விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 6 வேலு நாச்சியார்





வெடுகுண்டுகளை இடுப்பில் கட்டிக்கொண்டு எதிரிகள்மீது தாக்குதல் தொடுக்கும் தற்கொலைப் படையினர் பற்றி இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். 220 ஆண்டுகளுக்கு முன்பே தற்கொலைப்படை மனித வெடிகுண்டாக தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகத்தில் நடந்தது. அதுவும் ஒரு பெண் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது.



வேலுத்தம்பியைப் பற்றி சிலர் அறிவார்கள். ஆனால் வேலு நாச்சியாரைப் பற்றி எத்தனை பேர் அறிவார்கள்? வெள்ளையருக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் வேலு நாச்சியார். பல முறை வெள்ளையர்களை புறமுதுகிட்டு ஓடவைத்தவர், இழந்த நாட்டை மீட்டவர் வேலு நாச்சியார்.

1730ஆம் ஆண்டு இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதிக்கும் சக்கந்தி முத்தாத்தாள் நாச்சியாருக்கும் பிறந்தவர் வேலு நாச்சியார். ஆண் வாரிசு இல்லாத மன்னர், தன் மகளை ஆண்மகன் போல வளர்த்தார். வாள் வீச்சு, குதிரை ஏற்றம், சிலம்பம், களரி என வீர விளையாட்டுகளில் பயிற்சி பெற்றார். அது மட்டுமல்ல, மலையாளம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம், உருது, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர் வேலு நாச்சியார். பதினாறு வயதுக்குள் தமிழ் இலக்கியத்திலும் ஆழ்ந்த புலமை பெற்றார்.

சிவகங்கைச்சீமை மன்னர் முத்துவடுக நாதருக்கும் வேலு நாச்சியாருக்கும் 1746இல் திருமணம் நடைபெற்றது. 1772ஆம் ஆண்டு தளபதி ஜோசப் ஸ்மித் தலைமையில் ஒரு படையும், தளபதி பான்ஜோர் தலைமையில் மற்றொரு படையும் காளையார்கோயிலைத் தாக்கின. 1772 ஜூன் 25ஆம் நாள் மன்னரும் இளையராணி கன்னி கவுரி நாச்சியாரும் கொல்லப்பட்டனர். வேலு நாச்சியார் கொல்லங்குடி அரண்மனையில் இருந்ததால் உயிர் தப்பினார்.

அமைச்சர் தாண்டவராயனின் ஆலோசனைப்படி வேலு நாச்சியார் தப்பிச் சென்றார். அவரைப் பின்தொடர்ந்து வந்த வெள்ளையர்கள் அரியாக்குறிச்சி அய்யனார் கோயில் வரை வந்தனர். அங்கே நின்றிருந்த உடையாள் என்ற பெண், வேலு நாச்சியார் எங்கே சென்றார் என்பதைக் காட்டிக்கொடுக்க மறுத்த்தால் அவளை வெட்டி வீழ்த்தினர். தப்பிச் சென்ற வேலுநாச்சியார் விருப்பாட்சியில் தங்கினார். திண்டுக்கல் நகரில் ஹைதர் அலியை சந்தித்து உதவி கோரினார். உருது மொழியில் அவர் பேசியதில் வியப்படைந்த ஹைதர் அலி, உதவிகளை அளிப்பதாக உறுதியளித்தார்.

ஏழாண்டுகள் கழிந்தன. சிவகங்கை மக்களைக் கொண்டு படை ஒன்றை உருவாக்கினார் வேலு நாச்சியார். மருது சகோதரர்களும் வேலு நாச்சியாரும் பயிற்சி அளித்தனர். 1780ஆம் ஆண்டு சிவகங்கையை மீட்க வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. ஹைதர் அலியும் பீரங்கிப்படையை அனுப்பி உதவினார். காளையார்கோயில் கைப்பற்றப்பட்டது. முத்துவடுக நாதரைக் கொன்ற ஜோசப் ஸ்மித் தப்பியோடி விட்டான்.

சிவகங்கை செல்லும் வழியில் உடையாள் உயிர்துறந்த கோயிலுக்கு தன் திருமாங்கல்யத்தை காணிக்கையாக்கினார் வேலு நாச்சியார். இன்றும் அந்த வைரத்தாலி அங்கே இருக்கிறது. சின்ன மருது தலைமையில் ஒரு படையும், பெரிய மருது தலைமையில் மற்றொரு படையும் நுழைவது, வேலு நாச்சியார் தலைமையில் பெண்கள் படை அரண்மனைக்குள் நுழைவது என்று திட்டமிடப்பட்டது.

விஜயதசமியன்று சிவகங்கை அரண்மனையில் இருந்த ராஜேஸ்வரி கோயிலை தரிசிக்க அரண்மனை திறந்துவிடப்பட்டது. வேலு நாச்சியார் படையுடன் மாறுவேடத்தில் நுழைந்தார். குயிலி என்ற பெண்மணி தன் உடலில் நெய் ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டாள். வெள்ளையரின் ஆயுதக்கிடங்கில் குதித்தாள். ஆயுதங்கள் எரிந்துபோயின.

பான்ஜோரை நேருக்குநேர் எதிர்கொண்ட வேலு நாச்சியார் வாள்சண்டையில் அவனை மண்டியிடச் செய்தார். ஆயினும் அவனைக் கொல்லாமல் உயிர்ப்பிச்சை அளித்தார். சிவகங்கையைக் கைப்பற்றி, பெரிய மருதுவை தளபதியாகவும், சின்ன மருதுவை அமைச்சராகவும் நியமித்தார். 1780 முதல் 89 வரை ஆட்சிப்பொறுப்பு வகித்தார். இந்த நிலைமையிலும் பிரெஞ்சு மொழியையும் கற்றுக்கொண்டார்.

வேலுநாச்சியாருக்கும் மருமகனுக்கும் ஏற்பட்ட பிணக்கு, 1790இல் மகள் வெள்ளச்சி நாச்சியார் மர்மமான முறையில் இறந்தது ஆகிய சம்பவங்களால் அதிர்ச்சிக்கு உள்ளானார். 1793இல் ஒரே பேத்தி குழந்தை நாச்சியாரும் இறந்து விட்டாள்.

வீரத்துடன் போராடி வெள்ளையரை வெற்றி கொண்ட வேலு நாச்சியார் 1796 டிசம்பர் 25ஆம் நாள் உயிர்துறந்தார். அவரது விருப்பப்படியே சிவகங்கை குளத்தங்கரையில் அடக்கம் செய்யப்பட்டார்.

படம் – சிவகங்கையில் வேலுநாச்சியார் மாளிகையும், அவர் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் தலையும்

#விடுதலை_வேள்வியில்_வீரத்தமிழர்கள்

Comments

  1. உடையாள் மற்றும் குயிலியின் சாதனைகள் மகத்தானது சார்.. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. பாரதி காணாத பழமை பெண் - இருப்பினும் கேட்டரிந்திருப்பார்... அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்... ஸ்ரீமலையப்பன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ... மழை
      மலை

      Delete

Post a Comment

வருக வருக