விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - முடிவுரை

ஆக்கம் ஷாஜகான்  
pudhiavan.blogspot.in
நன்றி


நேற்றைய பதிவில் இந்திய தேசியக் கொடி எவ்வாறு உருவானது என்பதை படங்களின் வாயிலாகப் பார்த்தோம். விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் நூலில் வெளியான இதனை, நான் நடத்தி வந்த தலைநகரத் தமிழோசை இதழில் 2004 ஆகஸ்ட் மாதம் வெளியிட்டேன். அந்த இதழின் அட்டையில் 1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் தேசியக் கொடியை கையில் ஏந்தியிருக்கும் நேருவின் படம் இடம்பெற்றது. 

இந்த இதழைக் கண்ட ஆய்வறிஞரும், பாரதி குறித்து ஏராளமான நூல்கள் எழுதியுள்ளவருமான பெ.சு. மணி அவர்கள், நாமெல்லாம் அறியாத சில கூடுதல் தகவல்களை அனுப்பினார். அதனை செப்டம்பர் இதழில் வெளியிட்டேன். பல தகவல்கள் அடங்கிய அவருடைய கடிதம் கீழே தரப்பட்டுள்ளது. கடிதத்தில் குறிப்பிடப்படும் கொடிகள் மட்டும் படத்தில் இடம் பெற்றுள்ளன.
*
ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
தமிழோசையின் சுதந்திர தினச் சிறப்பிதழ் கிடைத்தது. இதழை கூரியர் சேவையில் அனுப்ப வேண்டுமா? சுண்டைக்காய் காற்பங்கு, சுமைகூலி முக்காற்பங்கு எனும் பழமொழி நினைவிற்கு வந்தது. இனி சாதாரண நூல்அஞ்சலில் அனுப்பினாலே போதும், தாமதமானாலும் பரவாயில்லை.

இதழின் மேலட்டைப் படம் புத்தெழுச்சியைத் தந்தது. மலிவான அரசியல் விளம்பரத்திற்காக தேசியக்கொடியை அதற்குரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் கையில் ஏந்திய ஒரு காட்சியை அண்மையில் கண்ட எனக்கு ‘நம்பற்குரிய வீர’ராக நவபாரதச் சிற்பி நேருஜி உரிய மரியாதையுடன் தேசியக்கொடியை கையில் ஏந்தியுள்ள திருக்கோலம் புத்தெழுச்சியைத் தந்தது. காட்சிக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் அவருடைய வரலாற்றுப் புகழ்படைத்த விடுதலைநாள் பேருரையையும் வழங்கியுள்ளது தலைநகரத் தமிழோசை. ‘ஒரு பருந்துப் பார்வை’யில் வெளியிடப் பெற்றுள்ள பலவகையான குறிப்புகள் அறிவுக்கடலில் கடைந்தெடுக்கப் பெற்ற கருத்துக் குவியல்களாகும். இதை தனியாகப் பாராட்ட விரும்புகிறேன்.

‘நமது கொடியின் வரலாறு’ இரு அரிய படங்களைக் கொண்டுள்ளது. இவ்விரு கொடிகள் பற்றியும் சிறு குறிப்புகளை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

முதலாவதாக, அப்துல் ஜாபர் ஸிராஜுதீன் முகமது, பகதூர் ஷா-வை முதல் இந்திய சுதந்திரப்போரில் அரசராகப் பிரகடனம் செய்து 1857 மே மாதம் 10ஆம் தேதி தில்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட ‘சுதந்திரக் கொடி’யின் படம். தாமரைப் பூவும் சப்பாத்தியும் புரட்சியின் சின்னங்களாகவும் பச்சை மற்றும் பொன்வண்ணமும் ஆக அணி செய்தன. இந்து-இஸ்லாமிய ஒற்றுமைக் கொடியாகவும் பட்டொளி வீசிய இந்தக்கொடி செங்கோட்டையில் 1857 மே 10 முதல் செடம்பர் 20 வரைதான் அசைந்தாடியது.

இரண்டாவதாக “புன்மைத்தாதச் சுருளுக்கு நெருப்பாக விளங்கிய தாய்” சகோதரி நிவேதிதை உருவாக்கிய கொடியின் படம். இந்தக் கொடியை 1906இல் உருவாக்கி அந்த ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபை கண்காட்சியில் வைத்தார் சகோதரி நிவேதிதை. இந்தக் கொடியில் பொறித்திட வஜ்ராயுதத்தை தேசியச் சின்னமாக தேர்வு செய்தார். இக்கொடியில் வஜ்ராயுதத்தை சேர்த்ததற்கு விளக்கமளித்து 1906 ஜூலை 25இல் தனது அமெரிக்கத் தோழியும் சுவாமி விவேகானந்தரின் அருமை சீடருமான குமாரி மக்லியாட் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் நிவேதிதை குறிப்பிட்டார்:

இந்தியாவின் காட்சி அறிவெல்லையாக நான் வஜ்ராயுதத்தைப் படைக்கப் போகிறேன். அது புத்தருடைய சின்னம் என்பதை நீ அறிவாய். சிவபெருமானின் திரிசூலத்துடனும் அது நெருங்கிய தொடர்புடையது. சுவாமி விவேகானந்தர் தம்மை இடியேறாகக் கூறிக் கொள்வார். மேலும் அது ஒரு சிலையன்று; ஆகையால் இஸ்லாமியர்களும் மறுக்க மாட்டார்கள். துர்கா தேவி தன் பத்துக் கரங்களில் ஒன்றில் அதை ஏந்தியிருக்கிறாள்.

வஜ்ராயுதம் இடியேற்றின் (thunderbolt) சின்னம் என்று நிவேதிதை குறிபிட்டு, “புகழ், பெருமதிப்பு, தூய்மை, அறிவாற்றல், மகத்தான புனிதம், மாபெரும் சக்தி இவை யாவும் இடியேற்றின் பகுதிகளாகும்”' என்றும் விளக்கியுள்ளார். ததீசி முனிவரின் முதுகுத் தண்டு எலும்பு இந்திரனின் வஜ்ராயுதப் படைப்பிற்கு மூலப் பொருளாகும் என்பதையும் விளக்கியுள்ளார்.

நிவேதிதை முதலில் தாம் தயாரித்த தேசியக்கொடியில், இரு வஜ்ராயுதங்களை குறுக்கு-நெடுக்காக வட்டத்திற்குள் அமைத்து மேலே ‘வந்தே மாதரம்’ என்றும், கீழே ‘யதோ தர்ம; ததோ ஜய:’ (தருமம் எங்கு உள்ளதோ அங்கு வெற்றி இருக்கும்) என்றும் வாசகங்களைப் பொறித்தார். 1906 கல்கத்தா காங்கிரஸ் கண்காட்சியில் வைக்கப்பட்ட கொடியில் ஒரே ஒரு வஜ்ராயுதச் சின்னமும் (இருதலைச் சீலமாய் நடுவு பிடியாய் உள்ள ஓராயுதம்) ‘வந்தே மாதரம்’ எனும் வங்கமொழி எழுத்துச் சொல்லும் சிவப்பு வண்ணப் பின்னணியில் அமைந்திருந்தன. நிவேதிதையின் மாணவிகளால் செய்யப்பெற்ற வேலைப்பாடுகளும் இக்கொடியில் அமைந்தன. இக்கொடி காங்கிர மகாசபையால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டதாகத் தெரியவில்லை.

1906 கல்கத்தா காங்கிரசுக்குச் சென்று வந்த பாரதியார், தமது இந்தியா வார இதழில் (1906 ஜூலை) ‘மாதாவின் துவஜம்’ எனும் தலைப்பில் எழுதிய கவிதை வெளிவந்தது. இந்தக் கவிதையில் பின்வரும் வரிகளில் வஜ்ராயுதச் சின்னம் குறிப்பிடப் பெற்றுள்ளது.
இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்
எங்கள் துருக்கியர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யாரோ?

கடிதம் நீண்டு விட்டது. முடித்துக்கொள்கிறேன்.
அன்புடன் பெ.சு. மணி
*
மேற்கண்ட பாரதியின் பாடலை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதன் பின்னணி இப்போதுதான் உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.
வரலாறு என்பது இதுதான். கற்றது கடுகளவு. கல்லாதது கடலளவு. பள்ளிப் பாடநூல்களுக்கு வெளியிலிருந்துதான் வரலாற்றை அறிய முடியும்.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் தொடர் முடிவடைந்தது. வாசித்த, நேசித்த, கருத்தளித்த, விவாதங்களில் பங்கேற்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

#விடுதலை_வேள்வியில்_வீரத்தமிழர்கள்

Comments

  1. அறியாத செய்திகள் பலவற்றையும் அறியத் தந்தீர்கள் தோழர்.
    நன்றி.

    ReplyDelete
  2. Anonymous27/9/14

    அரிய பல தலைவர்களையும் அறியாத பல தகவல்களையும் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு மிக்க நன்றிகளும் வாழ்த்துகளும் சார்...

    ReplyDelete
  3. அறியாத தகவல்கள்... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. புதிய விசயங்கள் எனக்கு...
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  5. அயராத முயற்சி! அற்புதப் பதிவுகள்!
    வீரத்தமிழரைப் போற்றும் வியன்மிகு பதிவாளர் நீங்கள்!

    நன்றியுடன் உளமார வாழ்த்துகிறேன் சகோதரரே!

    ReplyDelete
  6. வணக்கம்
    அறியாத தகவல் பலவற்றை தங்களின் பதிவு வழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. அருமையான தொடர் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  8. கட்டுரைகளைத் தொகுத்து, உங்களின் சொந்த நீண்ட முன்னுரையுடன் சிறு நூலாக்கினால் பள்ளி மாணவர்கள் நமது வரலாற்று மேன்மைகளை அறியாத இன்றைய தலைமுறையினர் படித்துத் தெரிந்து கொள்ள ஏதுவாகும். செய்வீர்களா மது?

    ReplyDelete
  9. புதுசு புதுசா நிறைய தகவல்கள்! இந்தத் தேசியக் கொடி நேரு கையில் பிடித்து அருகில் காந்தி இருப்பதாக இருந்த ஒரு படம் நாங்கள் எங்கள் பதிவில் சென்னையில் இங்கு ரோஜா முத்தையா நூலகத்தில் நடந்த கண்காட்ச்சியில் புகைப்படம் எடுத்து வெளியிட்டோம்....அதைத்தான் இங்கும் குறிப்பிட்டுள்ளாரா என்று தெரியவில்லை! அந்தப் படம் இல்லாததால்....

    சூப்பர் மது நண்பரே! தங்கள் பகிர்தல்...

    ReplyDelete
  10. புதுசு புதுசா நிறைய தகவல்கள்! இந்தத் தேசியக் கொடி நேரு கையில் பிடித்து அருகில் காந்தி இருப்பதாக இருந்த ஒரு படம் நாங்கள் எங்கள் பதிவில் சென்னையில் இங்கு ரோஜா முத்தையா நூலகத்தில் நடந்த கண்காட்ச்சியில் புகைப்படம் எடுத்து வெளியிட்டோம்....அதைத்தான் இங்கும் குறிப்பிட்டுள்ளாரா என்று தெரியவில்லை! அந்தப் படம் இல்லாததால்....

    சூப்பர் மது நண்பரே! தங்கள் பகிர்தல்...

    ReplyDelete
  11. நல்லதொரு தொடரை படித்த திருப்தி. நிறைய தெரியாத தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. எல்லா தொடருக்கும் கருத்திட முடியவில்லை. மன்னிக்கவும்.

    தங்களுடைய இந்த சீரிய பணிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

வருக வருக