பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி

பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி
கோதரி ஈரநிலா தட்சிணாமூர்த்தி அவர்கள் தனது தந்தையைக் குறித்து முகநூலில் பகிர்ந்ததை அனுமதியோடு இங்கே பகிர்ந்திருக்கிறேன். ஏன் என்பது முழுவதும் படித்தால் தெரியும்.

1937 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் நாள் மன்னார்குடி அருகில் இருக்கும் நெடுவாக்கோட்டை எனும் கிராமத்தில் விவசாயிகள் அய்யாசாமி–இராசம்மாள் தம்பதியினருக்கு என் தந்தையார் மகனாய்ப் பிறந்தார். படிப்புவாசனையே இல்லாதவராயிருந்தும், தன் மகனின் அறிவுத்திறனை அடையாளம் கண்டுகொண்ட என் பாட்டனார், கடும் சிரமங்களுக்கிடையிலும் தன் மகனைப் படிக்கவைப்பதில் உறுதியாயிருந்தார். பாதங்கள் பழுக்கப் பழுக்க மைல் கணக்கில் பள்ளிக்கு நடந்து சென்று, மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் படித்து, பள்ளிப்படிப்பை முடித்தவர், தமிழ்மொழியின் மேல் உண்டான அடங்காத அன்பினால் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவனானார். தமிழ்மூதறிஞர்கள் திரு. தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், திரு. தண்டபாணி தேசிகர் போன்றவர்களின் அன்பையும், அறிவையும் பெற்றுத் தமிழில் புலமை அடைந்தார். தன்னுடைய ஊரில் முதன் முதலில் முதுகலைப்பட்டம்பெற்றவர் என்கிற பெருமையையும் பெற்றார். 33 ஆண்டுக் காலங்கள் தமிழாசிரியராகப் பல கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றி மதுரை தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ்க்கல்லூரியின் முதல்வராக 1996 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார்.


இவ்வளவு எளிமையான பின்னணியைக் கொண்ட ஒருவர் தமிழ்மொழியின்பால் இருக்கும் மிகுந்த காதலினாலும் பக்தியினாலும் செய்திருக்கும் தமிழ்ப்பணிகள் ஏராளம். தமிழ்நாட்டில் பரவலாக அவரை அறிமுகப்படுத்திப் பெருமை சேர்த்தது 1973 ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘தமிழர் நாகரிகமும் பண்பாடும்’ என்கிற நூலாகும். இன்றும் பல்கலைக்கழங்களில் பாடநூலாகவும், அரசுத்தேர்வுகளுக்கு மாணவர்களால் விரும்பிப் படிக்கப்படும் நூலாகவும், ஆராய்ச்சியாளர்களுக்குப் பலவகையிலும் அரிய செய்திகளை வழங்கும் திரட்டு நூலாகவும் இந்நூல் விளங்குகிறது. இதைத்தொடர்ந்து ‘சங்கவிலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள்’, ‘தமிழியற் சிந்தனைகள்’ ஆகிய நூல்களையும், ஐங்குறுநூறு, பரிபாடல் ஆகியவற்றின்உரைகளையும் எழுதியுள்ளார்.

தமிழ்மொழியின் பெருமையைத் தமிழறிஞர்கள், தமிழர்களுக்கு மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தால் போதுமா? ‘தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ எனும் பாரதியின் வரிகளை மெய்ப்பிப்பதற்கு என்ன செய்யவேண்டும்? தமிழ்மொழியில் இருக்கும் பழந்தமிழ் இலக்கியச் செல்வங்களை மற்றமொழியினரும் அறிந்து, சுவைத்து உணரும் வகையில் அவற்றைப் பிறமொழிகளில் மொழிபெயர்த்தல் அவசியமல்லவா? அப்படிச்செய்யும்போது மூலத்தில் இருக்கும் பொருள் மொழிபெயர்ப்பில் பிழையின்றி வருதல் மிகமுக்கியம். அதற்குப் பழந்தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளையும் சொல் பயன்பாடுகளையும் நன்கு அறிந்திருத்தல் அடிப்படைத் தேவைகளிலொன்று. இதை யாரால் செய்ய இயலும்? மூலமொழியிலும் பண்பாட்டிலும் ஆழ்ந்த அறிவும், மொழிபெயர்க்கப்படும் மொழியில் ஆளுமையும்கொண்ட ஒருவரால்தான் இப்பணியைச் செம்மையாகச் செய்யமுடியும். இதை நன்கு உணர்ந்த என் தந்தை, ஆங்கிலமொழியின்மேல் அவருக்கு இயற்கையாக உண்டான ஆர்வத்தை மேலும் பெருக்கிக்கொண்டார்.

முப்பது ஆண்டுக்கால அயராத உழைப்பில் கடந்த 2012 ஆண்டிற்குள், 19 பழந்தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் முழுமையாக மொழிபெயர்த்து வெளியிட்டு இன்றுவரை எவருமே செய்திடாத மாபெரும் சாதனையைச்செய்துள்ளார். இவற்றுள் 13 சங்கவிலக்கிய நூல்களும் 6 பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் அடங்கும். பெரும்  நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் பலரைக்கொண்டு சாதிக்கவேண்டிய ஒரு செயலைத் தனிமனிதராய்க் கடந்த 30 ஆண்டுகளாக இரவு பகல் என்று பாராது இடையறாது உழைத்துத் தன் வாழ்கையின் பெரும்பகுதியை இம்மொழிபெயர்ப்புப் பணிகளுகாகவே அர்ப்பணித்துச் சாதனைப் புரிந்துவருகிறார். இன்றையத்தேதியில் பழந்தமிழ் இலக்கியங்களில்பதினைந்தின் மொழிபெயர்ப்புகள் வெளியிடத் தயார் நிலையில் உள்ளன. அவற்றுள் புறநானூறு, பதிற்றுப்பத்து, திருக்குறள், நாலடியார்  என்னும் பெருநூல்களும் அடங்கும்.

பெரிதாய்ப் பொருளாதார வசதிகள் இல்லாத மாதவருமானத்தை எதிர்நோக்கியிருக்கும் ஒரு சாதாரண நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தது எங்கள் குடும்பம். இன்று கல்லூரி ஆசிரியர்கள் பெறும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கு கூட அன்று என் தந்தை ஊதியமாகப் பெற்றதில்லை. அப்படியிருந்தும், இம்மொழிபெயர்ப்புப் பணிகளின் மூலம் தனக்கு எவ்வித வருமானமும் கிடைக்கப்போவதில்லை என்பதை நன்கு அறிந்திருந்தும், தன் மாதவருமானத்தில் சிறுகச்சிறுகச் சேமித்த சேமிப்பையும்கூடத் தட்டச்சுப்பணிக்காகவும் இப்பணியோடு தொடர்புடைய இதர செலவுகளுக்காகவும் ஆயிரம் ஆயிரமாகச் செலவழித்தார்.

அன்று கணினியில்லை. இணையம் இல்லை. நாமே தட்டச்சுச் செய்துவிட்டுத் தேவைப்படும்போது எளிதில் அழித்து மாற்றங்கள் செய்யும் வழியும் இல்லை. கைக்கொண்டு பலமுறை எழுதி எழுதி, திருத்தித் திருத்தி மலைபோல் அவரைச் சுற்றிப் பக்கங்கள் குவிந்து கிடக்கும். ஒரு கட்டத்தில் 'டைப் ரைட்டர்' ஒன்று வீட்டுக்கு வந்து சேர்ந்தது. இரவு நடுச்சாமம் கடந்தும், விடியும் வரையும் அதில் மொழிபெயர்ப்புகளைத் தட்டச்சுச் செய்துகொண்டிருப்பார். இப்படி உறக்கமும் ஓய்வுமின்றித் தொடர்ந்து உழைத்ததில்  உடல்நலம் வீணானது. மூச்சுத்தொந்தரவு தீவிரமடைந்து நாள்கணக்கில் வீட்டிலும் மருத்துவமனையிலும் மாறி மாறி அவதிப்படுவார்.

இக்கட்டத்தில் பலரும் அவருக்கு அறிவுரைகள் வழங்கினர். "நயா பைசாவுக்குப் புண்ணியப்படாத இம்மொழிபெயர்ப்புப் பணியை நிறுத்திவிட்டுச் சொந்த வேலையப் பாருங்கள் ஐயா.. உங்களுக்கு இருக்கும் தமிழறிவும் ஞானமும் எனக்கிருந்தால் இந்நேரம் ‘தமிழர் நாகரிகமும் பண்பாடும்’ போன்ற எண்ணிலடங்கா நூல்களை எழுதிப் பணம் பார்த்திருப்பேன். பிழைக்கத் தெரியாத மனிதராய் இருக்கிறீரே! தமிழின் பெருமை தானே பரவிக்கொள்ளும். விட்டுத் தள்ளுங்கள்!" என்று அப்பாவிடம் பலரும் சொல்ல நானே அடிக்கடிக் கேட்டுள்ளேன்.  ஆனால் இவை எதுவுமே அவரை மனம்தொய்யச் செய்ததில்லை.

இப்படி விடாமல் கண்விழித்து உடலையும் மூளையையும் கசக்கிப்பிழிந்து உருவாக்கப்பட்டதே அகநாநூறு என்னும் சங்கவிலக்கியத்தின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு. ஆம். அதுவரை எவருமே அந்நூலை முழுவதுமாக மொழிபெயர்த்திருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில பாடல்களையே உலக அறிஞர்கள் மொழிபெயர்த்திருந்தனர். 1989 ஆம் ஆண்டே முழுமையாக மொழிபெயர்க்கப்பட்ட அவ்விலக்கியம் வெளியிடுவதற்கு வழியின்றிப் பத்தாண்டுக்காலம் அங்கும் இங்கும் கிடந்து அல்லாடியது. இப்பணியின் முக்கியத்துவத்தை அறியாதவர்கள், இந்நூலின் வாயிலாகப் பொருளாதார ரீதியாக ஒன்றும் பெரிதாய்க் கிடைக்காது என்னும் காரணத்தினால் வெளியிட எவரும் முன் வரவில்லை.  1999 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகம் இந்நூலை மூன்று தொகுதிகளாக வெளியிட்டது. அதை நூலாகக் கொண்டுவரும்முன் செலவுசெய்த தொகையில் கால்பங்குப் பணம் கூட என் தந்தைக்கு ஊதியமாகக் கிடைக்கவில்லை. இதனால் அவரொன்றும் துவண்டு விடவுமில்லை. தொடர்ந்து தன் மொழிபெயர்ப்புப் பணியைச் செய்துகொண்டே இருந்தார். ஒவ்வொரு நூலையும் அச்சில் கொண்டு வருவதற்கு அவர் பட்டிருக்கும் பாடுகளைச் சொல்லில் விளக்க முடியாது.

அடுத்ததாக நற்றிணையின் முழு மொழிபெயர்ப்பு 2000 ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக வெளிவந்தது. குறுந்தொகை மொழிபெயர்ப்பு, சொந்த வெளியீடாக 2007 இல் வெளிவந்தது.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஆறு நூல்களை 2010 ஆம் ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டது. பத்துப்பாட்டு மொழிபெயர்ப்பை 2012 ஆம் ஆண்டில் SRM  பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் வெளியிட்டது.

சங்க இலக்கியங்கள் மட்டுமா தமிழ்மொழியின் சிறப்பு? இடைக்கால இலக்கியங்கள், தற்கால இலக்கியங்கள் என்று எல்லாமே முக்கியமல்லவா? பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளாகிய சஞ்சீவிப் பருவத்தின் சாரல், புரட்சிக்கவி, காதலா கடமையா, இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, நல்ல தீர்பபு, கடல்மேல்குமிழிகள் ஆகிய ஏழு நூல்களை முதல் முறையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகிற்குத் தந்த பெருமையும் இவரையே சாரும்.

பாரதியின் தன்வரலாறாகிய பாரதி அறுபத்தாறும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மேலும் இடைக்கால இலக்கியங்களாகியஅபிராமி அந்தாதி, நீதிவெண்பா, பெருமாள் திருமொழி ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 2013 ஆம் ஆண்டு சாஹித்ய அகாடெமியின் வாயிலாக அ. ச. ஞானசம்பந்தம் அவர்களுடைய ‘கம்பன் - புதியபார்வை’ என்னும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வெளியிட்டுள்ளார்.

இந்த 77 ஆம் வயதிலும், பார்வை மங்கிய நிலையிலும், உடல்நிலை குறைபாடுகளுக்கிடையிலும் அயராது முழுமூச்சாகத் தமிழுக்காக உழைக்கிறார். பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் எதுவாய் இருப்பினும் அழைக்கும் இடங்களுக்கு முடிந்தவரைத் தவறாமல் சென்று மொழிபெயர்ப்புப் பயிற்சிப்பட்டறைகள் நடத்துவதும், பாடங்கள் எடுப்பதும், சொற்பொழிவாற்றுவதும் எனத்தன் சேவையைத் தொடர்ந்து  செய்துவருகிறார். இன்றும், "சங்கவிலக்கியம் என்றால் ஐயாவிடம் போ!'  என்று தன் மாணவர்களை என் தந்தையாரிடம் பலரும் அனுப்பிவைகின்றனர். நூல் எழுதுவோரும் முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்வோரும் அவரிடம் பாடம் கேட்கக் காலம் காலமாக வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி வருவோருக்கு, கேட்கும்சந்தேகத்தையும் தாண்டிப் பலவற்றை மெய்மறந்து விளக்கிக்கொடுப்பார். பாடம் கேட்ட சிலர், என் தந்தையின் கருத்துக்களைத் தம் சொந்தக்கருத்துக்களாக எழுதிவிடுவார்கள். இதை அறியும்போது எங்களுக்கு வரும் கோபத்தில் ஒரு பங்கு கூட என் தந்தையருக்கு வந்ததில்லை. சிரித்துக்கொள்வார். எப்படியோ செய்தி சென்றடைந்தால் சரி என்பதே அவருடைய நிலைப்பாடு. இனி யாரும் சந்தேகம் கேட்டு வந்தால் அதிகம் விளக்காதீர்கள் என்று சொல்வேன். அதற்கு அவர், ‘ஞானம்’ கேட்டு வருவோரிடமும் உணவு கேட்டு வருவோரிடமும் இல்லை என்று சொல்லல் ஆகாது!' என்பார்.

இன்றும் எங்காவது பேச வேண்டுமென்று யாராவது அழைத்தால், தேர்வுக்குப் படிக்கும் மாணவனைப்போன்று சிரத்தையுடன் படித்துக் குறிப்புகள் எடுப்பார். அப்படி எடுத்துச்சென்றாலும் பேசும்போது ஒருமுறைகூட அவற்றைப் புரட்டிப்பார்த்ததாக நான் அறிந்ததில்லை. பிறகு ஏன் இப்படிச் சிரமப்பட்டுப் படித்துக் குறிப்பெடுக்கிறீர்கள் என்று கேட்டால், ‘பாடம் எடுக்கத் தயார் செய்யாமல் போகக்கூடாது. தெரிந்தவையே என்றாலும் மீண்டும் படிக்கும்போது ஏதாவதொரு புதிய செய்தி கிடைக்கும் வாய்ப்புண்டு.’ என்பார்.

விருதுகளின் பின்னால் சென்றவரில்லை. பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு  மற்றவர்களுக்கு முகதத்துதி பாடியதில்லை. புகழ்ச்சியில் மயங்கியதில்லை. மாறாகத், ‘தன்னைப்புகழ வேண்டாம்; தன் படைப்புகளைப் படித்துவிட்டு, இங்கே இன்னும் கொஞ்சம் சிறப்பாகச் செய்திருக்கலாம், இது நன்றாயிருக்கிறது என்று கருத்துக்கள் கூறுங்கள் போதும்!' என்று வெளிப்படையாக மேடையில் பேசுவார். அறிவுலகில் சிலர் அவருடையப் பணிகளை இருட்டடிப்புச் செய்தாலும் அதையும் சிறு புன்னகையுடன் கடந்துசெல்கிறார். இதுவரை எவரையும் கெட்ட சொற்கள் சொல்லித் திட்டிக்கேட்டதில்லை. வீட்டுக்கு வருபவர்கள் பெரியவரோ சிறியவரோ யாராயிருந்தாலும் எழுந்து சென்று  கைகூப்பி வணங்கி வரவேற்று அழைத்து இருக்கச் சொல்வது அவரது வழக்கம். தனக்கு யாரவது துரோகம் செய்தாலும், 'அவனுக்கு என்ன சந்தர்ப்ப சூழ்நிலையோ,..பாவம் இப்படிச் செய்துவிட்டான்..விடு' என்று சொல்லி அதை எளிதில் மன்னித்து மறந்துவிடும் அரிய பண்பைக் கொண்டவர். அவருடன் மிகவும் நெருங்கிப்பழகிய சில நண்பர்கள், இப்பண்பை அன்பாக இப்படிப் பரிகாசம் செய்வார்கள்: 'ஏன் AD.. அவனுக்கு மூட்டில் என்ன வலியோ ..பாவம்.. கையைத்தூக்கி ஓங்கிக் குத்திவிட்டான்.. இல்லையா?' அதற்கு, ‘போயா கிடக்கு', என்று கூச்சப்படுவார்கள். 

இப்படியே நான் இனியும் எழுதிக்கொண்டே செல்லலாம். படிக்கும் உங்களுக்கு அலுப்புத்தட்டுமே அன்றி செய்திகள் தீராது. இங்ஙனம் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி, வெளியில் அலட்டிக்கொள்ளாமல், ‘தன் கடன் பணிசெய்து கிடப்பதே’யென அடக்கத்தோடு தொடர்ந்து தமிழ்ப்பணி செய்துவரும் மூதறிஞர் தஞ்சையில் வாழும் என் அன்புத் தந்தையார் முனைவர். அ. தட்சிணாமுர்த்தி அவர்கள் என்பதில் எனக்குப் பெருமையுண்டு.

தமிழ்நாடு அரசு இருமுறை விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது. BAPASI அமைப்பினர் கலைஞர் பொற்கிழி விருதும், நல்லி-திசையெட்டும் அமைப்பினர் மொழிபெயர்ப்புக்கான விருதும், தமிழிசை அமைப்பினர் திரு.வி. க விருதும் வழங்கினர். இராமநாதபுரம் தமிழ்ச் சங்கமும் இன்னும் சில அமைப்புகளும் விருதுகள் வழங்கி அவரது பணிகளை வாழ்த்தினர்.

அவரது ஒரே மகளாகப்பிறந்ததின் பயனாக நான் இப்பிறவியில் பெறும் இன்பங்கள் மிகப்பெரிது. வளரும்காலம்தொட்டு இன்றுவரை எல்லாப்பருவத்திலும் அவரைப் பலவிதமாக நான் படுத்தியிருந்தாலும், இந்நிமிடம்வரை என்னிடம் அதிர்ந்துக்கூட ஒரு சொல் பேசியதில்லை. குரலை உயர்த்தியதில்லை. அடிப்பதற்குக் கையை ஓங்கியதுமில்லை. ஒருமுறை கூடப் பெயர்சொல்லி என்னை அழைத்ததுமில்லை. ‘ஏன்டா கண்ணு’ என்று தான் பேசுவார். 

தன் வாழ்நாளுக்குள் எப்படியும் முடிந்தவரை மேல்கணக்கு கீழ்க்கணக்கு நூல்கள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிடவேண்டும் என்று மனதில் உறுதியாக இருக்கிறார். இதற்கெல்லாம் அவருடைய உடல்நலமும் ஆரோக்கியமும் ஒத்துழைக்க வேண்டும் என்கிற வேண்டுதல் மட்டுமே எனக்கிருக்கிறது. இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டும் என்னும் பிராத்தனைகளோடு.....  ஈரநிலா தட்சிணாமூர்த்தி.

Comments

  1. அன்புள்ள அய்யா,
    சகோதரி ஈரநிலா தட்சிணாமூர்த்தி அவர்கள் தனது தந்தையைக் குறித்து எழுதியிருந்த...ஓய்வறியாமல் தமிழுக்காக...இலக்கியங்களை மொழிபெயர்க்க அவர் எடுத்த கடினமான முயற்சிகள்...உழைப்பு இதையெல்லாம் அறிந்து வியந்து போனேன்.

    ‘அவரது ஒரே மகளாகப்பிறந்ததின் பயனாக நான் இப்பிறவியில் பெறும் இன்பங்கள் மிகப்பெரிது. வளரும்காலம்தொட்டு இன்றுவரை எல்லாப்பருவத்திலும் அவரைப் பலவிதமாக நான் படுத்தியிருந்தாலும், இந்நிமிடம்வரை என்னிடம் அதிர்ந்துக்கூட ஒரு சொல் பேசியதில்லை. குரலை உயர்த்தியதில்லை. அடிப்பதற்குக் கையை ஓங்கியதுமில்லை. ஒருமுறை கூடப் பெயர்சொல்லி என்னை அழைத்ததுமில்லை. ‘ஏன்டா கண்ணு’ என்று தான் பேசுவார். ’
    -இதுவே அவருக்குக் கிடைத்த பெரிய விருது என்று கருதுகிறேன். வாழ்த்துகள்.

    வாழுங்காலத்தில் அவரை அரசு பெருமைப்படுத்த வேண்டும்.
    நல்ல ஒருவரை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவரை நீங்கள் காட்டியது அருமை அய்யா... நல்ல பகிர்வு...!

    மகள் தந்தைக் காற்றும் உதவி இவள்தந்தை

    என்நோற்றான் கொல்லெனும் சொல்.

    நன்றி.

    ReplyDelete
  2. தமிழ் இலக்கியங்களை, மொழிபெயர்ப்பு செய்து, உலகெங்கும் பரப்பும் மாபெரும் பணியினைத் தனியொருவராகச் செய்துவருபவர்
    போற்றப்படவேண்டியவர்
    பல முறை இவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன் என்பதனையே பெருமையாக நினைக்கின்றேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  3. வணக்கம்
    இப்படிப்பட்ட ஒரு பொக்கிஷத்தை தங்களின் பதிவு வழிஅறிந்தேன்... என்றென்றும் அவரின் தமிழ்பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  5. அபார சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்! எப்பேர்பட்ட மனிதர்! வியக்கின்றோம். ஆனால் இப்படிப்பட்டவர்கள் வெளிச்சத்திற்கு வராதது மிகவும் ஆச்சரியாமாகவே உள்ளது! நம் நாட்டை நினைத்தால்....

    நிச்சயமாக சகோதரியுடன் நாங்களும் இணைகின்றோம், தட்சினாமூர்த்தி ஐயா அவர்கள் உடல் நலம் ஒத்துழைக்க பிரார்த்திக்கின்றோம்! நிச்சயமாக அவரது மொழிபெயர்ப்ப்ரு பூர்த்தி அடையும்!

    மாபெரும் பேராசிரியர், மாமனிதருக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அவரது பாதத்தில்!

    ReplyDelete
  6. இவ்வறிஞரைக் கண்டும் பேசக்கேட்டும் இருக்கிறேன்.
    தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்னும் நூல் அவரது நூலாக்கத்தில் ஒரு மைல்கல்.
    இந்திய ஆட்சிப் பணித் தேர்வு மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வுகளின் தமிழ்ப்பாடத்திற்கு உரிய கருவி நூல்.
    பூண்டியில் பயின்றவர்.. மதுரைத் தமிழ்க்கல்லூரிக்கு முதல்வராய் இருந்தவர்.
    மொழிபெயர்ப்பாளர் என்பதைத் தாண்டி சிறந்த ஆய்வாளர்.
    கடைவிரிக்க இப்படிச் சிலரிருந்தும் கொள்வோரில்லாமல்தான் கிடக்கிறது தமிழகம்.
    பகிர்வுகள் தொடரட்டும்
    நன்றி

    ReplyDelete
  7. போற்றத் தக்க பணி . அரசாங்கம் இவர்களுக்கு உதவ வேண்டும். தமிழ் தமிஹ் என்று மேடை தோறும் முழங்குவதை விட இவரைப் போற்ற அறிகனர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால் தமிழின் பெருமை இன்னும் உலகறியப் பரவும். நல்ல பகிர்வு

    ReplyDelete
  8. இப்படி ஒரு அறிஞரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. கருத்து சொல்ல வரவில்லை
    கற்கண்டு தரும் சுவைமிகு வாழ்த்து
    சொல்லவே யாம் வந்தோம் யாதவன் நம்பியாக!

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
    அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
    புதுவை வேலு

    ReplyDelete

Post a Comment

வருக வருக