பின்னூட்டமிட்டதற்கு வாழ்த்துக்கள்

      Delete
  4. எப்போதுமே ஆங்கிலப் படங்கள் பற்றிய உங்கள் விமர்சனம் படிக்க அருமையாக இருக்கும். ஒரு சிறு குழந்தையின் பிரமிப்போடு படத்தில் வரும் சாகச காட்சிகளை விமர்சனம் செய்து இருப்பீர்கள். ஹெர்குலிஸ் படத்தை பார்க்கச் சொல்லும் விமர்சனம். நான் முன்பு போல தியேட்டர்களுக்கு படம் பார்க்கப் போவதில்லை. தங்கள் அனுபவத்திற்கு நன்றி!
    த.ம.2

    ReplyDelete
  5. ஹெர்குலிஸ் சிறுவயதில் படித்தது நண்பரே
    விமர்சனம் அருமை
    அவசியம் பார்க்க முயற்சி செய்கிறேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  6. Anonymous8/8/14

    தமிழ் படங்களின் விமர்சனங்களைவிட ஆங்கில பட விமர்சனங்கள் மிகவும் அருமை மற்றும் நேர்த்தி ஐயா ! நண்பர்களுடம் ஞாயிறு போவதற்கு பிளான். சிறிது இடைவெளி ஆகிவிட்டது. இனி தொடருவேன் வழக்கம் போல. நீங்களும் தொடருங்கள் !

    ReplyDelete
  7. நல்ல விமர்சனம். படத்தினைப் பார்க்கும் ஆவலை மேம்படுத்துகிறது. நன்றி.

    ReplyDelete
  8. நல்ல விமர்சனம்..குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம் என்ற தகவலுக்கும் நன்றி

    ReplyDelete

Post a Comment

வருக வருக