ஒரு பயணம், ஒரு சந்திப்பு

கவிஞர் நந்தனின் ஸ்ரீதரனின் புதுகைப் பயணம் 
நந்தனின் எழுத்தில் ...

உண்மையில் இந்தப் பதிவை நான் எழுதவேண்டாம் என்றுதான் இருந்தேன். சற்றுமுன் ஒரு பிரியமான நண்பருடன் நிகழ்ந்த அலைபேசி உரையாடல் இதை எழுதினால் என்ன தப்பு என உணர்த்தியது..


எப்போதும் பைத்தியம் பிடிக்கப் போவதற்கு சற்றே முந்தைய நிலையிலேயே வெளியூர் செல்லும் வாய்ப்புகள் எனக்கு வாய்க்கின்றன. குறைந்த பட்சம் எனது அந்த குரூர முகத்தைப் பார்த்து சனியனே.. இப்புடி இங்க உக்காந்து உயிரை வாங்குறதுக்கு பதிலா எதாச்சும் ஊருக்காவது போயிட்டு வா.. என்று மீனாளே ஊருக்கு அனுப்பிவிடும் அழுத்தத்துடன்தான் நான் இருக்கிறேன் அல்லது அழுத்தத்துக்கு கீழ்ப்படியும் மனதுடன்தான் நான் இருக்கிறேன்.

இப்படியான அழுத்த வாழ்விலிருந்து தப்பிக்கதான் புதுக்கோட்டை நோக்கி நான் கிளம்பினேன். போனுக்கு வரும் அழைப்புகளை ஏற்காமலே சரியான நேரத்துக்கு கோயம்பேடு சென்று சரியான பஸ்ஸை தவற விட்டாலும் வேறொரு திருச்சி பஸ்ஸில் எனது பேகை வைத்துவிட்டு அங்கே உலாவும் போலீசாருக்கு பயந்து யாரும் காணாத ஓரமாக நின்று சிகரெட்டைப் பற்றவைத்தேன்..

ஒரு கிழவி. உரச்சாக்கு என எங்கள் ஊர்க்காரர்கள் அழைக்கும் பிளாஸ்டிக சாக்குப் பையில் எதையோ அடைத்து தன் இடது தோளில் சுமந்தவாறு அலைந்தவள் அவள். அவளிடம் ஒரு கண்டக்டர் என்னமோ கேட்டார். அவள் ஏதோ பதில் சொன்னாள். என் மனதிலோ அல்லது நினைவிலோ அவர்களது உரையாடல்கள் பதிவில்லை. கண்டக்டர் அவளை கையைப் பிடித்து என்னை கடக்கும் தருணத்தில் அவள் கேட்ட கேள்விதான் என் காதில் விழுந்தது.. திர்னவேலிக்கு எம்புட்டு..? என்றாள் அவள்..

உங்கைல எம்புட்டு இருக்கு..? என்று கேட்டார் அந்த கண்டக்டர். அந்த தருணத்தில்தான் எனக்கு அவளது தீய்ந்த வலக்கை கண்ணில் பட்டது. தீய்ந்த என்றால் தீய்ந்து கருகிய என்ற பொருளில்லை. தீய்ந்து புண் ஆறியதால் புள்ளிப் புள்ளி வெள்ளைகளோடு கிட்டத்தட்ட லூகோ டெர்மா எனப்படும் வெண்புள்ளி நோயை ஒத்த தீய்ந்தது..

அது சமைக்கும்போது தீய்ந்தது என்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. கிழவி அந்த கண்டக்டரிடம் எறநூறு ரூவா இருக்கு. என்று கர்வத்துடன் சொன்னாள். கண்டக்டர் திர்னவேலிக்கு நாநூறு ரூவா ஆகும்மா.. என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே இன்னொரு காக்கி சட்டை ஊழியரும் அங்கே வந்துவிட்டார்..என்ன விவரம் ஏதென்று கேட்டபின் அந்த கிழவியின் நிலைமை அவருக்கும் புரிந்ததால் எக்மோருக்கு எங்கே பஸ் பிடிப்பது என்றும் ரயிலில் எப்போது ஊருக்குப் போவது என்றும் கிழவிக்கு அவர் விளக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த தீய்நத கை என்னை எப்போதோ இளக்கிவிட்டிருந்தது. அப்போதுதான் கவனித் தேன், நான் அழுது கொண்டிருந்தேன்..

நல்ல வேளை அந்த மூவரும் அதைகவனிக்கவில்லை. இதற்குமுன் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் மணமுடிந்த ஒருத்தியை வழியனுப்பி வைக்கையில் நான் அழுததுதான் கடைசி சம்பவம். ரயிலின் ஜன்னல் வழி அண்ணா என அவள் அழைத்ததையும் தாங்க முடியாமல் இருந்தவன்தான் நான். இந்த எண்பதைத் தொட்ட, வலக்கை கருகிய ஒருத்தி வெறும் இருநூறு ரூபாயுடன் திருநெல்வேலி போகத் தலைப்பட்டதை நான் எப்படி எடுத்துகொள்வது.. சட்டென கண்ணைத் துடைத்துக் கொண்டு அந்த டிரைவரிடம் இந்த அம்மாவுக்கு எவ்வளவு பணம் குறைகிறதோ அதை நான் கொடுத்துவிடுகிறேன். அவர்களை திருநெல்வேலிக்கு பஸ் ஏற்றி விடுங்கள் என்று சொன்னேன்.

சொன்னேனே ஒழிய, கோயம்பேடு போன்ற விஸ்தாரமான பஸ் ஸ்டாண்டுகளில் வயதானோரையும், குழந்தைகளையும் காட்டி நம் மனதை இளக்கி நம் பர்சை சுரண்டும் கும்பலின் நினைவும் வந்ததால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கத் தலைப்பட்டேன். அதன் காரணமாகவே அந்த அம்மாவிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ அதை வாங்கிக் கொள்ளுங்கள். பாக்கியை நான் தந்து விடுகிறேன் என்று நான் சொன்னது.
பார்த்தால் சற்று முன்னால் திருநெல்வேலி பஸ் நின்று கொண்டிருந்தது. நம் மனதின் எச்சரிக்கைகளை நான் கேட்டதால் சற்றும் யோசிக்காமல் திருச்சி பஸ்ஸிலிருந்து என் பேக்கை எடுத்து வந்து அந்த நாகர்கோவில் பஸ்ஸில் வந்து சீட் போட்டேன். 

அம்மாவிடம் அம்மா நான் அங்கதான் உக்காந்துக்கிடடு இருக்கேன். கண்டக்டர் வந்ததும் உங்ககிட்ட இருக்குற பணத்தை குடுங்க. பாக்கிக்கு நான் காசு தந்துர்றேன் என்றதும் அந்த தளர்ந்து போன கைகள் கும்பிட முயன்றபோது வந்த கண்ணீரை அடக்கியபடி கொஞ்சம் திமிர் பிடித்தவன் மாதிரியே அவரை கவனிக்காமல் கீழிறங்கினேன். இந்த பஸ் லேட்டாகும் என்பதால் இன்னொரு தம்..

முடிந்து மேலே ஏறி வந்து என் இருக்கையில் உட்கார்ந்தேன். கிழவியை திரும்பிப் பார்த்தேன். அதிர்ந்தேன். கிழவி ஒரு ஒரு ரூபாய் காசுகளாக எண்ணிக் கொண்டிருநதார். எவ்வளவுதான் பொறுமையான கண்டக்டராக இருந்தாலும் இப்படி 200 ரூபாய்க்கு ஒரு ரூபாய் காசுகளாக வாங்கிக் கொள்வாரா என்று திகைத்துப் போனேன்..

சட்டென இறங்கி கண்டக்டரிடம் சென்று, அந்த அம்மாகிட்ட உங்களால எவ்வளவு வாங்க முடியுமோ அவ்வளவு வாங்கிக்கங்க. பாக்கிய நான் தந்துர்றேன். என்றேன்..
பஸ் கிளம்பியது. தலைவியைப் பார்த்தேன்.. ஒரு மகாராணி போல தனது சீட்டில் உட்கார்ந்திருந்தாள். தனது உரச்சாக்கு மூட்டையை காலடியி வைத்தபடி இரண்டாள் அமரும் சீட்டின் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி தோல் சுருங்கிய குழந்தை போல வேடிககை பார்த்தபடி வர ஆரம்பித்தாள். இருந்த மன அழுத்தத்தில் மறுபடி ஒரு முறை கண் கலங்கியது..

கண்டக்டர் வந்தார். கவனமாக என்னிடமும் கிழவியிடமும் டிக்கெட் கேட்பதைத் தவிர்த்து மற்றவர்களிடம் மட்டும் டிக்கெட் கேட்டு வந்தார் க◌ைசியில் கிழவியிடம் சென்று எத்தனை பணம் இருக்கிறது என்று கேட்டுவாங்கிக் கொண்டு என்னிடம் வந்தார்..

பாட்டிம்மா வச்சிருந்ததுல நூறு ரூவா மட்டும் நோட்டா இருந்திச்சு. நாப்பது ரூவா அஞ்சு ரூவா காயினா இருந்திச்சு. பாக்கி எல்லாம் சின்ன சில்லறையா இருந்திச்சு. பாவம். சாப்புட இருந்திட்டுப் போகட்டும் சார். அவங்களுக்கு நீங்க முன்னூறு ரூவா தந்தா போதும், ப்ளஸ் உங்க டிக்கெட் காசு.. என்றார்..

சந்தோஷமாகக் கொடுத்தேன். பிறகு தேனி சீருடையானின் சிறகுகள் முறிவதில்லையில் மூழ்கிவிட்டேன்..

விழுப்புரம் தாண்டியதும் ஒரு உணவு விடுதியில் பஸ் நின்றது. உண்மையில் பஸ் நின்றபோது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென விழித்துப் பார்த்தால் பஸ் நின்றுகொண்டு இருந்தது. மணி பார்த்தேன். ரெண்டுங்கெட்ட பன்னிரண்டேகால். இந்த நேரத்தல் எப்படி சாப்பிடுவது..? அதனால் வெறும் புகைபிடித்தபடி நின்றேன்..
நம்ம கிழவி ஒரு பிஸ்கெட் பாக்கெட்டும், வாட்டர் பாட்டிலில் கொஞ்சம் தேனீருமாக திரும்பி வந்தாள். எனது கூச்சம் எல்லாம் இவள் நன்றி சொன்னால நம்மால் தாங்க முடியாதே என்பதுதான். சட்டென திரும்பிப் பார்த்தால் கிழவி அடுத்த பஸ்ஸில் ஏறிக் கொண்டிருந்தாள். நான் பதறி சிகரெட்டை அணைத்துவிடு ஓடிச் சென்று, அம்மா.. நம்ம பஸ்ஸு அங்க இருக்கு என்று அழைத்து வந்து அவளது சீட்டில் உட்கார வைத்தேன்..

என்னதான் செய்ய முடியும்?

பஸ் புறப்பட்டதும் கண்டக்ட்ர் தலைகளை எண்ணத் துவங்கினார். அப்போதுதான் அவள் கண்டக்ட்ரை நைசாக அழைத்துக கேட்டாள், அந்த தம்பி எம்புட்டு ரூவா குடுத்துச்சு..? என்று. கண்டக்ட்ர் என் காதில்விழட்டுமே என்று நினைத்தாரோ என்னமோ பஸ்ஸில் இருக்கிற அனைரின் காதிலும் விழுகிற மாதிரி முன்னூறு ரூவா என்று சொன்னார்..
எனக்கு திகிலாகிவிட்டது. பாட்டி பாட்டுக்கு வந்து நன்றி சொல்லத் துவங்கினால் என்ன செய்வது என்று. நல்லவேளை அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை..

பாட்டி தனது பிஸ்கெட் பாக்கெட்டில் இருந்து நான்கு பிஸ்கெட்டுகளை எடுத்து என் சீட்டுக்குப் பின் சீட்டில் நீட்டினாள். அங்கே குழந்தையுடன் இருந்த பெண் தன்னிடம் பிஸ்கெட் இருப்பதாக சொல்லி பிஸ்கெட்டயும் காட்டியபிறகுதான் தலைவி சாந்தமானாள்.. சத்தமில்லாமல் பிஸ்கெட்டுகளை மெல்லத் துவங்கினாள்.

திருச்சி வந்தது. நான் இறங்க ஆயத்தமாகினேன். கடைசியாக பாட்டியிடம் சென்று வறேன் பாட்டி. ஜாக்கிரதையா போங்க. என்றேன். அவள் அவசரமாகத் தேடி தனது பொக்கிஷத்தை துணியிலிருந்து பிரித்து நீட்டினாள். அனைத்தும் சில்லரைக் காசுகள்..
வேணாம் பாட்டி. வச்சு சாப்புடுங்க. என்று சொல்லி புன்னகையுடனே கடக்க நினைத்தேன்.. அவளோ தனது கருகிய வலக்கையால் எனக்கு டாட்டாகாட்டினாள்..

பதிலுக்கு அழாமல் டாட்டா காட்டுவதைத் தவிர வேறென்ன நான் செய்ய..?

எனது  நிலைத்தகவலில் 
சில நாட்களாக எனது நோக்கியா என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. காலையில் சார்ஜ்ஜில் போட்டுவிட்டு ஞாயிற்று கிழமையின் கடமைகளை செய்யக் கிளம்பினேன். 

ஏ.ஒன் ப்ராய்லரில் கடமையை (நாட்டுக்கோழிதான் பாஸ்) முடித்து குட்டிமகிமாவிர்க்கு ஒரு வியப்பு பரிசைத்தர அவளைக் கூட்டிக்கொண்டு எனது தங்கை இருந்த கிராமத்திற்கு சென்றேன்.

தங்கை குழந்தை அபியும் மகியும் பாசப் பைத்தியங்கள். கிராமத்தில் நுழையும் வரை எங்கே போறோம் என்று சொல்லவில்லை மகியிடம். ஒருவழியாக கிராமத்தில் அபியைப் பார்த்ததும் என்னை நல்லா மொத்தினாள் மகி!

ஒரு அரைமணிநேரம் கழித்து கிளம்பினேன். அடுத்து ஒரு அவசர வேலை வேறு இருந்ததால் உணவைத்தவிர்த்தேன். தங்கைக்கு கடும் வருத்தம்.

வீட்டில் மகியை விட்டு பணிக்குக்கிளம்பினால் சரியாக திருவேட்பூர் செல்லும் பொழுது சகோதரி தேவதா தமிழ் அழைத்து நந்தன் புதுகையில் இருக்கிறார் தெரியுமா? என்றார்.

ஒரு நிமிடம் நம்பமுடியவில்லை. காலையில் நந்தனின் பெயர் தவறிய அழைப்பில் இருந்தது நினைவில் வர தத்தி தத்தி என்று தலையில் தட்டிக்கொண்டேன்.

வேலையை திரு கார்த்திகேயன் தங்கராஜாவிடம் ஒப்படைத்துவிட்டு பழனியப்பா மெஸ் சென்றேன்.

நந்தன் பழனியப்பா மெஸ்ஸில் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட ஹாலில் அத்துணைக் கவிஞர்களுடனும் உணவருந்திக் கொண்டிருந்தார். 


பழனியப்பா மெஸ்சின் இடதுசாரி சேவைகளை சொன்னபொழுது வியந்தார். நண்பர் இராதாக்கிருஷ்ணன், மற்றும் ராஜாவையும் அறிமுகம் செய்து வைத்தேன்.

பார்த்தால் வைகறை, நானற்காடன், பிராங்க்ளின் குமார், கனிமொழி, கந்தகப் பூக்களின் கவிஞர் என ஒரு பெரும் கவிதைப் பட்டாளமே இருந்தது.

மறக்க முடியா மிக இனிமையான சந்திப்பு.

நன்றி சகோதரி தேவதா தமிழ்

Comments

  1. நன்றி வாத்தியார்.. (பிளாக்குகளில் பின்னூட்டமிட்டால எனது பிளாக் பெயரான அசிஸ்டண்ட் டைரக்டர் என்ற பெயரே கையெழுத்தாக வருகிறது. அதை எப்படி மாற்றுவது என தெரியவில்லை..

    - நந்தன் ஶ்ரீதரன்

    ReplyDelete
    Replies
    1. பதிவுலகில் இது சரியே...
      நீங்கள் ப்ரோபைல் பெயரை மாற்றினாலே போதும் மாறிவிடும்

      Delete
  2. கவிஞர் நந்தனின் அனுபவப் பகிர்வு அருமை...மனதைத் தொட்டது. இப்படிப்பட்ட வயதானோர் எத்தனை பேர் நம் ஊரில் இருக்கின்றார்கள்?!!! பாவம்...

    ஆமாம் அந்த ஃபோட்டல நீங்க? உயரமா...? ப்ளெய்ன் வெள்ளை ஷர்ட்? (உங்கள் வயது குறைவு என்ற எண்ணத்தில்!!!)

    ReplyDelete
    Replies
    1. கவி நந்தனாரின் அலைவரிசை நம்ம அலைவரிசையை ஒத்திருப்பது...

      ப்ளைன் ஷர்ட் கரீட் ... நன்றி

      Delete
  3. இனிமையான சுவாரஸ்யமான ஒரு பதிவு சகோதரரே!

    பாட்டியை நாமும் காண வைத்துவிட்டீர்கள் உங்கள் எழுத்தினால்...

    உங்கள் தாராள மனசு க்றேட்! சலாம் உங்களுக்கு!
    கவிஞர்கள் சந்திப்புப் பகிர்வும் மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. அன்புச் சகோதரி
      நந்தன் ஸ்ரீதரனின் அனுபவம் அது
      கீழே உள்ளது மட்டுமே அவரைச் சந்தித்த எனது அனுபவம்

      Delete
    2. ஓ.. தெளிவாக உள்வாங்காது விட்டேனோ?..

      உங்கள் அனுபவமோ என்று முதலில் சிறிது தயங்கியும்... இருக்கட்டுமென எழுதிவிட்டேன்.
      தவறான புரிதலுக்கு மன்னியுங்கள் சகோதரரே!

      இன்னும்.. நந்தன் ஸ்ரீதரன்தான் இங்கு நாம் கண்ட அசிஸ்டண்ட் டைரக்டரா... அருமை!

      ஐயாவிற்கும் உங்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்!

      Delete
    3. பதிவுலகில் இதெல்லாம் சகஜம்பா... (கவுண்டரின் ஸ்டைலில் படிக்கவும்)

      Delete
  4. இனிமையான தருணங்கள்...சார்

    ReplyDelete
    Replies
    1. உங்களால்தான் சாத்தியமாயிற்று ...
      நன்றி சகோதரி

      Delete
  5. இனிய தருணங்களாய் இயல்பாய் பகிர்ந்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நெகிழ வைக்கும் பதிவு பாட்டியின் நிலையில் கொண்ட இரக்கம் சாதரணமானது இல்லை. really great.கண்கள் கலங்கி விட்டது. அதே போன்று கவிஞர்கள் சந்திப்பு பதிவும் மகிழ்வானதே மிக்க நன்றி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  7. Anonymous27/8/14

    மனைதைக் கசக்கிப் பிழிந்தது போன்ற உணர்வு சார், இந்த நிலை எல்லாம் எப்போது தான் மாறப்போகிறதோ என எண்ணத் தோன்றுகிறது....

    ReplyDelete

Post a Comment

வருக வருக