விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 5 வீரன் வேலுத்தம்பி

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 5

வீரன் வேலுத்தம்பி

ஆக்கம் ஷாஜகான் 
pudhiavan.blogspot.in
நன்றி



பிரித்தாளும் தந்திரத்தில் வெள்ளையர்கள் கைதேர்ந்தவர்கள். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அவர்கள் செய்துவிட்டுப்போன பிரித்தாளும் தந்திரத்தால் இன்றும் இந்தியா சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்தியர்களைக் கொண்டே இந்தியர்களை வீழ்த்துவதிலும் கைதேர்ந்தவர்கள் வெள்ளையர்கள். வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை ஆகியோரை வீழ்த்த அவர்கள் பயன்படுத்திய சூழ்ச்சிகளை நாம் முன்பே கண்டோம்.



வியாபாரிகளாக உள்ளே வந்த வெள்ளையர்கள் கேரளத்தின் சிற்றரசர்களை தந்திரமாக வசப்படுத்திக் கொண்டார்கள். கர்னல் மெக்காலே என்பவன் திருவிதாங்கூர் ரெசிடென்ட் ஆக வந்தான். அந்நாட்டை சக்தியற்றதாக ஆக்க முனைந்தான். திருவிதாங்கூர் மன்னர் பாலராம வர்மா இச்சதியை அறியாதவராக இருந்தார். இந்தத் தந்திரங்களுக்கு இடையிலும் தன் ஆற்றலை மெய்ப்பித்தவர் வீரன் வேலுத்தம்பி.

நாஞ்சில் நாட்டில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் வேலுத்தம்பி. அன்றைய திருவிதாங்கூர் மன்னர், வேலுத்தம்பிக்கு தளவாய் பதவி அளித்தார். 1801ஆம் ஆண்டு தளவாய் பதவியேற்ற வேலுத்தம்பி, நாடு முழுவதும் பயணம் செய்து மக்கள் பிரச்சினைகளைக் கேட்டு அவற்றைத் தீர்த்து வைத்தார். கொள்ளைக்காரர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தார். மக்களின் ஆதரவைப் பெற்றார். அவர்களிடையே வீரத்தை விதைத்தார்.

ஆங்கிலேயர்களுக்குப் பிடிக்குமா... தளவாய்க்கும் தளபதி மெக்காலேவுக்கும் தகராறுகள் மூண்டன. இந்த சமயத்தில்தான் எட்டு லட்சம் ரூபாய் கப்பம் கட்ட வேண்டும் என்றான் மெக்காலே. நாடு அப்போது கடன் சுமையில் இருந்ததால், கப்பம் கட்ட மறுத்தார் வேலுத்தம்பி. இச்செய்தியை மெக்காலே சென்னையின் கவர்னர் ஜெனரலுக்கு அனுப்பினார். தளவாயை விரட்ட உத்தரவிட்டார் கவர்னர் ஜெனரல். ஆனால் திருவிதாங்கூர் மன்னர் வேலுத்தம்பியின்மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

வெள்ளையர் படைதிரட்டி வந்தனர். தளவாய் வேலுத்தம்பி, கொச்சியில் இருந்த ரெசிடென்ட் மாளிகையைக் கைப்பற்றினார். தளவாயின் படைக்கும் வெள்ளையர் படைக்கும் போர் மூண்டது. அங்கிருந்த கல்லறைக்குள் ஒளிந்து கொண்டு, தப்பியோடி விட்டான் ரெசிடென்ட்.

இந்தக் காலகட்டத்தில், பாலியத்தச்சன் என்ற சிற்றரசனும், பிரெஞ்சுக் காரர்களும், மராட்டியர்களும் வேலுத்தம்பிக்கு உதவியாக வந்தனர். எனினும், வலுவான வெள்ளையரின் ஆயுதபலத்தின்முன் நிற்கமுடியவில்லை. ஆயினும் வேலுத்தம்பி தளரவில்லை.

1808 டிசம்பர் 30ஆம் நாள் குண்டறைப் பிரகடனம் என்ற வீர உரையாற்றினார் வேலுத்தம்பி. தளவாயின் வீரர்கள் துணிந்து களத்தில் இறங்கினார்கள். வீர மரணம் எய்தினார்கள். வெள்ளையர் படை முன்னேறிவந்த வழியெல்லாம் கொள்ளையும் கொலையும் செய்தவாறே திருவனந்தபுரத்தை அடைந்தது, மன்னர் அடிபணிந்தார்.

ஆனால் வேலுத்தம்பி தப்பிவிட்டார். மண்ணடி என்ற இடத்தில் இருந்த பகவதி அம்மன் கோயிலில் அடைக்கலம் புகுந்தார். இதை அறிந்த வெள்ளையர் சேனை, வேலுத்தம்பியின் சகோதரரையும் அவரது படையினரையும் கொன்றொழித்துவிட்டு கோயிலை முற்றுகையிட்டது.

வெள்ளையர் கையில் சிக்க விரும்பாத வேலுத்தம்பி தன் கட்டாரியால் குத்திக்கொண்டு உயிர் துறந்தார் – சுமார் நூறாண்டுகளுக்குப் பிறகு வெள்ளையரிடம் பிடிபடாமல் இருப்பதற்காக வாஞ்சிநாதன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தது போல. வெள்ளையர்கள் வேலுத்தம்பியின் சடலத்தையும் கழுவில் ஏற்றனர்.

பி.கு. - படம் திண்ணை இணையதளத்திலிருந்து எடுத்தது

#விடுதலை_வேள்வியில்_வீரத்தமிழர்கள்

Comments

  1. Anonymous16/9/14

    அவர்களின் பிரித்தாளும் கொள்கைதான் வெற்றி பெறக் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை சார்... அரிய பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. அன்று சமூகம் பிரிக்கவே தேவையில்லாமால் ஒரு பெரிய நெல்லிக்காய் மூட்டையாக இருந்ததும் ஒரு காரணம் ...
      வர்ணாசிரமம்...

      Delete
  2. என்ன ஒரு கொடுமை....தன் கையே தனக்குதவி என்று சொல்லுவது போய் தன் கையால் தனக்குச் சாவு ......வாஞ்சியும்,சின்னத்தம்பியும்....தளவாய் வேலுத்தம்பியைப் பற்றி சிறிது அறிந்திருந்தாலும் இங்கு பகரப்பட்டுள்ளத் தகவலும் அறிந்து கொண்டோம். தொடர்கின்றோம்.

    ReplyDelete
  3. நித்தம் நித்தம் ஏன் வீரம் உங்களால் உசுபிவிடப்படுகிறது - ஸ்ரீ மலையப்பன்

    ReplyDelete
    Replies
    1. மலை வருகைக்கு நன்றி

      Delete
  4. Sadalaththaik kazhuvil yetriya vellaiyarukku melum maanakkedu
    Varisaiyaaga varukiradhe padhivugal..andrandru paadangalai padikkadha maanavi agivittene.... :-)

    ReplyDelete
    Replies
    1. விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் என்கிற லேபிளில் இருக்கின்றன எல்லாம்
      அப்புறம்
      எனது கணிப்பொறியும் தகராறை ஆரம்பித்து விட்டது

      Delete
  5. தங்களின் இந்த தொடரை படிக்கும்போது வரலாற்று பாடத்தை படித்த ஒரு திருப்தி ஏற்படுகிறது.

    ReplyDelete

Post a Comment

வருக வருக