விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 3 ஊமைத்துரை

ஆக்கம் ஷாஜகான்
pudhiavan.blogspot.in
நன்றி




ஊமைத்துரை

வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றில் கட்டைப் புளியமரத்தில் தூக்கில் இடப்பட்ட பின்னும் வெள்ளையருக்குத் தலைவலியை ஏற்படுத்தியவர் ஊமைத்துரை.



கட்டபொம்மனின் உடன்பிறப்பான ஊமைத்துரையின் இயற்பெயர் தளவாய் குமாரசாமி. சற்று திக்குவாய் கொண்டவர். பாஞ்சாலங் குறிச்சிப் போரில் இரண்டாவது நாள் கோட்டை தகர்ந்தது. இரவோடு இரவாக வெளியேறி விடலாம் என்று அனைவரும் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், ஊமைத்துரை சில வீர்ர்களுடன் புறப்பட்டார். கும்பினியாரின் கூடாரத்துக்குச் சென்று எண்பது பேரை வெட்டிச் சாய்த்துத் திரும்பினார்.

கோட்டையை விட்டுத் தப்பிச் செல்லும்போது, தமையனும் தம்பியும் வழிதவறிப் பிரிந்து விட்டனர். ஊமைத்துரை, திண்டுக்கல் பக்கம் சென்று விட்டார். புதுக்கோட்டை சென்ற கட்டபொம்மன் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஊமைத்துரையையும் வெள்ளையர்கள் வஞ்சனையாகவே பிடித்தனர். சமாதானம் செய்து கொள்வதுபோல வெள்ளைக் கொடியைக் காட்டி, அருகில் வந்ததும் ஊமைத்துரையைப் பிடித்து பாளையங்கோட்டையில் சிறை வைத்தனர்.

சிறையிலிருந்த சிங்கம் ஊமைத்துரை, விடுதலைப் போரைத் தொடருமாறு கொத்துமரம் புலிகுத்தி நாயக்கருக்கு கடிதம் அனுப்பினார். சிறையிலிருந்த பொட்டிப் பகடை, இந்தக் கடித்த்தை செருப்புக்குள் மறைத்து எடுத்துச்சென்று புலிகுத்தி நாயக்கரிடம் சேர்த்தார். பதினைந்து நாட்களுக்குள் வந்து சேருவதாக புலிகுத்தி நாயக்கர் பதில் அனுப்பினார்.

1801ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாள், தமிழக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள். ஊமைத்துரையை விடுவிப்பதற்காக, விறகு, வைக்கோல், புல் முதலியவற்றை விற்பவர்கள் போல வீர்ர்கள் பாளையங்கோட்டை நகருக்குள் புகுந்தனர். மாலையில் சிறையை உடைத்து மன்னரை விடுதலை செய்தனர். இரவோடு இரவாக ஊமைத்துரையும் அவர் படையினரும் தூத்துக்குடி சென்றனர். அங்கிருந்த கும்பினிப் படையைத் தோற்கடித்து, ஆயுதங்களைப் பறித்தனர். அவர்களுக்குத் தலைவனாக இருந்த வெள்ளயனை ஒரு படகில் ஏற்றி, வெள்ளையர் குடியிருக்கும் ஏதாவது ஒரு தீவுக்குச் சென்று பிழைத்துக்கொள் என்று விடைகொடுத்து அனுப்பினார் ஊமைத்துரை.

இதன் பிறகுதான் பாஞ்சாலங்குறிச்சி சென்று, குண்டுகள் துளைக்காத கோட்டை கட்டினார். இந்தக் கோட்டை எதைக்கொண்டு கட்டப்பட்டது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வழங்கி வருகின்றன. பதனீரையும் கருப்பட்டிச் சாற்றையும் மண்ணில் குழைத்துக் கட்டப்பட்டது என்று ஒரு கருத்து உள்ளது. --
வரகு வைக்கோல்தான் சேர்த்து அதில்
மண்போட்டுச் செம்மித்தான் மிதித்து
திறமுடன் கம்மங் கொம்மைகளைப் போட்டு
செப்பமிட்டு மதில் ஒப்பமிட்டு
பஞ்சுப் பொதிகளை ஊடே வைத்துக் கம்பங்
கஞ்சிப் பசைகளைத் தான் கொடுத்து...
-- என்ற நாட்டுப்புறப்பாடல் மூலம், வரகு, வைக்கோல், கம்மங்கொம்மை, பஞ்சுப்பொதி முதலியவற்றைக் கொண்டு, கம்மங் கஞ்சிப் பசையை ஊற்றி இக்கோட்டை கட்டப்பட்டது என்று கருத இடமிருக்கிறது.

கும்பினியார் படைதிரட்டி வந்து கோட்டையைத் தாக்கினர். நாள்முழுவதும் சுட்டபின்பும் பிடியளவு மண்கூட கோட்டையிலிருந்து உதிரவில்லை. ஊமைத்துரையின் படைபலத்தையும், உயரமான அவர் கோட்டையையும் கண்டு அதிர்ந்த வெள்ளையர்கள் பின்வாங்கி பாளையங்கோட்டை சென்றனர். இத்தகவல்கள், கும்பினிப்படையில் அங்கம் வகித்த வெல்ஷ் என்பவராலேயே நமக்குத் தெரிய வருகின்றன.

1801ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள் வெள்ளையர் ஆயுதபலத்தைப் பெருக்கிக் கொண்டு மீண்டும் முற்றுகை இட்டனர். பீரங்கித் தாக்குதலில் கோட்டையில் விரிசல் விழுந்தது. அதைநோக்கி முன்னேறிய கும்பினிப்படை பெருத்த சேத்த்துக்கு ஆளானது. போரில் ஈடுபட்ட 120 வெள்ளையரில் 46 பேர் மட்டுமே காயமின்றித் தப்பினர் என்று வெல்ஷ் குறிப்பிட்டார்.

மேற்குக் கடற்கரையிலிருந்தும், திருச்சியிலிருந்தும் கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டன. மே மாதம் 23ஆம் நாள், கோட்டையைவிட உயரமான மேடைகளைக் கட்டி, அதன்மேல் பீரங்கிகளை ஏற்றி, கோட்டைக்குள் குண்டு போடத்துவங்கினர். கோட்டைக்குள்ளிருந்த நிலவறையில் தீயும் புகையும் பரவியது. இறுதியில் கோட்டை கைப்பற்றப்பட்டது.

தப்பிச்சென்ற ஊமைத்துரை, மருது சகோதரர்களுடன் வெள்ளையரை எதிர்க்க ஆயத்தமானார். 1801 ஜூன் முதல் செப்டம்பர் வரை கமுதி, திருபூவனம், சிறுவயல் ஆகிய இடங்களில் நடந்த போர்களில் ஊமைத்துரை கொரில்லாப் போர் முறைகளைக் கையாண்டு, வெள்ளையருக்குப் பெருத்த சேத்த்தை விளைவித்தார்.

பிறகு, காட்டிக்கொடுக்கப்பட்ட மருது சகோதர்ர்கள் திருப்பத்தூரில் தூக்கில் இடப்பட்டனர். ஆனால் ஊமைத்துரை பிடிபடவே இல்லை என்பது சிலர் கருத்து. திண்டுக்கல் மலைமேல் உள்ள வேலில் பாய்ந்து உயிரைப் போக்கிக் கொண்டார் என்பார் சிலர். காட்டிக்கொடுக்கப்பட்டு, பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேடையில் தூக்கிலிடப்பட்டார் என்றும் ஒரு நாட்டுப்பாடல் தெரிவிக்கிறது.

#விடுதலை_வேள்வியில்_வீரத்தமிழர்கள்

Comments

  1. வணக்கம்

    ஊமைத்துரை பற்றிய வரலாறு ஒரு வித்திரமானது... அவர் வாழ்ந்த கோட்டை எப்படியான மூலப்பொருள் கொண்டு கட்டப்பட்டுள்ளது என்ற தகவலை படித்த போது எப்படியான தொழில்நுற்பம் பயன் படுத்தினார்கள் என்பதையும்.....
    பல போர் உத்திகளை கையாண்டு போராடினார்கள் என்பதையும் தமிழனின் வீரம் எப்படி என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றாக எழுதியுள்ளீர்கள் நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நண்பரே வணக்கம்
    விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்
    வாருங்கள்
    http://karanthaijayakumar.blogspot.com/2014/09/blog-post_14.html

    ReplyDelete
  3. ஊமைத்துரை பற்றி அறியாத பல தகவல்களை அறிந்து கொண்டேன். பகிர்விற்கு நன்றி சார்..

    ReplyDelete
  4. ஊமைத்துரையை பற்றி நிறைய தெரியாத செய்திகளை தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி

    ReplyDelete

Post a Comment

வருக வருக