உயர்திரு ஷாஜகான் அவர்களின் முகநூல் பதிவுத் தொடர்
தந்தை பெரியார்
ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்னும் அந்த மனிதருக்கு பெண்கள் மாநாடுதான் பெரியார் என்று பெயர் வைத்து அழைத்தது. அவருடைய நாத்திகக் கொள்கை, வைக்கம் போராட்டம், திராவிடர் கழகம் .... இப்படிப்பல செய்திகள் நாம் அறிந்திருக்கிறோம்.
1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் ஈரோடு நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ராமசாமி. பள்ளிப்பருவத்தில் குறும்புக்காரர். அதனால் பள்ளிக்கே போக வேண்டாம் என்று நிறுத்தப்பட்டார். 19 வயது ராமசாமியின் மாமன் மகள் 13 வயது நாகம்மை. பண வசதி இல்லாததால் அவரை முதியவர் ஒருவருக்குத் திருமணம் செய்ய இருப்பதாகத் தெரியவந்த ராமசாமி, தன் பெற்றோரின் மறுப்பையும் மீறி நாகம்மையை திருமணம் செய்து கொண்டார்.
சிறுவயதிலிருந்தே கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தவர் ராமசாமி. ஆயினும் தேவஸ்தானக் கமிட்டியில் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்தார். சுயநலம் கருதாப் பணிகளின் காரணமாக பதவிகள் அவரைத் தேடி வந்தன. 1919ஆம் ஆண்டு ஈரோடு நகரசபைத் தலைவர் ஆனார். ஈரோடு நகரில்தான் தமிழகத்தின் முதல் மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டது. ராமசாமி, ஈ.வெ.ரா. எனப் பெயர் பெற்றார்.
1907ஆம் ஆண்டு முதலாகவே காங்கிரஸ் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டார். வெள்ளையர்களை விரட்டினால்தான் இந்தியர்கள் நலமாக வாழ முடியும். அதற்காகப் போராடும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர வேண்டும் என்று எண்ணினார். ஒரே நாளில் தான் வகித்து வந்த அனைத்துப் பதவிகளையும் ராஜிநாமா செய்துவிட்டு காங்கிரசில் இணைந்தார்.
வசதியாக வாழ்ந்துவந்த ஈ.வெ.ரா. எளிமையான வாழ்வை மேற்கொண்டார். கதர் அணிய ஆரம்பித்தார். 80 வயதான தாயார் சின்னத் தாயம்மை, தங்கை கண்ணம்மா, மனைவி நாகம்மாள் ஆகியோரையும் கதர் அணியச் செய்தார். திருச்செங்கோட்டில் கதர் ஆசிரமத்தைத் துவக்கினார். கதர் துணிகளை த் தலையில் சுமந்து ஊர்ஊராகச் சென்று விற்பனை செய்தார். மதுவிலக்குப் பிரச்சாரத்தில் ஈடுபாடு கொண்டார், தன் தோட்டத்தில் காய்த்துக் கொண்டிருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார்.
1919ஆம் ஆண்டு அமிர்தசரசில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றார். தமிழகம் திரும்பியதும் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். கள்ளுக்கடை மறியலுக்குத் தலைமை தாங்கினார். சிறை சென்றார். அவருக்குப் பிறகு அவரது குடும்பத்தினரும் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறை சென்றனர். ஈரோட்டில் இருந்த அவரது சொந்தக் கட்டிடத்தில் இந்திப் பிரச்சார வகுப்பை ஆரம்பித்தார். இதைத் துவக்கி வைத்தவர் மோதிலால் நேரு.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஊருக்குள் சுதந்திரமாக நடந்து செல்ல முடியாத நிலை இருப்பதைக் கண்டித்து வைக்கம் சத்தியாக்கிரம் நடத்தி சிறை சென்றார் ஈ.வெ.ரா. அவர் சிறை சென்றதும் மனைவியும் தங்கையும் வைக்கம் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். கேரளத்தில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் பெரும் கிளர்ச்சியாக மூண்டது. மன்னர் இறந்தபிறகு, அரசியார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். 21-6-1925 முதல் வைக்கம் வீதிகளில் அனைத்து சாதியினரும் நடக்கலாம் என்று அரசு உத்தரவிட்டது. அடுத்து வந்தது கோயில்களில் அனைத்து சாதியினரும் நுழையலாம் என்பதற்கான மாநாடு. இதிலும் வெற்றி கிடைத்தது. கதர் பிரச்சாரத்தில் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததற்காக சிறைவாசம் அனுபவித்தார் ஈ.வெ.ரா.
இவ்வாறு காங்கிரஸ் இயக்கத்தில் முனைப்பாக இருந்த ஈ.வெ.ரா., வகுப்புவாதத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார். வகுப்புரிமைக்காக காங்கிரஸ் மாநாடுகளில் அவர் கொண்டுவந்த தீர்மானம் ஏற்கப்படவில்லை. எனவே காங்கிரசிலிருந்து வெளியேறினார். சுய மரியாதை இயக்கம் பிறந்தது. குடியரசு இதழ் துவக்கப்பட்டது. பின்னர் புரட்சி என்னும் வார இதழைத் துவக்கினார். குடியரசு இதழில் எழுதிய கட்டுரைக்காக மீண்டும் சிறை சென்றார். ஈ.வெ.ரா. முன்வைத்த வேலைத்திட்டத்தை நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டதால், நீதிக் கட்சியை ஆதரித்தார். பகுத்தறிவு வார இதழ் துவக்கப்பட்டது. 1935ஆம் ஆண்டு விடுதலை இதழ் பிறந்தது, இன்றும் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
1938 நவம்பர் 13ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில்தான் மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையார், பெரியார் என்ற பட்டம் வழங்கினார். என எந்த தொண்டு செய்து பழுத்த பழம் என்று பாரதிதாசன் பாடிய பெரியார், 1973 டிசம்பர் 24ஆம் நாள், 95 வயதில் உயிர்நீத்தார்.
*
பி.கு. - இன்று பெரும்பான்மை மக்கள் பெரியார் வலியுறுத்திய கொள்கைகளிலிருந்து வெகுதூரம் சென்று விட்டார்கள் என்றாலும், கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு, சுயமரியாதை, பெண்கள் முன்னேற்றம், பகுத்தறிவு, திராவிடம் போன்ற சொற்களோடு இணைந்த - பிரிக்க முடியாத அடையாளமாக இருக்கிறார் பெரியார் என்பது இக்கட்டுரையை தட்டச்சு செய்யும்போது சட்டெனத் தோன்றியது. He has become synonymous with these terms.
#விடுதலை_வேள்வியில்_வீரத்தமிழர்கள்
பகிர்விற்கு நன்றி அண்ணா
ReplyDeleteபி,கு. உண்மைதான் ..அதோடு சேர்த்து கள்ளுக்கடை மறியலும்
நன்றி சகோதரி...
Deleteகண்டிப்பாக சார். திராவிட கட்சிகளின் அடையாளமாக திகழ்வது பெரியார் தான். அவருடைய விடுதலை நாள் எதிர்ப்பைத் தவிர அனைத்திலும் உடன்படுகிறவன் நான்.
ReplyDeleteவிடுதலை நாள் எதிர்ப்பின் நியாயங்கள் புரிந்தால் எலோரும்தான் எதிர்ப்பார்கள்.
Deleteஎத்துனை நியாயங்களும் அநியாயங்கள் இருந்தாலும் 300 ஆண்டு அடிமைப்பட்டுக்கிடந்த தேசத்தின் விடுதலை தினத்தை எதிர்ப்பது என்பது ????
Deleteவணக்கம்
ReplyDeleteஅறியாத பல தகவல்கள் சுமந்த வண்ணம் பதிவு ஒளிர்கிறது... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோ ரூபன்
Delete