விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் முன்னுரை




1857இல் நடைபெற்ற சிப்பாய்க்கலகம்தான் முதல் சுதந்திரப் போராட்டம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறி வந்துள்ளனர். சிப்பாய்க் கலகம் என்பது வெள்ளையர் வைத்த பெயர், சிப்பாய்ப் புரட்சி என்பது இந்தியர்கள் வைத்த பெயர். ஆனால் அதுதான் சுதந்திரத்துக்கான முதல் போராட்டமா என்பது கேள்விக்குரியதுதான். அதற்கும் நூறு ஆண்டுகள் முன்னரே தெற்கே விடுதலைப் போராட்டத்திற்கான குரல்கள் ஒலிக்கத் துவங்கிவிட்டன.



ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மைசூர் புலி திப்பு சுல்தானின் போராட்டத்தை விடுதலைப்போரின் துவக்கம் என்று கூறலாம். 1857இல் ஜான்சி ராணியின் போராட்டத்திற்கு போராட்டத்திற்கு முன்னரே 1824இல் கிட்டூர் ராணி சென்னம்மாள் ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு எதிராக ஆயுதமேந்திப் போராடினார். அவருக்கும் கால் நூற்றாண்டுக்கும் முன்னதாகவே திருவிதாங்கூரைச் சேர்ந்த வேலுத்தம்பி, கொச்சியைச் சேர்ந்த பாலியத்தச்சன், மலபாரைச் சேர்ந்த பழசி ராஜா ஆகியோரின் போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. வேலுத்தம்பியின் போராட்டம் 1806ஆம் ஆண்டில் நடந்தது. அதற்கும் முன்னதாக, 1792இல் துவங்கி ஒன்பதாண்டு காலம் நடைபெற்ற பாஞ்சாலங்குறிச்சிப் போர்தான் இந்திய விடுதலைப்போரின் முதல் நிகழ்ச்சியா, இல்லை, நெற்கட்டான்செவ்வல் என்ற பகுதியை ஆண்டுவந்த பூலித்தேவனின் போராட்டம்தான் முதல் விடுதலைப் போராட்டமா என்று 1960களில் தமிழகத்தில் விவாதம் நடந்தது. சிற்றரசர்களின் போராட்டங்களை விடுதலைப் போராட்டமாக வகைப்படுத்த முடியாது என்று ஒருசாராரும், ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் எதுவுமே விடுதலைப் போராட்டத்தின் பங்குதான் என்று ஒருசாராரும் கருதுகின்றனர்.

விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு வேறெந்த மாநிலங்களின் பங்கைக் காட்டிலும் குறைந்த்தல்ல. ஆயினும், விடுதலைப் போராட்டம் என்றாலே திலகர், காந்திஜி, தாதாபாய் நவ்ரோஜி, பகத்சிங், நேரு, சுபாஷ் போன்ற பெயர்கள்தான் பெரும்பாலான வரலாற்று நூல்களில் இடம் பெறுகின்றன.

விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கை விவரிக்கும் புத்தகங்கள் மிக அரிது. சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்கள் எழுதிய விடுதலைப் போரில் தமிழகம் என்ற முதன்மையான நூலும், ஸ்டாலின் குணசேகரன் எழுதிய விடுதலை வேள்வியில் தமிழகம் என்ற அண்மைக்கால நூலும் இல்லையென்றால், தமிழர்களுக்கே தமது வரலாறு குறித்து முழுமையாகத் தெரிய வந்திருக்காது.

வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி. இவர்களைப் பற்றிய திரைப்படங்கள் வந்த்தால் இவர்களின் பெயர்கள் பரவலாக அறியப்பட்டன. காமராஜர், ராஜாஜி போன்றவர்கள் விடுதலைக்குப் பின்னர் தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்ததால் அவர்களின் பெயர்களும் தமிழர்களுக்கு நினைவில் இருக்கின்றன. திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் வீர்ர் என்ற பட்டம் பெற்றவர். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் தீவிர உறுப்பினராக இருந்தார் என்பதையும், கதர்த்துணிகளை மூட்டையாகக் கட்டி தலையில் சுமந்துசென்று விற்றார் என்பதையும் பலர் அறிய மாட்டார்கள். வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா போன்ற போராளிகளின் பெயர்களை எத்தனைபேர் அறிவார்கள்?

சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஆங்கிலேய அரசு அனைத்து விதமான அடக்குமுறைகளையும் பயன்படுத்தியது. ஆயுதம் இன்றி அகிம்சை வழியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக்கூட கண்மூடித்தனமாகத் தாக்கியது. “தடிகள் கொடுத்திருப்பதன் நோக்கம் அடிப்பதற்காகத்தான், அச்சுறுத்துவதற்காக அல்ல. தலைமை அதிகாரியின் ஆணை இல்லாமலே தடியடி நடத்தும் சக்தியும் தைரியமும் போலீஸ்காரர்களுக்கு இருக்க வேண்டும்” என்பது ஆங்கிலேய அரசு காவல் துறையினருக்கு அளித்த அறிவுரை.

உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது காந்திஜி கைதுசெய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து இயக்கத்தின் தலைமை ஏற்றார் அப்பாஸ் த்யாப்ஜி. அவரும் கைதானபின் வந்தார் சரோஜினி நாயுடு. அந்த சத்தியாக்கிரகத்தின்போது நேரில் பார்த்த அமெரிக்கப் பத்திரிகை நிருபர் வெப் மில்லர் உருக்கமான சொற்களில் அங்கு நடந்த்தை விவரித்தார். கடைசியில் அவர் எழுதினார் –

“எதிர்ப்பு எதுவும் காட்டாத தொண்டர்கள் தடிகளால் தாக்கப்பட்டு இரத்தக் குவியலில் கிடந்த காட்சியைக் காணச் சகிக்காமல் பலமுறை நான் முகத்தைத் திருப்பிக்கொள்ள வேண்டியதாயிற்று. எதுவும் செய்ய வகையில்லாத ஆத்திரமும் வெறுப்பும் அடங்கிய இனமறியாத உணர்வு என்னை ஆட்கொண்டது.”

இப்படி தடியடிக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் சிறைக்கொடுமைக்கும் உள்ளாகி உயிர் துறந்தோர் எண்ணற்றோர். ஆயுள் முழுவதும் முடமாகிப் போனவர்கள் எண்ணற்றோர். ஆங்கிலேய அடக்குமுறை குறித்து அறியவந்த அந்நியர்களின் குழு ஒன்று, அரசின் கொடூரத்தனங்களைக் கண்டித்து அறிக்கை எழுதியது. இந்த அறிக்கையைப் படித்த தத்துவஞானி பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் எழுதினார் –

“உலகில் நாகரிகமான எந்த அரசும் கையாளாத கொடிய அடக்குமுறைகளை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கையாள்கிறார்கள். ஜெர்மனியில் நாஜிகளின் கொடுமைகளைப்பற்றி அறிந்தபோது நம்மில் வெகுளாதவர் எவரும் இல்லை. ஆனால் அதேபோன்ற கொடுமைகளை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளரும் செய்கின்றனர் என்பதை இங்கிலாந்தில் உள்ள மிகச்சிலரே அறிவர்.”

வெள்ளையரின் கொடுமைகளை வெள்ளையரே கண்டிக்கும் அளவுக்கு அடக்குமுறைகள் நிகழ்ந்தன. அதையும் மீறித்தான் நமது முன்னோர்கள் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள், இரத்தம் சிந்தினார்கள், விடுதலை பெற்றார்கள். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியபோது அப்படையின் அனைத்து நிலைகளிலும் முன்னிலை வகித்தவர்கள் தமிழர்கள். நேதாஜியின் அழைப்பை ஏற்று படையில் சேர ஆயிரமாயிரம் தமிழர்கள் முன்வந்தார்கள். நாடகம் என்றாலே தொலைக்காட்சி நாடகம் அல்லது நகைச்சுவை நாடகம் என்றாகிப் போய்விட்ட இன்றைய நிலையில், நாடக மேடையை நாட்டு விடுதலைக்காகப் பயன்படுத்திய வரலாற்றை எத்தனைபேர் அறிவார்கள்?

இப்படிப் போராடிய பல்லாயிரம் இந்தியர்களில் பெயர் குறிப்பிடும் அளவுக்குப் புகழ் பெறாதவர்கள், போராட்ட வரலாற்றின் சுவடும்கூட இல்லாமல் போனவர்கள் எண்ணற்றோர். இந்தச் சிறிய நூல் அத்தகைய தியாக தீபங்களுக்குக் காணிக்கை.

இன்றைய தலைமுறையும் நாளைய தலைமுறையும் நம் விடுதலைப் போராட்ட வீர வரலாற்றை மறந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், தொலைக்காட்சிகளின் ஆதிக்கமும் சேர்ந்து, மக்களின் வாழ்க்கை முறைகளை புரட்டிப்போட்டிருக்கிற நிலைதான் இன்றைய நிலை.

சுதந்திர தினத்தன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் என்ன நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. விடுதலைப் போரில் பங்கேற்ற வீரத் தமிழர்களின் பங்களிப்பை அனைவரும் அறியும் வகையில் சிறியதோர் நூலை வெளியிடலாம் என்று நண்பர் ஒருவர் ஆலோசனையை முன்வைத்தார். சுதந்திர தினத்தன்று இந்நூலை வெளியிட்டு, அனைவருக்கும் இலவசமாக அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. (இது நடந்தது 2002இல்.)

விடுதலைப்போரில் ஈடுபட்ட தமிழர்கள் அத்தனைபேரின் வரலாறும் பதியப்பட வேண்டும் என்பது என் அவா. அது சாத்தியமற்றது என்றும் புரிந்தே இருக்கிறது. இந்தப் பிரசுரத்துக்காக முயன்றபோது சில தலைவர்களைப் பற்றிய செய்திகள் துணுக்குகளாகத்தான் கிடைத்தன. பலரின் புகைப்படங்கள் கிடைக்கவில்லை. சிலரின் வாழ்க்கை வரலாறு கிடைக்கவில்லை. எனவே, இந்தப் பிரசுரம் மிகச்சிறிய முயற்சி என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். (அப்போதுதான் இணையம் பரவலாகத் துவங்கியிருந்தது. இப்போது இருப்பதுபோல தகவல்கள் கொட்டிக் கிடக்கவில்லை.)

நன்கு அறியப்பட்டவர்களைப் பற்றிய அறியப்படாத செய்திகளையும், அறியப்படாமல் போனவர்களைப் பற்றிய செய்திகளையும் இந்நூல் சுட்டிச் செல்கிறது. கால அவகாசம் இன்மையால் நாமக்கல் கவிஞர், கல்கி, அவினாசிலிங்கம் செட்டியார் போன்றவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டியும்கூட, முழுமை பெறாததால் அவற்றை சேர்க்க இயலாமல் போனது.

இந்தக் குறுநூலை உருவாக்கத் துணைநின்ற நூல்களின் ஆசிரியர்கள், பதிப்பாளர்கள் ஆகியோருக்கும், வேண்டுகோளை ஏற்று மின்னஞ்சலில் சில தகவல்களை அளித்த முகம் தெரியாத நண்பர்களுக்கும் நன்றி.

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று...
எங்கும் சுந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லாரும் சம்மென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே – இதை
தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே...

சுதந்திரத்திற்கு முன்பு கற்பனையில்தான் ஆனந்தப் பள்ளுப் பாடினான் பாரதி. அந்தக் கற்பனையை நிஜமாக்க உழைத்த நல்லவர்களுக்கு இந்நாளில் அஞ்சலி செலுத்துவோம். பெற்ற சுதந்திரத்தைப் போற்றி மதிப்போம் என்று உறுதிகொள்வோம்.

*

பி.கு. 1. 2000 வாக்கில் இதை எழுதத் துவங்கியிருந்தேன். அப்போது பன்மொழிப் போர்ட்டல் ஒன்றில் தமிழப்பிரிவின் பொறுப்பாசிரியராக இருந்தபோது, இதைத் தொடராக வெளியிட்டேன். பிறகு 2002இல் முன்னுரையில் குறிப்பிட்டவாறு நூல் வடிவில் கொண்டுவரும்போது ஒரே பக்கத்திற்குள் அடக்க வேண்டும் என்பதற்காக அங்கங்கே வெட்டப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, வலைதளத்தில் எழுதியவற்றை சேமித்து வைத்திருந்த குறுந்தகடு காணாமல் போய்விட்டது. பிரசுரம் மட்டுமே கையில் இருக்கிறது, அதிலிருந்தே மறுவெளியீடு செய்யப்படுகிறது.
2.இப்பிரசுரம் சாமானிய வாசகர்களுக்காக எளிய மொழியில் எழுதப்பட்டதால் நூலில் ஆதாரங்களாக அடிக்குறிப்புகள் தராமல் விட்டுவிட்டேன். தவறு செய்துவிட்டேன் என்பது இப்போது புரிகிறது.

ஆக்கம் ஷாஜகான் அவர்கள்
புது தில்லி
அனுமதி பெற்ற பகிர்வு 

Comments

  1. Anonymous12/9/14

    நல்லதொரு பகிர்வு சார், உண்மையாகவே விடுதலைப் போரில் தமிழகம் அளப்பறிய பங்கை ஆற்றியிருக்கிறது என்பது நிஜத்திலும் சத்தியம். ஆனாலும் அது அதிகம் ஊடக வெளிச்சத்திற்குப் போகவில்லை என்பது தான் விசயம்.

    ReplyDelete
  2. மிகவும் சிறப்பான கட்டுரை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு வேறெந்த மாநிலங்களின் பங்கைக் காட்டிலும் குறைந்த்தல்ல. ஆயினும், விடுதலைப் போராட்டம் என்றாலே திலகர், காந்திஜி, தாதாபாய் நவ்ரோஜி, பகத்சிங், நேரு, சுபாஷ் போன்ற பெயர்கள்தான் பெரும்பாலான வரலாற்று நூல்களில் இடம் பெறுகின்றன.//

    உண்மையே! சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தென்னகத்து/தமிழகத்து வீரர்கள் அதிகம் பேசப்படுவதில்லை! சுதந்திரப் போராட்டம் சிப்பாய் கலகத்திற்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது என்றாலும் ;அதைப் பற்றியும் வரலாற்றில் அதிகம் இல்லை...அதாவது நமக்கு அறியப்படும் வரலாற்றில்....

    மிக அருமையான தொடர்....தொடர்கின்றோம்...பகிர்வுக்கு மிக்க நன்றி தோழரே!

    ReplyDelete

Post a Comment

வருக வருக