இன்னுமோர் கொசுவத்தி...


நேற்று அவசரமாக பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தேன். முன்னால் ஒரு சைக்கிள் போய்க்கொண்டிருந்தது. ஏதோ வித்தியாசமாகப்பட்டது. சைக்கிளின் கேரியரில் உட்கார்ந்திருந்தவன் என்னைப்பார்த்து சிரித்தான்.

அட முன்னாள் மாணவன்.


வாத்தியாரைப் பார்த்து சிரிக்கிறான். 

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவனைப் பலமுறை திட்டியிருக்கிறேன். அப்படி ஒன்றும் பெரிய படிப்பாளி இல்லை. உண்மையைச் சொன்னால் அவனை நீங்க பள்ளியை விட்டு விரட்டியிருக்க வேண்டும் என்றார் ஒரு ஆசிரியர். (அவரிடம் சொன்னேன் அவன் பாஸ் பண்ணிடுவான் என்று. அதேபோல் தேர்ச்சியுற்றான்) இன்று அவன்தான் சிரிக்கிறான். அவ்வளவு சிநேகமான ஒரு புன்னகை? 

புன்னகை சுழற்றியது இன்னொரு கொசுவத்தியை.

ஒருகாலத்தில் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் எந்த வீட்டுப்பாடத்தையும் செய்யாமல் பொறுமையைச் சோதிக்கும் பிள்ளைகளின் பெற்றோரிடம் பேசி அவர்களை தொழில் நுட்ப பயிற்சி வகுப்பிற்கு அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்தேன் நான். ஒவ்வொரு வகுப்பின் பின்னரும் எனது நா மேலன்னத்தில் ஒட்டிக்கொள்ள பாடம் எடுத்து அதீத களைப்படைந்திருந்த நாட்கள் அவை. அப்போதெல்லாம் ஒன்று திரும்ப திரும்ப தோன்றும் எப்படிடா சிலர் மட்டும் தனிப்பயிற்சி வகுப்புகளை  எடுக்கிறார்கள்? நம்மால் கொஞ்சம் கூட முடியாது போலிருக்கே என்று தோன்றும். அப்படி ஒரு வெறியில் உடலின் சக்தியெல்லாம் எரித்துப் பாடம் எடுத்தால், புற்றுக்குள் உட்கார்ந்து தவம் செய்த வால்மீகி மாதிரி எந்தக் கேள்வி கேட்டாலும் ஒரு மோனத் தவ மௌனத்தை தந்து என்னை நோகடிப்பார்கள் சிலர்.

அந்த சிலருக்காகத்தான் நான் வாங்குகிற சம்பளம், அந்த சிலருக்காகத்தான் கல்வியியல் பட்டம், பணி நியமனம் என்றெல்லாம் உணராத வகையில் அவர்கள் மீது பெரும்கோபம் பொங்கும்.

எனக்கு தோன்றுவதெல்லாம் நான் நாய் மாதிரி உழைக்கிறேன். நீ என்ன பண்றே? படிச்சா இரு இல்லாட்டி ஓடு இப்படித்தான் இருக்கும் எனது மனவோட்டம்.

அவர்களின் அக்கறையின்மையின் பின்னர் இருக்கிற உளவியல், சமூக பொருளாதார அழுத்தங்கள், குடும்ப வன்முறை எல்லாம் எனது கவனத்திலேயே எடுத்துக்கொள்ள மாட்டேன். மேலும் அவர்கள் படிக்கிற அல்லது படிக்க முயற்சிக்கிற மற்ற மாணவர்களிடம் சேட்டை செய்து அவர்களையும் பின்னுக்கு இழுக்கும் பொழுது வேறு வழியே இல்லாமல் பெற்றோரை அழைத்து ஒரு கவுன்சிலிங்(?) கொடுத்து ஐ.டி.ஐ பக்கம் அனுப்பிவிடுவது எனது வழக்கமாக இருந்தது.

ஒவ்வொரு முறையும் தொண்ணூறுக்கு கூடுதலான தேர்ச்சியைத் தரவே இந்தப்பாடு! ஆனால் பத்தாம் வகுப்பிற்கு பின்னர் சாலையில் நான் சந்திக்கும் பெரும்பான்மையான முன்னாள் மாணவர்கள் யாரையோ கடப்பது போல கடந்து போவார்கள். மனசு வலிக்கும்.

பெரும்பாலான மாணவர்கள் வீட்டில் படிப்பதே இல்லை. எனவே அவர்களுக்கு சிறப்பு வகுப்புக்கள் தேவை. தேர்வுக்கு முந்திய மாதம் ஒரு நாளின் இருபத்தி நான்கு மணிநேரத்தில் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே வீட்டில் இருப்பேன். அதுவும் காலையில் குளித்து சாப்பிட ஒருமணி நேரம் மாலையில் ஒரு கப் காபி மற்றும் இரவு உணவை கேரியரில் எடுத்துக்கொள்ள என இரண்டு மணிநேரத்திற்கும் குறைவாகவேதான் இருக்கும். இப்படி வெறித்தனமாக உழைத்த என்னை அவர்கள் பாராமுகமாக கடக்கும் பொழுது நன்றி கெட்டவர்கள் என்று புழுங்கும் மனசு.

ரிசல்டை அடைகிற வெறியில் நான் மறந்துபோனது கல்வி உளவியல், அழுத்தமற்ற கல்விச் சூழலை உருவாக்குதல், மாணவர்களின் குறித்த மெய்யான அக்கறை என பலவிசயங்களை.

தன்னை பெயிலாக்கிய ஆசிரியைக்கு ஒரு மாணவன் கடிதம் எழுதியிருப்பான். இது ஏன் டீச்சர் எங்களை பெயிலாக்கினீங்க என்கிற நூலாக வந்தது. நூலின் விலை ஐந்துரூபாயோ பத்து ரூபாயோதான். அதில் அவன் சொன்ன ஒரு வரி ஒன்று. என்னால் அதை என்றைக்கும் மறக்க முடியாது

நமது பள்ளிகள் வினோதமான மருத்துவமனைகள். அவைகள் ஆரோக்கியமானவர்களை உள்ளே வைத்துக்கொண்டு நோயாளிகளை வெளியேற்றுகின்றன.

இதை விட தெளிவாக எப்படி கேட்க முடியும்?

மெல்ல மெல்ல ஜன்னலில் ஒரு சிறுமி, கிஜூ பாய் என உள்ளே வர நான் மறந்து போன எனது கடந்த காலம் நினைவில் வந்தது. கத்தியை வைத்திருந்த மாணவர்களை கூட எனது அணுகுமுறையால் மாற்றிய நான் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறேன்?

மெல்ல யோசித்துப் பார்த்தேன். வெட்கக் கேடு வேறு என்ன சொல்வது? குழந்தைகள் வாழ்க வாசித்த நானா இப்படி மாறிப் போனேன்? நூறு சதவிகித தேர்ச்சி என்கிற இலக்கை வெறித்தனமாக

அடையக்கூடாத வழிகளில் அடைய முயற்சித்தால் வந்த வினை.

எனது வகுப்பறை கற்பித்தல் அனுபவங்களை மாற்றினேன். ஜோரான விளைவுகள் ஏற்பட்டன. முக்கியமாக கற்றல் அடைவுகள் குறைவாக இருக்கும் மாணவர்களை குறித்தும் அவர்களின் குடும்ப சூழல் குறித்தும் அறிந்து ஆலோசனைகளை வழங்கினேன்.

அதைவிட முக்கியமாக பாடநூலில் அட்டையில் இருந்து அட்டை வரை வெறித்தனமாக திணிப்பதை நிறுத்தினேன். பாடத்தை நடத்துவது முக்கியம் என்றால் வினாத்தாளை நடத்துவது அதிமுக்கியம். அதீதமான எனது அழுத்தத்தை குறைத்துக் கொண்டேன். அந்த ஆண்டும் தொன்னூற்றை தாண்டிய அதே தேர்ச்சி விழுக்காடு. அடுத்த ஆண்டு அழுத்தத்தை மேலும் குறைத்தேன். அதே விழுக்காடு!

அந்த ஆண்டுகளில் ஆச்சர்யமாக தேர்ச்சியடைந்து பள்ளியை விட்டு வெளியேறிய மாணவர்கள் அரைக் கிலோ மீட்டருக்கு முன்னால் வந்தாலும் சிநேகமாக சிரித்து கரங்களை உயர்த்தி வணக்கம் சொல்ல ஆரம்பித்தனர்!

ரிசல்ட் வெறியில் அவர்களை குழந்தைகளாக நடத்தாமல் மதிப்பெண் இயந்திரங்களாக நடத்திவிட்டு அவர்களை நன்றி கெட்டவர்கள் என்று சபித்திருக்கிறேன் நான்!

இப்போதெல்லாம் சத்தியமாக இவன் பெயிலாவான் என்கிற மாணவனைக் கூட வெளியே அனுப்ப நினைப்பதில்லை.

எனது அனுபவங்கள் சில

மாணவர்களுக்கு நல்ல கற்றல் அனுபவத்தை தரவேண்டும். கற்றலின் மகிழ்வை உணர்ந்துவிட்டால் அந்த ஆசிரியரை அவர்கள் மறப்பதே இல்லை.

அடிக்கடி பெற்றோரை வரச் சொல்லி அவர்களிடம் அதீதமாக குழந்தைகளின் குறையைச் சொல்லி அவர்களுக்கும் பெற்றோருக்கும் வெறுப்பை உருவாக்கவே கூடாது. (ஏன்? ஒரு மாணவனுக்கு தண்ணீர் வைக்கும் பொழுது, சோறு போடுகிற பொழுது "உங்க வாத்தியார்தான் சொன்னாரே உன் லட்சணத்திற்கு சோறு ஒரு கேடு" என்று அர்ச்சனை கிடைக்கலாம்.)

மீறி அதீதமாக குறை சொன்னால் அந்த மாணவர் எப்போதும் பத்தடி தூரத்தில் இருக்கிறமாதிரி மெய்ண்டைன் செய்துகொள்வது உத்தமம். :-)

அவர்களிடம் எப்போதும் உன்னால் முடியும், ஜோர், நல்ல முன்னேற்றம் என்று நேர்மறையாகவே பேசுதல் அவசியம்.

அதீதமான வீட்டுப்பாடங்களை தவிர்த்தல் அவசியம்.

ஏழு பீரியட்களிலும் பாடத்தை திணிப்பது இல்லாது, வினாத்தாள் படிப்பது, பதில் எழுதும் பாணிகள் என கோச்சிங் நிறையத் தரவேண்டும்.

பள்ளிக்கு வெளியில் மாணவர்களின் நடத்தை குறித்து (காதல், திருட்டு, அடிதடி, மதுப்பழக்கம் போன்றவை) பள்ளியில் பேசி அவர்களை அந்நியப்படுத்துதலை செய்வதில்லை. வகுப்பறை செயல்பாடு சரியாக இருந்தால் போதும். அவர்களின் வெளி நடத்தைக்காக வகுப்பில் அவர்களை கண்டிப்பது சரியல்ல. முடிந்தால் பக்குவமான ஆலோசனைகளை வழங்கலாம். மீறி வெறும் அர்ச்சனைகளைமட்டும் தந்தால் அவன் திருந்தும் வாய்ப்பை நாம் தடுக்கிறோம் என்பதே பொருள்.

இப்போதும் முன்னாள் மாணவர்களின் வணக்கங்கள் தொடர்கின்றன!

சில முகநூல் பின்னூட்டங்கள்

Krishna Kumar S Super!!!
Yesterday at 3:38am · Unlike · 2


Jackie Sekar நான் காலேஜிக்கு வேலைக்கு போகம் போது நம்மவர் கமல் போன்ற ஆசிரியரா இருக்கனும் நினைச்சிக்கிட்டு போனேன்..படத்தில் கமல் கேரக்டர் சந்தித்த பிரச்சனைகளை நானும் சந்திச்சி இருக்கேன்... ஆனா இன்னைக்கும் என்னை பார்த்து சிநேகம் கொள்ளும் மாணவசெல்வங்கள் ஏராளம்...வாழ்த்துகள் ரங்கன்.
Yesterday at 4:20am · Unlike · 10


Avargal Unmaigal முதலில் உங்களுக்கு ஒரு சல்யூட் Kasthuri Rengan
Yesterday at 4:33am · Unlike · 3


Avargal Unmaigal கடமைக்கு என்று சொல்லித் தராமல் இது மாணவர்களின் மனதை அறிந்து அவர்களுக்கு ஏற்றபடி சொல்லித்தருவதுதான் என் கடமை என்று உணர்ந்து சொல்லிதரும் உங்களை எப்படி பாராட்டினாலும் தகும்
Yesterday at 4:36am · Unlike · 4


Avargal Unmaigal இங்கு அமெரிக்காவில் பெற்றோர்களாவது தமது குழந்தைகளை குறை சொல்லுவார்கள் ஆனால் எந்த ஆசிரியரும் தன் மாணவர்களை படிப்பில் குரை சொல்வதே கிடையாது சுமாராக படிக்கும் மாணவனும் அம்மா எனது வாத்தியார் என்னை இன்று பாராட்டினார் என்றுதான் சொல்லுவார்கள்
Yesterday at 4:40am · Unlike · 7


Avargal Unmaigal தொடருங்கள் உங்கள் சேவையை
Yesterday at 4:41am · Unlike · 2


Thiru Pathi M nice kasthuri
Yesterday at 5:58am · Unlike · 1


ராஜ் ப்ரின்ஸ்
Yesterday at 6:39am · Unlike · 1


Ganesh Boopathi நமது பள்ளிகள் வினோதமான மருத்துவமனைகள். அவைகள் ஆரோக்கியமானவர்க ளை உள்ளே வைத்துக்கொண்டு நோயாளிகளை வெளியேற்றுகின்றனர்
Yesterday at 6:41am · Unlike · 2


Swamy Suresh மிகச்சரியான புரிதலோடு அர்ப்பணிப்பு உணர்வோடு தொடரும் உங்கள் ஆசிரிய பணி சிறக்கட்டும்! வாழ்த்துக்கள் சார்! நன்றி!
Yesterday at 6:48am · Unlike · 1


Swamy Suresh எல்லா நேரமும் கல்வி என்பதை தவிர்த்து மாணவர்களை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய வைத்து மாணவர்களோடு மாணவராகவே பழகிப் பாருங்கள்! அவர்கள் உங்களை என்றும் மறக்கவே மாட்டார்கள்! இது என் டியுசன் அனுபவம்!
Yesterday at 6:50am · Unlike · 2


Sami Nathan Romba nalla iruku... Wishes
Yesterday at 7:45am · Unlike · 1


Sathish Kumar Av நமது பள்ளிகள் வினோதமான
மருத்துவமனைகள். அவைகள்
ஆரோக்கியமானவர்களை உள்ளே...See More
Yesterday at 8:07am · Unlike · 3


Sathish Kumar Av நல்ல பகிர்வு..
Yesterday at 8:09am · Unlike · 1


Jaya Prabu மாணவர்கள், ஆசிரியர்களின் செயல்பாடுகளையும், நல்ல எண்ணத்தையும் உணர்கிறார்கள் - தாமதமாகவே நல்ல பதிவு.
Yesterday at 8:11am · Unlike · 2


Sridhar Subramaniam Wow... I wish I had such a teacher. Big salute sir!
Yesterday at 8:38am · Unlike · 1


Kasthuri Rengan Sridhar Subramaniam lucky you.. escaped ...
Yesterday at 8:39am · Like · 1


தேவதா தமிழ் உண்மை தான் நானும் முதலில் அப்படி இருந்து இப்போது மாணவர்கள் விரும்பும் ஆசிரியராக..கற்றுக்கொடுக்கிறார்கள் குழந்தைகள் நமக்கு..வாழ்த்துகள் சகோ..
Yesterday at 9:06am · Unlike · 4


Shah Jahan
Yesterday at 9:07am · Unlike · 1


Ismail Mohemed Vm உங்களின் இப்படிப்பட்ட அணுகுமுறைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ...
Yesterday at 11:23am · Unlike · 1


Anguraja Senthilandavar இப்பொழுது தெரிகிறதா உங்களுக்கு நல் ஆசிரியர் விருது கொடுத்தது சரி என்று. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சார்.. நானும் சில காலம் ஆசிரியராக இருந்திருக்கிறேன். ஒருவேளை இந்த பக்குவம் வர நிறைய ஆண்டுகள் தேவைப்படும் போல......
23 hrs · Unlike · 3


Sivakumar Loganathan Kasturi ur article was super and revealed the present system of tn education.
16 hrs · Unlike · 1


Rajasekaran Raman A HOWLING success Kasthuri..

ஆதரவுக்கும் வழிகாட்டலுக்கும் நன்றிகள் தோழர்களே..

அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள் 

Comments

  1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கரந்தையாரே...

      Delete
  2. வணக்கம்! வாழ்த்துக்கள்.!உங்களின் பதிவு உங்கள் மன சாட்சியின் குரலாக மட்டுமல்ல;பல ஆசிரியர்களின் மனக்குரலாக ஒலிக்கிறது. ஒரு உண்மையை அனைவரும் உணரவேண்டும்.நூறு சதம் எடுப்பது மட்டும் சாதனை அல்ல.வார்த்தைகள் நேர்த்தியாக,யதார்த்தமாக உள்ளன.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆகா வருகை மகிழ்வு அண்ணா..
      நன்றி..

      Delete
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  4. அன்புள்ள திரு.கஸ்தூரி அய்யா,

    இன்னுமோர் கொசுவத்தி... படித்தேன்....!

    ‘ நமது பள்ளிகள் வினோதமான மருத்துவமனைகள். அவைகள் ஆரோக்கியமானவர்களை உள்ளே வைத்துக்கொண்டு நோயாளிகளை வெளியேற்றுகின்றன‘ ஆமால்ல...நோயாளிகளுத்துத்தானே மருத்துவமனை இருக்க வேண்டும்...! ஆமாவா? இல்லையா? என்றுதானே கேட்கிறீர்கள்!

    மாணவர்களுக்கு நல்ல கற்றல் அனுபவத்தை தரவேண்டும். கற்றலின் மகிழ்வை உணர்ந்துவிட்டால் அந்த ஆசிரியரை அவர்கள் மறப்பதே இல்லை.


    உண்மைதான் அய்யா...என்னிடம் படித்த மாணவன்.... செல்வன். பாஸ்கரர் (தற்பொழுது சென்னையில் ஒரு வங்கியில் வேலை செய்கிறான்)...
    அவனோடு படித்த முன்னால் மாணவர்கள் பத்து பேர் சேர்ந்து என்னிடம் வந்து ‘ஏழை மாணவர்களுக்கு நாங்கள் எங்களால் முடிந்த சிறு உதவி செய்கிறோம்’ என்று சொல்லி கடந்த அய்ந்து வருடங்களாக தொடர்ந்து ரூபாய் பத்தாயிரத்திற்கும் மேலாக ஏழை மாணவர்களுக்கு கொடுத்து ...தொடர்ந்து உதவிசெய்து வருகிறார்கள்.

    வருடா வருடம் என்னை அவர்கள் பார்த்து என்னிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து உதவிசெய்து வருவதை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன்.
    இப்போதும் முன்னாள் மாணவர்களின் வணக்கங்கள் தொடர்கின்றன!

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முன்னாள் மாணவர்கள் குறித்து எனக்கு மகிழ்வு ...
      உங்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையும் மரியாதையும் தான் இது ...
      தொடரட்டும் உங்கள் ஆசிரியப் பணி..

      Delete
  5. நமது பள்ளிகள் வினோதமான மருத்துவமனைகள். அவைகள் ஆரோக்கியமானவர்களை உள்ளே வைத்துக்கொண்டு நோயாளிகளை வெளியேற்றுகின்றன.//

    கஸ்தூரி! இந்த மாணவன் எங்கிருக்கின்றார் சொல்லுங்கள்! அவருக்கு ஒரு பொக்கே!

    உங்கள் கையைக் கொடுங்கள்! உங்களுக்கு அழுத்தமான ஒரு கை குலுக்கல்! அன்பான பாராட்டுகளுடன், வாழ்த்துக்களுடன் ஒரு மலர் பொக்கே! அருமையான ஆசிரியர் ஐயா நீங்கள்! மிகவும் பெருமைப் படுகின்றோம்! உங்களை நினைத்தும் உங்கள் நட்பும் எங்களுக்குக் கிடைத்ததற்கும்! தொடருங்கள் தங்கள் இந்த சேவையை! குடொஸ்!!!!!

    சத்தியமாக நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் ! என் மகனுக்கு அப்போது நீங்கள் கிடைக்காமல் போய்விட்டீர்களே அல்லது உங்களைப் போன்ற ஒரு ஆசிரியர்....என்று வருத்தம் வரத்தான் செய்கின்றது! Teaching profession is the noblest profession in the world! வாழ்த்துக்கள்! - கீதா!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாரட்டுக்கள் மிகை
      நான் என்னைச் செப்பனிட்டுக் கொள்வது மகிழ்நிறையைப் பார்த்தும்தான்.
      நிறயப்பேர் சத்தமில்லாம சாதிகிறாங்க ...
      நான் கொஞ்சம் உணர்வுவயப்பட்டு இங்கே எழுதுகிறேன்..
      ஆதூரமான ஒரு அணுகுமுறை அதிரி புதிரி வெற்றியைத் தரும்...
      ஆனால் பாடத்திட்டமும் தேர்வு அட்டவணையும் இதற்க்கு டப் பைட் கொடுக்கும் பொழுது சுயமிழந்து போகிறது... இப்போ கொஞ்சம் ஜென் மனப்பாங்கிற்கு வந்தாச்சு..
      நன்றி சகோதரி... வருகைக்கும் கருத்துக்கும்..

      Delete
  6. நல்லதொரு பகிர்வு! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    "// புற்றுக்குள் உட்கார்ந்து தவம் செய்த வால்மீகி மாதிரி எந்தக் கேள்வி கேட்டாலும் ஒரு மோனத் தவ மௌனத்தை தந்து என்னை நோகடிப்பார்கள் சிலர்.//"

    சீரியஸான ஒரு பதிவில், என்னையும் அறியாமல் ரசித்து சிரித்த வரிகள்.

    இப்படி முன்னாள் மாணவர்களின் வணக்கங்கள் தானே சொல்லும் அந்த ஆசிரியர் எப்படிப்பட்டவர் என்று. வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களின் சீரிய பணி.

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் வகுப்பில் மாணவர்கள் பல சமயங்களில் சிரித்து சிரித்து கண்ணீர் விடுவார்கள்.
      அந்த நடை எனது பதிவில் இன்னும் வரவில்லை...
      அவ்வளோ பெரிய காமடி பீசா நீன்னு கேட்கவேண்டாம் கொஞ்சம் இயல்பாகவே வரும் அது வகுப்பில் மட்டும்..

      Delete
  8. உங்கள் பதிவைப் படித்து முடித்ததும், எனது மனதில் தோன்றிய கருத்து “நல்லவேளை நாம் பள்ளிக்கூட வாத்தியாராகப் போகவில்லை” என்பதுதான். காரணம் உங்களைப் போல பொறுமையாக இருந்திருக்க மாட்டேன். மதிப்பெண்களை வைத்து மாணவனையும் , பள்ளி ரிசல்ட்டை வைத்து ஆசிரியரையும் எடை போடும் வழக்கம் மாற வேண்டும்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்! தமிழ் மணத்தில் இந்தப் பதிவை இணைக்காததால் ஓட்டு போட இயலவில்லை.
    த.ம.?


    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்து எனக்கு ஒரு பெருமூச்சு ..
      சாமான்யமாக மாறது இது ...
      சமூகம் பணம் பண்ணத்தெரிந்த மனிதர்க்களை மட்டும் உருவாக்க விரும்புகிறது... எதிர்திசையில் போகும் பொழுது இகழ்வு மட்டுமே சாத்தியம்..
      பரவாயில்லை உங்கள் கருத்து..
      நன்றி .. அய்யா

      Delete
    2. தமிழ் மணத்தில் இணைத்ததற்கு நன்றி!
      த.ம.2

      Delete
  9. மிக அருமையான பகிர்வு சகோதரரே!

    மனச்சாட்சிபோல் நம்மை வழிப்படுத்த வேறு எந்தவொரு சக்தியாலும் முடியாது!
    நெகிழ வைத்த நிகழ்வுகள்!..
    சிறப்பான பதிவு!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோதரி...
      நன்றி..

      Delete
  10. தங்களின் அணுகுமுறை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும் !
    த ம 3

    ReplyDelete
  11. நானெல்லாம் எவ்வளவு மாற வேண்டும் என்றுமட்டும் தெரிகிறது.
    ஒவ்வோராண்டும் எடுத்துக்கொள்ளும் சபதங்களைக் காப்பாற்ற முடிந்ததில்லை.
    ஆண்டுகள் போகுந்தோறும் மாணவரிடமிருந்து நான் கற்கின்ற கற்றலும் மிகச் சோர்வை ஏற்படுத்துகிறதாகவே உள்ளது.
    சில நேரங்களில் விரும்பியேற்ற பணி வெறுத்திடும் அளவிற்கு..
    படி... என்பதை மட்டும் சொல்லாமல் இருந்தால் பலராலும் விரும்பப்படலாம்.
    வெறுக்கப்படும்போது ஏனிந்த வேலை என்றுதான் தோன்றுகிறது.
    ஆம் ..வெட்கக்கேடு என்றல்லாமல் வேறென்ன சொல்ல...?
    நானும் மாறிக்கொண்டுதான் இருக்கிறேன்.
    நன்றி தோழர்..
    தங்கள் அறிவுரைகட்கும் பகிர்விற்கும்!

    ReplyDelete
  12. முதலில் எந்த அணுகுமுறை மாணவர்க்குப் பிடிக்கவில்லை என்று அறிந்து அதை மாற்றி மாணவர்கள் விரும்பும் நல்லாசிரியராவது எளிதல்ல அண்ணா..அதைச் செய்துவிட்ட உங்களுக்கு hats off! :)
    வாழ்த்துகள் அண்ணா

    ReplyDelete

Post a Comment

வருக வருக