தீர்வதில்லை கொசுவர்த்திகள்



நினைவு நாண்கள் மெல்ல அதிர்கிற பொழுது சுழலுகின்றன கொசுவர்த்திகள். சமீபத்தில் முகநூலில் எனது மாணவர் ஒருவர் ஈபில் கோபுரத்தின் முன்னணியில் நின்றுகொண்டிருந்தார். கண்களில் நீரவர பார்த்துக்கொண்டிருந்தேன்.



நினைவின் சுழல் மனதின் ஆழத்தில்.

அது நான் மேல்நிலைக் கல்வி மாணவர்களுக்கு (ப்ளஸ் டூ) ஆங்கிலம் கற்பித்துக்கொண்டிருந்த காலம். மாணவர்கள் எனது பொறுப்பில், வகுப்பாசிரியராக நான். படிக்கவே பிறந்த மாணவர்கள் பலர் இருந்தாலும் அதைத் தவிர எல்வாற்றையும் மகிழ்வுடன் செய்யும் கூட்டம் ஒன்றும் இருந்தது.

அதீதமாய்ப் படிக்கும் மாணவர்களை தனியே தேர்ந்தெடுத்து அவர்களை மாநில மதிப்பெண் பெற ஊக்குவித்துக் கொண்டிருந்தேன். எதிர்மறையாக சரியாக அக்கறை செலுத்தாத மாணவர்களுடனும் சிநேகமாகவே இருந்தேன்.

அவர்களில் ஒருவன் ஒவ்வொரு திங்கள் கிழமையும் வகுப்பிற்கு வரமாட்டான். விசாரித்ததில் ரயில்வே ஸ்டேசனில் திங்களை கொண்டாடிவிட்டு செவ்வாய் செவ்வனே வந்துவிடுவதை அறிந்தேன். என்ன சொல்லியும் திருத்திக் கொள்ளவில்லை.

சில தினங்கள் கழித்து ஒரு தகராறில் போலிஸ் ஸ்டேசன் போய்விட்டு வந்தான். கேட்டால் இது சப்பை மேட்டர் சார் என்றான். அவன் வயசில் ஒரு எதிர்பாராவிதமாக குறுக்கே வந்த ஒரு போலிஸ்காரரை இடித்துவிட்டு அவர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதும், என் அழுகை தாங்காமல் ஓடிப்போ என்று அவர் விரட்டிவிட்டதும் நினைவில் வந்தது.

பயல் பாக்கிற சினிமா அப்பிடி. அடலசன்ஸ் வேறு. ஹீரோ கணக்கா செய்யக் கூடாததை செய்து செய்ய வேண்டியதை தவிர்த்து வந்தான்.
நம்ம ஹீரோ ஒரு முறை கத்தியால் ஒருவனைக் கீறியதை கேள்விப்பட்டேன். அன்றில் இருந்து அவனை சோதித்தே வகுப்பில் அனுமதித்தேன்.

நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.

யோவ் நீ என்ன பயித்தியமா? அவனை பள்ளியை விட்டு துரத்தி விட்டுவிட வேண்டியதுதானே?

நியாயமான கேள்வி?

அவனை நான் கைவிடாததற்கு காரணம் ஒன்று உண்டு. இந்த சேட்டைகள் எதையும் என்னிடம் காட்டியதில்லை அவன்! ஒரு ஆசிரியருக்கு  தரவேண்டிய மரியாதையை முழுமையாக கொடுத்தான். வகுப்பறையில் அவன் வெகு மரியாதையாக இருப்பான்! பலமுறை தாளாளர் வற்புறுத்தியும் அவனை நான் வெளியில் அனுப்ப சம்மதிக்கவில்லை.

மெல்ல ஆண்டுத் தேர்வுகள் நெருங்கின. பயல் செயல் முறைத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றான்.

இந்த முக்கியமான நாட்களில் ஒரு தகராறில் ஈடுபட்டான். அவன் வாழ்க்கையை புரட்டிபோட்ட தகராறு அது. அதை ஒரு க்ரைம் திரில்லர் கதையாகவே எழுதலாம். எனவே அந்தப் பகுதியை கட் செய்துவிடுகிறேன்.

பயலின் வண்டவாளம் வீட்டில் முழுமையாக தண்டவாளம் ஏறியது. குடும்பம் ஒரு செம்பு தண்ணீரை எடுத்து அவன் தலையில் தெளித்துவிட்டது.

தேர்வு முடிவுகள் வந்தன. தேர்ச்சி. மேலே படிக்க புதுக்கோட்டை மன்னர் கல்லூரியே உனக்கு அதிகம் என்று வீட்டில் சொல்லிவிட்டனர்.
பயல் என்னிடம் வந்தான். மெதுவாக விளக்கினான். சார் என் மாமா புதுக்கோட்டையின் பெரிய ரவுடி ஆனால் அவருக்கு இப்போது ஒரு கண் கிடையாது. நானும் அப்படி போக விரும்பவில்லை. வீட்டில் சொன்னபடி நம்ம ஊரிலே படித்தால் எனது குழு என்னை விடாது. இன்னும் சில ஆண்டுகளில் நானும் ரவுடியாகத்தான் இருப்பேன் என்றான். தீர்க்கமான அவன் குரல் தெளிவான பார்வையும் எனக்கு அவன் திருந்திவிட்டான் என்று உணர்த்தியது.
நான் என்ன செய்வேண்டும்.

எனக்காக ஒரே ஒரு முறை வந்து என் அப்பாவிடம் பேசுங்கள் என்றான்.
ஒரு மாலையில் அவன் இல்லம் சென்றேன் அவனது தாயார் மாடியின் கைப்பிடியில் அமர்ந்துகொண்டு பக்கத்து வீட்டு தோழியிடம் பேசிக்கொண்டிருந்தார்.

நான் ******யின் ஆசிரியர் என்றேன்.

திடுமென அதிர்ந்த அவர்கள் உள்ள வாங்க சார் என்றார்கள்.
உங்கள் பையனை பற்றி எல்லாம் தெரியும் எனக்கு. அவன் குடித்துவிட்டு வந்து மாடி தண்ணீர்க்குழாயைப் பற்றி ஏறுவது, அப்பாவின் கடும் கோபத்தில் இருப்பது என கொஞ்சம் நிறையவே தெரியும். ஆனால் பயல் இப்போ திருந்த விரும்புகிறான். அவன் அப்பாவிடம் சொல்லி ஒரு வாய்ப்பு கொடுங்கள், என்று சொல்லிவிட்டு வந்தேன்.

ஒருவாரம் கழித்து ஓடிவந்தான் அவன்.

சார் தாங்க்ஸ் சார் நான் திருச்சியில் படிக்க போகிறேன் என்றான்.
மூன்று ஆண்டுகளில் பி.சி.ஏ.

மீண்டும்  என்னைப் பார்க்க வந்தான்.

சார் எம்.பி.ஏ படிக்க வேண்டும். வீட்டில் பணமே இல்லை.
நான் புதுகைக் கல்லூரி எதிலாவது சேரலாமே என்றேன்.
இல்லை சார் எஸ்.ஆர்.எம்மில் தான் சேர வேண்டும்.

எவ்வளவு ஆகும்?

இரண்டு லெட்சம்!

அப்பாவுக்கு வருமானம் எவ்வளவு?

மாதம் இரண்டாயிரம்.

நானே மாதம் நான்காயிரம் வாங்கிக் கொண்டிருந்த காலம் அது அவனுக்கு உதவ முடியவில்லை என்ற குற்றஉணர்வு அழுத்தியது.

அதன் பின்னர் நடந்தது மனதை ரணமாக்கும் ஒரு போராட்டம். அவனது தந்தை அவனை அழைத்துக் கொண்டு புதுகையின் பெரும் செல்வந்தர்கள் அனைவரையும் பார்த்து இவன் முன்னிலையில் அவர்களின் கால்களில் விழுந்து பணம் கேட்டிருக்கிறார். இரண்டு லெட்சம் கல்வித் தானமாக இரண்டாயிரம் சம்பாதிக்கும் ஒருவனுக்கு எப்படி கொடுப்பது?

இரண்டு லெட்சம் வேண்டாம் இரண்டாயிரமாவது கொடுத்திருக்கலாம்.
ஆனால் ஒரு நாயும் கொடுக்கவில்லை.

பயல் உறுதி குலையவே இல்லை.

அப்போதுதான் நடந்தது அந்த அற்புதம்.

சென்ட்ரல் வங்கியில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்திருக்கிறான். இன்று போய் நாளை வா தான்.

சரியாக முப்பத்தி ஒன்றாம் முறை மேலாளர் அழைத்து “டேய் நீ உறுதியாக இருக்க, நிச்சயம் படிப்பே ஷாங்க்சன் பண்ணீட்டேன் போ”
எம்.பி.ஏ படிக்கும் பொழுது ஏற்பட்ட சென்னை அனுபவங்களை என்னிடம் சொல்வான். (ஆர்.எம்.எஸ்.ஏ தயவில் அவன் படித்த அந்தக் வளாகத்திற்கு ஒருமுறை போய்வந்தேன், விளையாட்டாய் நினைத்துப் பார்த்தேன், மாணவன் எனக்கு முதலில் சென்ற இடத்திற்கு பல வருடம் கழித்து நான் சென்றிருக்கிறேன்)

பயல் ஒரு முறை சென்னையில் ரஜனி வீட்டை பார்க்கபோன அனுபவத்தை என்னடிம் பகிர்ந்து கொண்டான். சரியான நகையூடும் அனுபவமாக இருந்தது அது.

பயல் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் எம். பி. ஏ முடித்து இன்று குடும்பஸ்தன். இவனைப் பார்த்து நன்றாக படிக்க ஆரம்பித்த தங்கையின் திருமணத்திற்கு என்னை அழைத்தான். சென்று வந்தேன். காரைக்குடியில் நடந்த இவனது திருமணத்திற்கு போக முடியாத வருத்தம் இன்னும் எனக்கு இருக்கிறது.

இவன் தற்போது பணிபுரியும் நிறுவனம் ஒன்று அலுவக சுற்றுப் பயணமாக இவனை பாரிஸ் அனுப்ப, படங்களை இவன் முகநூலில் பகிர எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்வு. உங்களுக்கு?

எழும் வேறு சிந்தனைகள்...
கல்வி உண்மையிலே சிறகுதானே?
கல்விக் கடன் எப்படி ஒரு ஏழை மாணவனை உலகம் சுற்ற வைக்கிறது?
ஆசிரியர்கள் தங்கள் விருப்பு வெறுப்பு கடந்து வாய்ப்பினை வழங்கினால் என்ன நடக்கும்?
இவன் என்னிடம் மரியாதை இன்றி இருந்திருந்தால் நிச்சயம் இந்தப் பதிவு சாத்தியமாகி இருக்காது. நான் நைசாக பள்ளியில் இருந்து கழட்டி அனுப்பியிருப்பேன் என்பதே உண்மை.

இந்தப் பதிவின் தொடர்பாக நான் தெளிவு பெற உதவிய ஜெயப் பிரபு, கவிஞர் நந்தன் ஸ்ரீதரன், இன்னும் என்னை அழைக்க இருக்கும் காலத் தச்சர் என மூவருக்கும் எனது நன்றிகள்.

குறிப்பு.

வரும் இருபத்தி ஒன்றாம் தேதிவரை பெருமதிப்பிற்குரிய ஷாஜகான் அவர்களின் விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் என்கிற பதிவுத் தொடர் ஷெட்யூல் ஆகியிருப்பதால் நண்பர்கள் என்னைத் தேட வேண்டாம்.

ஷாஜகான் அய்யாவிற்கே  இந்த மாதம் சமர்ப்பணம் எனினும் இப்படி ஊடாடுவேன்.

நன்றி ..

Comments

  1. வணக்கம்

    அந்த மாணவன் மீது வைத்துள்ள பற்றை மிகத் தெளிவாக புரிய முடிகிறது தங்களின் பதிவுவழி... வடிவம் அற்று கிடக்கும் கல்லை செதுக்கி வடிவம் கொடுப்பவன்தான் ஆசிரியன்... மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி
    த.ம 1வதுவாக்கு

    -ரூபன்-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. Anonymous14/9/14

    உங்களால் அவருடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றங்கள் சார், அதையும் என் மாணவன் என்று பெருமையோடு சொல்லும் உங்களுக்கு ஒரு சலாம் சார்.. ஆசிரியப் பணி அறப்பணி என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்... நல்ல பதிவுக்கு நன்றி சார்..

    ReplyDelete
  3. கல்வி உண்மையிலே சிறகுதான்..!

    ReplyDelete

Post a Comment

வருக வருக