இன்னுமோர் கொசுவத்தி


அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் விஜயக்குமார் என்று ஒருவர் இருந்தாரே நினைவிருக்கிறதா?

அதிகாரிகளின் கடுமையில் நேர்மை இருந்தால் எத்தகு விளைவுகளை கல்வியில் ஏற்படுத்தும் என்பதற்கு இவர் எடுத்த நடவடிக்கைகளும் அவற்றை தொடர்ந்த கல்வி மேம்பாடுகளும் இன்றும் நம் எதிரே  நிற்கும்  சாட்சிகள்.

ஆசிரியர்கள் படிக்கவேண்டிய எத்துணையோ புத்தகங்களை இந்த இயக்கம் பள்ளிகளுக்கு வழங்கியது. ஒரு சிறு உதாரணம் ஜன்னலில் ஒரு சிறுமி, ஒரு வாவ் புக் அது.

ஜப்பானிய சிறுமி ஒருத்தியின் பள்ளி அனுபவங்களின் தொகுப்பு. இரண்டாம் உலகப் போரில் அழிந்துவிட்ட டொமோயிஹாகூன் என்கிற (தன்னம்பிக்கையின் குன்று என்று பொருள்) அந்தப் பள்ளியின் அனுபவங்களின் ஒரு சிறு துளியைக் கூட நாம் இன்னும் நமது குழந்தைகளுக்கு தரவில்லை என்கிற உண்மை சொரீர் என்று அறைந்தது.

இன்னொரு புத்தகம் பகல் கனவு, கிஜூ பாய் என்கிற பொறியாளர் தனது கல்விச் சோதனைகளை தொகுத்தது. இந்தியாவில் இப்படி கல்வி ஆய்வு நடந்ததே எனக்கு இந்த நூலை படித்துத்தான் தெரியும். இவர் இரநூறுக்கும் அதிகமான கல்வி நூல்களை எழுதியுள்ளதாக சொல்கிறார்கள். எனது ஊழ்வினை ஒன்றைமட்டுமே படிக்க வாய்ப்பளித்தது. இதற்காக எஸ்.எஸ்.ஏ இயக்கத்திற்கு எனது நன்றிகள். ஒன்றையாவது படிக்க முடிந்ததே.

பதிவு புத்தகங்களைப் பற்றியதல்ல !

திரு.விஜயக்குமார் அவர்களின் இடைநிற்றலை தவிர்க்க சொன்ன ஆணை பற்றியது.

பள்ளிப் பிள்ளைகள் பாதியில் பள்ளியை விட்டு நின்றுவிடக்கூடாது என்ற இயக்க நோக்கத்தில் அவர் தெளிவாக இருந்தார். எனவே தமிழகம் முழுவதும் பல ஆசிரியர்கள் ஒரே நாளில் பிள்ளைப் பிடிப்பவர்கள் ஆனார்கள்.

நானும் களத்தில் குதித்தேன். எந்த வகுப்பில் பிள்ளைகள் நின்றாலும் என்னிடம் மீட்புப் பணி ஒப்படைக்கப் பட்டது. இப்படி பள்ளியைச் சுற்றிய அத்துணை கிராமங்களுக்கும் போக ஆரம்பித்தேன். பெற்றோர் சிலர் கூட்டிக்கொண்டு செல்லுங்கள் என்பார்கள். சிலர் காவல்துறையில் குழந்தை தொழிலார் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்வேன் என்றாலும் போடா சர்த்தான் என்பார்கள்.

கோபம் கொப்பளித்த, எனது மாணவர்களின் வாழ்வியல் சூழலை புரிந்துகொண்டு அதிர்ந்த, வேதனைப்பட்ட நாட்கள் அவை.

ஒருவன் தொடர்ந்து வீட்டுப்பாடம் செய்யாதவன். தினமும் கடிந்துகொண்டு இருந்தேன் நான். ஆனால் அவன் வீடு ஒரு அத்துவானக்காட்டில் ஒற்றை வீடாக இருந்தது. மிக அருகில் இருந்த மின் கம்பமே ஒரு கி.மீக்கும் அதிகமான தொலைவில் இருந்தது. அவன் எப்படி வீட்டுப்பாடம் செய்வான்? அரிக்கேன் விளக்கில் சபிக்கப் பட்ட தனிமையில். எவ்வளவு முயன்றும் அவனைப் பள்ளிப்பக்கம் மீட்டுக்கொணர முடியவில்லை. சில மாதங்களில் சாலையைக் கடக்கையில் பக்கத்தில் இருந்த ஒரு ஒரு இருசக்கர சேவை நிறுவனத்தை கவனித்தேன் நான். அதன் பெஞ்ச் ஒன்றில் கால்களை நீட்டிக்கொண்டு அமர்ந்துகொண்டு என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

திருவாசலில் ஒரு ஏழாம் வகுப்பு பெண். மிக நன்றாக படிக்க கூடியவள் வரவில்லை. நன்றாக படிக்கும் இவள் ஏன் வராமல் இருக்கிறாள் என்று நான் குழம்பி வழிகாட்ட ஒரு மாணவனோடு அவள் வீட்டை தேடிப் புறப்பட்டேன்.

திருவாசலில் வடக்கே ஒரு மண்ரோடு செல்ல அதில் போகச் சொன்னான் பையன். பயணித்தேன். சார் ரைட்ல இறங்குங்க. பெரும் மணல் திடல் அது. இவ்வளவு வெள்ளை மணல் எங்கிருந்து இங்கு வந்திருக்கும் என்ற வியப்பில் இருந்தேன் (அனேகமாக அந்த ஊர் குடிகாரத் தகப்பன்களின் மண்டையில் இருந்து என்று தோன்றியது சிறிது நேரம் கழித்து)

மணல் வெளியின் மையத்தில் நான்கடி சுவற்றில் ஒரு கூரை இருக்க அதுதான் வீடு என்றான் வழிகாட்டி. என்னப்பா சொல்றே இது வீடா? ஆமா சார் அவங்க இப்போ செங்க காளவாயில் இருப்பாங்க என்றான். சரி வா அங்கே போகலாம் என்று கிளம்பினோம்.

ஒரு பெரும் தென்னம் தோப்பின் எல்லையில் ஒரு காளவாய் இருக்க அது தான் சார் என்றான். சார் உங்களுக்கு அந்த பெண் ஏன் ஸ்கூலுக்கு வரலைன்னு தெரியுமா என்றான்?

ஏண்டா?

அதோட ஸ்கூல் யூனிப்பார்ம் கெணத்துல விழுந்துடுச்சாம் சார்.

இந்த எளிய காரணத்திற்காக ஒரு பெண்பிள்ளையின் கல்வி மறுக்கப்படுமா?

ஒருவழியாய் அந்தப் பெண்ணின் அப்பாவவையும் சித்தப்பனையும் பார்த்து பேசினால் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. என் கனிவான பேச்சும், தொடர்ந்த மிரட்டலும் வேலைக்காகவில்லை.

எங்கள் பள்ளியின் ஆசிரியைகளில் ஒருவர்(திருமதி. பத்மாவதி) நானே துணி எடுத்துத் தைத்து தருகிறேன் என்றார். அதுவும் வேலைக்கு ஆகவில்லை.

இது நடந்தது இரண்டாயிரத்தி ஆறில்.

இரண்டாயிரத்தி பணிரண்டு. அதே ஊர் நானூற்றி இருபத்தி ஐந்து மதிப்பெண் பெற்ற ஒரு மாணவி பத்தாம் வகுப்போடு நின்றுவிட அவளது தந்தையை கூப்பிட்டு விசாரித்தேன்.

சார் நான் கோயில் பூசாரி. ஊரில் எனக்குன்னு ஒரு மரியாதையை இருக்கு. மேல படிக்கவைத்தால் என் பொண்ணு வேற எதாவது பிரச்சனையை இழுத்துக்கொண்டு வந்தால் என்ன செய்வது? நாலு பேர் என்னைக் கேள்வி கேட்கக் கூடாது பாருங்க என்றார் அவர்.
(திவ்யா இளவரசன் பிரச்னை பற்றி எரிந்துகொண்டிருந்த நேரம் அது)

அந்த ஊரின் வெள்ளை மணல் பரப்பு நினைவில் வந்தது.

இந்த சம்பவங்கள் எனது மாணவர்களின் மத்தியில் என்னைக் குறித்த பிம்பம் ஒன்றை ஆழப் பதிந்துவிட்டது என்பதை வேறு ஒரு தருணத்தில் உணர்ந்தேன்.

அது வேறு ஒரு நாளில்...

Comments

  1. தங்களின் முயற்சி பாராட்டிற்கு உரியது நண்பரே

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்ற ஆசிரிய ஆளுமைகளின் தாக்கம் தான் வேறொன்றும் இல்லை...

      Delete
  2. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது இந்தியாவின் பொருளாதராம் உயர்ந்துவிட்டது , அது இது என்று சொல்வதெல்லாம் வீண்பேச்சு என்று தோன்றுகிறதே. மின்சாரம் இல்லாமலும் வீடு இல்லாமலும் படிப்பு மறுக்கப்படும் குழந்தைகள் எத்தனை பேர்!! அவர்களுக்காக நீங்கள் முயற்சி செய்கிறீர்களே..பாராட்டுக்குரியது.
    நான் என்ன செய்கிறேன் என்று வெட்கமாக உள்ளது. :(

    ReplyDelete
    Replies
    1. என்னைவிட சிறப்பாக செயல்படும் எத்துணையோ ஆசிரியர்கள் இருக்கிறார்கள் அவர்கள் வலைப்பக்கம் ஒதுங்குவதில்லை..
      ஒரு நல்ல உதா மாங்காடு சேகர் என்று தன் பள்ளிப் பெயரை தனது பெயருடன் இணைத்துக்கொண்டவர்.
      மனநலமற்ற குழந்தைகளைக் கூட விடமாட்டார். அவர்களுக்கு லேகியம் வேறு தருவார். நன்கு படிக்கும் மாணவர் மூன்று பேர் வீட்டுக்கு மின் இணைப்பை வாங்கித் தந்தவர். இவர் போன்ற ஆசிரியர்களை தொடர விரும்புகிறேன் நான்.
      இன்னும் நிறையபேர் இருக்கிறார்கள்.
      என்னை மாதிரி எழுதுவதில்லை ..

      இது என் பணி இதற்காகத் தான் எனக்கு சம்பளம். எனவே சேவை என்று பீத்துவது குற்றம்.

      நீங்கள் ஏன் வெட்கப் படுகிறீர்கள் ?
      இரண்டு நல்ல மனிதர்களை உலகிற்கு தந்தாலே போதாதா?
      உங்களை மாதிரி யார் ஹோம் ஸ்கூலிங்க் பற்றி யோசிக்கிறார்கள்?
      நன்றி சகோதரி.

      Delete
    2. பணியை இவ்வளவு சிரத்தையுடனும் அக்கறையுடனும் அனைவரும் செய்வதில்லையே.. :)
      ஹோம் ஸ்கூலிங்க் பிடித்திருந்தாலும் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன ..

      Delete
  3. இடைநிற்றல் என்றால் என்னவென்று கொஞ்சநேரம் புரியவில்லை. அப்புறம்தான் DISCONTINUE என்று புரிந்து கொண்டேன். நல்ல தமிழ்ச் சொற்களை கையாளுவதற்கு நன்றி!

    உங்கள் சமூகப் பணியைப் பற்றி உங்கள் பதிவுகளே சொல்லும். வாழ்த்துக்கள்!
    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. இது கல்வித்துறை வார்த்தை

      எனவே பயன்படுத்தினேன்.
      வாக்கிற்கு நன்றி

      Delete
  4. மது, (மது என்று சொல்வதைத் தவறாக நினைக்க வேண்டாம். தங்கள் எழுத்து ஒரு அருகாமையைத் தந்ததால்) தங்கள் முயற்சி "சபாஷ்" போட வைக்கின்றது!. ஒரு நல்ல ஆசிரியரின் இலக்கணம்!

    அறிவுக் கண்ணைத் திறக்கும்
    செறிவு நிறைக் கல்விக்குச்
    சுதந்திரம் இல்லா இந்நாடு
    சுதந்திரம் கொண்டாடுகிறதாம்!
    வெட்கக் கேடு! வாய்விட்டு நகைத்திட
    பட்டப் பகலில் கொள்ளையடிக்கும்
    எட்டிப் பார்க்காத அரசியல்வாதிகள்
    ஓட்டுச் சீட்டைத் தூக்கிக் கொண்டு
    ஓட்டையாண்டிகளைக் காண வரும் சமயம்
    எட்ட விரட்டாத முட்டாள் ஆண்டிகளின்
    அறிவுக் கண்ணைத் திறப்பவர் யாரோ?



    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ,

      விழிப்புணர்வற்ற என்பதை விட குறுக்குவழியில் வாழ்வுதேடிடும் தலைமுறை ஒன்றை கல்வி எந்திரம் உருவாக்கியிருகிறது.

      இன்றைய சமூக சீர்கேடுகள் அத்துணைக்கும் காரணம் கல்வித்துறையின் தோல்வியே என்பது எனது எண்ணம்.

      நன்றி தோழர்

      Delete
  5. உங்களைப் போன்ற ஆசிரியர்களால் தான் கல்வி இன்னும் ஏழைகளுக்கும் உரியதாக இருக்கிறது.முதன் முதலாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன் ! அருமை, இனி தொடருவேன் ! இது என்னுடைய வலைப்பக்கம். நேரமிருந்தால் வந்து பாருங்கள் !

    http://pudhukaiseelan.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. நான் ஏற்கனவே தங்கள் தளம் வந்தவன்தான் தோழர்.
      வருகைக்கு நன்றி

      Delete
  6. இன்னும் கூட பிள்ளை பிடிக்க வேண்டியிருக்கே என்கையில் கொஞ்சம் வருத்தம்தான்!

    ReplyDelete
  7. வணக்கம் தோழர்!
    கொசுவத்தியின் இரண்டாவது சுற்று அருமை!
    கஞ்சி குடிப்பதற்கிலார் -- அதன்
    காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
    என்று இவர்களைப் பற்றிச்சொன்ன பாரதி

    இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே.
    என்று அன்றே உங்கள் குரலையும் பதிவு செய்து விட்டான்.
    அவன் மாகவிதான்.
    விஜயகுமார் என்ற அனைவர்க்கும் கல்வித் திட்ட இயக்குநரை அறிவேன்.
    அவர்தானா இவர், இவர் வேறுநபரா என்று தெரியவில்லை.
    எல்லாவற்றிலும் சந்தேகம் தான்!
    முடிவில்லாமல் ..........?!
    பதிவை விட உங்கள் நடை என்னை உள்ளிழுத்துப் போடுகிறது.
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. முகநூலில் நண்பர் வின்சென்ட் மிகச் சரியாக இயக்குனரின் பெயரைச் சொன்னார் ...
      இங்கே நீங்கள் ...
      என்னது நடை நல்லா இருக்கா. நீங்கள் என்னவச்சு காமடி பண்ணாதீங்க...

      Delete
  8. அதெல்லாம் ஒண்ணும் காமெடி இல்லை சகோ சகோதரர் விஜு அவர்கள் சொல்வது சரியே. ஆசிரியர்களுக்கு முன்னுதாரனமாக விளங்குகிறீர்கள். தங்களுக்கு அத்தனை தகைமைகளும் இருக்கிறதே. இப்படி ஆசிரியர்கள் இருந்தால் எவ்வளவு சாதிக்கலாம் உலகில். ஆத்மார்த்தமாக செய்யும் இக் காரியங்கள் நிச்சயம் எத்துணை இக் கட்டு வந்த போதும் துணை நற்கும். தொடருங்கள் நற்பணியை! வாழ்த்துக்கள் சகோ ....!

    ReplyDelete

Post a Comment

வருக வருக