நிகழ்கால நாயகர்கள் நம் நினைவின் பரப்பிற்கே வருவதில்லை இதோ இருவர் தோழர் அறிவழகன் கைவல்யம் அவர்களின் முகநூல் பகிர்வு ஒன்று.
Arivazhagan Kaivalyam feeling brave
திருப்புத்தூரில் இருந்து மதுரைக்குச் செல்லும் வழியில் பயணிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும், கொத்திக் குதறப்பட்டிருக்கும் விவசாய நிலங்கள், இயற்கை வளங்கள், கிராமங்கள், தோட்டங்கள், கண்மாய்கள், ஆற்று நீர்ப்பிடிப்புக் கால்வாய்கள், பண்ணை வீடுகள், புன்செய் நிலங்கள் என்று எல்லாம் ஏறத்தாழ அழிக்கப்பட்டு கண்ணுக்கெட்டிய வரையில் கிரானைட் குவாரிகள் இறைத்திருக்கும் கற்கள்.
இன்று இந்தியாவெங்கும் பேசப்படும் ஒரு வழக்காக மாறி இருக்கும் இந்த வழக்கின் நாயகனாக சித்தரிக்கப்படுகிறார் முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு சகாயம்.
ஆனால், இவர்களுக்கெல்லாம் முன்பாகவே எளிய மக்களின் அழுகுரலாய், அஞ்சாத ஊடகத்தின் சாயலாய் தொடர்ந்து இந்த உலகின் மிகப்பெரிய கிரானைட் ஊழலை ஊருக்குச் சொன்னவர்கள் இரண்டு பேர். ஒருவர் தினபூமி இதழின் ஆசிரியர் எஸ்.மணிமாறன், இன்னொருவர் கீழையூர் முருகேசன்.
அப்போது PRP குழுமம் மாவட்ட ஆட்சியர்களுக்கு ரூபாய் 5 லட்சத்தில் இருந்து, தலையாரிக்கு இருபதாயிரம் வரை மாதச் சம்பளமாகக் கொடுத்து வந்தது, உள்ளூர் ஏட்டையாவில் இருந்து டி ஜி பிக்கள் வரை கிரானைட் மாபியாக்களின் ஏவலர்களாக வேலை பார்த்து வந்த காலம், ஆனாலும், தினபூமி தொடர்ந்து இது மக்களின் நிலம், மக்களின் சொத்து, அரசின் கருவூலம் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கப்படுகிறது என்று எழுதிக் கொண்டே இருந்தது,
மணிமாறன் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார் அவர்மீது பல்வேறு பொய்யான வழக்குகள் போடப்பட்டது, அவரும் அவரது குடும்பத்தினரும் மிரட்டப்பட்டார்கள், மகனும் கைது செய்யப்பட்டார். ஆனாலும், ஊடகத்தின் குரலாய் நின்று உறுதியோடும், மனத்துணிவோடும் தொடர்ந்து எழுதினார் மணிமாறன், மக்களின் மாவட்ட ஆட்சியராக சகாயம் அங்கு வந்த போது மணிமாறனின் குரல் சட்டத்தின் காதுகளில் கேட்கத் துவங்கியது.
கீழையூர் முருகேசன் ஏறாத நீதிமன்றங்களின் படிக்கட்டுகள் இல்லை, அரசின் எல்லா துறைகளிலும் அவரது மனுக்கள் குவிந்து கிடந்தன, சுங்கவரித் துறைக்குப் போனார், ஏற்றுமதி இறக்குமதித் துறையில் புள்ளி விவரங்கள் கேட்டார் அஞ்சாமல் தனி மனிதராய் நின்று போராடினார், அவர் மீதும் பொய் வழக்குகள் போடப்பட்டன, மிரட்டப்பட்டார், அடித்து உதைக்கப்பட்டார். ஆனாலும், ஏழைகளின் அழுகுரலை தனது மன உறுதியாலும், விடா முயற்சியாலும் வீதிக்குக் கொண்டு வந்தார்.
தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் மக்களுக்கு கிரானைட் குவாரிகள் விஷயத்தில் பெரும் அநீதி இழைத்தன, தி.மு.கவும், அ.தி.மு.க வும் இந்த விஷயத்தில் ஒன்றுக்கு ஒன்று இளைத்தவை அல்ல. கருணாநிதி ஆட்சியில் அவரது மகன் மு.க.அழகிரி இந்த கிரானைட் மாபியாக்களின் பாதுகாப்பு அரணாக இருந்தார்.
பிறகு ஜெயலலிதாவின் ஆட்சியில் பல அமைச்சர்கள் துணை நின்றார்கள், அவரது மன்னார்குடி மாபியாக்களும் பெருந்துணை நின்றார்கள். என்னைப் பொருத்தவரை "தினபூமி" ஆசிரியர் எஸ்.மணிமாறனும், கீழையூர் முருகேசன் இந்த வழக்கின் உண்மையான நாயகர்கள். மக்களாட்சியின் மூன்றாவது தூண் ஊடகம் என்று இன்றைய வணிக வன்முறை உலகிலும் உலகுக்கு உரக்கச் சொன்னவர்கள்.
வழக்கு சி.பி.ஐ, இந்திய அரசு, பன்னாட்டு மோசடி என்று வேறு திசையில் உலகப் பெரும் ஊழலாக உருவெடுக்கும் இந்தச் சூழலில் ஒரு தனி ஊடகனாக, ஊடகங்களின் ஊடாக இயங்கும் ஒரு மனிதனாக "தினபூமி" ஆசிரியர் எஸ்.மணிமாறனுக்கும், கீழையூர் ராஜேந்திரனுக்கும் ராயல் சல்யூட்.
IDU OTTUPPOTUM MAKKALUKKU THERIYAVILLAIYE..... NANBA......
ReplyDelete