விடுதலை வேள்வியில் வீரத்தமிழர்கள் - 1 பூலித்தேவன்

விடுதலை வேள்வியில் வீரத்தமிழர்கள் - 1
எழுதியவர் திரு.ஷாஜகான்
பூலித்தேவன்




இந்திய வரலாற்றிலேயே வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட முதல் நிகழ்ச்சியே தமிழகத்தில்தான் நடைபெற்றது. தெற்கே ஆங்கிலேயர்கள் காலடி பதித்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டு. கர்நாடகத்தில் நிகழ்ந்த மூன்று போர்களும், நான்கு மைசூர் போர்களும் ஆங்கிலேயரை தென்னகப் பகுதிகளில் நிலைப்படுத்தின. தமிழகப் பகுதிகளில் ஆங்கிலேயரின் கைக்கூலிகளாகச் செயல்பட்ட நவாப்புகளும், குறுநில மன்னர்களும் தமக்கு வரியும் திறையும் செலுத்த வேண்டும் என்று ஆங்கிலேயர் விதித்தனர். கடுமையான இந்த வரிகளை எதிர்த்து தமிழகம் தலைநிமிர்ந்தது.

திருநெல்வேலியைச் சேர்ந்த பாளையக்காரர்கள்தான் முதன்முதலில் ஆங்கிலேயரை எதிர்த்தனர். அவர்களில் முதல்வன் பூலித்தேவன். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் முன்னரே, 1755ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரமுழக்கமிட்டவர் பூலித்தேவன்.

நெல்கட்டான்செவ்வல் என்னும் பகுதியை ஆண்டுவந்தவர் பூலித்தேவன். வெள்ளையர் படைத்தலைவன் கர்னல் ஹெரான், கப்பம் கட்டச்சொல்லி கோட்டையை முற்றுகையிட்டபோது, என்னுடைய நிலப்பகுதியில் அந்நியன் எவனுக்கும் வரி வசூலிக்கும் உரிமை இல்லை என்று கூறி விரட்டியடித்து வெற்றி கண்டவர் பூலித்தேவன்.

அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டான் செவ்வலிலும் ஆங்கிலேயனின் கைக்கூலி மாபூல் கானைத் தோற்கடித்தார். பின்னர் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.

1760ஆம் ஆண்டு, யூசுப்கான் படை நெற்கட்டான் செவ்வலைத் தாக்கியது. யூசுப் கானை முறியடித்து விரட்டினார் பூலித்தேவன். 1766ஆம் ஆண்டு, கேப்டன் பௌட்சன் தலைமையில் ஆங்கிலேயப்படை வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கியது. அந்தப் போரிலும் பூலித்தேவனுக்கே வெற்றி கிடைத்தது.

1715 செப்டம்பரில் பிறந்த பூலித்தேவன், 1767 வரை ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். 1767ஆம் ஆண்டு வெள்ளையரிடம் சிக்கிக்கொண்ட பூலித்தேவனுக்கு, ஆங்கிலேயர் அன்றைய வழக்கம்போலவே தூக்குத்தண்டனை விதித்தனர்.

தூக்கில் ஏற்றப்படுவதற்கு முன்பு சங்கர நயினார் கோயிலில் கடைசியாக வழிபட்டுக் கொள்வதாக்க் கூறிய பூலித்தேவன் கோயிலுக்குள் நுழைந்தார். பின்னர் அவர் திரும்பவே இல்லை. அவரே வடிவமைத்துக் கட்டிய, கோயிலுக்குள் இருந்த குகைவழியாகத் தப்பிவிட்டதாக்க் கூறப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தின் சிவகிரி வட்டத்தில் உள்ள நெற்கட்டான் செவ்வல் என்னும் இடத்தில் பூலித்தேவன் வாழ்ந்த இல்லம் நினைவகமாக ஆக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயருக்கு வரியாக நெல்லைச் செலுத்த மறுத்த்தால் நெற்கட்டான் செவ்வல் என்று பெயர் பெற்றதாக்க் கூறப்படுகிறது. இப்போது வழக்கில் இது நெக்கட்டாஞ்செவல் என அழைக்கப்படுகிறது.

குறிப்பு – நெற்கட்டான்செவ்வலின் பழைய பெயர் ஆவுடையாபுரம். ஒரு பாண்டிய மன்னனால் வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது இவருடைய பாளையம். பூலித்தவேன், வரகுண ராமனின் பத்தாம் தலைமுறை வாரிசு. பூலித்தேவன் குறித்து இணையத்தில் இப்போது நிறைய தகவல்கள் கிடைக்கின்றன.

#விடுதலை_வேள்வியில்_வீரத்தமிழர்கள்

Comments

  1. விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்!
    கடுகதிதான் உம்பதிவே காண்!

    அருமையெனில் இதுதான் சகோதரரே!
    அறிந்திராத பல தகவல்கள் மாரிமழையாகப் பொழிகிறது
    உங்கள் வலையில்!..
    உங்கள் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை.
    ஆயினும் வந்து படிப்பேன்.

    நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி

      Delete
  2. பூலித் தேவன் பற்றி சிறிது அறிந்திருந்தாலும் பல தகவல்கள் அறிந்தோம்....மிக்க நன்றி..

    ReplyDelete
  3. Anonymous12/9/14

    அருமையான பகிர்வு சார், அவரின் கடைசி காலம் பற்றி தெளிவாக அறியமுடியவில்லை. பூலித்தேவன் ஆங்கிலேயரைத் தோற்ற்கடித்த போது அவரைவிட பெரிய பாளையக்காரரான கட்டபொம்மனால் ஏன் முடியவில்லை என்பது என் மனதில் நீண்ட நாட்களாக உள்ள கேள்வி. எடுத்த பதிவு கட்டபொம்மனுடையதாகத்தான் இருக்கும் என ஊகிக்கிறேன்... நன்றி...

    ReplyDelete

Post a Comment

வருக வருக