விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 20 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

ஆக்கம் ஷாஜகான்
pudhiavan.blogspot.in
நன்றி


புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

பாரதியின் தாசனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட சுப்புரத்தினம் புரட்சிக் கவிஞராகவே பெரிதும் அறியப்படுகிறார். அவருடைய கவிதைகளில் தேசியத்தைவிட தமிழ்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இதற்குக் காரணம், பாரதிதாசனைப் பற்றி அறிய அவர் கவிதைகளை மட்டுமே பார்ப்பது, அதிலும் பிற்காலத்தைய குறிப்பிட்ட சில கவிதைகளை மட்டுமே பார்ப்பது.



1891 ஏப்ரல் 29ஆம் தேதி புதுவையில் பிறந்தவர் சுப்புரத்தினம். தந்தை பெயர் கனகசபை, தாயார் இலட்சுமி. இளம் வயதிலேயே பாடல் புனையும் திறமை பெற்றிருந்தார். பதினெட்டு வயதில் காரைக்காலில் நிரவி என்ற இடத்தில் ஆசிரியராகப் பணியேற்றார்.

அந்நாட்களில் புதுவை பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்தது. வ.உ.சி.யின் விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட பாரதிதாசன், வ.வே.சு. அய்யர், அரவிந்தர், பாரதியார் போன்றவர்களுக்குப் புகலிடம் அளித்தார். பாரதியார் நடத்திய இந்தியா பத்திரிகை ரகசியமாக வெளியிட உதவினார். சுமார் பத்தாண்டு காலம் பாரதிக்கு உறுதுணையாய் இருந்தார். ஆஷ் துரையின் உயிரைப் பறித்த வாஞ்சிநாதனின் துப்பாக்கியை அனுப்பி வைத்தவர் பாரதிதாசன்தான் என்று கூறப்படுகிறது.

பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டி பிரெஞ்சு அரசு இவரைக் கைது செய்து ஒன்றரை ஆண்டுகாலம் சிறைதண்டனை விதித்தது. பிறகு விடுதலை செய்து மீண்டும் வேலையும் கிடைத்தது.

1920இல் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றார். கதர்த் துணியை தோளில் சுமந்து விற்றார். பாரதிதாசனின் தேசபக்திப் பாடல்கள் சிறுவர் சிறுமியர் தேசிய கீதம், தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு, காந்தியடிகளும் கதரும், போன்ற தலைப்புகளில் வெளியாயின.

'கதரணிவீர்' என்றுரைத்த
காந்தியண்ணல் ஆணை - எழிற்
காந்தியண்ணல் ஆணை - அதைக்
கருதிடுவீர் அது உமக்கு
நாரதனார் வீணை.
கதரணிவீர் என்றமொழி
அடிமையுற்ற நேரம் - நாம்
அடிமையுற்ற நேரம்
கருதிடுவீர் அது நமக்கு
நான்மறையின் சாரம்.
கதரணிவீர் எனும் அடிகள்
காந்தியின் வாய்க்குமுதம் - நம்
காந்தியின் வாய்க்குமுதம் - மிகக்
கருதிடுவீர் அது நமது
வாழ்வினுக்கோர் அமுதம்.
விதி நமக்கு வாய்த்துண்டோ
வேற்றுவர்கை பார்க்க - நாம்
வேற்றுவர்கை பார்க்க
விளையும் பஞ்சில் விரல்பொருத்த
விடுதலை நீர் காண்பீர்
என்று கதரைப் பாடிய பாவேந்தர், பாரதியைப் போலவே சுதந்திர இந்தியாவைக் காண்போம் என்ற கனவைப் பாட்டில் வடித்தார்.

அன்னியர் நூலைத் தொடோம் என்ற சேதி
அறைந்திடடா புவி முற்றும்
இன்னல் செய்தாலும் இடர் செய்திடாமல்
இராட்டினம் சுற்றென்று சொல்லும் - எங்கள்
ஏதமில் காந்தியடிகள் அறச்செயல்
வெல்லும் வெல்லும் வெல்லும்.

பாரதிதாசன், புதுவை கலைமகள், தேச பக்தன், ஆனந்த போதினி, சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார். பின்னர் சுயமரியாதை இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டார். குடியரசு, பகுத்தறிவு உள்ளிட்ட இதழ்களில் கவிதைகளும் கட்டுரைகள் எழுதினார். கடவுள் மறுப்பையும் சாதி மறுப்பையும் அவரது கவிதைகள் பறைசாற்றின. திராவிட இயக்கத்தில் ஏற்பட்ட ஈடுபாடு திரைத்துறைக்கும் அரசியலுக்கும் அறிமுகம் செய்தது. இக்காலத்திய பாடல்கள் பெருமளவுக்கு பிரபலமானவை.

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
என்ற புகழ்பெற்ற பாடலை எழுதிய பாரதிதாசன், பாரதிதாசன் தமிழார்வலர் மட்டுமல்ல, சிறந்த சர்வதேசியவாதியும்கூட.
அறிவை விரிவுசெய் அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
அணைத்துக்கொள் உன்னைச் சங்கமமாக்கு
மானிட சமுத்திரம் நானென்று கூவு.

என்று பாடிய பாரதிதாசனை ஓர் இனத்துக்கு மட்டும் உரியவரென்று கூறிட முடியாது.

பாரதிக்குப் பிறகு தமிழ்க் கவிதைக்கு குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றியவர், 1964ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் உயிர்நீத்தார்.
*
பி.கு. - பாரதிதாசனுக்கு புரட்சிக்கவி என்ற பட்டம் கொடுத்தவர் அறிஞர் அண்ணா. பாரதிதாசன் 1954இல் புதுவை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 தேர்தலில் தோல்வி கண்டார். இவர் எழுதிய பிசிராந்தையார் என்ற நாடக நூல் 1970 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றது. இவருடைய படைப்புகளை தமிழக அரசு 1990இல் அரசுடைமை ஆக்கியது. தமிழக அரசு ஆண்டுதோறும் ஒரு கவிஞருக்கு பாரதிதாசன் விருது வழங்கி வருகிறது. முதல் விருது பெற்றவர் சுரதா. சுரதா என்றால் என்ன தெரியுமா? பாரதியின் தாசன் பாரதிதாசன் ஆனதுபோல, பாரதிதாசனின் தாசன் - சுப்புரத்தினதாசன் - சுரதா ஆனார்!
‪#‎விடுதலை_வேள்வியில்_வீரத்தமிழர்கள்‬

Comments

  1. பாரதிதாசன் பாட்டுக்கொரு தலைவன் பற்றி அருமையான செய்திகள் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. நிறைய தகவல்களை தெரிந்து கொள்கிறேன் தினம் தினம்...

    ReplyDelete
  3. மிகவும் அருமையான கட்டுரை...

    ReplyDelete
  4. Anonymous23/9/14

    இன்றும் பாரதி தாசனாரைப் பற்றி பல தகவல்களை அறிந்து கொண்டேன் சார், எனக்கு பாரதிதாசன் என்றதுமே,

    " எங்கல் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" எனும் பாடலும், தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடலும் நியாபகம் வந்துவிடும், பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete

Post a Comment

வருக வருக