அம்மா எனும் வரம்

பிரியத்திற்குரிய தோழமைகளுக்கு மனதிடம் உள்ளோர் தொடர்க. மற்றோர் கடக்க.

தோழர். குமரேசன் அசாக் அவர்களின் துணைவியார் வாழ்வு நிறைவுற்றத்தை  எனது முக நூல் நண்பர்கள் பலர் அறிவீர்கள். அந்த கடைசி தருணங்களை வார்த்தையில் வடித்திருக்கிறார் தோழரின் மகன் ஜெயச்சந்திர ஹாஸ்மி. 


வழியும் சோகத்தையும் தாண்டி மறைந்திருக்கும் செய்திகளை உணர்ந்தபொழுது என் அம்மவை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வே மேலிட்டது. 



மிகச்சரியாய் இரண்டு வாரத்திற்கு முன்பு. இதே செவ்வாய்க்கிழமை. இதே நேரம். அப்பாவும் அண்ணனும் துணைவியும் அலுவலகத்தில். எனக்கு சீக்கிரம் வேலை முடிந்து வந்துவிட்டேன். வீட்டில் நான் மட்டும் இருக்கிறேன். இதே முகநூலில் எங்கள் இயக்குனரிடம் நான் இணைந்து ஒரு வருடம் ஆனதைப் பற்றிய புகைப்பட பதிவை ஏற்றிக்கொண்டிருந்தேன். ஹாலில் படுத்து டி.வி பார்த்துக்கொண்டிருந்தாள் அம்மா. 

‘சந்துரு...இங்க வாடா...’

‘சொல்லும்மா...’

‘இங்க வாடா...’

எழுந்து சென்றேன். 

‘திடீர்னு நெஞ்சு படபடனு அடிச்சுக்குதுடா. தொட்டுப் பாரேன். தோள்பட்டை, கை லாம் வலிக்குது’

என்று சொல்லி அழத் துவங்கினாள்.

‘அய்ய...இதுக்கு ஏன்மா அழுகுற...ஒன்னுமில்ல...வா ஹாஸ்பிட்டல் போய்ட்டு ‘வந்துரலாம்’’

என் மொத்த வாழ்வையும் புரட்டிப்போடப்போகும் நிமிடம் துவங்குகிறது என்பதை அப்போது சத்தியமாக நான் அறிந்திருக்கவில்லை. உடனே அருகிலிருக்கும் 24 மணி நேர மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றேன். அங்கே மருத்துவர் இல்லை. அடுத்ததாய் இரண்டு மருத்துவமனைகளைத் தாண்டி கிண்டி செயிண்ட் தாமஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். வண்டியில் செல்லும் போது, தோளை இறுகப் பற்றியபடி வந்தாள். 

‘இன்னும் ரொம்ப தூரமாடா..’

மருத்துவமனைக்குள் நுழையும் போது எப்போதும் போலல்லாமல் என் கைகளை அவ்வளவு இறுக்கமாக பிடித்தபடி உள்ளே நுழைந்தாள். மருத்துவர் என்ன செய்கிறது என்று கேட்டபோதும், பதில் சொல்லிவிட்டு அழத் துவங்கினாள். என்னை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு பரிசோதனைகள் செய்ய கதவை சாத்தினார்கள். அதன்பின் எல்லா கதவுகளும் அடைத்துப் போயின. 

‘இன்னும் அதையே நினைச்சுட்டு இருக்கியா’ என்ற கேள்விகள் நிஜத்தில் வலிதருகின்றன. இன்னுமா? கடந்து போகும் நாட்களில் கரைந்து போகிறவளா அம்மா? என் வாழ்வின் இறுதி நொடி வரையில், அம்மாவின் இறுதி நொடிகளை என்னால் மறக்க இயலாது. அப்பாவும் அண்ணனும் அன்புவும் கடைசியாக அம்மாவை பார்க்க முடியவில்லையே என்று இன்றுவரை வருந்துகிறார்கள். சந்தோஷப்படுகிறேன். நல்லவேளை அவர்கள் இல்லை. இந்த பெருந்துயரம் என்னோடு போகட்டும். அந்த நொடிகளில் இருந்திருந்தால் அவர்களால் என்றுமே வெளியே வந்திருக்க முடியாது. காலையில் பார்த்த அம்மா, இரவில் இறந்துபோனதாக மட்டுமே இருக்கட்டும். சில நிமிடங்களுக்கு முன் தெம்புடன் பேசிக்கொண்டிருந்த அம்மா, சில நொடிகளுக்கு முன் சிரித்துக் கொண்டிருந்த அம்மா, கைப்பிடித்து நடந்து வந்த அம்மா, அடுத்த நிமிடம் உயிரற்று இருப்பதை பார்க்கும் நிலை நல்லவேளை அவர்களுக்கு வரவில்லை. ஆறுதல் கூறுபவர்கள் அம்மா இறந்தபின் என்ன செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று கூறும்போதெல்லாம் மனம் அதை உள்ளுக்குள்ளேயே எடுக்க மறுக்கின்றது. நான் இன்னும், அவளோடு இருந்த இறுதி நிமிடங்களில் இருந்தே வெளியே வரவில்லை. அன்று வீட்டிற்கு வந்து அம்மாவிடம் நான் பேசியதும், அவளுக்கு பிடித்த வேர்க்கடலை வாங்கிக் கொடுத்ததும், அதை சாப்பிட்டபடி அவள் டிவி பார்த்ததும், இறுதியாய் அவள் பேசிய வார்த்தைகளும், அவள் கைபிடித்த ஸ்பரிசமும், அவள் அழுகையும் அதன் பின் நடந்த நிகழ்வுகளும். என்னை அந்த நொடியிலேயே நிறுத்தி வைத்திருக்கிறது. அதைத் தாண்டி வரவே முடியவில்லை. இன்னும் அந்த நிமிடங்களுக்குள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்னும் அந்த மரணத்தில் நிஜம் என் மண்டைக்குள் ஏறவில்லை. அதெப்படி ஒரு நொடியில் வாழ்க்கை தலைகீழாய் மாறிப்போகும்? உணர்வுக்கும் சிந்தனைக்கும் இடையே பெரும் போராட்டமே நடக்கிறது. அம்மா இறந்துவிட்டாள் என்று அறிவு மனத்திடமும், முட்டாளே...அம்மா எப்படி இறப்பாள் என்று மனம் அறிவிடமும் தினம் சண்டை பிடிக்கிறது. சமயங்களில் வாழ்வின் மேல் உள்ள பற்றும் நம்பிக்கையுமே ஆட்டம் காண்கிறது. 

நிஜத்தில் அம்மா ஒரு குழந்தை தான். ‘நேத்து அந்த முனை கடைல இந்த மாவு வாங்குனேன்டா. என்னமா பொங்குச்சு தெரியுமா’ என்று கண்சிமிட்டும், சிறு சிறு விஷயங்களிலேயே ஆச்சர்யம் கொள்ளும் என் தெய்வப்பெண். யாராவது வீட்டிற்கு வந்தால் அவர்களிடம் மணிக்கணக்கில் அமர்ந்து பேசி, அவர்கள் மகிழ்ச்சியை ஆசையை பகிர்ந்துகொள்ளும் குழந்தை. ’என்ன ஆசைகள் இருந்துவிட்டது அம்மாவிற்கு? வேர்க்கடலை வாங்கிக் கொடுடா...மிட்டாய் வேணும்...சன் டிவி தெரியனும்...சமையல் புக் வேணும்...ஒரேயொரு தங்கநகை போடனும்...ஒரேயொரு பட்டுப்புடவை வாங்கனும்...இதெல்லாம் ஆசைகளா? அடிப்படைகள் தானே? அம்மா எங்களுக்கு செய்ததில் ஒரு மடங்காவது அவளுக்கு செய்திருக்கிறோமா என்ற குற்றவுணர்வுதான் இன்றுவரை வாட்டி வதைக்கிறது. அம்மாவுக்கென்று எதுவுமே பெரிதாக செய்ததில்லை. இருந்ததுமில்லை. அம்மா தான் தேய்ந்து தேய்ந்து செய்து வந்திருக்கிறாள். நான் குறும்படம் எடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை, சென்ற வருடம் அப்பாவின் மருத்துவ செலவுகளுக்கு செலவழித்துவிட்டு, படம் எடுக்க பணம் இல்லாமல் தவித்து நின்றேன். அந்த பணம் அந்த குறும்படம் எடுக்க என்னை நம்பி, ஒருவர் தந்த பணம். அந்த குற்றவுணர்வு வேறு. வீட்டில் யாருடனும் நான் சரியாக பேசவில்லை. அடுத்த நாள், என் கையில் படமெடுக்க வேண்டிய மொத்த பணத்தையும் தந்தாள் அம்மா. தன்னிடமிருந்த ஒரேயொரு தங்க செயினையும் அடகுவைத்து அந்த பணத்தை வாங்கியிருக்கிறாள். என்ன பேச? இன்னும் அந்த நகையை நான் மீட்கவில்லை. நிச்சயம் அதை மீட்டுவிடுவேன். ஆனால் யார் கழுத்தில் போட? இறந்த நாள் காலையில் கூட, ‘கொஞ்சம் கொஞ்சமா பணம் சேத்து வச்சு உனக்கு ஒரு ஃபுல் ஆட்டோமேட்டிக் வாஷிங்மிஷின் வாங்கிரலாம்மா’ என்றபோது, ‘அந்த நகையை இப்போதைக்கு மீட்க முடியாதாடா’ என்றாள். சீக்கிரம் மீட்கனும் என்று நினைத்துக்கொண்டே, நான் கோபப்படுவது போல் முறைத்ததும், ‘சரி விடு...அப்புறம் பாத்துக்கலாம்...’ என்று சென்றுவிட்டாள். அவள் கோபப்பட வேண்டிய விஷயத்திற்கு நான் கோபப்பட்டும் கூட, அமைதியாக சிரித்தபடி சென்றுவிட்டாள். அதுதான் அம்மா. அதெப்படி அம்மாக்களால் மட்டுமே சற்றும் சுயநலம் இல்லாத, எதிர்பார்ப்பில்லாத பேரன்பை எப்போதும் தரமுடிகிறது. உலகில் தலைசிறந்த சித்தாந்தம் இந்த அன்புதான். 

என் காதலைப் பற்றி தெரிந்து கொள்ள என்னை விட ஆர்வமாக இருந்த குழந்தை அம்மா. அன்புவை முதன்முதலில் வீட்டிற்கு அழைத்து வந்து ‘இதான்மா உன் மருமக’ என்றபோது ‘அதான் தெரியுமே’ என்று சிரித்தபடி அவளை அரவணைத்த குழந்தை. அதிலிருந்து என் காதலில் ஏற்பட்ட சிக்கல்களில் எனக்குத் தெரியாமல் அழுது, இறுதியில் என் திருமணத்தில் எல்லாரையும் விட மனம் பூரித்து மகிழ்ந்த குழந்தை. ஒருநாள் கூட என் துணைவியை மருமகளாய் பார்த்ததே இல்லை. தன் செல்ல மகளாகவே பார்த்து பார்த்து கொஞ்சினாள். இதுவரையில் என்னிடம் அவளைப் பற்றி ஒரு குறை கூட சொன்னதில்லை. ஏதேனும் சண்டை எங்களுக்குள் வந்தால், ஏன்டா அவட்ட சண்டை போடுற என்று என்னைத்தான் கேட்டிருக்கிறாள். இது போன்ற ஒரு அம்மாவை பரிசாக கொடுத்ததே, என்னை நம்பி வந்த அன்புவிற்கு நான் தந்த பெரும் கைம்மாறு என்று கருதுகிறேன். நல்ல பெண்ணிடம் தான் என்னை ஒப்படைத்திருக்கிறாள் என்ற திருப்தி, நல்ல அன்பான இடத்தில் தான் வேலைக்கு போகிறேன் என்ற நிறைவு, மௌன மொழியின் தொடர் அங்கீகாரங்கள் மூலம் நிச்சயம் ஜெயித்து விடுவேன் என்ற நம்பிக்கை, இவைதான் இப்போதும் என்னை குழந்தையாய் நினைத்து ஊட்டி வளர்த்த அம்மாவிற்கு, என் வாழ்க்கை சார்ந்து நான் தந்த பரிசுகள். என் திருமணத்திற்கு பின்புதான் ஒரு குடும்பமாக இன்னும் கூடி மகிழ்ந்து வாழ ஆரம்பித்தோம். ஒரு அழகான குடும்ப வாழ்க்கைக்குள் சிரித்தபடியே நுழைந்து கொண்டிருந்தோம். காதல், சினிமா, குடும்பம் என எல்லாவற்றிலும் மிகுந்த மனநிறைவுடன், எந்த குறையும் இல்லாமல் அத்தனை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். எந்த கவலைகளும் புகார்களும் இல்லாமல். ஒவ்வொருவரும் எங்கெங்கோ இருந்தாலும், எல்லாரையும், மொத்த சொந்தங்களையும் ஒருங்கிணைக்கிற ஒற்றைப் புள்ளி அம்மா தான். இன்று எங்கள் மொத்த குடும்பத்தின் ஆதார ஸ்ருதி, உயிர்நாடி, மைய இழை மொத்தமாக அறுந்துவிட்டது. 

இப்போது நானே வீட்டு வேலைகள் செய்கிறேன். தோசை சுடுகையில் கை சுட்டுக் கொள்ளும் போதும், பாத்திரம் கழுவுகையில் நெடுநேரம் நீர் பட்டு விரல்கள் வெளிறிப் போகும்போதும், வலியை விட அம்மாவின் நினைவுகளே மூளைக்கு முதலில் செல்கின்றன. ஆத்திகனாய் இருந்தால் கூட, அம்மா சாமியிடம் சென்றிருக்கிறார், சொர்க்கத்தில் இருக்கிறார், என்னை பார்த்துக்கொண்டிருக்கிறார், அவர் ஆன்மா வாழ்கிறது என்று சமாதானப்பட்டுக் கொள்ளலாம். நாத்திகனாய் வளர்ந்து விட்டேன். அதற்கும் தடையேதும் கூறவில்லை அவள். சுயத்தோடு என்னை வளர்த்து விட்டாள். பெயரில் மட்டும் பணத்தை வைத்துக்கொண்டு, இதுவரையிலும் முழுக்க முழுக்க கஷ்டத்திலேயே வாழ்ந்த அம்மாவிற்கு எல்லாம் செய்யக்கூடிய நிலைக்கு நாங்கள் வந்துகொண்டிருக்கும் போது, எனக்கு எதுவும் வேண்டாம், நான் இந்த கஷ்டத்திலேயே போறேன் என்று போனது போல் இருக்கிறது அவள் மறைவு. ஏ.சி வாங்க வேண்டும் என்று ரொம்ப ஆசை அம்மாவிற்கு. இறுதியில், அவள் இறந்தபின் தான் அவளை ஏ.சி பெட்டியில் வைக்க முடிந்தது. 

வீட்டிற்கு நண்பர்கள் வந்துகொண்டே இருக்க வேண்டும் என்று அம்மாவிற்கு அத்தனை ஆசை. வந்திருந்த எல்லோரும் சொல்லி சொல்லி அழுதது, ‘போன வாரம் தான போன் பண்ணாங்க. வீட்டுக்கு வாங்கன்னு கூப்டுகிட்டே இருந்தாங்க....இரண்டு நாள் முன்னாடிதாங்க போன் பண்ணாங்க..எப்ப வீட்டுக்கு வர்றீங்கன்னு கேட்டுகிட்டே இருந்தாங்க’. என் நண்பர்களோ, அண்ணன் நண்பர்களோ, கட்சித் தோழர்களோ, பத்திரிக்கை நண்பர்களோ யார் வந்தாலும் எத்தனை பேர் வந்தாலும் சரி, தன் சொந்த பிள்ளைகள் போல் பார்த்து பார்த்து செய்பவள் அம்மா. ஒருவரை இல்லையென்று சொல்ல சொல்லுங்கள்? அத்தனை பிள்ளைகள் என் அம்மாவிற்கு. எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள், அம்மாவிற்கு பழக்கமில்லாத நண்பர்கள் வீட்டிற்கு முதல் முறை வரும்போதே, அவர்களையும் என்னைப் போல் ஏற்றுக்கொண்டதெப்படி? எங்கள் வீட்டிற்கு ஒரு நிமிடம் நீங்கள் வந்துசெல்லாம் என்று வந்தால் கூட, சாப்பிடாமல், குறைந்தபட்சம் ஒரு காப்பியாவது குடிக்காமல் வெளியில் போக முடியாது. இது வீட்டிற்கு வந்த அனைவருக்கு தெரியும். பலநேரங்களில் நண்பர்கள் அதிகமாக வந்துவிட, தனக்கு வைத்திருந்ததை அவர்களுக்கு சிரித்தபடி பரிமாறிவிட்டு, பழைய சோற்றை தின்று பசியாறியிருக்கிறாள் அம்மா. அம்மா. ஒருமுறை...ஒரேயொரு முறை நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தால் போதும். அம்மாவை உங்களுக்கு அவ்வளவு பிடித்துப் போகும். அம்மாவை உங்களால் மறக்க முடியாது. மீண்டும் வீட்டிற்கு எப்போது வருவோம் என்று தோன்றும். அவள் மரணத்தை உங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதுவரையில் எங்கள் வீட்டிற்கு நீங்கள் வந்திருக்கவில்லையென்றால், அந்த தேவதைப் பெண்ணை நீங்கள் தவறவிட்டீர்கள் என்று சொல்வேன். முன்பிருந்த வீட்டில், நண்பர்கள் அதிகம் வரக்கூடாது என்று சொன்னதால்தான், இந்த வீட்டிற்கு மாறி வந்தோம். அம்மா இறப்பிற்கு அத்தனை அத்தனை நண்பர்கள் குமிந்து கொண்டே இருந்தார்கள். வந்தவர்களை பார்த்து சிரிக்காமல், அவர்களை உபசரிக்காமல் அம்மா இருந்தது, அன்று மட்டும்தான். இறக்க தகுதியற்றவள் அம்மா. 

வருவோர் போவோர் எல்லாம், அந்த ஹாஸ்பிட்டல்ல சேத்துருந்தா காப்பாத்திருக்கலாம். இங்க கூட்டு போயிருக்கனும். வீட்டுக்கு மேல டாக்டர் இருந்துருக்காரு. அவர்ட்ட சொல்லியிருந்தா ஒரு மாத்திரை கொடுத்துருப்பாரு. காப்பாத்தியிருக்கலாம் என்று மாறி மாறி சொல்கையில் மனம் செத்து செத்து பிழைக்கின்றது. முதலிலேயே அந்த ஹாஸ்பிட்டல் கூட்டு போயிருந்தா காப்பாத்திருக்கலாமோ, கொஞ்சம் வேகமா வண்டி ஓட்டிருந்தா காப்பித்திருக்கலாமோ, முதல் ஹாஸ்பத்திரில டாக்டர் இருந்தா காப்பாத்தியிருக்கலாமோ, ரிசப்சன் ல ஒரு நிமிசம் காத்திருக்காம இருந்தா காப்பாத்திருக்கலாமோ , மேல் வீட்ல டாக்டர் இருந்திருக்காரு, அவர்ட்ட சொல்லியிருந்தா காப்பாத்திருக்கலாமோ, கொஞ்ச நாள் முன்னாடி மெடிக்கல் செக் அப் பண்ணிருந்தா காப்பாத்திருக்கலாமோ என்று, அந்த நிமிடத்திற்கான வெவ்வேறு பரிமாணங்களை மட்டும்தான் இதுவரை சிந்தித்துகொண்டிருக்கிறேன். விதி என்ற ஒன்றை நான் நம்ப மாட்டேன். ஆனால் ஏன் முதல் மருத்துவமனையில் டாக்டர் இல்லை? ஏன் தாமதமானது? ஏன் எனக்கு மேல்வீட்டில் போய் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. தெரியவில்லை. ஆனால், சத்தியமாக, நான் அம்மாவை காப்பாற்றத்தான் நினைத்தேன். அவள் இறந்து போவாள் என்று இப்போது கூட நான் நம்பவில்லை. அப்போது எப்படி எனக்கு தெரியும்? இருந்தாலும் வாட்டி வதைக்கும் இந்த குற்றவுணர்ச்சியல் இருந்து இதுவரை வெளியில் வரமுடியவில்லை. 

மரணம் இயற்கை என்பது எனக்கு புரியும். யதார்த்தம் தெரிந்திருக்கிறேன். இருந்தாலும் அடித்து சொல்கிறேன். அம்மா இப்போது இறந்திருக்கக் கூடாது. இறந்திருக்கவே கூடாது. என் குழந்தையை பார்த்து, வளர்த்து, அண்ணன் திருமணத்தை முடித்து, என் திரைப்படங்களை பார்த்து, அவள் ஆசைப்பட்ட வீடு முதல் எல்லாவற்றையும் நாங்கள் அவளுக்காய் செய்து முடித்து, அவள் சந்தோஷப்பட்L வாழ்ந்திருக்க வேண்டும். நிச்சயம் இது இயற்கையாய் நிகழ்ந்த மரணம் என்று என்னால் சமாதானம் ஆக முடியவில்லை. எங்கோ நிச்சயம் தவறு நிகழ்ந்திருக்கிறது. அம்மாவிற்கு முன்பே இதுபோல் சமிக்ஞைகள் வந்து எங்களிடம் சொல்லாமல் விட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் நான் தாமதமாக கொண்டு சென்றிருக்க வேண்டும். இல்லையென்றால் வேறு ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும். என்றுமே இதை என்னால் ஏற்க முடியாது. எந்த சமாதானங்களும் காதுக்கு ஏறவில்லை. ஆறுதல்களுக்கப்பாற்பட்ட துக்கம் ஆட்கொண்டிருக்கிறது. அடுத்து நாம் முன்னேற வேண்டும். மற்றவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என அத்தனை பொறுப்பும் தெரிகிறது. அதையும் செய்துகொண்டேதான் இருக்கிறேன். ஆனாலும் என்னால் மீள முடியவில்லை. அத்தோடு சேர்ந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இன்றிலிருந்து அலுவலகம் செல்லத் துவங்கிவிட்டேன். வெளியில் சிரித்து, மகிழ்ந்து, இயல்பாக வாழ முயன்று கொண்டிருக்கிறேன். இரவுகளில் கண்ணீரோடு புரண்டுகொண்டிருக்கிறேன். இதுவரை வாழ்வில் அனுபவித்தில்லாத பெருவலியியை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். சினிமா சோகப்பாடல்களை போல, ஐந்து நிமிட மாண்டேஜ் காட்சிகளில் மரணத்தை கடந்து போக முடிவதில்லை. இது வாழ்க்கை. கடக்க கடினமாகத்தான் இருக்கிறது. நீயாச்சும் இருந்தியே இல்லனா எவ்வளவு கஷ்டமாயிருக்கும், அம்மா வலியில்லாம போனாங்கன்னு சந்தோசப்படு என்று அம்மாவின் மரணத்தில் இருக்கும் சிறுசிறு ஆறுதல்களை சொல்லி மற்றவர்கள் சமாதானப்படுத்த முயலும்போதும், ஏன் போனாங்க? என்றுதான் திருப்பி கேட்க தோன்றுகிறது. 

ஒரு நாளும் அம்மா இல்லாத வீட்டில் நாங்கள் இருந்ததில்லை. எனக்கெல்லாம் வீடு என்றாலே அது அம்மா தான். இப்போது அம்மா இல்லாத வீடு. மரண சூன்யம். அகண்ட வெறுமை. என்ன செய்தாலும், அந்த வெறுமையை எப்போதும் நிரப்ப முடியாது. அம்மா இல்லாத இந்த வீடு வெறும் கட்டடமாகத்தான் இருக்கிறது. NOW ITS JUST A HOUSE. NOT A HOME. எனக்கு அம்மாவின் ஸ்பரிசம் வேண்டும். அவள் மடியில் தூங்க வேண்டும். அவள் கைபிடித்து விளையாட வேண்டும். அவளுக்கு கால் பிடித்து விட வேண்டும். கொஞ்ச வேண்டும். சண்டையிட வேண்டும். கோபப்பட வேண்டும். சிரித்து கதை பேச வேண்டும். அம்மா சமையலை சாப்பிட வேண்டும், அம்மா எனக்கு ஊட்டி விட வேண்டும். அம்மாவுக்கு முத்தம் தர வேண்டும். இப்படி எத்தனையோ வேண்டும் வேண்டும். எல்லாவற்றையும் விட, அம்மா இருக்கும் வரை, பாசத்தை கூட முழுமையாக காட்ட வெட்கப்பட்டு வெட்கப்பட்டு தயங்கி தயங்கி வெளிக்காட்டிய என்னை அவள் புரிந்திருக்க வேண்டும். வீட்டில் ஒரு அறையில் அமர்ந்து உலக பொருளாதாரம், இந்தியாவை சீரழிக்கும் பொருளாதார கொள்கைகள் குறித்த காட்டாமான கட்டுரையை எழுதிக் கொண்டிருப்பார் அப்பா. அடுத்த அறையில் அம்மா, நாளை மளிகை பாக்கியை தர எப்படி பணம் புரட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார். யோசித்துப் பார்த்தால், அப்பா உலக பொருளாதாரத்தை பற்றி எழுத முழுக்காரணமும், வீட்டுப் பொருளாதாரத்தை சீரழியாமல் அம்மா பார்த்துக்கொண்டதுதான். எனக்கு வீட்டில் மிகவும் பிடித்ததே இந்த முரணும் அதைத் தாண்டி அப்பா மேல் அம்மா கொண்ட அளவற்ற நேசமும் தான். இனி அதை எங்கு காண? 

முதல்நாள் இரவு என்னோடு சிரித்து பேசி, வீட்டில் நடமாடி, கைப்பிடித்து நடந்து அம்மாவை, அடுத்த நாள் மதியம் ஒரு சட்டியில் சாம்பலாக்கி அடைத்து என் கைகளில் தந்தபோது, உறைந்து போய் உடைந்து உதிர்ந்தது மனது. அப்பா...அந்த நிமிட வலியை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் எப்போதும் இருக்காது. அந்த நிமிடத்தை எப்படி கடந்தேன் என்று இன்றுவரை தெரியவில்லை. நல்லவேளை உறைந்து போனதால் மட்டும் கடந்து தப்பித்தேன். ச்சே. எப்பேற்பட்ட மனுஷி அம்மா. அம்மாக்கள் எப்போது எது கேட்டாலும் உடனே வாங்கித் தந்துவிடுங்கள். உங்களால் இயலாவிட்டால் கூட முயன்று வாங்கித் தந்துவிடுங்கள். பெரும்பாலும் நம்மால் இயலாதவற்றை அம்மாக்கள் கேட்பதேயில்லை. அப்போதே வாங்கித் தந்துவிடுங்கள். பின்னாட்களில், வாங்கித் தர வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் போதும், உங்களிடம் வசதிகள் வரும்போதும், வாங்கித் தந்து நாம் அழகு பார்க்க அம்மா இல்லையெனில் அந்த வலி உயிரை பிய்த்துக் கொல்கிறது. தாங்கமுடியவில்லை. அதை தயவுசெய்து அனுபவித்து விடாதீர்கள். 

அம்மா இறந்தாலும், எங்கள் குடும்பத்திற்கு இருக்கும் அத்தனை பெரிய நட்புலகத்தையும் ஒன்றுசேர்த்து எங்களுக்கே மீண்டும் உணர்த்திச் சென்றிருக்கிறாள். எங்கெங்கிருந்தோ கிளம்பி வந்த நண்பர்களில் இருந்து, நண்பர்களாய் மாறிப் போன உறவினர்களில் இருந்து, எனக்கு ஆறுதல் செய்ய போன் செய்து, அதுமுடியாமல் கதறி அழுத நண்பர்களில் இருந்து, கட்சித் தோழர்களில் இருந்து, தீக்கதிர் தோழர்களில் இருந்து, முகநூலில் அம்மாவிற்காக அஞ்சலி செய்து எங்களுக்கு ஆறுதல் சொன்ன நண்பர்களில் இருந்து, நிலையறிந்து செலவுகளுக்கு உடனடியாக பணம் தந்துகொண்டிருந்த நண்பர்களில் இருந்து, எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க என்று தொடர்ந்து சொல்லி தைரியம் சொல்லிய நண்பர்களில் இருந்து, இரவிலிருந்து இப்போது வரை, எங்களை மாறி மாறி பார்த்துக் கொள்ளும் நண்பர்கள் வரை, அம்மாவுக்காக வெம்பி அழுத நண்பர்கள் தோள்களில் தான் இப்போது வரை சாய்ந்து கொண்டிருக்கிறோம். அம்மா இறந்த அடுத்த வாரம் கொடைக்கானலில் எங்கள் பட ஷுட்டிங். எப்படி எங்கள் இயக்குனரிடம் வரமுடியாது என்பதை சொல்வது என்று தயங்குகையில், அவரே அழைத்து, ‘இத என்னால புரிஞ்சுக்க முடியாதா? நீ வீட்ட பாரு. நாங்க போய்ட்டு வந்துடறோம். சென்னை ஷுட்டிங்க்கு தயாரா வா’ என்றார். இப்படி எல்லா திசைகளில் இருந்தும் நண்பர்கள் அரவணைத்துக் கொண்டிருக்கிறார்கள். நன்றியை விட பெரிய வார்த்தை ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள், என் நண்பர்களுக்கு சொல்ல வேண்டும். உண்மையில், நண்பர்கள் எங்கள் குடும்பத்தை தத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவே உண்மை. 

அம்மா இறந்தபின் அவளிடமிருந்து கழட்டப்பட்ட நகைகளை பார்த்து என் துணைவி அழுதுகொண்டே கேட்டாள். ‘இந்த கம்மல் தங்கமா…இல்ல கவரிங்கா?’ ‘செயின தான் அடகு வச்சுருக்காங்க ல. அப்ப இது கண்டிப்பா தங்கமாத்தான் இருக்கும்’ என்று சொன்னேன். அடுத்த சில மணி நேரங்களில், அம்மாவின் செலவு கணக்கு நோட்டை பார்த்து புரட்டிக்கொண்டிருந்தோம். அதில், ஒரு பக்கத்தில் அடி ஓரத்தில், ’27 ஜுலை அன்று கம்மல் அடகு வைக்கப்பட்டது. வட்டி 90 ரூபாய்’ என்று எழுதப்பட்டிருந்தது. அண்ணனின் பெட்ரோல் செலவுகளுக்காக அடகு வைத்திருக்கிறாள். நெஞ்சடைத்தது. இந்த அதிர்ச்சி, இயலாமை, குற்றவுணர்வு, கண்ணீர், கோபம், சாகும் வரை என்னை துரத்தும். சொந்த வீடு, நகை, பட்டுப்புடவை என எல்லா ஆசைகளும் இருந்தாலும், எங்கள் சந்தோஷத்தை மட்டுமே பேராசையாய் கொண்டு வாழ்ந்தவள் அம்மா. ஓராயிரம் இருக்கிறது சொல்வதற்கு. அவள் ஒரு முழுமையான ‘அம்மா’ வாக வாழ்ந்தாள். இதை மீறி என்ன சொல்ல முடியும் ? அப்பா அழுது பார்த்தது புதிது. அம்மா இல்லாத அப்பா மிக புதிது. அம்மா இல்லாத நாங்கள் விசித்திரம். அம்மா இல்லாத வாழ்க்கை ?காலப்போக்கில் எல்லாம் சரியாகி விடும் என்கிறார்கள். காலப்போக்கில் அம்மா இல்லாமல் தான் நாங்கள் ஒவ்வொரு விஷயமும் செய்யப்போகிறோமா, சிரிக்கப் போகிறோமா, வாழப்போகிறோமா, சினிமாவிற்கு போகப்போகிறோமா, குழந்தை பெறப் போகிறோமா, அண்ணன் திருமணத்தை நடத்தப் போகிறோமா என்பதை நினைத்தாலே மனம் கனக்கிறது. அம்மாவை விட்டுவிட்டு, நாங்கள் எல்லாரும் ஒன்றாக இருப்பதை போல் இருக்கிறது. இசை, பயணம், நண்பர்கள் என முடிந்தவரை நானும் மனத்தை திசைதிருப்பிக் கொண்டுதான் இருக்கிறேன். மீண்டும் மீண்டும் வட்டமடித்து அம்மா மடியிலேயே வந்தமர்ந்து விடுகிறது. வீட்டில் தனியே அமர்ந்து கொண்டிருக்கிறேன். காபி குடிக்க வேண்டும் போல் இருக்கிறது. ‘மா..காப்பி’ என்றழைக்க உதடு போகிறது. பதிலும் காப்பியும் வராதில்லையா? அம்மா இல்லை என்ற நினைப்பே நெஞ்சடைக்கிறது. மனம் நம்ப மறுக்கிறது. கண்ணில் நீர் வழிகிறது. மனம் முழுக்க அவளை தேடுகிறது. இனி நான் அம்மா இல்லாத பிள்ளையா? இனி அம்மா இல்லவே இல்லையா? ஏன்? எப்படி இது சாத்தியம்? எல்லோரையும் அன்பால் அரவணைக்க மட்டும்தானே செய்தாள் அம்மா? 

அம்மாவின் புகைப்படத்தை பெரிய ஃப்ரேமில் இட்டு ஹாலில் வைத்திருக்கிறோம். எங்கிருந்து பார்த்தாலும் அம்மா என்னை பார்ப்பது போலவே உள்ளது. மோனலிசா ஓவியம் மட்டுமல்ல. நமக்கு உயிரான எவருடைய புகைப்படத்தையும், அந்த அறையின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும், அவர்களின் கண்கள் நம்மையே தான் பார்த்தபடி இருக்கும் என்று எனக்கு அதன்பின் புரிகிறது. அம்மாவின் அந்த கண்களை தானம் செய்திருக்கிறோம். அடுத்து வரும் வருடங்களில் அந்த இரண்டு கண்களும் யார் யாரிடம், உலகின் எந்தெந்த மூலைகளுக்கு செல்லப் போகிறதோ தெரியவில்லை. அம்மா ஆசைப்பட்டபடி, நிச்சயம் நான் படம் எடுப்பேன். வெல்வேன். வாழ்வேன். வரப்போகும் நாட்களில், என்றோ ஒரு நாள், என் சினிமாவில் நான் வெற்றி பெற்று, எனக்கான மேடைகளில் நான் நிற்கும்போது, என் அத்தனை வெற்றிகளையும் அங்கீகாரங்களையும் வாழ்த்துக்களையும் விருதுகளையும், மொத்தமாக அம்மாவிற்கு நான் சமர்ப்பிக்கும் போது, எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு அந்த இரண்டு கண்களும் என்னை பார்த்துக் கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். அப்படி பார்த்தால், அப்போது அந்த கண்கள் கலங்கும்தானே ??? 

--
பிரியத்திற்குரிய ஜெய் 

விடியாத இரவுகள் ஏதும் இல்லை 

if winter comes can spring be far behind?

உங்கள் வெற்றி மிக அருகில் தான் இருப்பதாக தோன்றுகிறது. முயற்சிகளை தொடருங்கள். 
--
இது உங்களுக்காக 

திரைகடல் ஓடி திரவியம் சேர்ப்பவர்களே உங்கள் அம்மாவிடம் அருள்கூர்ந்து அடிக்கடி பேசுங்கள்.

ஹாஸ்மியின் நண்பர்களில் ஒருவர் இந்த முகநூல் பதிவின் பின்னூட்டத்தில் இந்த மாதிரி நெஞ்சுவலி தருணங்களில் ஆஸ்ப்ரின் மாத்திரை ஒன்று இருந்தால் போதும் ஒருமணிநேரத்திற்கு பிரச்னை இல்லை என்று சொல்லியிருந்தார். 

உங்கள் தகவலுக்காக. 

Comments

  1. மனது கணக்கிறது நண்பரே... அம்மா காணும் தெய்வம் ஆகவே இறைவனுக்கு(ம்) மேலானவள் ஒவ்வொரு மனிதனுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. என்னை ரொம்பவே அசைத்து அழவைத்த பதிவு எனவே பகிர்ந்தேன்..

      Delete
  2. மனம் கனக்கின்றது! //அதெப்படி அம்மாக்களால் மட்டுமே சற்றும் சுயநலம் இல்லாத, எதிர்பார்ப்பில்லாத பேரன்பை எப்போதும் தரமுடிகிறது. உலகில் தலைசிறந்த சித்தாந்தம் இந்த அன்புதான்.//

    இது தானே தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்று சொல்ல வைக்கின்றது! இது தானே எல்லா உறவுகளுக்கும் மேலான உறவாக தாய்மையைச் சொல்லுகின்றது!

    வாய் வழி வார்த்தைகள் இல்லை
    தாய் எனும் நடமாடும் தெய்வத்தைப் போற்றிட!!


    ReplyDelete
    Replies
    1. ஒரு தாயின் கதை அல்ல,

      ஓராயிரம் தாய்மார்களின் தியாகங்களால்தான் சுழல்கிறது உலகு

      Delete
  3. உறவின் மரணத்தை மிக அருகில் நின்று பார்த்தவர்களின் நெஞ்சத்தை இந்தப் பதிவு உலுக்கி இருக்கும்.
    இறப்பை அநாயாசமாகப் பாடிய முற்றும் துறந்தவர்களே தாயின் இழப்பு பொறாமல் கதறியது நம் இலக்கியம் கண்டது.
    இறந்த பிணம் சுற்றி உறவுகள் அழுவதைக் கண்டு சிரித்துச் கேட்டதற்கு “ செத்த பிணத்தைச் சுற்றி இனிச்சாகும் பிணங்கள் அழுவதைக் கண்டு சிரிக்காமல் என்ன செய்ய என்று கேலி செய்த பட்டினத்தார்.
    இறப்பின் கடைசி துடிப்பை,
    விக்கிப்பற் கிட்டக்கண் மெத்தப்பஞ் சிட்டப்பை
    கக்கிச்செத் துக்குட்டக் கண்டு ”
    என்று இறக்கும் காட்சியைப் பதிவு செய்த பட்டினத்தார்,
    அவருக்கும் “வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல் ஆகுதே
    ஐயையோ நான் பாவி“ என அம்மாவின் மரணத்தின் போது அருகிலில்லாத நிலையை எண்ணிப் புலம்ப வேண்டி இருந்தது.
    திருமூலரின் இரு பாடல்கள் தொடர்ச்சியானவை அல்ல.
    வெவ்வேறு இடங்களில் இருப்பவை. இது போன்ற சடுதி மரணச் செய்தி பார்க்கும் போதெல்லாம் நினைவுவரும்.
    அவற்றை இங்கும் குறித்தமைகிறேன்.
    “ அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
    மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
    இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
    கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே!

    ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
    பேரினை நீக்கிப் பிணம் என்று பெயரிட்டு
    சூரையங்காட்டிடை கொண்டு போய்ச் சுட்டிட்டு
    நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே!
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நினைவுகள் அவ்வளவு சீக்கிரம் ஒழிந்துவிடுவதில்லை ...

      Delete
  4. உங்கள் எச்சரிக்கையையும் மீறி படித்தேன்...மனம் மிகவும் கனக்கிறது அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. எத்துனை முறை படித்தாலும் அத்துணை முறையும் கண்கள் நனைகின்றன ...

      Delete
  5. பதிவு என் போன்ற பாவிக்கு நெஞசில் விழும் சவுக்கடி.
    அழ முடியவில்லை சாமி

    ReplyDelete
    Replies
    1. ஆகா நிம்மதி இல்லாதவன் என்று பெயரில் இருப்பதை நிம்மதி வேண்டும் என்று மாற்றுங்கள் ...
      அருள்கூர்ந்து அது உங்களுக்கு நல்லது

      Delete
  6. தாளாத துயரத்தை அளித்தது. நடமாடி கொன்டிருக்கும் தெய்வம் அல்லவா அவர்கள் ஆண்டவனை நாம் பார்ப்பதில்லையே அன்னையை தானே தினம் பார்க்கிறோம். தாய்மையை மதிக்கவும் அன்பு செலுத்தவும் நாம் ஒரு போதும் தவறக் கூடாது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோதரி ...
      ஆனால் பல சந்தர்பங்களில் தவறவிட்டுவிடுகிறோம்..

      Delete
  7. Anonymous3/9/14

    என்னையும் அறியாமல் என் கண்களில் நீர்... அந்த தோழருக்கு ஆறுதல் மட்டும்தான் கூறமுடியும். அம்மாவின் ஆன்ம இளைப்பாற்றுக்கு எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன். பகிர்ந்த உங்களுக்கும் நன்றி சார்.

    எங்கேயோ கேட்ட ஒரு கவிதை தான் நினைவுக்கு வருகிறது...

    இந்த உலகத்திலேயே கடவுள் இல்லை என்று சொல்லும் எந்த ஒரு நாத்திகனும் ஒப்புக்கொள்வான் அம்மா கடவுளினும் மேலானவள் என்று.......

    மனசு கணக்கின்றது சார்..

    ReplyDelete
    Replies
    1. அன்பு ஜெய்
      உண்மை அன்பு குற்றவுணர்வு ஆற்றாமை என்ற பல அதீத உணர்வுகளை சேர்த்து எழுதும் பொழுது இப்படி வாசகர் இற்றுப் போவது இயல்பே ...
      நம்மை அறியாமலே நாமும் கொஞ்சம் பொருந்திவிடுகிறோம் சோகத்தில் ...

      Delete

Post a Comment

வருக வருக