அநேக ஊடகர்கள் ஞாயிறு பேப்பர் வாசிப்பதில்லை. மவுன விரதம் போல ஒரு கட்டாய விடுப்பு. நானும் அந்த அணி. ஆனால் பார்ப்பதுண்டு. இன்று புரட்டியபோது அனில் தார்க்கர் எழுதிய கட்டுரை பட்டது. அவர் வலிமையான எழுத்தாளர். பன்முக படைப்பாளி ரகம். ரிச்சர்ட் அட்டன்பரோவுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். Info packed piece. காலை சிற்றுண்டிக்கு சுவை சேர்த்த கட்டுரை. தமிழை மட்டும் நேசிக்கும் தோழர்களுக்காக இங்கே.
நான் அறிந்த அட்டன்பரோ
---------------------------------------------
அணில் தாக்கர் |
என் எஃப் டி சி தெரியும்தானே. தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம். மத்திய அரசு நிறுவனம். அதன் தலைவராக இருந்தேன். டெலிபோன் ஆபரேட்டர் பெயர் ரஜினி. சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் வந்து போகும் இடம். அதனால் ரஜினிக்கு யார் மீதும் பிரமிப்பு கிடையாது.
ஆனாலும் அன்று அவள் குரலில் வித்யாசம் தெரிந்தது. ‘மிஸ்டர் தார்க்கர்’ என்ற அழைப்பிலேயே எக்சைட்மென்ட் இருந்த்து. ‘சர் ரிச்சர்ட் அட்டன்பரோ லைன்ல இருக்கார்’.
கதை இல்லை, நிஜம். சர் ரிச்சர்ட் டெல்லி வந்திருந்தார். நாட்டுக்கே தெரியும். என்னை சந்திக்க நேரம் கேட்கிறார்.
மறுநாள் காலை அலுவலகத்துக்கு வந்தார். மகாத்மா காந்தியின் வாழ்க்கையை படமாக்க 20 ஆண்டுகளாக போராடுவதாக சொன்னார். போராட்டம்தான். அதை அவர் விவரித்த விதம் அலாதியானது. நீண்டகாலமாக அந்த ஆசையை மனதில் சுமந்து திரிகிறார். திரைக்கதை எழுதிக் கொடுக்க பல பேரை அணுகியிருக்கிறார். ஒருவர் எழுதிக் கொடுத்ததை பலமுறை விவாதித்து திருத்தங்கள் செய்திருக்கிறார். ஆனலும் திருப்தி ஏற்படமல் அடுத்தவர் அடுத்தவர் என்று மாற்றியிருக்கிறார்.
பல ஆண்டுகள் பல சண்டைகள் விவாதங்களுக்கு பிறகு இப்போது கையில் இருக்கும் ஸ்கிரிப்ட் அவருக்கு திருப்தியாம். முதல் ஸ்கிரிப்ட் எழுதிய நேரத்தில் அதற்கு பொருத்தமான கலைஞர்களை தேர்வு செய்திருந்தார். அவர்கள் எல்லாரும் இப்போது முதுமை அடைந்து விட்டார்கள். புது நடிகர்களை தேட வேண்டும். பார்த்து விடலாம். ’காந்தியோட அகிம்சை தத்துவத்தை உலகம் பூராவும் தெரிஞ்சுக்கணும். அது முக்கியம் என்றார்.
‘எவ்வளவு எதிர்பார்க்குறீங்க, சர் ரிச்சர்ட்?’ என்றேன். ’அஞ்சு கோடி’ என்றார். பக்கென்று சிரித்து விட்டேன். எனக்கே ஆச்சரியம். நான் அப்படி ஆள் இல்லை. ஆனால் அது 1980. ஒரு கோடிக்கே வாயை பிளந்த காலம். ஸாரி சொன்னேன். ‘கிண்டலுக்கு சிரிச்சதா நினைச்சுக்காதீங்க. உங்க நம்பர் ஓகே. அதுக்கு அப்புறம் வர்ற சீரோக்கள்தான் பிரச்னை’ என்றேன். விழித்தார். என் எஃப் டி சி கொடுக்கும் அதிகபட்ச உதவி தொகையே ஐந்து லட்சம்தான். அவர் மேலும் இரண்டு சைபர் சேர்த்ததால் சிரிப்பு என்றேன். பக்கென்று சிரிப்பது இப்போது அவர் முறை.
மறுநாள் வந்தார். ’உங்களை அனில்னு கூப்டவா? என்னை எல்லாரும் டிக்கீனு கூப்பிடுவாங்க’ என்றார். புன்னகையுடன் தலையாட்டினேன். ‘ஓகே, அனில். ராத்திரி பூரா யோசிச்சேன். நீங்க குடுக்குற அஞ்சு லட்சத்த வாங்கிக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கேன். அதாவது உங்க ஆஃபர் இன்னும் வேலிடா இருந்தா..’ என்றார்.
ஆச்சரியம் என் முகத்தில் பிரதிபலித்திருக்க வேண்டும். விளக்கினார். இந்திய அரசு நிறுவனம் காந்தி பட தயாரிப்புக்கு உதவுகிறது என்றால், வெளிநாடுகளில் நிதி திரட்டுவது அவருக்கு சுலபமாம். ஒரு வேண்டுகோள். ‘நீங்க தர்ற லெட்டர்ல தொகைய மட்டும் குறிப்பிடாதீங்க, அனில்’. புரிந்தது. அவர் கேட்ட மாதிரியே கொடுத்தேன்.
அதிர்ஷ்டம் அவர் தோளில் ஏறிய நேரம் அது. மனிதர் யாரையோ பிடித்து பிரதமர் கையில் ஸ்கிரிப்ட் கிடைக்குமாறு செய்துவிட்டார். இந்திரா காந்தி பயங்கர படிப்பாளி. எத்தனை மணி ஆனாலும் தூங்க போவதற்குமுன் புத்தகம் படிப்பார். ஒரே மூச்சில் ஸ்கிரிப்டை வாசித்து விட்டார். காலை எழுந்ததும் ஒளிபரப்பு அமைச்சருக்கு ஃபோன் போட்டு, ‘இந்த படத்துக்கு நாம ஏம்பா சப்போர்ட் பண்ணக்கூடாது?’ என்று கேட்டிருக்கிறார். (’அதானே, ஏன் பண்ணக்கூடாது? உடனே ஏற்பாடு பண்ணிடுறேன்’ என்று வசந்த் சாத்தே சொல்லியிருக்கலாம்).
நான் போட்ட நம்பருக்கு பின்னால் ஒரே இரவில் இரண்டு சைபர் சேர்ந்து விட்டது. காந்தி பட்ஜெட் 20 கோடியாகி இந்திய அரசின் பங்களிப்பு 8 கோடியானது பின்கதை. அதைவிட பலமடங்கு லாபம் சம்பாதித்து கொடுத்தது. 11 ஆஸ்கர் விருதுகளுக்கு நியமனம். 8 ஆஸ்கர் வென்றது. சிறந்த படம், சிறந்த இயக்குனர் (இரண்டும் ரிச்சர்ட் அட்டன்பரோவுக்கு), சிறாந்த நடிகர் (பென் கிங்ஸ்லி) உட்பட. சிறந்த ஆடை வடிவமைப்புக்காக நமது பானு ஆதித்யாவுக்கும் ஆஸ்கர் கிடைத்தது.
ஐந்து லட்சம் ஐந்து கோடியாக மாறிய பின் எல்லாம் சுமுகமாக நடந்தது என்று நினைத்து விட்டீர்களோ? கிடையாது. நியுவேவ் சினிமா இயக்குனர்கள் விடுவார்களா? எத்தனை காவடி எடுத்தாலும் என் எஃப் டி சி இந்திய இயக்குனர்களுக்கு ஐந்து லட்சத்துக்கு மேல் கொடுத்ததில்லை; கேவலம் ஒரு வெள்ளைக்கார துரை கேட்டதும் ஐந்து கோடி தூக்கிக் கொடுக்கிறது. யார் அப்பன் வீட்டு காசு என்று கொடி தூக்கினர். பத்திரிகைகள் சும்மா இருக்குமா? ’தேசநலன்’ கருதி அவர்களை ஆதரித்தது. ’இந்த டார்லிங் என்னய்யா படம் பண்ண போவுதூ.. அதுவும் நம்ம காந்திய பத்தீ..?’ என்று புதுமை இயக்குனர்கள் அளித்த பேட்டி முதல் பக்கம் செய்தி.
டார்லிங் என்றதும் குழப்பமா? அது ரிச்சர்ட் அட்டன்பரோவுக்கு அவர்கள் சூட்டிய செல்ல பெயர். யாரை பார்த்தாலும் டார்லிங் என்று கூப்பிடுவது ரிச்சர்டின் வழக்கம். பாரபட்சமே கிடையாது. பிரதமர் மார்கரட் தாச்சர் முதல் முறையாக அவரை விருந்தில் சந்தித்தபோது, ‘எப்படி இதுக்கு முன்னாடி நாம சந்திக்காம போனோம், சர் ரிச்சர்ட்’ என்று அவர்கள் சம்பிரதாயப்படி கேட்டிருக்கிறார். ’ஏன்னா, நீங்க என்னை கூப்பிடவே இல்லை, டார்லிங்’ என்று இவர் வீசிய பதிலில் இரும்பு பெண்மணி லேசாக அரண்டிருப்பார்.
புதிய அலை இயக்குனர்கள் பற்ற வைத்த தீ பரவியது. அரசு மனம் மாறி, ஐந்து கோடியை கொடுக்காதே என்று எனக்கு உத்தரவிடும் என பயந்தேன். அப்போதுதான் அது நடந்தது. தூர்தர்ஷனில் ரிச்சர்ட் பேட்டி. அன்று வேறு சேனல்கள் கிடையது. டீடீ ராஜ்யம். பேட்டி எடுத்த பிரபலம் ஜெர்சன் டா குன்ஹா. ஒரு கட்டத்தில் கேட்கிறார்: ’எங்க காந்தியை படமெடுக்க உங்களுக்கென்ன இத்தனை ஆசை?’
அவ்வளவுதான். ரிச்சர்ட் உதடுகள் அசைகின்றன. முகம் நூறு பாவங்களை சுழன்றடிக்கிறது. கண்கள் கலங்கி சிவக்கின்றன. வார்த்தை மட்டும்தான் வரவே இல்லை. அவர் நிதானமான சில நிமிடங்களில் அடுத்த கேள்வி: ‘காந்தியின் குணங்களில் உங்களை கவர்ந்த்து எது?’ மீண்டும் நவரசம் கொதிக்கிறது. சந்நிதியில் நிற்கும் பக்தனாக உருகுகிறார் ரிச்சர்ட். கன்னங்களில் கரை புரண்டு ஓடுகிறது கண்ணீர்.
நாடெங்கும் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் ஆடிப் போனார்கள். ‘என்னா மனுஷன், பார்யா.. இவனவிட காந்திய படமெடுக்க எவனுக்குயா அருகத இருக்கு?’ என்று ஒவ்வொரு மொழியிலும் கேட்டனர் இந்தியர்கள். அதோடு மடிந்ததுதான் புதிய அலை எதிர்ப்பு. ரிச்சர்ட் ஒரு தேர்ந்த நடிகர் என்பது தெரியும். எப்பேர்ப்பட்ட நடிகன் என்பது அப்போது புரிந்தது. அதற்காக காந்தி மீதான பிடிப்பும் நடிப்பு என்று சொல்ல வரவில்லை. தூர்தர்ஷனில் அவர் வெளிப்படுத்தியது மிகைப்படுத்திய நடிப்பாற்றல், அவ்வளவுதான்.
டிக்கியின் நடிப்பாற்றல் குறித்து ஏற்கனவே எனக்கு அனுபவம் உண்டு. உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. செய்தி ஒலிபரப்பு துறை மேலதிகாரிகள் எல்லாரும் கலந்து கொண்டனர். ரிச்சர்ட் தன் டீமுடன் வந்திருந்தார். படத்தின் பட்ஜெட்டை எப்படி குறைக்கலாம் என்ற ஆலோசனைகள் அடங்கிய ஃபைல் என்னிடம் இருந்தது. வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பதிலாக அதே திறமையுடன் கூடிய இந்திய கலைஞர்களை போட்டால் செலவு கணிசமாக குறையும் என்பது ஒரு ஆலோசனை. நான் பேச பேச ரிச்சர்ட் முகத்தில் சிவப்பு ஏறிக் கொண்டிருந்தது.
முடித்ததும் மெதுவாக எழுந்தார் ரிச்சர்ட்.
‘என் மதிப்புக்குரிய துறைச் செயலாளர் அவர்களே…’ என்று ஆரம்பித்தபோது அதிகாரிக்கு நிச்சயம் பெருமையாய் இருந்திருக்கும். ’இந்த படத்துக்காக என் வாழ்க்கையையே அர்ப்பணிச்சிருக்கேன். ஸ்கிரிப்ட்ல உள்ள ஒவ்வொரு எழுத்தும் என் மூச்சுக் காத்து மாதிரி. அவ்ளோ கஷ்டப்பட்டு ரெடி பண்ணிருக்கேன். டீமும் அப்படித்தான். ஆனா இப்படி ஒவ்வொரு கட்டத்துலயும் என்னை மடக்கி ஒரு கோர்ட்ல குறுக்கு விசாரணை நடத்துற மாதிரி கேள்வி கேட்டீங்கன்னா… ஸாரி, என்னால முடியாது. நான் விலகிக்கிறேன். ரொம்ப நன்றி’ என்று கூறி ஃபைலை கையில் எடுத்துக் கொண்டு ரிச்சர்ட் நகர்ந்தபோது அந்த பெரிய அறையில் முழு நிசப்தம். அவரது டீமும் குறிப்பறிந்து எழுந்தது.
துறை செயலாளர் டென்ஷனாகி விட்டார். ‘நோ நோ நோ, சர் ரிச்சர்ட். போகாதீங்க. உட்காருங்க ப்ளீஸ். எதுவானாலும் பேசி தீத்துக்கலாம்’ என்று பதறினார். மேடம் பியெம் கோபத்தை யார் சமாளிப்பதாம்? என்னை முறைத்த செயலாளர் ‘கொஞ்சம் சும்மா உக்காரய்யா’ என்று கண்பாஷையில் சொன்னார். மீட்டிங் நீண்டது. ரிச்சர்டையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது அவர் பார்வையும் என் மீது படும் போதெல்லாம் மன்னனுக்கு பணியும் சேவகன் போல சற்றே தலை தாழ்த்தி ஒரு கையால் மெல்ல எனக்கு சலாம் வைத்தபடி இருந்தார். மகா நடிகன் நீதானடா என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.
வெறுப்பொன்றும் இல்லை. அவன் ஒரு மேதை. ஆஸ்கர், பாஃப்டா, கோல்டன் க்ளோப் என எத்தனை புகழ் பெற்ற விருதுகளை வாங்கிக் குவித்த கலைஞன். ப்ரைட்டன் ராக், ஜுராசிக் பார்க், ஷட்ரஞ்ச் கே கிலாடி என்று எத்தனை மாறுபட்ட படங்களில் வித்தை காட்டிய நடிகன். ஓ வாட் எ லவ்லி வார், எ ப்ரிட்ஜ் டூ ஃபார், க்ரை ஃப்ரீடம், சாப்ளின் என எத்தனை மறக்க முடியாத காவியங்களை உருவாக்கிய இயக்குனர். அத்தனைக்கு மத்தியிலும் காந்தி அவன் மனசுக்குள் குடிகொண்டிருக்கிறார். எந்த விருதாலும் அதை பிரிக்க இயலவில்லை.
தினமும் 18 மணி நேரம் உழைத்து, கொடுத்த பட்ஜெட்டில் கொடுத்த கெடுவுக்குள் படத்தை முடித்து சாதித்துக் காட்டினான். இந்தியா முழுவதும் காடு மேடெல்லாம் அலைந்து ஷூட்டிங் நடத்த நேர்ந்தது. ஒரு வருடம் முழுவதும் பிரேக் இல்லாத படப்பிடிப்பு. அப்போது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் கிடையாது. காந்தியின் இறுதி யாத்திரைக்காக 3 லட்சம் எக்ஸ்ட்ரா நடிகர்களை திரட்டி 19 கேமராக்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது. 11 குழுக்கள் ஓயாமல் இயங்கின. ஃபிலிம் சுருள் எத்தனை மைல் நீளம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ரிச்சர்ட் படைத்தது மகா காவியம். மக்கள் மறந்து விட்ட ஒரு மாபெரும் தலைவனை, யாருமே அறிந்திராத ஒரு நடிகனை முன்னிறுத்தி, பணத்துக்கு மதிப்பிருந்த அந்த காலத்தில் கோடிகளை கொட்டி ரிச்சர்ட் நடத்திய வேள்வி.
அதற்கு முழு பலன் கிடைத்தது. இன்று உலகில் காந்தியை அறியாதவர்கள் எவருமில்லை. லட்சியத்தில் அசைக்க முடியாத பிடிப்பு கொண்டிருந்தால் அதை அடைவது நிச்சயம் சாத்தியம் என்பதை படைப்பாளிகளுக்கு பாடமாக நடத்திக் காட்டிய கலைஞன் ரிச்சர்ட். அது அவரது ரத்தத்தில் ஊறிய குணம். லண்டனில் ராயல் அகடமி ஆஃப் ட்ரமாடிக் ஆர்ட்ஸ் மாணவனாக இருந்தபோது சக மாணவி ஷீலா சிமுடன் ஜோடியாக ஒரு நாடகத்தில் நடித்தார் ரிச்சர்ட். விடிந்ததும் ’என்னை மணம் புரிவாயா?’ என்று கேட்டார். ஷீலா பதில் சொல்லவில்லை. ஒவ்வொரு நாள் விடியும்போதும் விடாமல் கேட்டார் ரிச்சர்ட். ஒருநாள் ஷீலா ‘யெஸ்’ என்றார். 1945ல் அவர் கரம் பற்றிய ரிச்சர்ட் இறுதிவரை (24.08.2014) விடவில்லை.
(பட விளக்கம்: காந்தி படப்பிடிப்பு, ரிச்சர்ட், மனைவியுடன், அனில் தார்க்கர்) (4 photos)
மதிப்பிற்குரிய திரு. கதிர்வேல் (லிங்க்) அவர்களின் பதிவு. அவர்களின் அனுமதி பெற்று வெளியிடப்படுகிறது
திரு. கதிர்வேல் |
ஆட்டன் பெரோ காந்தி படம் எடுக்க மிகவும் கஸ்டப்பட்டார் என படித்திருக்கிறேன். தமிழாக்கம் அருமை ஐயா !! பகிர்ந்த உங்களுக்கும் நன்றி...
ReplyDeleteநன்றி ஜெய்.
Deleteதமிழாக்கம் ஒரு தலைமை எடிட்டர் ... எனவே செழுமை அதிகம்
அதானே பார்த்தேன் :) i guessed so..
Delete