ஈரோடு தமிழன்பனுடன் நேர்காணல் an interview with thamilanban?

இது ஒரு பகிர்வு  திருமிகு. ஷாஜகான் அவர்களின் பக்கத்தில் இருந்து.

ஈரோடு தமிழன்பனுடன் நேர்காணல்


’’தமிழிலக்கியத்தின் மிக அண்மைக்காலத்து வரவு ஒன்று அந்த இலக்கியத்தின் புராதனச் செல்வத்தை மதிப்பிட முனைகிறது’’ என்று உங்கள் வணக்கம் வள்ளுவ நூலுக்கு மதிப்புரை எழுதியிருக்கிறார் சிவத்தம்பி. வள்ளுவரை மதிப்பிட்டு கேள்வி எழுப்ப வேண்டும் என்று எப்படித் தோன்றியது?
வள்ளுவரே தன் நூலில் நிறையக் கேள்விகள் கேட்டிருக்கிறார். ’கற்றதனாலாய பயனென்கொல்’ என்று கேட்பார். எந்தக் கருத்தின்மீதும் விமர்சனம் வைக்க வள்ளுவர் உரிமை வழங்குகிறார் - ’எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்’, ’எப்பொருள் எத்தன்மைத் தாயினும்’ என்று வள்ளுவர் தொடர்ந்து வினாவவும் விவாதிப்பதற்கும் வாய்ப்புள்ளவராகவே விளங்குவதாகக் கருதுகிறேன். ’எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்’ என்பதில் ’வள்ளுவர் வாய்க் கேட்பினும்’ என்று தன்னையும் உள்படுத்திக் கொள்வதாகவே நினைக்கிறேன். இருப்பினும் வள்ளுவரை விமர்சிப்பதற்காக இந்நூலை எழுதவில்லை. ஒரு படைப்பின் மீதான படைப்பு என்று கருதுகிறேனே தவிர படைப்புக்கு நான் விமர்சனமும் எழுதவில்லை, விளக்கவுரையும் எழுதவில்லை. விளக்கவுரை எழுதுவதில் எனக்கு அதிக நம்பிக்கையில்லை. ஏனென்றால் அதிகமாக விளக்கவுரை எழுதப்பட எழுதப்பட, அது விளங்காமல் போவதுதான் மரபாக இருப்பதால் அப்படிப்பட்ட விளக்க முயற்சியை நான் மேற்கொள்ளவில்லை இந்த நூலில்.
விலைமாதர்கள் வள்ளுவரிடம் கேட்ட வினாக்கள் என்ற கவிதை வள்ளுவரைக் குத்திக் கேள்வி கேட்கிறது. ஆயினும் மென்மையாகச் சாடுகிறது. இறுதியில் “பனித்த கண்களுடன் மௌனமாய் வள்ளுவர் விலைமாதர்களுக்கு விடை கொடுத்தார்” என்கிறீர்கள். குறளில் என்ன சொல்லியிருதாலும் அது வேதவாக்கு என்று கூறுபவர்களுடன் நீங்கள் முரண்படுகிறீர்களா?
குறளில் அதை வேதவாக்காகக் கருத வேண்டும் என்று வள்ளுவர் எந்த இடத்திலும் சொல்லவில்லை. மற்றவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். எந்த நூலையும் விமர்சனம் செய்ய உரிமை இருக்கிறது. வேதங்களையும் விமர்சனம் செய்யலாம். கடவுளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பது என் கருத்து. ஆனால் வள்ளுவரை விமர்சனம் செய்வதன் மூலம் வள்ளுவரை விட நான் பெரிய மேதை என்று நான் நினைக்கவில்லை. அதே சமயத்தில் வள்ளுவரிடம் ஒரு கேள்வி கேட்க முடியாத ஒரு பேதையும் இல்லை நான். அந்த நிலையில் என் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்கள் தம் ஏமாற்றத்தை, வருத்தக் குரலை முன்வைக்கிறார்கள். இன்னொன்றையும் நான் சொல்ல வேண்டும். ஒரு நூலை அணுகுவதற்கு அந்த நூல் தோன்றிய காலநிலை, அந்த நூலுக்குப் பின்னால் இருக்கக்கூடிய கருத்துநிலை - இந்த இரண்டையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த நூலும் வெறுமையிலிருந்து தோன்றுவதில்லை. சூனியத்திலிருந்து எந்தக் கருத்தும் உருவாவதில்லை. எனவே ஒரு காலப் பின்னணி, ஒரு கருத்துப் பின்னணியுடன் எந்தவொரு படைப்பையும் பார்ப்பதுதான் அறிவுடைய சமுதாயத்துக்கு அழகாக இருக்கும். அறிவுசார்ந்த அணுகுமுறை என்பது வேறு; பக்திசார்ந்த அணுகுமுறை என்பது வேறு. பொதுவாக அறிவுலகம் எதையும் தன் அறிவின் அடிப்படையில், ஆராய்ச்சியின் அடிப்படையில் பார்ப்பது இழுக்கானதல்ல. வள்ளுவரும் தனக்கு முன்னால் எழுப்பப்பட்ட கருத்துகளை வினா எழுப்பி விமர்சித்திருக்கிறார், பேசியிருக்கிறார். இந்தக் கருத்தைப் பொறுத்தவரை விலைமாதர்கள் வள்ளுவரிடம் வந்து பேசுகிறார்கள் - எங்களை ஏதில் பிணம் என்று சொல்லி விட்டீர்கள். தவறுமில்லை. ஏனென்றால் நாங்கள் ஆடவரைத் தழுவும்போது எங்கள் ஆன்மா வெளியேறி விடுகிறது என்று சொல்லும்போது நிச்சயம் வள்ளுவரின் உள்ளம் கரையவே செய்யும் என்று நான் நம்புகிறேன். அந்த வகையில் என் கவிதையின் வாயிலாக விலைமாதர்களின் துயரங்கள் வெளியிடப்பட்டதாகத்தான் நான் கருதுகிறேன்.
நூலில் உள்ள ’எட்டாவது சீர்’ மிகவும் அருமையான கற்பனை. எழுதப்பட்டதைவிட எழுதப்படாமல் தொக்கி நிற்பதுதான் உன்னதமானது என்று சொல்லப்படுவதுண்டு. ‘ஏழு சீர்களுடன் ஏன் நிறுத்தி விட்டாய் வள்ளுவா? எட்டாவது சீரைத் தொட்டு விடாமல் தடுத்தது எது?’ என்று கேட்டிருக்கிற கற்பனை தமிழுக்குப் புதிது. இந்தக் கேள்வி எப்படித் தோன்றியது?
ஏழு சீருக்கு மேல் குறள் எழுத முடியாது. ஒன்றே முக்கால் அடியில் வரும்போது இரண்டடியில் சமமாக இல்லை என்று கருதலாமே தவிர, யாப்பு இன்னொரு சீருக்கு இடம் தராது. அது ஒரு கற்பனை. நமக்குள் ஒரு கேள்வி எழுப்பினால் சமப்படுத்துவது போல இன்னொரு சீர் இருக்குமானால் அந்த சீர் எதுவாக இருக்கும்? அந்த சீரில் என்ன கருத்து இருந்திருக்கும்? இப்படி அந்த எட்டாவது சீர்களெல்லாம் வள்ளுவர் முன்னால் வந்து ’ஏன் எங்களை எழுதவில்லை?’ என்று கேட்கிற ஒரு கற்பனை. நீங்கள் சொன்னது போல கவிதையில் சொற்களில் வெளிப்படாமல் மறைந்திருக்கிற எண்ணங்கள் அதிகம். What is unsaid is poetry என்று வருகிறபோது ஏன் இன்னொரு சீர் இல்லை என்று கேள்வி எழுப்பிப் பார்க்கிறபோது வள்ளுவர் இன்னொரு சீருக்கு நம்மை சிந்திக்கச் சொல்கிறாரோ என்று தோன்றியது. வள்ளுவருடைய சிந்தனையில் எனக்கு மிகவும் பிடித்தது - யாருடைய சிந்தனைக்கும் அவர் விலங்கு தயாரிக்கவில்லை. நம் நாட்டில் பெரியவர்களே நிறைய சிந்தித்து விட்டார்கள், நாம் சிந்திக்க வேண்டாம் என்று சிலர் நினைக்கிறார்கள். தொடர்ந்து சிந்திப்பதுதான் உயிரோட்டமுள்ள சமூகத்துக்கு அழகு. அந்த வகையில்தான் எட்டாவது சீரை நான் இயற்றினேன். இதை சிவத்தம்பி அவர்கள் சுவையான கற்பனை என்று வர்ணித்திருக்கிறார்.
சாகித்ய அகாதமியின் வரலாற்றில் உங்களுக்குக் கிடைத்ததையும் சேர்த்து கவிதை மூன்று முறை விருது பெற்றிருக்கிறது. அதுவும் 5 ஆண்டுகளுக்குள் மட்டும்தான். ஏன் கவிதைக்கு இந்த நிலை?
தமிழ்க் கவிதைக்கு இந்த நிலை ஏற்பட்டிருப்பதைப் பற்றி நான் கண்ணீர் வடிப்பதைவிடவும் தமிழ் அதிகமாகக் கண்ணீர் வடிக்கும் என்று நான் நினைக்கிறேன். தமிழில் கவிஞர்கள் தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறார்கள். கவிதை மட்டுமே சமுதாயப் பதிவாகவும், வரலாற்றுப் பதிவாகவும் இருக்க முடியும். ஈழத்துப் போராட்டமோ, போபால் விஷ வாயு சம்பவமோ, குஜராத் பூகம்பமோ, சுனாமியோ எதுவாக இருந்தாலும் உடனடியாகப் பதிவு செய்கிற இலக்கிய வகைமை கவிதைதான். நமது வரலாற்று நவீனம் எழுதுகிறவர்கள் எல்லாம் ராஜராஜன் காலத்திற்கும் குலோத்துங்கன் காலத்துக்கும் போய் பழைய பிணங்களைக் கழுவி எடுத்து, பழைய மகுடங்களைத் துடைத்து எடுத்து, பாத்திரங்களை உருவாக்கி, சம்பவங்களை உருவாக்கி, எப்போதோ மடிந்து போன குதிரைகளை எல்லாம் மறுபடியும் எழுப்பி, அந்தப்புரங்களுக்கு ஆளனுப்பி, சரித்திரக்கதை படைக்கிற சமூகத்தின் இடையில் நடப்புகளை - இன்றைய நிகழ்வுகளைப் பதிவு செய்கிற நியாயமான காலத்தின் மனச்சான்றாக இருப்பது கவிதை. அப்படிப்பட்ட கவிதை பாரதியினால் புதுப்பிக்கப்பட்டு தொடர்ந்து உயிரோட்டத்துடன் இருந்து வருகிறது. தமிழைப் பொறுத்தவரையிலும் சாகித்ய அகாதமி மீது குறையாகச் சொல்ல மாட்டேன். கவிதைக்குப் பரிசு தர வேண்டாம் என்று சாகித்ய அகாதமி நினைத்திருக்காது. ஆனால் தமிழில் இருந்த நடுவர்கள் தமிழ்ப் படைப்புகள் என்று வருகிறபோது கவிதையைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. ஒரே ஒரு முறை வெள்ளைப் பறவை என்ற நூலை எழுதிய சீனிவாச ராகவனுக்கு விருது வழங்கப்பட்டது. ஆனால் மக்கள் மத்தியில் அவர் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்றுதான் அறியப்பட்டிருந்தாரே தவிர கவிஞராக எண்ணப்பட்டாரா என்றால் உடன்பாடான பதில் இல்லை. அதற்குப் பின்னால் பாரதிதாசனும், கண்ணதாசனும் விருது பெற்றார்கள். பாரதிதாசன் நாடகத்துக்கும், சேரமான் காதலி என்ற நாவலுக்கு கண்ணதாசனும் விருது பெற்றார்கள். தமிழ்க் கவிஞர்களை கண்ணெடுத்துப் பார்க்காத தமிழ் உலகம்தான் இதற்குக் காரணம் என்று நான் கூறுவேன். நடுவர்களாக இருந்த தமிழர்கள் நேர்மையாளர்களாக, தமிழ்க்கவிதை மீது பார்வை உடையவர்களாக, கவிதையும் படைப்பு சார்ந்ததுதான் என்ற நியாயவுணர்வு உடையவர்களாக இருந்திருப்பார்களே ஆனால் எனக்கு முன்பே பத்துப் பதினைந்து கவிஞர்கள் பரிசு பெற்றிருப்பார்கள்.
கவிதை எழுதத் துவங்கியது எப்படி? தமிழில் ஆர்வம் வந்தது எதனால்?
என் ஊர் சென்னிமலை. பெரியாருடைய ஊருக்குப் பக்கத்துக் கிராமம். அதன் சரிவுகளில் மழைக்காலத்திலும் பனிக்காலத்திலும் திரிவது என் இளம்பருவத்து இயல்பு. எங்கள் ஊரில் நெசவுத்தொழில் தறிகளின் ஓசைகளும் ராட்டைகளின் ஓசையும் எழுதப்படாத கவிதைகளின் சந்தங்களாகவே எனக்குப் பட்டன. ஊர், மண் ஒரு காரணம். இன்னொரு காரணம் என் தந்தைக்குத் தந்தை சிறந்த ஒரு தமிழறிஞர். அவரிடம் பல ஆங்கிலேயர்கள் தமிழ் படித்தார்கள். என் தாத்தா படித்த நூற்றுக்கணக்கான நூல்கள் என் தந்தை வழியாக என்னிடம் வந்து சேர்ந்தன. தந்தை என் இளம் பருவத்திலேயே இறந்து விட்டார். என் தாயும் தமிழ் படிப்பார். மஸ்தான் சாகிபு பாடல்கள், தாயுமானவர் பாடல் எல்லாம் படிப்பார். தாயையும் என் ஏழு வயதிலேயே இழந்து விட்டேன். அதற்குப் பிறகு என் அண்ணன் தங்கவேலு, இலக்கியம் கற்றவர். அவர்தான் சங்க இலக்கியத்திலிருந்து பாரதிதாசன் வரை அறிமுகம் செய்து வைத்தவர். இளம்பருவத்தில் தமிழ் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் எல்லாம் உண்மையான தமிழாசிரியர்கள். உவமை, பண்புத்தொகை என்று வெறுமனே இலக்கணத்தோடு முடக்கி விடாமல் தமிழ் என்றால் தமிழ் மக்கள், தமிழ்ப் பண்பாடு என்றெல்லாம் கற்பித்தவர்கள். இவையெல்லாம் உந்துசக்தியாக இருந்தன. பிற்பாடு கல்லூரியில் யாப்பு இலக்கணம் கைவந்தது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடன் ஐம்பதில் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. ஐம்பத்துநான்கு முதல் பத்தாண்டு காலம் அவருடன் நெருக்கமாகப் பழகினேன். பாரதிதாசனுடன் எனக்குக் கிடைத்த தொடர்பு கவிதையில் ஒரு கருத்துநிலை மாற்றத்தை உண்டாக்கியது.
ஹைக்கூ, லிமெரிக் போன்ற பிறநாடுகளின் வடிவங்களை அறிமுகப்படுத்தியவர் நீங்கள். ஐந்து வரிகளில் வரும் லிமெரிக் வடிவம் தமிழில் ஹைக்கூ அளவுக்குப் புகழ்பெறவில்லை அல்லவா?
தமிழில் சில வெளிநாட்டு வடிவங்கள் வெற்றி பெறாமல் போய்விட்டன. சான்னெட் என்ற பதினான்கு வரிக் கவிதையை பரிதிமாற்கலைஞர் முயன்று பார்த்தார், பாரதியும் முயன்றார். புதுக்கவிதை பெரிய வெற்றி பெற்றது. காரணம், அது ஏறத்தாழ நம் அகவற்பாவின் தொடர்ச்சி என்று கருத முடியும். அப்படித்தான் புதுக்கவிதையின் முன்னோடிகளும் சொன்னார்கள். லிமெரிக் என்ற ஐந்து வரிக்கவிதையை ஈழத்தில் மகாகவி முதலில் எழுதினார். தமிழகத்தில் கோவேந்திரன் எழுதினார். இருவருமே அதற்கு ’குறும்பா’ என்று தலைப்புக் கொடுத்தார்கள். அதை ‘குறுகிய பா’ என்றும் சொல்லலாம் ‘குறும்பாக’ எழுதப்படுகின்ற கவிதை என்பதால் கரும்பு என்று எடுத்துக்கொள்ளவில்லை போலும். ஆங்கிலத்தில் லிமெரிக் என்பது பெரும்பாலும் அங்கதமாக எழுதப்படது. அதையும் செம்மைப்படுத்தி உயர்வான நிலைக்கு சிலர் கொண்டு சென்றார்கள். இந்தியாவில் சத்யஜித் ரே லிமெரிக் எழுதினார். மராட்டியிலும் எழுதியிருக்கிறார்கள். தமிழில் வெற்றி பெறாததற்குக் காரணம் யாப்பில் முதல் இரண்டு அடி, ஐந்தாவது அடி ஓர் இயைபுச் சந்தமுடையதாகவும் மூன்றாவது-நான்காவது அடி ஓர் இயைபுச் சந்தமுடையதாகவும் இருக்க வேண்டும். காவடிச் சிந்து எழுதிப் பழகியவர்களுக்கு லிமெரிக் கடினமே இல்லை. மூன்று வரிகள் என்பது ஹைக்கூவின் எல்லை. இந்த மூன்று வரிக்குள் ஐந்து வரி லிமெரிக்கில் உள்ள சந்த அமைப்பை எழுதுகிற முயற்சி வருகிறபோது லிமெரிக்கின் சந்தமும் ஹைக்கூவின் வரியமைப்புமாக இப்படி ஒரு கலப்பினத் தன்மையை நான் உருவாக்கினேன். அதற்கு ஒரு தாக்கம் ஏற்பட்டிருப்பதை உணர்கிறேன். பலர் அதைக் கையாள்கிறார்கள். அண்மையில் கல்கியில்கூட லிமெரிக் கவிதைகள் வெளிவந்தன.
மீரா, சிற்பி, அப்துல் ரகுமான், நீங்கள் எல்லாரும் புதுக்கவிதைக்கு முன்னோடிகள். உங்களுக்கு முன்னோடி யார்?
எங்களுக்கு முன்னோடி ஒருவகையில் ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், வல்லிக்கண்ணன் ஆகியோர். ஆனால் அவர்கள் தமிழில் புதுக்கவிதையைக் கொண்டு வந்ததற்கும் நாங்கள் கொண்டு வந்ததற்கும் அடிப்படையில் கருத்து நிலையில் வேறுபாடு உண்டு. புதுக்கவிதையை ஒரு வடிவமுயற்சி என்ற வகையில் மேல்நாட்டிலிருது கொண்டு வந்து அவர்கள் எழுதினார்கள். பெரும்பாலும் தற்சார்பான பொருண்மைகளை உள்ளடக்கியதாகவே அவை இருந்தன. அந்தக் கவிதைகளில் பாரதி-பாரதிதாசன் கண்ட சமுதாயத் தாக்கங்கள் இல்லை. அந்தத் தாக்கங்களை புதுக்கவிதையில் கொண்டு வந்தவர்கள் என்று சொன்னால் நீங்கள் குறிப்பிட்ட மீரா, சிற்பி, காமராசன், புவியரசு, பாலா, ரகுமான், இன்குலாப், மேத்தா என்று பெரிய பட்டாளம்... பெயரைச் சொல்வதில் ஒரு சிக்கல் - எவருடைய பெயராவது விட்டுப்போகலாம்.
அப்படியென்றால், தனிநபர் உணர்வுகள் சம்பந்தப்பட்டதாக இருந்த புதுக்கவிதையை மக்கள் கவிதையாக மாற்றியவர்கள் நீங்கள் என்று சொல்லலாமா?
சொல்லலாம். ஆனால் இப்படிச் சொல்வதால் நாங்கள் எல்லாம் தற்சார்பான கவிதைகள் எழுதவில்லை என்றோ, அவர்களும் முழுக்க முழுக்க தற்சார்பான கவிதைகளே எழுதினார்கள் என்றோ பொருள் அல்ல. இங்கே மிகுதி பற்றி நாம் கணக்கிட வேண்டும்.
தமிழ் இலக்கியம் என்றாலே மணிக்கொடி, எழுத்து என்று பேசப்படுவதுபோல கவிதை என்றதுமே வானம்பாடி பேசப்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற வானம்பாடி களைத்துத் தரையிறங்கி விட்டது எப்படி?
வானம்பாடியின் இதயம் இன்னும் வானத்தில் இருப்பதாகத்தான் கருதுகிறேன். எழுபதுகளில் பெரிய தாக்கத்தை உருவாக்கியது வானம்பாடி என்று கைலாசபதி உள்ளிட்ட பலர் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். எழுபதுகளில் ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டபோது வானம்பாடியில் சிலர் அந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதில் ஒரு தயக்கம் ஏற்பட்டது. இன்னொன்று, வானம்பாடிக்கு ஓர் அரசியல் கருத்து உண்டா என்ற ஒரு கேள்வி எழுந்தது. மானுடம் பாடும் வானம்பாடி என்று வந்தபோது பெரும்பாலும் இடதுசாரிக் கருத்தின் மையமாக இருந்தது வானம்பாடி இயக்கம். இடதுசாரிக்கருத்துகள் வரும்போது குறுகிய இன-மொழி வாதங்கள் கைவிடப்பட்ட நிலையில் பரந்துபட்ட மானுட சமுதாயத்தை நோக்கும் இயக்கமாக வானம்பாடி இருந்தது. அப்போது இந்தியாவில் இருந்த அரசியல் நிலைமை பெரிய மாறுதல் ஏற்படப் போகிறது என்ற சூழல் இருந்தது. கோவை ஒரு தொழில்நகரம். அங்கேதான் வானம்பாடி பிறந்தது. பிறகு அரசியல் நமக்கு அவ்வளவு முக்கியமில்லை, கலை அளவில் கவித்துவ அளவில் நிறுத்திக்கொள்ளலாம் என்ற நிலைபாடு ஏற்பட்டுவிட்டதோ என்று நினைக்கிறேன். பிறகு சிற்பி அதை பொள்ளாச்சிக்குக் கொண்டு சென்றார். அதற்குப் பிறகும் நல்ல பல வெளியீடுகள் வந்தன. நெருக்கடி காலம் வந்தபோது பலர் அதை எதிர்கொள்ள முடியாமல் விலகி விட்டார்கள். வானம்பாடி இயக்கத்திற்கான அரசியல் தளத்தில் இருந்த வெப்பம் குறைந்து போன நிலையில் வானம்பாடி இயக்கத்தின் நிலைமை பின்வாங்கி விட்டதாக நினைக்கிறேன்.
தமிழன்பன் ’ஈரோடு தமிழன்பன்’ ஆனது எப்போது?
இப்படிப் போட்டுக்கொள்வதாலேயே சென்னிமலைக்காரர்கள் என்மீது சினம் கொள்வதற்கான நிலையை ஏற்படுத்தி விட்டதாகத் தோன்றுகிறது.... கவியரங்குகளில் கலந்துகொள்ளும்போது கலைஞர் அவர்களுக்கு என் குரலிலும் தமிழிலும் விருப்பம் உண்டு. சேலத்தில் நான் பேசிக்கொண்டிருக்கையில் அந்த வழியாகப் பயணம் செய்தவர், நின்று கேட்டுவிட்டுப் போனார். பிறகு என்னைப் பற்றிக் கேட்டறிந்தார். அவர் கவியரங்கத்தில் என்னை அறிமுகம் செய்யும்போது ’ஈரோடு தமிழன்பன்’ என்று அறிமுகம் செய்தார். அது அப்படியே என்னோடு சேர்ந்து விட்டது. ஈரோடு என் பேரோடு அப்படியே வேரோடு ஒட்டிக்கொண்டது.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனுபவம் எப்படி இருந்தது?
சென்னையில் தொலைக்காட்சி தொடங்கிய 75இலேயே நான் செய்தி வாசிப்பாளராகப் போனேன். நல்ல அனுபவம். தமிழை நன்றாகச் சொல்வதற்கான வாய்ப்பாக இருந்தது. எனக்கு என்ன வருத்தமென்றால் தமிழை தமிழ்நாட்டில் நன்றாகச் சொல்பவன் தமிழன்பன் என்று சொல்கிறபோது எனக்கு வருத்தம் ஏற்படும். தமிழில் சில நல்ல சொற்களை நான் கையாள்வதற்கு வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக் கொண்டேன். செய்திகள் முடிவடைந்தது என்பதை மாற்றி செய்திகள் நிறைவடைந்தன என்று சொன்னேன். முதலில் எதிர்ப்புகள் இருந்தன. பிறகு ஒப்புக்கொண்டார்கள். பின்னர் மற்றவர்களும் மாற்றிக்கொண்டார்கள். ஆனால் பார்ப்பவர்கள் எல்லாம் செய்தி வாசிப்பவர் கவிதை படிக்கிறார் என்று சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை செய்தி வாசிபவன் என்ற பிம்பம் கவிஞன் என்ற பிம்பத்தை நொறுக்கி விட்டபடியால் இலக்கிய உலகத்தில் முன்பே கிடைத்திருக்க வேண்டியதைக் கிடைக்காமல் செய்ததற்காக செய்தி வாசிப்பாளன் தமிழன்பன்மீது எனக்கு கோபம் உண்டு.
- தமிழன்பனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்து அவர் தில்லி வந்தபோது, நான் நடத்தி வந்த தலைநகரத் தமிழோசை 2005 மார்ச் இதழில் வெளியான நேர்காணல். வானொலிக்கான நேர்காணல் உரையாடலில் பாலாவும் பங்கேற்றார் (படத்தில் வானொலி நிலையம்-படத்திலிருந்து எடுத்த படம்). நேர்காணல் சிறப்பாக அமைந்திருந்ததாக தமிழன்பனும் பாராட்டினார்.

Comments

  1. தமிழன்பர்க்கான
    தமிழ்ப்பகிர்வு....!

    தொடர்ந்து தாருங்கள் தோழர்.

    த ம முழுமுதற்கு

    ReplyDelete
  2. நல்லதொரு நேர்காணல்...
    பகிர்வுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete

  3. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!

    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,

    தங்களது
    தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!

    வருக!
    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
    கருத்தினை தருக!

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  4. வணக்கம்
    இப்படியான நேர்காணல்கள் வழி நாங்களும் நல்ல தகவலை அறிய ’








































    வணக்கம்
    இப்படியான நேர்காணல் வழி நாங்களும் பல தகவலை அறிய முடிகிறது. தொடரட்டும் தோடுதல் வேட்டை த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-










    ReplyDelete
  5. // மற்றவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்... // அதே அதே...

    பணிவான ஈரோடு தமிழன்பனுக்கு பணிவான பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ரூபனிடம் பேச வேண்டும்....

    ReplyDelete
  6. ஈரோடு தமிழன்பன் எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பதில் எனக்குப் பெருமை உண்டு. பழகுதற்கு இனியவர்.
    பல முறை அவருடன் பேசும் வாய்ப்பினைப் பெற்றவன் நான் என்பதிலும் மகிழ்ச்சி காண்கின்றறேன்
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
  7. நல்ல தகவல் பதிவு தோழரே...
    தம 5

    ReplyDelete
  8. அன்புள்ள அய்யா,

    ஈரோடு தமிழன்பனுடன் நேர்காணல்- ஒரு நல்ல பகிர்வு.

    விலைமாதர்கள் வள்ளுவரிடம் வந்து பேசுகிறார்கள் - எங்களை ஏதில் பிணம் என்று சொல்லி விட்டீர்கள். தவறுமில்லை. ஏனென்றால் நாங்கள் ஆடவரைத் தழுவும்போது எங்கள் ஆன்மா வெளியேறி விடுகிறது என்று சொல்லும்போது நிச்சயம் வள்ளுவரின் உள்ளம் கரையவே செய்யும்.
    -விலைமாதர்களின் துயரங்கள் வெளியிடப்பட்டதாகத்தான் நான் கருதுகிறேன்.

    பாரதிதாசனும், கண்ணதாசனும் விருது பெற்றார்கள். பாரதிதாசன் நாடகத்துக்கும், சேரமான் காதலி என்ற நாவலுக்கு கண்ணதாசனும் சாகித்ய அகாதமி விருது பெற்றார்கள்.

    தமிழன்பன் ’ஈரோடு தமிழன்பன்’ ஆனது எப்போது?
    கலைஞர் அவர்கள் கவியரங்கத்தில் என்னை அறிமுகம் செய்யும்போது ’ஈரோடு தமிழன்பன்’ என்று அறிமுகம் செய்தார். அது அப்படியே என்னோடு சேர்ந்து விட்டது. ஈரோடு என் பேரோடு அப்படியே வேரோடு ஒட்டிக்கொண்டது. இது போன்ற பயனுள்ள பல தகவல்கள் திருமிகு. ஷாஜகான் அவர்களின் பக்கத்தில் இருந்து அறியக் கிடைத்தது.

    நன்றி.
    த.ம. 6.

    ReplyDelete
  9. தகவல் பல அறிந்தோம். அருமையான பகிர்வு!

    ReplyDelete
  10. தரமுள்ள பதிவு! தவறாமல் அனைவரும் படிக்க வேண்டும் தமிழன்பன் பதிலும் கேள்விகளும் அருமை!
    த-ம7

    ReplyDelete
  11. பயனுள்ள பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  12. மிக ஆழமான இலக்கிய பதிவு...!

    " எந்த நூலையும் விமர்சனம் செய்ய உரிமை இருக்கிறது. வேதங்களையும் விமர்சனம் செய்யலாம். கடவுளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பது என் கருத்து. ஆனால் வள்ளுவரை விமர்சனம் செய்வதன் மூலம் வள்ளுவரை விட நான் பெரிய மேதை என்று நான் நினைக்கவில்லை. அதே சமயத்தில் வள்ளுவரிடம் ஒரு கேள்வி கேட்க முடியாத ஒரு பேதையும் இல்லை நான். "

    " என் கருத்தை நான் சொல்ல எனக்கிருக்கும் அதே உரிமை அந்த கருத்தை எதிர்ப்பதில் உனக்கு உள்ளது " என்ற விக்டர் ஹூயூகோவின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன ! அனைத்தையும் ஆரோக்யமான கேள்விகளுக்கு உட்படுத்தும் சமூகமே அறிவை விருத்தி செய்யும்.

    கவிதை மட்டுமல்ல, சமகால அவலங்களை பதிவு செய்யாத, வெறும் வார்த்தை அலங்காரங்களை மட்டுமே படைப்பாக கொண்ட எந்த எழுத்து படைப்பும் இலக்கியமாகாதுதான் !

    மிக சிறப்பான பதிவு !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்
    http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி



    ReplyDelete

Post a Comment

வருக வருக