விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 19


வழக்கம் போல் அய்யா திரு ஷாஜகான் அவர்களின் பதிவு பகிர்வு
---
லட்சுமி அம்மாள், லட்சுமி பாய், லட்சுமி செகல்...-பகுதி 1

லட்சுமி இல்லாமல் எதுவும் செய்துவிட முடியாது என்று சொல்வதில்லையா... சுதந்திரப்போராட்டத்திலும் எத்தனை லட்சுமிகள்



• திருப்பூர் குமரன் அணிவகுத்துச் சென்ற ஊர்வலத்திற்கு தலைமை தாங்கிச் சென்ற சுந்தரத்தின் தாய் லட்சுமி அம்மாள்.

• தனிநபர் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று சிறைசென்ற கோவையின் லட்சுமி திருவேங்கடம்.

• 1933இல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று வேலூர் சிறையில் அடைபட்ட திருப்பூரின் லட்சுமி அம்மாள்.

• ஒத்துழையாமை இயக்கத்தில் துவங்கி 1933இலும், 1941இலும் இரண்டு முறை சிறைசென்ற, 1937இல் சென்னை ராஜதானியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த லட்சுமி பாரதி.

• அந்நியத் துணிகளைப் பகிஷ்கரித்துப் போராடி இரண்டு ஆண்டுகள் சிறையில் வாடிய சென்னையைச் சேர்ந்த லட்சுமி.

• இதே இயக்கத்தில் போராடி, வேலூர் சிறையிலும், கண்ணனூர் சிறையிலும் இரண்டு ஆண்டுகள் வாடிய தண்டையார்பேட்டை லட்சுமி.

• 1940இல் சுதந்திரப் போரில் இறங்கி, தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு, மதுரையிலும் வேலூரிலும் சிறைவாசம் செய்த பெரியகுளம் லட்சுமி.

• ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு வேலூரில் சிறைப்பட்ட லட்சுமிபாய். அந்நியத் துணி பகிஷ்கரிப்பு இயக்கத்தில் ஈடுபட்டு வேலூரிலும் கண்ணனூரிலும் சிறைசென்ற மற்றொரு லட்சுமி....

இப்படி எத்தனையோ லட்சுமிகள் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்திலிருந்து தமது பங்களிப்பை வழங்கினார்கள். தமிழகத்துக்கு வெளியிலும் ஒரு லட்சுமி குறிப்பிடத் தக்கவர்கள்.

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி, வெள்ளையருக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த காலம். பர்மாவிலும் இன்றைய மியான்மர் சிங்கப்பூரிலும் வசித்த தமிழர்கள் பலர் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கேற்றிருந்த காலம். ஐஎன்ஏவில் மகளிர் படை உருவாக்கப்படுகிறது. முற்றிலும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 150 வீராங்கனைகளைக் கொண்ட ஜான்சி ராணி படைப்பிரிவின் துவ்க்க விழா.

1943 அக்டோபர் 22ஆம் தேதி. சிங்கப்பூர் வாட்டர்லூ தெருவில் வீராங்கனைகள் காத்திருக்கிறார்கள். நேதாஜி கம்பீர நடைபோட்டு வருகிறார். அவருடன் இந்திய தேசிய ராணுவத்தின் தலைமை அதிகாரி பான்ஸ்லே. அவருடன் ஜான்சி ராணி ரெஜிமென்டின் கேப்டன் லட்சுமியும் வருகிறார்.

அனைவருக்கும் தமிழில் வணக்கம் சொன்ன நேதாஜி, வீராங்கனைகள் மத்தியில் வீர உரை நிகழ்த்துகிறார். உங்கள் தாய்நாட்டுப் பற்றை வாழ்த்துகிறேன். உங்களுக்கு நான் வழங்கும் மூன்று மந்திரங்கள் - ஒற்றுமை, நம்பிக்கை, தியாகம். நாம் அனைவரும் இந்தியத் தாயின் பிள்ளைகள் என்பதால் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். நம் தாய்நாடு நிச்சயம் விடுதலை பெறும் என்ற நம்பிக்கை. அத்தகைய விடுதலையை நம் தாய்நாடு அடைவதற்காக நம் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்...

அவருடைய வார்த்தைகள் எங்கள் உயிரில் மின்சாரம் பாய்ச்சின என்றார் லட்சுமி நாயுடு. ஆம். ஜான்சி ராணி படைப்பிரிவின் முதல் 150 வீராங்கனைகளில் ஒருவர் லட்சுமி. மற்றொருவர் அவரது தங்கை ருக்மணி தேவி. இருவரும் நேதாஜியின் அழைப்பை ஏற்று இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தவர்கள்.
... தொடரும்
*
பி.கு. - லட்சுமிகளின் பெயர்கள், Who is Who of Indian Freedom Fighters என்ற தொகுப்பு நூலில் இருந்தவை. தமிழக அரசின் வெளியீடு. நூல் இப்போது கையைவிட்டுப் போய்விட்டது.
1997 இந்திய விடுதலையின் ஐம்பதாண்டு நிறைவை முன்னிட்டு சிறப்புக் கொண்டாட்டம் தில்லியில் நடைபெற்றது. ஆகஸ்ட் 14 நள்ளிரவில் தில்லியின் ராஜபாட்டையில் (Raj Path - குடியரசு தின அணிவகுப்பு நடக்குமே அது.) சிறப்பு மேடையில் ஏ.ஆர். ரஹ்மான் வந்தே மாதரம் பாடலைப் பாடினார். நாடெங்குமிருந்து வந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்துக்கு தலைமையாக முன்வரிசையில் தேசியக்கொடி ஏந்திவந்து பிரதமரிடம் கொடுத்தவர்கள் தமிழக சுதந்திரப் போராட்ட தியாகிகள்.
மறுநாள் வானொலியில் சிறப்பு நிகழ்ச்சியை வழங்க இருந்தவன் நான். எனவே, வானொலி நிலையத்தில் நானும் வானொலித் தமிழ்ப் பிரிவின் பொறுப்பாளர் நடராசனும் இதையெல்லாம் லைவ்-ஃபீடிலிருந்து பதிவு செய்து கொண்டோம். ராஜபாட்டையில் நிகழ்ச்சி முடிந்ததும், தியாகிகள் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்திற்குத் திரும்பினார்கள். நானும், நடராசனும் அங்கே சென்றோம். இரவு இரண்டு மணிக்கு வரவேற்பறையில் அனைவரையும் திரட்டினோம். அவரவர் கருத்தைக் கூறுமாறு வேண்டி, பதிவு செய்தோம். 85 வயதுக் கிழவர் தன் போராட்ட அனுபவங்களைக் கூறி, வந்தே மாதரம் என்று முழங்கியபோது தமிழ்நாடு இல்லத்தின் கட்டிடமே அதிர்ந்தது. உறங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் எழுந்து வந்துவிட்டார்கள். கண்களில் கண்ணீர் திரள்வதைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஆண்களும் பெண்களுமாக இருந்த தியாகிகளின் முக்கியப் பதிவுகளை எடுத்துச்சென்று, ஸ்பூல்களில் இருந்ததை விடியும்வரை எடிட் செய்து ... காலை 5.30 நிகழ்ச்சியில் அற்புதமாக வந்தது அந்த நிகழ்ச்சி.
மதுரை, வேலூர், திருச்சி, சென்ன என பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள் அவர்கள். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றவர்கள் சிலர், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவர்கள் சிலர், ஐஎன்ஏ-வில் இருந்தவர்கள் சிலர். அவர்களுடைய வேகமும் ஆதங்கமும் மறக்க முடியாதவை. வானொலிக்குச் செல்லும்போது ஒருநாள் அந்தப் பதிவு இருக்கிறதா என்று தேட வேண்டும்.

#விடுதலை_வேள்வியில்_வீரத்தமிழர்கள்

Comments

  1. வணக்கம்
    அறிய முடியாத தகவலின் தொகுப்பு தங்களின் பதிவு வழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. Anonymous6/9/14

    இத்தனை லட்சுமிகளா, கேள்விப்படாத விசயங்கள் சார், ஆனால் நமது பொன்விழா கொண்டாட்டங்களை கேள்விப்பட்டிருக்கிறேன், நல்ல பயனுள்ள பதிவு சார்....

    ReplyDelete

Post a Comment

வருக வருக