எனது வீதி இலக்கிய கூட்டப் பங்களிப்பை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.
(இடமிருந்து)திரு.செல்வா, திரு. முத்துநிலவன், மற்றும் முனைவர்.அருள்முருகன் |
ஒரு மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரத்திற்குள் படித்து முடித்துவிடுவதெல்லாம் சிறுகதை என்கிறார் ஒரு ஆங்கில இலக்கியவாதி. இன்னொருவர் ஆயிரம் வார்த்தைகளில் இருந்து நான்காயிரம் வார்த்தைகள் கொண்ட படைப்பைச் சிறுகதை என்று சொல்கிறார்.
தமிழ் வெகுமக்கள் பத்திரிக்கைகளில் தற்போது இந்த இலக்கிய வடிவம் என்ன பாடுபடுகிறது என்பதைப் பார்ப்போம். பல ஆண்டுகளுக்கு முன்னரே ஒருபக்கக் கதை என்று வந்து இலக்கிய உலகிலும் வாசகர் மத்தியிலும் கடும் விமர்சனத்திற்குள்ளான வடிவம் இன்றும் தொடர்வதை பார்க்கிறோம்.
இன்றைய தலைமுறைக்கு பத்து நொடித் தலைமுறை என்ற பெயர் இருப்பதை நாம் நினைவு கூற வேண்டும். எல்லாமே பத்து நொடிகளுக்குள் கிடைத்துவிட வேண்டும். இப்படி பட்ட விரைவுத் தலைமுறைக்கேற்ப இப்போது கதைகள் கார்னர் கதைகளாகவும் சிறு பத்திக் கதைகளாகவும் வரத்துவங்கி இருப்பதை பார்க்கிறோம்.
ஜன்னல் (ஜனவரி 15-31) இதழில் ஆனந்த் ராகவ் பதினைந்து கதைகளை இப்படி கார்னர் கதைகளாக எழுதியிருக்கிறார். சில வாக்கியங்களே கொண்ட கதை துணுக்குகள் இவை.
ஒரு இலக்கிய வடிவம் எப்படி காலமாற்றத்தில் புதிய வடிவங்களை அடைகிறது என்பதை இந்தமாதிரியான முயற்சிகள் அறிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து (28/01/15) வெளிவந்த ஆனந்த விகடனில் சந்தோஷ் நாரயணன் எழுதிய அஞ்ஞானச்சிறுகதைகள் நேர்த்தியானவை. வேடிக்கை என்னவெனில் கால்பக்கக் கதைக்கு முக்கால் பக்க படங்கள்!
இன்றய வாசகர்கள் படிப்பதை விட காட்சியினை விரும்புகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
இவை கதைத் துணுக்குகள் எனினும் கடுகு சிறுத்தாலும் என்கிற பழமொழிதான்.
இவை நமது மனதில் பல கிளைக் கதைகளைச் சொல்கின்றன. சில ஆச்யர்மாக நமது ஆன்மாவையும் தொடுகின்றன. ஒரு மலர்தல் அனுபத்தையும் தருகின்றன.
சந்தோஷின் பொம்மைகள் ஒரு பெருநாவலின் சிறு துளி!
ஆனந் ராகவ்வின் ஜகரந்தா விளைவிக்கும் வசித்தல் அனுபவம் அற்புதம். ஆனந்த் ஒரு ரவுண்டு வருவார் என்றே நினைக்கிறன்.
என்னுடைய இம்மாதத்திய எழுத்தாளர் தேர்வாக நான் சொல்வது லக்ஷ்மி சரவணக்குமார்.
"குதிரைக்காரன் குறிப்புகள்" அற்புதமான கதை. வெகு நுட்பமாய் குதிரைப்பந்தயத்தை கண்முன் நிறுத்தும் கதை. அஷோக் அவனது காதலி ஆஷா, குதிரை ப்ளூ மவுண்டன் என சுழலும் கதையின் ஒவ்வொரு திருப்பமும் வியப்பு, நெகிழ்ச்சி, அதிர்ச்சி, ஆற்றாமை என்று நமது உணர்வுகளை இயக்கும் அற்புதமான எழுத்து எழுத்தாளருக்கு கைவந்திருக்கிறது.
காதலை இவ்வளவு கண்ணியமாக வெளிப்படுத்தி பொது வெளியில் ஒரு பிரமாண்டமான பிம்பத்தை ஏற்படுத்தும் (ரெயின்போ ரெமோ?) இதே எழுத்தாளர் உயிர்மை இலக்கிய இதழில் தனது இன்னோர் படைப்பில் அதை முற்றாகத் தகர்க்கிறார்.
உயிர்மையில் வள்ளித் திருமணம் என்கிற கதையில் நாடக நடிகர்கள், அவர்களின் எசகு பிசகான பாலுறவு, இயற்கைக்கு மாறான பாலுறவு என்று வெகு "நுட்பமாய்" விவரிக்கிறார்.
ஒரே எழுத்தாளர் வெகு மக்கள் பத்திரிக்கையில் ஒரு மாதிரியும் ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி மாதிரி இலக்கியப் பத்திரிக்கையில் "ஒரு மாதிரியும்" எழுதுவது இலக்கிய உலகின் இருத்தல் நியாயங்களில் ஒன்றுதானே.
லெ.ச ஒரு முக்கியமான எழுத்தாளர் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.
குமுதத்தில் வெளிவரும் வைரமுத்து கதைகள் அருமையாகவே இருக்கின்றன.
நான் விரும்பிப் படித்து வேதங்கள் சொல்லாதது (26/01/215).
நடேச அய்யர் தனது தென்னந்தோப்பை ஒரு வக்கீலிடம் ஓர் நிபந்தனையுடன் விற்கிறார். அவரது தோப்பு வீட்டில் மகா பெரிவர் வந்து தங்கிச் சென்றதால் அதைக் கோவில் எனக் கருதும் அவர் அதன் புனிதம் கெடாமல் பார்த்துக்கொள்ளச் சொல்கிறார்.
சில மாதங்களில் திரும்பும் அவர் தோட்ட வேலை பார்க்கும் தலித் ஒருவர் விளக்குப் போடுவதைக் கண்டு கொதித்துச் சபிக்கிறார்.
ஒரு பெருமழை தொடர்கிறது. தோட்டத்தில் இருளனின் குடில் பறக்க பெரியவர் இருந்த வீட்டில் குடிபுகுமாறு பணிக்கிறார் வக்கீல்!
கதை இத்துடன் முடிந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் ஒரு சிக்கலான வாக்கியத்துடன் முடிகிறது.
நடசே அய்யர் ஏற்கிறாரோ இல்லையோ பெரியவர் ஏற்றுக் கொள்வார் என்கிறது கதை.
இந்தக் வாக்கியம் கதையின் ஆன்மாவை கொன்றுபோடுவதாக எனக்கு தோன்றுகிறது.
இதே வாரம் இதைத் தொடர்ந்து கோமளா.ஜி அவர்கள் எழுதிய யாகம் என்கிற கதையும் சாதியத்தைத்தான் பேசுகிறது.
ஒரு பெரிய சாதிப் பெண் சுமதி என்கிற தலித் பெண்ணுடன் நட்பாகி வீட்டிற்கு அழைத்து செல்கிறார். சில நாட்கள் கழித்து வீட்டார்க்கு அவளது சாதி தெரியவர அவள் கண்டவாறு ஏசப்பட்டு விரட்டப்படுகிறாள். அவளது நட்பை இழந்து தவிக்கும் நாயகி இன்னொருவனிடம் காதல் வயப்படுகிறாள். அவன் வீட்டார் கனிவுடன் பழகுகிறார்கள். ஒரு தனித்த தருணத்தில் அவனது வீட்டில் பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்கின்றன. ஆனால் அதன் பின்னர் அவள் அவனை மீண்டும் பார்க்கவே இல்லை என்கிறது கதை. அவன் இவளது முன்னால் தோழியின் ஒன்றுவிட்ட அண்ணன் என்கிறது கதை.
கதாசிரியர் ஒரு பெண்ணாக இருப்பதால் வெகு அழகாக காதல் சொல்லப்பட்டு இருக்கிறது. காதல் பகுதியை அவர் சொல்கிற பொழுது வாசகனுக்குள்ளும் சில பட்டாம்பூச்சிகள் பறக்கலாம்! அவ்வளவு அருமை.
ஆனால் முடிவு. இயல்பு வாழ்க்கையில் இதுதான் முடியும் என்று வாதிட்டாலும் சரியான முடிவாக தெரியவில்லை.
என்னம்மா இப்படி ?
படைப்பாளர் உணர்வுகளை அருமையாக கையாள்பவராக இருந்தும், முடிவுகளை தலையில் இருந்து எடுப்பவராக இருக்கிறார்.
வேதங்கள் சொல்லாதது, யாகம் இரண்டு படைப்புகளுமே ஒரு தாகத்தை ஏற்படுத்தி தணிப்பது போல் பாசாங்கு செய்து முடிந்து போகின்றன.
இன்றைய சூழலில் சாதியம் குறித்து பேசுவதின் ரிஸ்க் பெ.மு விசயத்தில் நாம் ஏற்கனவே பார்த்ததுதான்.
சிறந்த கதைகள் என நான் வாசிக்க ஆரம்பித்து வேண்டாம் என விலக்கிய கதைகள் இவை.
எனது பார்வையில் இந்த மாதத்தின் சிறந்த கதையாக நான் தேர்ந்தெடுப்பது எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் இன்னும் கொஞ்சம் இனிப்பு. இந்தக் ஆனந்த விகடனில் வெளிவந்தது.
கண்ணையா என்கிற லான்ட் ப்ரோக்கர் ஒரு வில்லங்கமான இடத்தை விற்பனை செய்ய விழித்திறனற்ற அருள்செல்வதையும், சியாமளாவையும் தேர்வு செய்கிறான்.
மனம் பதைக்க படிக்கவைத்து விழிநீரை சுரக்க வைக்கும் முடிவை எஸ்.ராவினால் எப்படித்தர முடிகிறது?
இந்தக் கதை ஒன்றும் சாதியம், சமத்துவம், போலிப் புரட்சி என்று பேசவில்லை இது வாசகன் தன்னை சுத்தப் படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறது. வெகு ஜோரான கதை இப்படித்தான் இருக்க வேண்டும்.
உயிர்மையில் இவர்(எஸ்.ரா) எழுதிய உலகின் கண்களிலும் நிர்வாணம் இருக்கிறது அது ரசிக்கத்தக்க வகையில் இருக்கிறது. முகம் சுளிக்கும் வகையில் அல்ல. இதை வளரும் படைப்பாளிகள் குறித்துவைத்துக் கொள்ளவேண்டும்.
தேர்வுப் புரவியின் உஷ்ண மூச்சில் எனது பிடரி மயிரெல்லாம் பொசுங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சிறுகதை உலகில் என்னை சஞ்சரிக்க வைத்து புதுப்பித்தமைக்கு வீதியின் அமைப்பாளர்களுக்கும் ஆளுமைகளுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பி.கு மது ஒரு வாசகன் இலக்கிய விமர்சகன் அல்ல. இது ஒரு பாமர வாசகனின் வாசித்தல் அனுபவப் பகிர்வுதனே ஒழிய சுப்ரீம் கோர்ட் ஜட்ஜின் தீர்ப்பெல்லாம் இல்லை
அன்பன்
மது
வணக்கம்
ReplyDeleteசொல்வது உண்மைதான் காலத்தின் தேவைக்கு ஏற்ப வடிவங்கள் மாறுகிறது... கருப்பொருள் ஒன்றுதான்.....அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
த.ம-2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி அய்யா.
Deleteமது ஒரு சாதாரண வாசகன் மட்டுமல்ல, நல்ல இலக்கிய விமர்சகனும் கூட என்பதாகத்தான் இந்தப் பதிவு எங்களுக்குக் காட்டுகிறது மது. “இலக்கியச் சிந்தனை“ ஒவ்வொருமாதமும் ஒரு கதையைத் தேர்வு செய்து வருட இறுதியில் அந்தப் பன்னிரண்டு கதைகளில் இது சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி அதை ஒருவரிடம் தந்து, காரணத்தோடு தேர்ந்தெடுத்ததை முன்னுரையாக வெளியிடுவார்கள். அப்படி இருக்கிறது. உங்களுக்குக் கதைவிமர்சனம் வராது என்பது ஒரு நல்ல் கதை! தொடருங்கள் அய்யா, உங்களின் வாசிப்பு ருசி நல்ல விமர்சனத்தில் கொண்டுவிடும் அது, படைப்பில் கொண்டு நிறுத்தும்...வளர்க உங்கள் வாசிப்பும் விமர்சனமும், நல்ல படைப்புகளுக்கு வித்திட வாழ்த்துகிறேன்.
ReplyDeleteநன்றி அண்ணா.
Deleteஆமா...என்ன ஆச்சு மதூ? பத்தாம்ப்பு பன்னண்டாம்ப்பு பசங்கள கவனிங்க நா வேண்டாங்கள..அதுக்காக..என்னைப் போலும் உங்கள் வலையுலக வாசகர்களை இப்படி வாரக்கணக்கில் ஏமாற்றலாமா?
Deleteஎழுதுங்கள மது! உங்கள் இசையென்ற ச்செ எழுத்தென்ற இன்ப வெள்ளத்தில் நீந்திட வந்த எங்களை ஏமாற்றிவிடாதீர்கள் மதூஉஉஉ!
பி.கு- எனது தளத்தில் உள்ள நட்பு வலைப்பக்க வரிசையைப் பாருங்கள் எழுதத் தாமதம் செய்வதில் நம் அய்யாவுக்கு அடுத்து நீங்க வந்துட்டீங்க அய்யாவே ஏத்துக்க மாட்டாரு..
அட ..........
Deleteகருத்திடலாம் என்று வந்தால் முத்துநிலவன் அய்யா முந்திக் கொண்டாரே!!!
அய்யாவின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.
வீதியின் செயல்பாடு அறிந்து மகிழ்ச்சி. இவ்வாறான பதிவுகள் மற்றவர்களையும் படிக்கவும் எழுதவும் தூண்டும் என்பதில் ஐயமில்லை. தங்களின் முயற்சி தொடரட்டும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅண்ணே ! எப்படிணே எல்லா விஷயங்களையும் எழுதிட்டு எனக்கு இலக்கிய விமர்சனம் தெரியாதுனு சாதாரணமா சொல்றிங்க ? அப்பப்பா ! உங்களின் வாசிப்புத்திறன் என்னை ஆச்சரியப்படுத்துகிறது . சுமார் இரண்டாண்டுகளாக விகப்பத்திரிக்கைகள் படிப்பதையே விட்டிருந்தேன் . இனி அதையெல்லாம் படி்ககலாமா என்ற எண்ணம் தங்களின்பதிவின்வழி எனக்குத்தோன்றுகிறது .
ReplyDeleteதம+
மது தோழரே! எங்கேயோ போயிட்டீங்க! எவ்வளவு அழகா சிறுகதைகளை விமர்சித்துச் சென்றுள்ளீர்கள்! எஸ் ரா வின் கதைகளை மிகவும் ரசிப்பவர்கள். மனதைத் தொட்டுச் செல்பவை. அவரது அனுபவக் கட்டுரைகளும் அப்படியேதான்.....
ReplyDeleteநாங்களும் நிறைய வாசிக்க வேண்டும்....சுஜாதா கூட ஒரு வரிக்கதை ஒன்று சொல்லியிருந்தார்...இப்போது அது சரியாக நினைவில் இல்லை...
அன்புள்ள அய்யா,
ReplyDeleteவீதிக் கூட்டத்தின் மாதந்திர சிறுகதை அறிமுகம்.... படித்த கதைகளை விமர்சனப் பதிவாக அருமையாக விளக்கி எழுதியிருந்தீர்கள்!
சிறுகதை எப்படி இருக்கவேண்டும்... எத்தனை வரிகள் இருக்கவேண்டும் என்பதை வரையறுத்துக் கூறுவது காலத்துக்கு காலம் வேறுபடுகிறது.
தங்களின் விமர்சனப் பார்வை நன்றாக இருக்கிறது. வீதி கலை இலக்கிய அமைப்பு ... தமிழகத்தின் விதியை மாற்றும்.... புதுகையை மட்டுமல்ல... இலக்கிய உலகையே புதியதாய் மாற்றட்டும்.
நன்றி.
த.ம.4
தாங்கள் சிறந்த வாசிப்பாளர் அதுதெரியும் புலிக்குப்பிறந்தது
ReplyDeleteபூனையானால் அது ஞாயமாகுமா? நீங்க சொன்னவிதம்
அருமை மிக அருமை.
உங்கள் வாசிப்பனுபவம் அழகிய இலக்கியமாய்...
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்,
உங்களின் மூலமாகத்தான் மாதொரு பாகனை அறிந்தேன்... அதை வாசிப்பதில் முழ்கியிருக்கிறேன் ! இதோ இந்த பதிவு... உங்களுக்குள் இருக்கும் சிறப்பான இலக்கிய ரசனைமிக்க வாசகனை காட்டுகிறது !
ReplyDeleteஉங்களை போன்றவர்களின் பதிவுகளை படிக்கும்போது தான் நான் கடக்க வேண்டிய தூரம் தெரிகிறது....
தொடருவோம் !
எனது புதிய பதிவு : மதமாற்றம் மனமாற்றமாகுமா ?
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post_21.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.
நன்றி
சாமானியன்
ஒரு தரமான விமர்சகர் எப்படி எழுதவேண்டும் 80தை தங்களிடமிருந்து கற்றுக்கொண்டேன் தோழரே...
ReplyDeleteதமிழ் மணம் – ஐந்தறிவி