விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 18 ஷாஜகான்

நாட்டுக்கு உழைத்த நாடகக் கலைஞர்கள் - பகுதி 2
தியாகி விஸ்வநாத தாஸ்
எழுதியவர் திரு.ஷாஜகான்




மக்களிடையே நாட்டுப்பற்றை ஊட்டுவதற்கு நாடக இயக்கத்தைப் பயன்படுத்திய கலைஞர்களுள் குறிப்பிடத் தக்கவர் விஸ்வநாத தாஸ். 1886ஆம் ஆண்டு பிறந்த விஸ்வநாத தாஸ், சிறந்த நடிகராக விளங்கினார். 1911இல் காந்தியடிகள் தூத்துக்குடிக்குச் சென்றிருந்தபோது தன்னை காங்கிரஸ் இயக்கத்துடன் ஈடுபடுத்திக்கொண்டார் விஸ்வநாத தாஸ். தூத்துக்குடியில் காந்திஜி பேசிய மேடையிலேயே தேசபக்திப் பாடல்களைப் பாடினார். பின்னர் அவருடன் திருநெல்வேலி சென்று அங்கும் மேடையில் பாடினார். காந்தியடிகளின் பாராட்டைப் பெற்றார்.
தேசபக்திப் பாடல்களைப் பாடக்கூடாது என்று ஆங்கிலேய அரசு விதித்த தடையையும் மீறிப் பாடினார். இதற்காக 1922 முதல் 1940 வரை 29 முறை சிறைவாசம் அனுபவித்தவர் விஸ்வநாத தாஸ். அவர் மட்டுமல்ல, அவருடைய மகன் சுப்பிரமணிய தாசும், தங்கை மகன் சின்னசாமி தாசும்கூட அவருடன் சேர்ந்து பாடினார்கள். சிறை சென்றார்கள். அவருடைய பாடல்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்தது. பாடல்கள் மக்களின் மொழியில், நாடகத்தின் பாத்திரங்களுக்கேற்ப அமைந்திருந்தன என்பதே காரணம்.
வள்ளி திருமணம் என்னும் நாடகம் தமிழில் புகழ் பெற்றது. இதில் தினைப் பயிரைக் காக்கும் வள்ளி, கதிர்களைத் தின்னவரும் பறவைகளை விரட்டுவது போன்ற ஒரு காட்சி. வள்ளி பாடுவாள் -
இந்தியாவைக் கொள்ளை கொள்ளும்
இங்கிலாந்துப் பட்சிகளா
சொந்த நாட்டுக் கோடுங்கள்
ஆலோலங்கடி சோ... சோ... சோ...
1942இல்தான் காந்திஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தார். அதற்கும் பத்தாண்டுகளுக்கு முன்பே நாடகத்தின் மூலம் வெள்ளையனை வெளியேறச் சொன்னவர் தியாகி விஸ்வநாத தாஸ். (இப்பாடலை எழுதியவர் இசக்கிமுத்து என்பவர்.)
விஸ்வநாத தாஸ், திருமங்கலம் காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்தார். பின்னர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிலும் உறுப்பினர் ஆனார். நாடக உடைகளுக்கும்கூட கதர் துணியையே பயன்படுத்திய கலைஞர் அவர். நாடகம், சிறைவாசம் என்பதே வாழ்க்கையாகிப் போன அவரது குடும்பம் வறுமைக்கு ஆளானது. “காங்கிரசிலிருந்து விலகி, தேசியப் பாடல்கள் பாடாமல் இருந்தால் நான் உதவத் தயார்” என்றார் அன்றைய சென்னை மேயர் வாசுதேவ நாயர். விஸ்வநாத தாஸ் அதை உதறித் தள்ளினார்.
வைஸ்ராய் எர்ஸ்கின் துரை, இரண்டாம் உலகப்போரை ஆதரித்து நாடகம் நடத்தினால் அவருடைய கடன்களை அடைப்பதுடன் மாதம் 1000 ரூபாய் தருவதாக தூது அனுப்பினார். பணம் கொடுத்து என் தேசிய உணர்ச்சியை மழுங்கடித்துவிட முடியாது என்று கூறிவிட்டார் விஸ்வநாத தாஸ்.
பலமுறை சிறைவாசம் அனுபவித்தாலும் தேசபக்திப் பாடல்களைப் பாடுவதைக் கைவிடவில்லை. அவருடைய புகழ் உச்சத்தில் இருந்த காலத்தில், சென்னையில் ராயல் தியேட்டரில் வள்ளி திருமணம் நாடகம் நடந்து கொண்டிருந்தது. முருகனாக நடித்த விஸ்வநாத தாஸ், 1940 டிசம்பர் 31ஆம் நாள் மாரடைப்பால் மேடையிலேயே உயிரிழந்தார். மயிலாசனத்தில் முருகப்பெருமான் அமர்ந்திருப்பது போலவே உடை அணிவித்து அவருடைய இறுதி ஊர்வலம் நடைபெற்றது என்பது வரலாறு.
திருமங்கலத்தில் உள்ள தியாகி விஸ்வநாத தாசின் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டு, நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. 27-12-1998 அன்று முதல்வர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நினைவகத்தில் விஸ்வநாத தாசின் மார்பளவுச் சிலையும், நூலகமும், திருமண மண்படமும் அமைந்துள்ளன. (முகவரி - 56, விஸ்வநாத தாஸ் தெரு, திருமங்கலம், மதுரை.) சிறந்த பாடகரான அவர் தேசியப் பாடல்களைப் பாடுவதற்குப் பதிலாக பக்திப் பாடல்களைப் பாடியிருந்தால் அவருடைய குடும்பம் இன்றும் வறுமையில் வாடும் நிலை வந்திருக்காது.
விஸ்வநாத தாசைப் போலவே சுயநலம் கருதாமல் நாடக இயக்கத்தின் மூலம் தேசபக்தியைப் பரப்பிய பல நாடகக் கலைஞர்களைப் பற்றிய விவரங்களைத் தொகுக்கலாம். இவர்களைப் பற்றிய செய்திகள் எல்லாம் துணுக்குகளாகத்தான் கிடைத்தன. கலைஞர்கள் பலருடைய புகைப்படங்கள் கிடைக்கவில்லை என்பது வருத்தம் தருகிறது.
*
பி.கு. - இயற்பெயர் தாசரி தாஸ். காந்தி என்ற காந்தத்தால் ஈர்க்கப்பட்டு கதர் அணிந்த விஸ்வநாத தாஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ஜனசக்தி நெருக்கடியில் இருந்ததால், நாடகம் நடத்தி 100 ரூபாய் திரட்டிக் கொடுத்தார். அவருடன் இலவசமாக நடித்தவர் கே.பி. ஜானகியம்மாள். பனிரெண்டு ஆண்டுகளுக்கு முந்தைய இந்தக் கட்டுரையில் அவருடைய குடும்பம் வறுமையில் வாடுகிறது என்று குறிப்பிட்டிருந்தேன். இப்போது எப்படி இருக்கிறது என்று இணையத்தில் தேடினால், “கையேந்துகிறார் விஸ்வநாத தாஸ் பேத்தி!” என்று 2007இல் நேர்முக வர்ணனை செய்திருக்கிறது விகடன். (இப்படி செய்தி வெளியிட்டு வியாபாரம் செய்வதைவிட விகடன் நினைத்திருந்தால் பத்துலட்சம்கூடத் திரட்டித் தந்திருக்கலாம்.) 2011 வரை இதேபோன்ற செய்திகளையே காண முடிகிறது.
விஸ்வநாத தாஸ் பாடிய பாடல்களில் முக்கியமான ஒன்று, திரும்பத் திரும்பப் பாடுமாறு ரசிகர்களால் வேண்டப்பட்ட பாடல் - கொக்கு பறக்குதடி பாப்பா. இதை எழுதியவர், முந்தைய பதிவில் வந்த மதுரகவி பாஸ்கர தாஸ். வலைதளத்திலிருந்து தேடி எடுத்த அந்தப் பாடல் கீழே -
கொக்குப் பறக்குதடி பாப்பா நீயும்
கோபமின்றி கூப்பிடடி பாப்பா (கொக்கு)
கொக்கென்றால் கொக்கு நம்மைக்
கொல்ல வந்த கொக்கு
எக்காளம் போட்டு நாளும் இங்கே
ஏய்த்துப் பிழைக்குதடி பாப்பா (கொக்கு)
வர்த்தகம் செய்ய வந்த கொக்கு நமது
வாழ்வைக் கெடுக்க வந்த கொக்கு
அக்கரைச் சீமை விட்டு வந்து கொள்ளை
அடித்துக் கொழுக்குதடி பாப்பா (கொக்கு)
தேம்ஸ் நதிக்கரையின் கொக்கு - அது
தின்ன உணவில்லாத கொக்கு பொல்லா
மாமிச வெறிபிடித்த கொக்கு இங்கே
வந்து பறக்குதடி பாப்பா (கொக்கு)
கொந்தலான மூக்குடைய கொக்கு அது
குளிர்பனி கடல் வாசக் கொக்கு
அந்தோ பழிகாரக் கொக்கு நம்மை
அடக்கி ஆளுதடி பாப்பா (கொக்கு)
மக்களை ஏமாற்ற வந்த கொக்கு அதன்
மமதை அழிய வேண்டும் பாப்பா
வெட்க மானமில்லா அந்தக் கொக்கு இங்கே
மடியப் பறக்குதடி பாப்பா (கொக்கு)
பஞ்சாபில் படுகொலை செய்த கொக்கு அது
பழி பாவம் பார்க்காத கொக்கு
அஞ்சாமல் பாஸ்கரன் தமிழ்பாடி அதை
அடித்து விரட்ட வேண்டும் பாப்பா (கொக்கு)

Comments

  1. இதுவரை அறிந்திராத பல தகவல்கள், வீரட் தமிழர்கள் பற்றி பகிர்கின்றீர்கள்! தொடர்கின்றோம்! நண்பா!

    ReplyDelete
  2. தங்களின் சீரிய பணி தொடரட்டும்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  3. வீரத் தமிழர்களை பற்றி தெரியாத பல செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது.
    நன்றி தோழரே.

    ReplyDelete

Post a Comment

வருக வருக