விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 2 வீரபாண்டிய கட்டபொம்மன்

ஆக்கம் ஷாஜகான்  
pudhiavan.blogspot.in

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 2

வீரபாண்டிய கட்டபொம்மன்

ஐரோப்பாவில் பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் இடையே போர் மூண்டது. அதன் விளைவாக இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் போர் மூண்டது. இந்தப் போர் நேரடியாக நடைபெறவில்லை. ஆற்காட்டு நவாப் பதவிக்கான போட்டியில் சந்தா சாகிப்புக்கு பிரெஞ்சுக்காரர்களும், அன்வருத்தீனுக்கு பிரிட்டிஷாரும் ஆதரவு அளித்தனர். அன்வருத்தீன் மறைவுக்குப் பிறகு அவனுடைய மகன் முகமது அலி போரைத் தொடர்ந்தான். அவனுக்கு வெற்றி கிடைத்தது என்றாலும், உதவி செய்த பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கடன்பட்டான். இதற்காக தனக்குக் கப்பம் கட்டிவந்த பாளையங்களை அடகு வைத்தான் நவாப்.



தமிழ்நாட்டில் நாயக்கராட்சி வலுவாக ஊன்றிக்கொண்டது மதுரையில்தான். பாண்டிய மண்டலம் பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த்து. மொத்தம் இருந்த 72 பாளையங்களில் நெல்லை மாவட்டத்தில் 36 பாளையங்கள் இருந்தன. பாளையங்களின் தலைவர்கள் குறுநில மன்னர்களின் அந்தஸ்தைப் பெற்றிருந்தனர். மதுரை நாயக்காரட்சி முடிந்தபின்னர், பாண்டி நாட்டுப் பாளையங்கள் நவாப் ஆதிக்கத்தின்கீழ் வந்தன. எனவே, குத்தகை எடுத்த கம்பெனியாருக்கு வரி செலுத்த வேண்டியதாயிற்று.

1790 பிப்ரவரி 14ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனாக அரியாசனம் ஏறியவர் வீரபாண்டியன். (கெட்டிபொம்மு என்ற குடும்பப் பெயர் மருவி கட்டபொம்மன் ஆனது.) கம்பெனியார் வரி வசூலிக்க வந்தபோது, வரி தர மறுத்தார் கட்டபொம்மன். 1792இல் தொடங்கிய தகராறு 1796 வரை தொடர்ந்தது. முதலில் வரிசெலுத்தி வந்த பாளையக்காரர்களும் கட்டபொம்மன் செய்ததைக் கண்டு தாமும் வரிசெலுத்த மறுத்தனர். எனவே பிரிட்டிஷார் அதிகாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. நெல்லை மாவட்ட கலெக்டராகப் பதவியேற்ற ஜாக்சன் துரை, வீரபாண்டியனை நேரில் அழைத்து கைதுசெய்ய முயன்றபோது, லெப்டினன்ட் கிளார்க் என்பவனை வாளால் வெட்டி வீழ்த்திவிட்டு வெளியேறினார் வீரபாண்டியன்.

இதற்கிடையில், ஸ்ரீவைகுண்டம் என்னும் இடத்தில் ஆங்கிலேயர்கள் வசூலித்துப் பதுக்கி வைத்திருந்த நெற்களஞ்சியத்தைக் கொள்ளையடித்தார் கட்டபொம்மனின் அமைச்சர் தானாபதிப்பிள்ளை. இதில் கட்டபொம்மனுக்கு உடன்பாடில்லை என்றாலும், தானாபதிப் பிள்ளையை ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க மறுத்தார். இதைக் காரணமாகக் காட்டி, 4-9-1799 அன்று நள்ளிரவில் கட்டபொம்மனின் கோட்டையைத் தாக்கியது பிரிட்டிஷ் படை. ஊமைத்துரையும் படைவீர்ர்களும் தேவி ஜக்கம்மாள் விழாவுக்குச் சென்றிருந்த நாள் அது. இந்தத் தகவலை வெள்ளையருக்குத் தெரிவித்தவன் எட்டப்பன். (அதனால்தான் காட்டிக்கொடுப்பவனை இன்றும் எட்டப்பன் என்று குறிப்பிடுகிறோம்.) வெள்ளையர்கள் பீரங்கிப்படையுடன் தாக்கினர். அத்துடன் எட்டப்பனின் 4000 படைவீர்ர்களும் இருந்தனர். ஒருநாளில் முடிந்துவிடும் என்று தளபதி பானர்மேன் எதிர்பார்த்த போர் நீடித்தது.
நான்காவது நாள் கட்டபொம்மனும் ஊமைத்துரையும் தானாபதிப்பிள்ளையும் கோட்டையிலிருந்து தப்பிவிட்டனர். ஆறாவது நாள் கோட்டை வீழந்தது. தலைமறைவானவர்கள் மூவரும் நாகலாபுரம் பாளையத்தில் அடைக்கலம் புகுந்தனர். செய்தியறிந்த கம்பெனிப்படை அங்கும் நுழைந்தது. சிறு போருக்குப் பிறகு நாகலாபுரம் பாளையக்காரர்களும் தானாபதிப் பிள்ளையும் கைதாகினர். அவர்களுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.

வீரபாண்டியனும் ஊமைத்துரையும் தப்பிச்சென்று புதுக்கோட்டை மன்னர் விசய ரகுநாதத் தொண்டமானிடம் அடைக்கலம் புகுந்தனர். கட்டபொம்மனின் நண்பன் விசயரகுநாதன் காட்டிக்கொடுக்க, இரவு நேரத்தில் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டார் வீரபாண்டியன். கயத்தாறில் 16-10-1799 அன்று தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்.

தூக்குமரம் ஏறியபோதும் வீரநடைபோட்டுச் சென்ற கட்டபொம்மன், தூக்குக் கயிற்றைத் தானே கழுத்தில் மாட்டிக்கொண்டார். வெள்ளையர்கள் தூக்குக் கயிறு மாட்ட அனுமதிக்கவில்லை. இந்தியாவில் வெள்ளையரை எதிர்த்துப் போராடிய மன்னர்களில் தமிழகத்துக்கு வெளியே ஜான்சி ராணியையும் ராணி சென்னம்மாவையும் கூறுவார்கள். தமிழகத்தில் வெள்ளையன் கண்ணில் விரல்விட்டு ஆட்டியவர்கள் கட்டபொம்மன், அவருடைய சகோத்ரர் ஊமைத்துரை, தீரன் சின்னமலை முக்கியமானவர்கள். (தீரன் சின்னமலை குறித்து அடுத்த கட்டுரை வரும்.)

பி.கு. - கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, 1974இல், பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவில் புதிய கோட்டை எழுப்பப்பட்டது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் ஆகியவை உள்ளன. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.

Comments

  1. Anonymous21/9/14

    ஆர‌ம்ப காலத்தில் அவர் வரி செலுத்திவந்திருக்கிறார் என கேள்விப்பட்டேன்.. அது குறித்து உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் சார்... புதுக்கோட்டை மன்னர் காட்டிக்கொடுத்தாரா என்பதிலும் சந்தேகம் இருக்கிறது... நல்ல பகிர்வுக்கு நன்றி சார்..

    ReplyDelete
    Replies
    1. இந்த வருடம் பதிவிட முயல்கிறேன்..

      Delete
  2. சில ஆண்டுகளுக்கு முன் பாஞ்சாலங்குறிச்சி சென்றுவந்தேன். கட்டபொம்மன் நினைவாக கட்டப்பட்டுள்ள கோட்டையைப் பார்த்தேன். தமிழர்களின் மனதில் நிற்கும் கதாநாயகர்களில் ஒருவர் கட்டபொம்மன். பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பயணங்கள் தொடரட்டும்?

      Delete
  3. நல்ல பதிவு. அந்த கோட்டையை ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஒண்ணாப் போய் பார்க்கலாம்..

      Delete

Post a Comment

வருக வருக