ஷாஜகானின் ஸ்போக்கன் இங்கிலீஷ்

திரு. ஷாஜகான் அவர்களின் நெகிழ்வூட்டும் அனுபவம் ஒன்று.
ஸ்போக்கன் இங்கிலீஷ்

திங்கள்கிழமை. வானொலி நிலையத்துக்குச் செல்வதற்காக வழக்கம்போல பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தேன். வழக்கம்போல கையில் ஸ்கிரிப்டும் ஒரு புத்தகமும். அப்பத்தாளும் ஒரு கல்யாணமும், மா. நடராசன் சிறுகதைகள். பிப்ரவரியில் கோவை சென்றபோது விஜயாவில் வாங்கியது. வழக்கம்போல பஸ் வரும்வரை நின்றுகொண்டே ஸ்கிரிப்டை மீண்டும் ஒருமுறை மேலோட்டமாகப் பார்த்து திருத்தும் வேலையில் மூழ்கியிருந்தேன். 

நான்கு பக்கங்கள் பார்த்து முடித்து ஐந்தாவது பக்கம் திருப்பும்போது திடீரென்று காலில் செருப்புகளின் ஊடாக ஏதோ குத்தியது. அனிச்சையாக கண்கள் காலை நோக்கி, உடனே இடதுபக்கமும் திரும்பின. 

பார்வையிழந்த ஒரு பெண் தன் மடக்குக் குச்சியை தட்டியவாறே வந்திருக்கிறாள். குறுக்கே நின்றிருந்த என் கால் செருப்புக்குள் அது நுழைந்து விட்டது.

தடங்கலில் திகைத்த பெண் சட்டென இடது கையை காற்றில் துளாவினாள். அவள் கையைப்பற்றி அமைதியடைச்செய்து வழிவிலகி அவளுக்கு வழிவிட்ட அந்தக் கணத்தில்தான் தோன்றியது அவளை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று. 

அடுத்த கணமே நினைவும் வந்துவிட்டது. என்னைக் கடந்து கொண்டிருந்த அவளைப்பார்த்து “சுனோ... ஏக் மினிட் ருகோ... ” (ஏம்மா... ஒரு நிமிஷம் நில்லு) என்றேன். அவள் இமைகளைப் படபடத்தவாறு குரல்வந்த திசை நோக்கி உத்தேசமாகத் திரும்பினாள். 

“கைசே ஹோ... ?” (எப்படி இருக்கே...)
“ஹா.... டீக்.... ஆப் கோ....” (ஆங். நல்லா இருக்கேன்... நீங்க) என்ற வார்த்தை பாதியில் நின்றுவிட்டது. அவளும் நினைவுபடுத்திக்கொள்ள முனைகிறாள் என்று புரிந்தது. 

[ இதற்கு மேலும் இந்தி இங்கே தேவையில்லை. ]

“என்னம்மா இங்கிலீஷ் பேசக் கத்துகிட்டியா... ?” என்றேன்.
சட்டெனப் புரிந்து கொண்டாள். “சார்... நீங்களா.... ” கையை நீட்டினாள். நான் அவள் கையைப் பிடிக்க, கையைப்பிடித்து தடவிப்பார்த்தாள்... 
“நான் நல்லா இருக்கேன் சார். சார்.... உங்க பேரு ஷாஜஹான்தானே....”
“ஆமாம். பரவாயில்லையே, கரெக்டா ஞாபகம் வச்சிருக்கியே...”
அவள் பெயர் நினைவில் இல்லாதது குறித்து வெட்கமும், எங்கே என் பெயரைச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்று கூறிவிடுவாளோ என்ற அச்சமும் ஒருங்கே எழுந்து அடங்கின.

அவள் என் கைகளை இறுகப்பிடித்துக்கொண்டாள்.

“எத்தனை வருசமாச்சு சார் உங்களை சந்திச்சு... ”
பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தவர்களுக்கு வேடிக்கைப்பொருள் ஆவது புரிந்தது. அவள் கையைப்பற்றி நடத்திச்சென்று ஓரமாக நின்றுகொண்டேன்.
“எப்படி இருக்கீங்க சார்... ?”

“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கேம்மா.... சட்டுனு 
கண்டுபிடிச்சுட்டியே... ”

“என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க... மறக்க முடியுமா சார்.... ”

என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அவளுக்கு எளிமையான கேள்வி எனக்கு மிகவும் சிக்கலான கேள்வி அது. குரலை வைத்து, ஸ்பரிசத்தை வைத்து கண்டுபிடிக்கக் கூடியவளிடம் இப்படி ஒரு கேள்வியை நான் கேட்டிருக்கக்கூடாது. தாமதமாகக் கிடைத்த ஞானம்.

“அது சரி... ஏன் அங்கேயே பஸ் ஏறாம இங்கே வரைக்கும் நடந்து வந்திருக்கே... ? ”
அவள் படிக்கும் பார்வையற்றோர் பள்ளி சுமார் அரை கிமீ தூரத்தில் இருந்தது. பரபரப்பாக வாகனங்கள் விரையும் சாலையைக் கடந்துதான் இங்கே வர வேண்டும்.

“கொஞ்சம் சாமான் வாங்க வேண்டியிருந்தது, அதுக்குதான் வந்தேன் சார். இங்கேயும் அதே பஸ்தானே வரும். ஆமா நீங்க எங்கே போறீங்க சார்... ? ”
“நான் ரேடியோ ஸ்டேஷனுக்குப் போறதுக்காக நின்னுகிட்டு இருக்கேன். உன் பஸ் வரட்டும், அப்புறம் போயிக்கலாம். ”

“நான போயிக்குவேன சார். உங்க பஸ் வந்தா நீங்க போங்க. அதுவரைக்கும் பேசிட்டிருப்போம். ”

“சரி. ஆமா, இங்கிலீஷ் பேசக் கத்துக்கிட்டியா... ? ”

“எ லிட்டில்...” சிரிப்போடு சொன்ன அவள் கண்கள் என் நெற்றியையும் அதற்கு மேலான கூரையையும் பார்த்தவாறு அலைந்தன. பார்வை இழந்தவர்களின் கண்கள் பெரும்பாலும் உள்ளொடுங்கி இருப்பது ஏன் என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்து அடங்கியது.

“சரி, உன் பிரண்ட் எங்கே... அவனும் கத்துகிட்டானா... ?”

“”ஓ... அந்த பத்மாஷைக் (திருட்டுப்பயலைக்) கேக்கறீங்களா... ஓ, ரெண்டு பேருமே அப்பப்போ இங்கிலீஷ்ல பேசிக்குவோம். ”

“அப்ப என்கூட இங்கிலீஸ்ல பேசு பாக்கலாம். ஹவ் ஈஸ் லைஃப்... ”

“சும்மா இருங்க சார்.... எனக்கு கூச்சமா இருக்கு.....” இவர்களும் கூச்சம் வரும்போது தலை குனிந்து கொள்வார்கள் என்பது அப்போதுதான் புரிந்தது எனக்கு.

* * *

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது அது. அதுவும் ஒரு கோடை காலம். வழக்கம்போல மனைவியும் குழந்தைகளும் ஊருக்குப் போய்விட்டிருந்தார்கள். வேலைகளுக்கு இடையே சிறு மாற்றத்துக்காக நண்பரின் போட்டோஸ்டாட் கடையில் சற்றுநேரம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். சட் சட் என்று தரையைத் தட்டியவாறே வந்தார்கள் இரண்டு பேர். இந்தப் பெண்ணும் அவளுடன் ஒரு பையனும். இவள் நன்றாக கொழுக் மொழுக் என்று இருந்தாள். பையன் என்னைப்போல மெலிதாக இருந்தான். அவள தோள்மீது கையைப்போட்டு பின்னே நின்றிருந்தான். அவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்டார் கடைக்காரர் ராஜன். குரல் வரும் திசையை உத்தேசமாகக் கணிக்க முடியாத அவள் 120 கோணத்தில் தலையைத் திருப்பிப் பார்த்தவாறே பதிலளித்தாள்.

“இங்க ஏதோ இங்கிலீஷ் சொல்லிக்குடுக்கிற இன்ஸ்டிடியூட் இருக்காமா... அதைத் தேடித்தான் வந்தோம். ”

“இங்கியா... ? இது பிரின்டிங் பிரஸ்... போட்டோகாபி கடை.” 

“இங்கேன்னா இந்தக் கடை இல்லை. இந்தப் பக்கம்தான்னு சொன்னாங்க. ”

“இங்க அப்படி எதுவும் இல்லியே... ”

அப்போதுதான எனக்கு அவர்கள்மீது ஆர்வம் தொற்றிக்கொண்டது. நான் அமர்ந்திருந்த இடத்தில் அவர்களை உட்காரவைத்துவிட்டு பக்கத்தில் நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தேன்.

“ஆமா, எதுக்கு தேடறீங்க... ? ”

“எங்களுக்கு இங்கிலீஷ் கத்துக்கணும். பேசக் கத்துக்கணும். ”

“ஏம்மா, இங்கே இங்கிலீஷ் ஸ்கூல்னு வச்சிருக்கவங்களுக்கே இங்கிலீஷ் பேச வராது. நீ அவங்ககிட்டே கத்துக்கப் போறியா... ?”

“படிக்க எல்லாம் தெரியும் சார். பேசத்தான் கத்துக்கணும். ”

“இல்லம்மா... இங்கே கடை வச்சிருக்கவங்க எல்லாம் ஃபிராடுங்க. ஒரு மண்ணும் தெரியாது. இவங்ககிட்டே பணத்தைக்கொடுத்து வீணாக்கணுமா.... ? ”

“வேற என்ன செய்யறது சார்... ”

“பிரிட்டிஷ் கவுன்சில் போய் படிக்கலாமே... அவங்க ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் நடத்துறாங்க. அங்கே உங்களுக்கு ஏதாவது ஸ்பெஷல் வகுப்பு இருக்கான்னு விசாரிக்கலாம். ”

“அது எங்கே இருக்கு சார்.... ?” சட்டென முகங்களில் பிரகாசம் தென்பட்டது.
“கனாட் பிளேஸ். ”

மலர்ந்த முகம் அப்படியே வாடியது. “அய்யோ... அவ்வளவு தூரமெல்லாம் முடியாது சார். ”

“எங்கிருந்து வர்றீங்க ரெண்டு பேரும்... ? ”

“நான் பிதம்புரா. இவன் நாங்க்லாய். ”

பிதம்புரா குறைந்தது 25 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது. இரண்டு பஸ்கள் மாறினால்தான் இவர்களுடைய பள்ளிக்கு வர முடியும். நாங்க்லாய் அதற்கும் அப்பால். இன்னும் இரண்டு பஸ்களோ ரிக்சாவோ பிடித்தால்தான் போய்ச்சேர முடியும்.

என்னிடம் வேலை செய்து வந்த மைதிலியின் வீடு பிதம்புராவை அடுத்து இருந்தது. அவர் வீட்டுக்குப் போவதென்றால் ஒருநாள் முழுக்கப் போய்விடும் என்பதால் மிக அரிதாகவே செல்வேன். இவர்களோ இவ்வளவு தொலைவிலிருந்து, தினமும் பஸ்மாறி பயணித்து பள்ளிக்கு வருகிறார்கள் என்பதே மலைப்பாக இருந்தது. இரண்டு பேரின்மீதும் ஏதோவொரு மரியாதை ஏற்பட்டது. 

என் வீட்டுக்கு இரண்டு கட்டிடங்கள் அடுத்து ஒரு வளாகத்தில் ஆங்கிலப்பள்ளி என்ற பலகையைப் பார்த்திருக்கிறேன். அதற்குப் பக்கத்தில் மற்றொன்றும் இருந்தது. ஆனால் அதன் பெயர்ப் பலகையே கோளாறாக இருந்தது. 
“சரிம்மா, எனக்குத் தெரிஞ்சு இங்கே ரெண்டு இன்ஸ்டிடியூட் இருக்கு. ஒண்ணு ரொம்ப மோசமா இருக்கும்னு தோணுது. இன்னொண்ணு பத்தி எனக்குத் தெரியாது. ஆனா பேசிப் பார்க்கலாம். ”

மீண்டும் உற்சாகம் தொற்றிக் கொண்டது அவளுக்கு.

“எங்கே சார்.... ? வழி சொல்லுங்க. ”

“நேராப் போயி வலதுபக்கம் திரும்புங்க. ரெண்டாவது கட்டடம். 
பேஸ்மென்ட்ல இருக்கு.” சொல்லும்போதே சொல்வதன் அபத்தம் புரிந்தது. “சரி, வாங்க, நான் கூட்டிட்டுப் போய் காட்டறேன். ” 

நண்பரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.

“அவள் என் தோளின்மீதும், பையன் அவள் தோளின்மீதும் கை வைத்துக்கொள்ள, ரயில்விளையாட்டுப் போல நாங்கள் நடந்தோம். 
“ஏம்மா... நல்லா விவரமா கேட்டுட்டு முடிவு பண்ணுங்க. அவசரப்பட்டு அட்வான்ஸ் ஏதும் குடுத்துடாதீங்க. சரியா... ?”

“சரி சார். ”

பேஸ்மென்ட்டில் இருந்த ஆங்கிலப்பள்ளியை அடைந்தோம். எழுதுவதற்கான பலகை பொருத்திய பிளாஸ்டிக் நாற்காலிகள் நிறைந்த ஒரு அறை. அதற்கு ஒரு தடுப்பு. அதுதான் அலுவலகம். அங்கே இருந்த ஓர் இளைஞனிடம் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தேன். இருவரையும் எதிரே இருந்த குஷன் பெஞ்சில் அமர்த்திவிட்டு, “சரிம்மா, நீங்க பேசுங்க. நான் வரட்டுமா...” என்று புறப்பட்டேன்.

“சார் சார்... அஞ்சு நிமிசம் நீங்களும் இருங்க சார்” என்றாள்.

தட்ட முடியவில்லை. நானும் அமர்ந்து கொண்டேன்.

அதற்குப்பிறகு அவள் நடத்திய குறுக்கு விசாரணை விவரமெல்லாம் சொல்ல வேண்டுமானால் ஒரு நாள் போகும். அண்மையில் ஐஏஎஸ் படிக்க வந்த மெத்தப்படித்த ஒரு பெண் கேனத்தனமாக முப்பதாயிரம் ரூபாயை ஒரு இன்ஸ்டிடியூட்டில் முதல்நாளே மொத்தமாகக் கொடுத்துவிட்டு ஒரு பைசாவுக்கும்கூட பயன்பெறாமல் போனது நினைவு வந்தது. அவளுடன் ஒப்பிடும்போது இவள் எவ்வளவோ மேல். அரைமணி நேரம் கேள்விகளால் துளைத்தெடுத்தாள்.

வாரத்துக்கு எத்தனை வகுப்புகள், எவ்வளவு நேரம், பேட்ச் துவங்கி விட்டது என்றால் எப்படி எங்களை அதன் அளவுக்கு தேற்றுவீர்கள், என்னென்ன சொல்லித்தருவீர்கள், எங்களுக்கென தனி கவனம் செலுத்த முடியுமா, கட்டணம் என்ன, கட்டணத்தில் எங்களுக்கெல்லாம் ஏன் சலுகை தரக்கூடாது....

ஆரம்பத்தில் வழக்கமான பந்தா காட்டிய பையன் திணறிப்போய் விட்டான். கடைசியில், “சார் வந்தபின் அவரிடம் பேசுங்கள். அவர் நாளை காலை வருவார்” என்று நழுவினான்.

ஆங்கிலப் பள்ளி குறித்து நான் சொன்னது சரிதான் என்று அவளுக்குப் புரிந்து விட்டது.

இருவரும் எழுந்தார்கள், நானும் எழுந்தேன்.

“சாரி சார்... உங்களை ரொம்ப லேட் ஆக்கிட்டோம்” என்றாள்.

“அதனால் என்ன பரவாயில்லை... சரி, உங்களை பஸ் ஸ்டாண்ட்ல விட்டுடறேன். ”

“இல்லை சார், வழி சொல்லுங்க நாங்க போயிக்குவோம்” என்றார்கள்.
“இவ்வளவு தூரம் வந்தும் பிரயோசனம் இல்லாமப் போச்சேங்கறதுதான் கஷ்டமா இருக்கு” என்றான் பையன்.

கேட்கவே சங்கடமாக இருந்தது எனக்கு. ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. “ஏம்மா... நான் வேணும்னா பிரிட்டிஷ் கவுன்சில்ல கேட்டு ஏதாச்சும் சிடி இருக்கான்னு விசாரிக்கட்டுமா... ”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே எனக்குள் பொறி தட்டியது.
ஓராண்டுக்கு முன்னால் எனக்கு ஒரு ஆர்டர் கிடைத்திருந்தது. ஸ்போக்கன் இங்கிலீஷ் குறுந்தகடு தயாரிக்கும் ஆர்டர் அது. Let Us Speak English என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை தயாரித்திருந்த நண்பர் ஒருவர், அதில் உள்ள உரையாடல்கள் அனைத்தையும் குரல்வளம் உள்ள நபர்களைப்பயன்படுத்தி பதிவு செய்து சிடி தயாரிக்கும் ஆர்டரை எனக்குக் கொடுத்தார். வானொலி நாடகம், சீரியல்கள் போன்ற பல வேலைகளில் பல ரிகார்டிங் ஸ்டுடியோக்களுடனும், பலமொழிக் கலைஞர்களுடனும் எனக்குத் தொடர்பு இருந்ததே காரணம். உழைத்த உழைப்புக்குப் பலனாக பணமும் கிடைத்தது, பதிவுகளின் தரமும் நன்றாகவே இருந்தது. அவருக்கு மாஸ்டர் சிடி தயாரித்துக் கொடுத்தபின் அதன் பிரதி ஒன்றை நானும் வைத்துக்கொண்டேன். 

“ஏம்மா... உங்க வீட்ல சிடி பிளேயர் இருக்கா... ?”

“ஓ இருக்கே சார்....”

“சரி. என்கிட்டே ஒரு சிடி இருக்கு. இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகத்தோட இலவச இணைப்பா தயாரிச்சது. புத்தகம் என்கிட்டே இல்லை. இருந்தாலும் உங்களுக்குத் தேவையில்லை. இதை திரும்பத் திரும்ப கேட்டீங்கன்னா ஓரளவுக்கு உச்சரிப்பும் ஏற்ற இறக்கமும் கத்துக்கலாம். சிம்பிள் இங்கிலீஷ்தான். வேணும்னா சொல்லுங்க, தர்றேன். ”

இரண்டு பேரின் முகங்களிலும் தென்பட்ட மகிழ்ச்சியை இங்கே விவரிக்க முடியாது.

மீண்டும் ரயில் விளையாட்டு நடையோடு என் வீடு வந்தோம். இருவரையும் உட்கார வைத்துவிட்டு பல நூறு சிடிக்களில் தேடத்துவங்கினேன். காத்திருந்த அவர்களுக்கு வீட்டில் இருந்த முறுக்கும் பிஸ்கட்டும் தட்டுகளில் போட்டு இருவர் கையிலும் கொடுத்தேன். “சாப்பிடுங்க. அதுக்குள்ள சிடி தேடி எடுக்கிறேன். அப்புறம் அதை காபி போடணும். அப்போ உங்களுக்கு காபியும் போட்டுத் தர்றேன். ”

பிஸ்கட்டும் வாரத்தைகளும் அவர்களுடைய களைப்பைப் போக்குவதாக இருந்திருக்க வேண்டும். இருவரும் சிரித்துப் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். 
சிடி கிடைத்துவிட்டது. கம்ப்யூட்டரில் பிரதி எடுக்க ஏற்பாடு செய்துவிட்டு அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். பார்வையிழந்தவர்களை தூரத்திலிருந்து பார்ப்பதற்கும் பக்கத்தில் பார்க்கவும் வேறுபாடுகள் நிறையவே தெரிந்தது. தலையை முட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள் இரண்டுபேரும். காதலர்களாக இருப்பார்களோ என்று தோன்றியது. இருக்காது என்றும் தோன்றியது.

திடீரென செல்போன் மணி அடித்தது. அந்தப் பையன் தன் சட்டைப் பைக்குள் கைவிட்டு போனை எடுத்தான். விரல்களால் நெருடி பட்டனை அழுத்தி பேச ஆரம்பித்தான். 

அவள் அவன் தலையின் திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் ஒரு நிமிடத்தில் பேசி முடித்தான். அவள் அவனுடைய சட்டையைப்பிடித்து இழுத்து அடித்தாள், உலுக்கினாள். “பத்மாஷ்... (திருட்டுப்பயலே) போன் வாங்கியிருக்கே, என்கிட்டே சொல்லவே இல்லேல்ல... ”
“சொல்றேன் சொல்றேன் பொறு பொறு...” அவன் நெளிந்தான். 
“அதான் சொல்றேன்னு சொல்றான்ல, விடும்மா அவனை பாவம்” என்றேன்.
“பாருங்க சார்... எத்தனை வருசமா பிரண்டா இருக்கான். போன் வாங்கினதை சொல்லணுமா இல்லியா... இவன்லாம் பிரண்டா சார்.... ?”

இருவரின் நட்புரிமைச் சண்டையைக் காண எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏதோ எழுபது எண்பது வயதுக் கிழவன் போலவும், சண்டை போட்டுக்கொள்ளும் குழந்தைகளைப் பார்ப்பது போலவும் இருந்தது எனக்கு.
“சரி, சரி, சொல்லுவான்... சொல்லுப்பா ஏன் அவளுக்கு சொல்லலை.... ?”
“சார், நேத்திக்குதான் வாங்கித்தந்தாங்க. வரும்போது நான் வேற பஸ், இவ வேற பஸ். ஸ்கூல்ல இதெல்லாம் பாக்கவே மாட்டோம். இன்னிக்கு பஸ்ல ஏறுனதுக்கு அப்புறம் மிஸ் கால் குடுத்து சஸ்பென்சா சொல்லலாம்னு இருந்தேன். அவ்வளவுதான் சார்... இதுக்குப்போயி பத்மாஷ்ங்கறா சார்... ”

“ஆமா சொல்லுவேன். நீ பத்மாஷ், பத்மாஷ், பத்மாஷ்... ”

கோபம் தணிந்து அமைதியானாள் அவள். நான் தேநீர் தயாரிக்கப் போன நேரத்தில் அவன் அவளுக்கு மிஸ் கால் கொடுக்க, அவள் அந்த எண்ணை சேமித்துக்கொண்டாள். அவர்கள் எப்படி பெயர்களை சேமிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தது முடியவில்லை. கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நாகரிகம் இல்லை என்று கேட்காமல் விட்டுவிட்டேன்.

இரண்டு சிடிக்களையும் தரமான இரண்டு பிளாஸ்டிக் உறைகளில் போட்டு இருவருக்கும் கொடுத்தேன். தேநீ்ர் குடித்தபின் பஸ் ஏற்றிவிட்டேன். ஏற்றிவிட்ட பிறகுதான் நினைவு வந்தது, போன் நம்பர்கள் வாங்கி வைத்திருக்கலாமே என்று.

* * *

“என்னம்மா, நான் குடுத்த சிடி ஏதாவது உபயோகமா இருந்துச்சா... ?”
“என்ன சார் இப்படிக் கேக்கறீங்க... அதுல உள்ள எல்லாமே எங்க ரெண்டு பேருக்கும் இப்ப மனப்பாடம். நல்லா தயார் பண்ணிருக்காங்க.” 

“அப்பிடியா... ”

ஆமா சார், கடையில, ரயில்வே ஸ்டேஷன்ல, லாட்ஜில, சொந்தக்காரங்க வீட்டுல, டீச்சர்கிட்டே... இப்படி ஒவ்வொரு இடத்திலும் எப்படிப் பேசணும்னு நல்லா சொல்லியிருக்கு. இங்கிலீசும் ஈசியா புரியறா மாதிரி இருக்கு. அதைக் கேட்டுக்கேட்டு நாங்க ஸ்கூல்ல தமாசா இங்கிலீஷ்ல பேசுவோம். எங்களைப் பாத்து மத்தவங்களும் தத்தக்கா பித்தக்கான்னு பேச ஆரம்பிச்சாங்க. அதனால எங்க மாஸ்டரும் இங்கிலீஷ்ல அப்பப்போ சொல்லிக்குடுக்க ஆரம்பிச்சாரு. அப்புறம் மேடமும் ஒரு ஆர்டர் போட்டாங்க, எதையெல்லாம் இங்கிலீஷ்ல சொல்லிக்குடுக்க முடியுமோ அதுக்கெல்லாம் இந்தியில  சொல்லக்கூடாதுன்னு... ரொம்ப தாங்க்ஸ் சார்.”
“சரி உன் பிரண்ட் எப்படி இருக்கான் ?”

“நல்லா இருக்கான் சார். இன்னிக்கும் என்கூட வான்னேன். அவன் ரொம்ப டயர்டா இருக்கு நான் போறேன்னு போயிட்டான். அப்புறம் சார், நாங்க ரெண்டுபேரும் பஸ்சுல போகும்போது பக்கம் பக்கமா உக்கார இடம் கிடைச்சா அந்த சிடியில இருக்கிற இரண்டு பேர் மாதிரி பேசிப்பாப்போம்....”

கேட்பதற்குத் திருப்தியாக இருந்தது. அவளுக்கான பஸ் வந்துகொண்டிருந்தது.
“சரி பஸ் வந்துருச்சு... வா வா... ” கைபிடித்து நடத்திச்சென்று அவளை ஏற்றிவிட்டு என் பஸ்சுக்காகக் காத்திருக்கும்போதுதான் தோன்றியது, இன்றைக்கும் போன் நம்பரை வாங்காமல் விட்டு விட்டேன் என்று. 
எனக்கான பஸ்சில் ஏறி நடராசனின் புத்தகத்தைத் திருப்பினேன். கோவைத் தமிழுக்காகவே வாங்கிய புத்தகம். ஒரு பக்கம்கூட மேலே போக முடியவில்லை, எழுத்துகளைத் தடவிப் பார்த்தேன். சொரசொரப்பும்கூட தட்டுப்படவில்லை. புத்தகத்தை மூடிவிட்டு வெளியே பார்க்கத் துவங்கினேன்.

ஷாஜகான் 
புதுதில்லி

Comments

  1. வணக்கம்
    சொல்லிச் சென்ற விதம் சிறப்பாக உள்ளது.... மனதை நெருட வைத்து விட்டது..பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரா ..

      Delete
  2. படிக்கப் படிக்க மனம் நெகிழ்ந்து போய்விட்டது நண்பரே

    ReplyDelete
  3. நண்பர் மது,

    சிறப்பான பகிர்வு. ஷாஜஹான் என்பவரின் எழுத்து ஒரு தெளிந்த நீரோடை போல ஓடுகிறது. மனதை நெகிழச் செய்யும் ஒரு சிலிர்ப்பான அனுபவத்தைப் படித்த உணர்வு வருகிறது. பகிர்ந்ததற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருக இசைப்பதிவரே...
      நன்றி

      Delete
  4. அருமையான கட்டுரை. தில்லி நண்பர் ஷாஜஹானின் கட்டுரையை உங்கள் தளத்திலும் படித்ததில் மகிழ்ச்சி.....

    ReplyDelete
  5. அன்புள்ள அய்யா,

    திரு.ஷாஜகான் அவர்களின் ஸ்போக்கன் இங்கிலீஷ் நெகிழ்வூட்டும் அனுபவப் பதிவைப் பார்த்தேன்... பார்வையிழந்தவர்கள் கல்வி கற்க வேண்டும்...ஆங்கிலம் கற்க எடுத்துக்கொண்ட முயற்சியைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.

    தட்டுத் தடுமாறி நடந்தாலும்... அறிவில் தடம் பதிக்க துடிக்கும் அந்த நண்பர்களின் ஈடுபாடு...“பாருங்க சார்... எத்தனை வருசமா பிரண்டா இருக்கான். போன் வாங்கினதை சொல்லணுமா இல்லியா... இவன்லாம் பிரண்டா சார்.... ?”

    இருவரின் நட்புரிமைச் சண்டை ... அவர்களின் பாசத்தில் உள்ள உரிமை... படிக்கையில் உற்சாகப்படுத்தியது.

    “என்னம்மா, நான் குடுத்த சிடி ஏதாவது உபயோகமா இருந்துச்சா... ?”
    “என்ன சார் இப்படிக் கேக்கறீங்க... அதுல உள்ள எல்லாமே எங்க ரெண்டு பேருக்கும் இப்ப மனப்பாடம்.”

    படிக்கக் கொடுத்த சி.டி.யை நன்றாக பயன்படுத்தி...பலன் அடைந்ததை நன்றியுடன் சொல்லி நினைவில் வைத்தது... என்றும் நினைவில் நிறுத்த வேண்டிய நல்ல பகிர்வு.

    நன்றி.


    ReplyDelete
  6. மனம் நெகிழ வைத்த பதிவு . பகிர்ந்ததற்கு மிக்க நன்றி .
    நான் ஒரு முறை டவுன் பக்கம் சென்றேன் அது வாகனங்கள் செல்லாத walking street ..(ஜெர்மனி )
    எனக்கு முன்னே ஒரு பார்வையற்ற இளம்பெண் குச்சியை அங்குமிங்கும் தட்டியபடி வேகமாக சென்று கொண்டிருந்தார் திடீரென ஒரு நொடி நின்று மூக்கை எதோ சுவாசிப்பதுபோல செய்தார் அப்புறம் வலப்பக்கம் திரும்பி சரியாக ஒரு பழக்கடைக்குள் நுழைகிறார் ..ஆச்சர்யமாக இருந்தது அங்கு இக்காட்சியை கண்டோர் அனைவருக்குமே .அவர்களுக்கு பார்வை மட்டுமேயில்லை ஆனால் மற்ற உணர்வுகளால் நிறைய கண்டுபிடிக்க முடியும் .

    ReplyDelete
    Replies
    1. லவுட் ஸ்பீக்கரில் தான் புதுத் தகவல்களைத் தந்து அசத்துறீங்க எனில் பின்னூட்டத்திலும் வாவ்.
      வாக்கிங் ஸ்ட்ரீட்? வொண்டர்புல்

      Delete
    2. fussgaengerzone /pedestrian only precinct/auto-free zones and car-free zones,அதைதான் வாக்கிங் ஸ்ட்ரீட் என்பார் சிலர்
      எவ்வித வாகனமும் அந்த ஏரியாவில் நுழையாது அதனால் நிறைய வசதி குழந்தைகள் ஒரு மூலையில் இருந்து மறு மூலைக்கு ஓடினாலும் கவலையே இல்லை ..பெரும்பாலும் இங்கே தான் எல்லா விண்டர் மார்கட்ஸ் நடக்கும் .முதியோருக்கும் மிக வசதியா நடந்து மற்றும் சக்கர வண்டியில் செல்லலாம் எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் இந்த வசதி உண்டு..

      Delete
  7. மிக அருமையான பதிவு சகோதரரே!

    கண் பார்வையற்றோர்களின் செயல்களை மனக்கண்ணில்
    காட்சியாகக் காணும்படியான எழுத்துநடை அருமை!
    அவர்களின் கற்கும் ஆர்வமும் திறமையும் அதிசயம் + அற்புதம்!

    நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. பல தசாப்தங்களாக எழுதுவதையே பணியாக கொண்டவர் அய்யா ஷாஜகான்.
      சமூக ஆர்வலர். சமூக சேவையாளர்.
      ஜீவ சுந்தரி பாலன் அவர்களின் பால்யத் தோழர்.

      Delete
  8. ஆங்கில ஆர்வம் காரணமாக என நினைத்துக்கொண்டே கட்டுரையைப் படித்தேன். நிறைவில் வித்தியாசமான செய்தியை அறிந்தேன். சாதனையாளர்களுக்கு எதுவும் தடையில்லை. முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு உதாரணத்தைக் கண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருக முனைவரே
      தங்கள் கருத்துக்கு நன்றி

      Delete
  9. மனம் நெகிழ்வா இருக்கு சகோ...அவர்களின் தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது என்னை .த.ம.4

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி ...

      Delete
  10. பார்வை இழந்தவர்கள் உலகத்திற்கு சென்று வந்த ஷாஜகான் ,தனக்கு ஏற்பட்ட உணர்வை படிக்கின்ற எல்லோருக்கும் ஏற்படுத்தி விட்டார் !
    த ம 4

    ReplyDelete
  11. சார், அருமையானநிகழ்வஅருமையாபகிர்ந்துகிட்டீங்க,

    ReplyDelete
  12. மனதை நெகிழ வைத்த ஒரு கட்டுரை.

    ReplyDelete

Post a Comment

வருக வருக