விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 15 மூதறிஞர் ராஜாஜி

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 15
மூதறிஞர் ராஜாஜி
ஆக்கம் ஷாஜகான்  
pudhiavan.blogspot.in
நன்றி


சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜகோபாலாச்சாரியார், சுதந்திரப் போராட்ட வீரர், சிந்தனையாளர், சீர்திருத்தவாதி, சிறந்த எழுத்தாளர், தேர்ந்த நிர்வாகி.

1878 டிசம்பர் 10ஆம் தேதி பிறந்த ராஜாஜி, பெங்களூரிலும் சென்னையிலும் கல்வி பயின்றார். சட்டம் பயின்ற அவர் வழக்குரைஞர் தொழிலை ஏற்றார். 1907இல் நடைபெற்ற சூரத் காங்கிரஸ் மாநாடுதான் அவருடைய வாழ்வின் திருப்புமுனை. 1919இல் காந்தியை முதன்முதலாக சந்தித்த ராஜாஜியின் வாழ்க்கை முழுக்க முழுக்க பொதுவாழ்க்கையாக மாறிப்போனது.
காந்தியடிகளின் நம்பிக்கைக்குரிய வீரராக இருந்த அவர், 1920 ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். சேலம் விஜயராகவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற சாத்வீக ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். வழக்குரைஞர் தொழிலைத் துறந்தார். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறை சென்றார்.

காந்தியடிகளின் உப்புச் சத்தியாக்கிரக அழைப்பை ஏற்று, 1930ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாக்கிரகத்துக்குத் தலைமை வகித்துச் சென்றார். ஒன்பது மாத சிறைதண்டனை பெற்றார்.

1937இல் சென்னை மாகாணத்தின் பிரதமராக (அந்நாட்களில் சென்னை மாகாணத்தின் முதல்வர் பிரைம் மினிஸ்டர் என்றே அழைக்கப்பட்டார்) பதவியேற்றார். இந்தியாவைக் கேட்காமலே இரண்டாம் உலகப் போரில் தன்னிச்சையாக ஈடுபடுத்தியதை எதிர்த்து யுத்த எதிர்ப்புக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் முடிவின்படி, பதவியைத் துறந்தார். விடுதலை பெற்ற இந்தியாவில் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்றார். 1952இல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ராஜாஜி, 1954இல் குலக்கல்வித் திட்டம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து பதவி விலகினார்.

இந்திய நாட்டைத் துண்டாடித்தான் சுதந்திரம் பெற வேண்டுமா என்பது காந்தியடிகள் மற்றும் காங்கிரசின் கருத்தாக இருந்தது. பின்னர் காந்தியும் அந்தக் கருத்தை மாற்றிக்கொண்டார். ஆனால் ராஜாஜி, பிரிவினை தவிர வேறு வழியில்லை என்பதை சுட்டிக் காட்டியவர்.

விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்த திரு.வி.க., ஈ.வெ.ரா. பெரியார், டாக்டர் பி. வரதராஜுலு போன்றோர் பின்னர் வெவ்வேறு காரணங்களுக்காக காங்கிரை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் விடுதலைக்குப் பிறகும் பல்லாண்டுகள் காங்கிரசிலேயே இருந்து செயல்பட்டவர் ராஜாஜி. பின்னர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுதந்திரா கட்சியைத் தோற்றுவித்தார்.

குலசேகரபட்டின வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ராஜகோபால், காசி ராஜன் ஆகி இரண்டு இளைஞர்களுக்கும் விடுதலை பெற்றுத் தந்தவர் ராஜாஜி.

குலசேகரபட்டின வழக்கு குறித்து ஒரு குறிப்பு - திருநெல்வேலியில் போலீஸ்காரர்களின் ஆயுதங்களைப் பறித்துக்கொண்ட புரட்சிக்காரர்கள் லோன் துரை என்ற வெள்ளையரைக் கொன்றனர். இந்த வழக்கில் ராஜகோபால், காசி ராஜன் ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா? தூக்கு தண்டனை, மூன்று ஆயுள் தண்டனைகள் மற்றும் 14 ஆண்டு கடுங்காவல் தண்டனை - அதாவது, 74 ஆண்டு கால தண்டனை! மூன்றாவது எதிரி பெஞ்சமினுக்கு 100 ஆண்டு தண்டனை! தண்டனை பெற்ற காசிராஜனும் ராஜகோபாலனும் நீதிபதியிடம், “தூக்கு தண்டனையுடன் மூன்று ஆயுள் தண்டனை விதித்திருக்கிறீர்கள். இதை நாங்கள் எப்போது அனுபவிக்க வேண்டும்? தூக்கு தண்டனைக்குப் பிறகா, முன்பா?” என்று கேட்க, அப்போது நீதிமன்றத்தில் இருந்த மற்றொருவர், “இது தெரியாதா... இனி எத்தனை ஜென்மங்கள் உண்டோ அத்தனை ஜென்மும் தண்டனை அனுபவிக்க வேண்டும்” என்று கூற, நீதிமன்றத்தில் சிரிப்பலை மோதியது.
சிறந்த பேச்சாற்றலும் கொண்ட ராஜாஜி, ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, உபநிடதங்களில் ஏராளமான நூல்களை எழுதினார். 1954இல் பாரத ரத்னா விருது பெற்றவர், 1972இல் மறைந்தார். அரசியலில் வேறுபட்ட கருத்துக் கொண்டவராக இருந்தாலும், அனைத்துக் கட்சியினருடனும் நட்புடன் திகழ்ந்த பண்பாளர் ராஜாஜி. இன்றைய அரசியல் நிலைமையில் இப்படிப்பட்ட பண்பாளர்களை அரிதாகவே பார்க்க முடிகிறது.
*
பி.கு. - தமிழக அரசியலில் ராஜாஜியின் பல நிலைபாடுகள் விமர்சனங்களுக்கு ஆளானவை. அதுகுறித்தெல்லாம் இந்தப் பதிவு அலசவில்லை என்பதை நண்பர்கள் நினைவில் வைக்கவும்.
விடுதலைப் போராட்ட காலத்தில் இந்திய அளவில் புகழ்பெற்ற தமிழகத் தலைவர்களில் குறி்ப்பிடத் தக்கவர்கள் சத்தியமூர்த்தி, காமராசர், ராஜாஜி. காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தவர், கடமை என்று வந்து விட்டால் காந்தியையே கடிந்து கொண்டவர் ஒரு தமிழர். அவரைப்பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
‪#‎விடுதலை_வேள்வியில்_வீரத்தமிழர்கள்‬

Comments

  1. ராஜாஜி போன்ற பண்பாளர்களைக் காண்பது அரிதுதான்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  2. Anonymous22/9/14

    நல்ல பதிவு ...

    ReplyDelete
  3. சிறந்த பேச்சாற்றலும் கொண்ட ராஜாஜி, ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, உபநிடதங்களில் ஏராளமான நூல்களை எழுதினார்

    ராஜாஜியின் வியாசர் விருந்து - அருமையான ஆக்கம்..

    ReplyDelete
  4. அத்துனை பதிவுகளும் அருமை

    ReplyDelete
  5. நன்றி அய்யா

    ReplyDelete

Post a Comment

வருக வருக