ஆசிரிய தின சிறப்பு பதிவு ... தோழர் ஜெயப் பிரபுவின் கைவண்ணத்தில்


என் இரண்டாம் வகுப்பு ஆசிரியை சூசன்னா திடீரென தொடர்ச்சியாக சில நாட்கள் வரவில்லை.

அவர் தான் என்னை முதன் முதலாக, வகுப்பறைக்கு வெளியே அழைத்து வந்தவர்.



பெருஞ்சத்தத்தோடு புகையை கக்கியபடி, ஆக்ரோஷமாக சுழலும் ரயிலின் சக்கரங்களை அவ்வயதில் திரைப்படங்களில் மட்டுமே நாங்கள் பார்த்திருந்தோம்.

மீட்டர்கேஜ் பாதையில் மெல்ல ஊர்ந்த பாசஞ்சர் ரயிலொன்றில்,
ஒரு நாள் சுற்றுலா 2 ரூபாய்க்கு அழைத்துச் சென்றார்.

கும்பகோணத்திற்கு முன்னரே என நினைக்கிறேன். சரியாக நினைவில்லை.
எல்லா மாணவர்களும் துள்ளிக் குதித்து ரயிலுக்குள் விளையாட,
நானோ, இரண்டு கம்பிகளில் நகரும் ரயில் கவிழ்ந்துவிட்டால் என்னாவது என்ற அச்சத்திலிருந்தேன்.

நீண்ட நேரமாக என்னைக் கவனித்த சூசன்னா, ஒரு நிறுத்ததில், ரயிலின் ஜன்னலோரம் என்னை அழைத்துச் சென்று, வெளியே கை நீட்டி,
ஒரு குருவியைக் காட்டினார்.

இது தான் 'புல்புல்தாரா' குருவி என்றார்.

"பறைவகளைப் பார்த்தாயா? எங்கு வேண்டுமானாலும், செல்லலாம்,
என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சுதந்திரமாக நினைத்தபடி வாழ்கிறது.
அதற்கும் வாழ்வு நிரந்தரமில்லை.

ஆனால் இருக்கும் வரை எப்படி இருக்கிறது பார்... எனவே மகிழ்வோடு வாழக் கற்றுக் கொள்" என்றார்.

அந்த வயதில் எனக்கது புரியவில்லை.மகிழ்வோடு பயமின்றி இருக்க வேண்டுமென்ற சூசன்னாவின் சொற்கள் மட்டும் மனதில் பதிய,
அப்படியே அவர் மடியில் படுத்துக் கொண்டேன்.

அந்த சூசன்னா பள்ளிக்குத் தொடர்ச்சியாக வரவில்லை.

5 நாட்கள் வரை பொறுத்துப் பார்த்த நான்,
அடுத்த வாரம் இருதய மேரி டீச்சரிடம், ஏன் அவர்கள் வரவில்லை என கேட்கச் சொல்லி என் சக மாணவன் ஒருவனை மிட்டாய் வாங்கிக் கொடுத்து அனுப்பினேன்.

'மஞ்சள் காமாலை' என்று வ்ந்து சொன்னான்.

அப்படியென்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது.

உடல் நலமில்லை என மட்டும் தெரிந்து கொண்டேன்.
சூசன்னா டீச்சருக்கு கன்னம் ரெண்டும் உப்பலாக இருக்கும். பேச ஆரம்பித்தால், இளையராஜாவின் மெலோடியும் தோற்றுப் போகும்.
ஒரு போதும் அவர்கள் அதிர்ந்து பேசியோ, தரையில் நடந்தோ நான் கண்டதில்லை.

சூசன்னா, என் விரல் பிடித்து இரண்டு வரி, நான்கு வரி கோடு போட்ட கரும்பலகையில்,

சாக்பீஸ் துண்டோடு தமிழ் ஆங்கில எழுத்துக்களை எழுத வைத்த போது, புதிய உலகம் ஒன்று எனக்காய்ப் பிறந்தது.

'ஒ' என்ற எழுத்து எனக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்திய போது,
'அ' வில் முதலில் பாதி போட்டு, அதில் 'ஒ' எப்படி வளைந்து வளர்கிறது என மெல்ல நகர்த்திக் காட்டினார்.

வீட்டிற்கு வந்ததும் தினமும் மாலை சூசன்னா சொன்னது போல், மண்ணைக் குவித்து வைத்து 'ஒ' போட, தர்ம அடி விழுந்தது வீட்டில்.
சுமார் 10 நாட்களுக்குப் பிறகு பள்ளி வந்த சூசன்னா, மெலிந்து போயிருந்தார்.
நான் அவரிடம் காரணமேதும் சொல்லாமல் அன்றைக்கு அழுதது இன்னமும் நினைவிருக்கிறது.

கடைசி வரை ஏன் அன்று அழுதேன் என அவரிடம் சொல்லவில்லை.
மதியம் நான் சாப்பிடும் போது என் மடியில் டவலை விரித்துப் போட்டுச் சாப்பிடச் சொல்லிக் கொடுத்தார்.

சுத்தமாகவும், சிந்தாமலும் சாப்பிட வேண்டுமென அதட்டியிருக்கிறார்.
காலை இறை வழிபாடு முடிந்து, இரு கரம் வீசி,

முள் வைத்துச் சுழல விடும் இசைத்தட்டு இசைக்கேற்ப,

லெஃப்ட்,ரைட் போட்டு வரிசையில் நாங்கள் வர, உன்னிப்பாக கவனிப்பார்.
ஒரு முறை இசையோடு நாங்கள் நடந்து வரும் போது, திடீரென இசைத்தட்டு, சிக்கிக் கொண்டு, ஒளித்த இசையே ஒளித்துக் கொண்டிருக்க,
நாங்கள் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு சூசன்னாவின் அன்பிற்குப் பயந்து லெஃப்ட் ரைட் போட்டோம்.

அவர் அன்று தான் கண்களில் தண்ணீர் வர, எங்களைக் கண்டு கை கொட்டிச் சிரித்தார்.

அடுத்த சில மாதங்களில் எனக்கு மஞ்சள் காமாலை வந்தது.

சூசன்னாவிடம், நான் ஓடிப் போய் மகிழ்வாய்ச் சொன்னேன்..
"டீச்சர்.... எனக்கும் மஞ்சக் காமாலை வந்துட்டு"-என்று.

சூசன்னா, பதறிப் போய், என்னை தன் நெஞ்சினில் வாரி அணைத்து அறிவுரைத்தார்.

"வீட்டுலயே இரு... வெளில சுத்தக் கூடாது. சுத்தமான தண்ணி குடிக்கணும். மாத்திரைய சரியா சாப்பிடணும்"என்றெல்லாம் சொல்லி, என் வீட்டாரோடு என்னை அனுப்பினார்,

"டீச்சர்... ஒங்கள பாக்க முடியாதா அப்ப?"-என்ற கேள்வி என் தொண்டைக் குழியோடு நின்று போனது.

நீங்க முடியாத நினைவுகளை என்னுள் வீசிச் சென்ற சூசன்னா,
மாதா,பிதா,குருவாக இருந்த என் சூசன்னா,

இப்போது இருக்கிறாரா? எங்கிருக்கிறார் என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை.

யாரிடமும் விசாரிக்கவும் தோன்றவில்லை.
சில நினைவுகளும், சுவடுகளும்

நிஜங்கள் போல் நம்முள்ளே என்றும் உலவிக் கொண்டிருப்பது,
நம்மை என்றென்றும் நல்லவிதமாக இயக்கும்.

சூசன்னா, மஞ்சள் காமாலைக்காக லீவில் இருக்கிறார் என்றே நான் அவள் நினைவு வரும் போதெல்லாம் என்னை நான் தேற்றிக் கொள்கிறேன்.
அந்த சூசன்னாவை சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு என் நெஞ்சிலிருந்து மீட்டெடுத்தவர்

நிறைந்த ஆயுளோடும், மன நிம்மதியோடும் உங்களை வாழ வைக்க,
எல்லாம் வல்ல எனதன்புக் கடவுளை மனதார வேண்டுகிறேன் அம்மா..



Comments

  1. சிறந்த ஆசிரியருக்கு,
    இனிய ஆசிரியர்தின வாழ்த்துகள் :)

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ஓவர் இதெல்லாம் ...
      நீங்கள் சிறந்த ஆசிரியையாக இருக்கலாம் ...
      அடியேன் அப்படி அல்ல

      Delete
  2. இவர்களைப்போன்ற இன்னும் ஓராயிரம் ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள், உண்மையிலேயே சின்ன வயசில் நம் அப்பா அம்மாவுக்கு பிறகு நமகு ஹீரோ ஹீரோயினாக தெரிபவர்கள் அன்பான ஆசிரியர்கள் தான் சார், பதிவு அருமை........

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.பொறியாளர் அவர்களே

      Delete
  3. கண்கள் குளமாக வைத்த பதிவு நெகிழ்ந்து போனேன். அவரை நிச்சயம் அனைவரும் வாழ்த்த வேண்டிய ஒருவரே. வாழவேண்டும் நலமுடன் என்றும்.
    இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சகோ !

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி...

      Delete
  4. ஆசிரியர் அவர்களுக்கு, எனது உளங்கனிந்த ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!
    Tha.ma.1

    ReplyDelete
    Replies
    1. எல்லையிலா பேரேன்பை உணர்ந்தேன் தங்களின் குறுஞ்செய்தி பார்த்தபோது
      மகிழ்வு
      நன்றி

      Delete
  5. அருமையான ஆசிரியர் சூசன்னா அவர்களைப் பற்றிய நெகிழ்வான நினைவலைகள் அருமை..

    உங்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் அண்ணா

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி ...

      Delete
  6. இனிய ஆசிரியர்தின வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் கோடி ஹிட் ஹீரோ...

      Delete
  7. ஆசிரியர் தினத்தில் சூசன்னா டீச்சரை நீங்கள் நினைவு கூர்ந்த விதம் மிகவும் அருமையாக இருந்தது. பறவைகள் போல் மகிழ்ச்சியாக இருக்கவும், அன்பையும், அறிவையும் ஊட்டிய உங்கள் ஆசிரியர் உங்கள் நினைவில் என்றும் வாழ்வார்.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா நினைவு கூர்ந்தது ஜெயப்பிரபு எனது நண்பர் ...
      ஆங்கில ஆசிரியர்
      அசத்தல் நடையை நான் சுவைத்தால் நீங்களும் சுவைக்க இங்கே பகிர்ந்தேன்.

      Delete
  8. சூசன்னா டீச்சர் எங்கள் மனதிலும் இந்த கட்டுரை வாயிலாக இடம்பிடித்துவிட்டார்! சிறந்த நினைவுகள்! இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருக சுவாமி
      நன்றிகள்

      Delete
  9. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தோழரே.
    தங்களின் இந்த பதிவு, நான் இரண்டாம் வகுப்பு படித்த ஆசிரியையை நியாபகப்படுத்திவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் .. தோழர்

      Delete

Post a Comment

வருக வருக