ஸ்ரீ
மதுரையில் நிலாநோக்கு நாள் என்று கலிலியோ அறிவியல் மையம் ஒரு நிகழ்வை வைத்திருக்கிறது போகலாமா என்றார்?
நாசாவில் இருந்து சான்றிதழ் வேறு தருவதாக சொன்னதும் சரி போகலாம் என்றேன். சனிக் கிழமை அதிகாலை எழுந்து பாதித் தூக்கத்திலேயே பேருந்தைச் செலுத்திய ஓட்டுனரின் திறமையை வியந்தவாறே மாட்டுத்தாவணியை (அட மதுரை பேருந்து நிலையத்தின் பெயர்) அடைந்தோம்.
ஒருவழியாய் சிம்மக்கல் சென்று நிகழ்வு நடக்கும் மணியம்மை மழலையர் பள்ளியை விசாரித்து அடைந்தோம். இதன் நடுவே சுரபி என்று ஒரு அமைப்பு இருப்பதாகவும் அது மதுரைத் தெருக்களில் மனநலமற்ற, குடும்பத்தினர் கைவிட்ட நூற்றி அறுபத்தி ஐந்து பேருக்கு உணவு அளித்து வருவதாகவும் சொன்னார். ஸ்ரீமலையப்பனுடன் ஒன்றாக ஆசிரியர் கல்விப் பயிற்சியில் பயின்றவர் என்பதால் ஸ்ரீ அவரை அழைத்தார்.
நான் பிரத்தியோகமான கோணங்களில் படங்களை எடுத்து முகநூலில் பிரபலமாக இருக்கும் திரு பிராங்களின் குமார் அவர்களை அழைத்தேன்.
மணியம்மை பள்ளி என்றவுடன் எனக்குப் புரிந்திருக்க வேண்டும். பள்ளியை அடைந்தவுடன்தான் புரிந்தது. தந்தை பெரியாரின் தொண்டர் நடத்தும் பள்ளி!
நிலா நோக்கு நாள் அரங்கில் இருந்த சுவரொட்டிகளை பார்த்து நாற்காலிகளை எடுத்துப் போட்டு அமர்ந்தோம்.
சிறிது நேரத்திலேயே கல்விக்கென வலைப்பூவில் தொடர்ந்து எழுதிவரும் மதுரை சரவணன் வந்தார். எங்களை வரச்சொன்ன கல கல வகுப்பறை சிவா மட்டும் மிஸ்ஸிங். இவர் விகடனால் அடையாளம் காட்டப்பட்ட அறம் செய்ய விரும்பு நூறு பேரில் ஒருவர்!
ஒருவழியாய் தனது மகனுடன் சிவாவும் வந்தார். எங்களுக்கு மகிழ்வு. நால்வரானோம்.
நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்கள் திரு. சிவசுப்பிரமணியன் மற்றும் பார்க் நிறுவனத்தின் முன்னாள் அணுவியல் அறிஞர் ஜெயக்குமார் அவர்களும் வந்தனர். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
நிகழ்வில் இஸ்ரோ அறிவியல் ஆய்வாளர் திரு.சிவசுப்பிரமணியன் அவர்கள் பேசும் பொழுது வழக்குத் தமிழில் நிலவின் இயல்புகளை அதில் எழும் தூசி மண்டலங்களை, ப்ளுட்டோனியம் அணுஉலைகளை அமைக்கவேண்டிய அவசியத்தை சொன்ன பொழுது என்னை மறந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.
தமிழ் வளர்த்த மதுரையில் தாய்மொழியிலேயே உயர் நுட்ப அறிவியலைச் சொன்ன விஞ்ஞானிக்கும் ஏற்பாடு செய்த கலிலியோ அறிவியல் மையத்திற்கும் நன்றிகள் சொன்னால் மட்டும் போதாது.
புதுகையில் ஒரு கலிலியோ அறிவியல் மையத்தை துவக்குவதே சரியாக இருக்கும்.
இதனிடையே பிரான்க் வந்துவிட வெகுநேரம் அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஸ்ரீ ரொம்ப கவனத்துடன் வகுப்பில் இருந்தார். பின்னர் ஐவரும் அருகே இருந்த தேநீர்க் கடையில் தேநீர் அருந்திவிட்டு சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
கவிஞர் பிராங்களின் குமார், ஆசிரியர் மலை |
பின்னர் பள்ளியின் தாளாளரைச் சந்தித்துவிட்டு பெரியார் பிறந்த தினத்திற்கு அவர் மாநகரெங்கும் ஒட்டிய சுவரொட்டிக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.
பேசாமல் வந்திருந்தால் உடன் புதுகை வந்திருப்போம். விதைக்கலாம் அமைப்பிற்கு ஒரு ஆக்கர் வாங்க அருகே இருந்த கடையில் விசாரித்தோம். ஸ்ரீ சுரபி சேதுவை அழைக்க அவர் ஒரு ஆம்னியில் வந்து எங்களை அள்ளிப்போட்டுகொண்டு நீண்ட நேர விசாரணை, நீண்ட தொலைவு நடை என மதுரையை அளந்தோம்.
சந்தை, ஆட்டுச் சந்தை என மதுரை தனது வீதிகளுக்குள் மிக கவனமாய் வைத்திருக்கும் தொன்மச் சான்றுகளைப் பார்த்து வியந்தபடி ஆக்கரை தேடினோம். ஒரு பயனும் இல்லை.
மூன்றாவது முறை மதுரை சந்தைக்குள் சென்றபொழுது ஒரு நண்பர் தனது கடையில் இருந்த ஆக்கரை காண்பித்தார். நான்காயிரம் ரூபாய் வரும் செடி வைக்க இதைவிட சின்ன ஆக்கர் போதும். நான் சொல்ற இடத்துக்கு போங்க என்று சொல்லவும் பணியை சுரபி சேதுவிடம் ஒப்படைத்துவிட்டு மதிய உணவிற்கு பேச்சியம்மனை அடைந்தோம்.
சுரபியின் தலைமை அலுவலகம் மதுரை பைகாரவில் பழைய காலனியில் இருக்கிறது. மெல்லப் பேச ஆரம்பித்தோம். தனது இளமைக்காலத்தின் புயல்களை சொன்ன சேதுவை உள்வாங்க எனக்கு சிறிது நேரம் பிடித்தது.
வாழ்வு எல்லோருக்கும் ரோஜாபூக்கள் கொட்டப்பட்ட வழியாக இருப்பதில்லை. சேதுவின் வாழ்வில் எத்துனையோ சோதனைகள். சோதனைகள் அவரை தீவிர ஆன்மீகவாதியாக மாற்றியிருக்கிறது. வீட்டில் அவர் வைத்திருந்த கருமாரியம்மன் சிலையையும், அம்மனுக்கு செய்யப்பட்ட அலங்காரத்தையும் பார்த்த பொழுது எழுந்தது கலவையான உணர்வு.
என்னங்க கருமாரியை வீட்டில் வச்சுருக்கீங்க என்றால் அம்மாதானே சார் என்கிறார் சேது! அந்தக் கருமாரியம்மன் எனக்குள் எழுப்பிய அதிர்வுகள் பிரத்தியோகமானவை!
சுரபியின் இன்னொரு தூண் திரு. குமார். வேறு எந்தப் பணியிலும் இல்லாத இவர் ஒரு நல்ல சமையலர், ஓட்டுனர் எனவே அதிகாலை மூன்றுமணிக்கு எழுந்து சமைக்கும் இவர் சுரபியின் இரண்டாவது உறுப்பினர். இவர்கள் இல்லாமல் இன்னும் ஏராளமான நல்ல இதயங்கள் இந்தச் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
மாதம் ஒரு லட்சத்திற்கு குறையாமல் செலவு செய்யும் சேதுவுக்கு வரவுகள் நம்போன்றோர் அளிக்கும் சிறு தொகைகள்தான்.
இது இல்லாமல் மதுரை சந்தையில் காய்கறிவிற்கும் அத்துணைப் பேருக்கும் சுரபியைத் தெரிவதால் அவர்கள் ஒரு கிலோ காய்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு மூன்று கிலோ காய்கறிகளைத் தாரளமாக அளித்து வருகிறார்கள்.
எளிய மனிதர்களின் ஈரம் என் நெஞ்சை நெகிழவைத்தது. நன்றிகள் அவர்களுக்கு. இது தவிர மதுரையின் சில மளிகைக் கடைகள் இவர்களுக்கு சில பொருட்களை இலவசமாகத் தந்து வருகிறார்கள். வாழ்க அவர்களின் சமூக பொறுப்பு.
நீங்கள் சுரபிக்கு உதவி செய்ய விரும்பினால் ;
பணமாகத்தான் தரவேண்டும் என்பது இல்லை. பழைய துணிகள், காயலான் கடைக்கு போட வேண்டிய இரும்புப் பொருட்களைக் கூட வழங்கலாம்.
ஏன்?
மனநலமற்றோர் ஆடைகள் அடிக்கடி மாற்றவேண்டும். ஓரளவு பழைய துணிகள் இவர்களுக்கு பயன்படும். ரொம்ப பழைய துணி என்றால் அது இவர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு கட்டுப்போடவும், எடைக்கு போடவும் பயன்படும்.
மதுரைப் பகுதியில் இருக்கும் இல்லத்தரசிகள் உங்கள் பிரிட்ஜ்ஜில் உள்ள காய்கறிகளைக் கூட வழங்கலாம். ஒரு பிஸ்கட் பாக்கட்கூட போதும்.
மதுரை சாய்பாபா பக்தர்கள் ஒரு மூட்டை பிஸ்கட்டுகளைத் தருகிறார்கள். இவை எப்படி பயன்படுகின்றன என்று நான் தனியே ஒரு பதிவிட இருக்கிறேன்.
நல்ல மனிதர்கள், முகநூல் நண்பர்கள் சந்திப்பின் மகிழ்வில் இல்லம் வந்து இரவு பதினோரு மணிக்கு சுரபி குறித்த செய்தியை முகநூலில் பகிர்ந்துவிட்டு படுத்த பொழுது மணி பதினொன்று முப்பது.
அதிகாலை ஐந்துமணிக்கு ஒலித்த அலார்மை அமைதிபடுத்திவிட்டு தூங்கினேன். ஆறு இருபது. ஐந்து தவறிய அழைப்புகள்! மறுபடி ஸ்ரீ.
விதைக்கலாம் நிகழ்வு இருக்கிறதே.
புறப்பட்டு சந்தைப்பேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியை அடைந்த பொழுது அங்கே எனக்கு முன்னாள் சுரபி அமைப்பின் சேது, குமார், அவர்களின் ஆலோசகர்கள் திரு. ஸ்டாலின், திருமிகு. ஜகதீஸ்வரி என சிறப்பு அழைப்பாளர்கள் என்னை வரவேற்றனர்!
மகளிர் பள்ளி என்பதால் கன்றுகளுக்கான குழிகள் சிறிய அளவிலேயே இருந்தன. அவற்றை பெரிதாக்கி கன்றுகளை நடும் நிகழ்வு வழக்கத்தைவிட அதிக நேரத்தை எடுத்துக் கொண்டுவிட்டது.
எனக்கு முன்னாலேயே வளாகத்தில் இருந்த திரு. நாகு என்னை ஆச்சர்யப் படுத்தினார். கலாம் அய்யாவின் பெயருக்காவே வந்த அவருடைய வெறிபிடித்த பக்தர் திரு.வீரமாத்தி சுரேஷ் கன்றுகளுக்கான குழிகளை எடுத்தார். அவரிடம் சுமார் முப்பது பணியாட்கள் இருந்த பொழுதும் அவரே களத்தில் இறங்கி வேலை செய்தது கலாமின் மீது அவருக்கு இருந்த பக்தியை நாங்கள் உணர வைத்தது. அவருக்கு எனது நன்றிகள்.
தொடர்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் திரு. ரவி அவர்கள் நன்றிகளைக் கூறினார். சுரபி குறித்தும் அதன் பணிகள் குறித்தும் பலத்த கைதட்டல்களுக்கு இடையே திரு.சேது செல்லிமுடிக்க விதைக்கலாம் உறுப்பினர்கள் அதே இடத்தில் சுரபிக்கு நான்காயிரத்தி இருநூறு ரூபாய்களை வழங்கினர்.
மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் திரு. பரஞ்ஜோதி அமைப்பை நிறுவனப்படுத்துதல் குறித்துக் கூற, திரு.ஸ்டாலின் (ஒரு என்.ஜி.ஒ கன்சல்ட்டன்ட்) எப்படி இருக்க வேண்டும் ஒரு சேவை நிறுவனம் என்று விரிவாக விளக்கினார்.
இனிய நினைவுகளும், நெகிழ்வுகளும், எதிர்காலப் பொறுப்புகள் குறித்த சிந்தனைகளோடும் அடுத்த நிகழ்வுக்காக தயாரானோம்.
திரு மணி அவர்கள் விதைக்கலாம் சார்பாக சுரபிக்கு நிதியளித்த பொழுது |
திரு.ரவி உதவித் தலைமை ஆசிரியர் பேசிய பொழுது |
சந்தோஷ், இபு. |
வீட்டில் காத்திருந்த மைத்துனர் மணவை செந்தில் இரண்டு மணிநேரமாகக் காத்திருக்கிறேன் என்று சொல்லி வரவேற்றார். அவருக்கும் எனது நன்றி
நன்றிகள் உங்களுக்கும்
அன்பன்
மது
சுரபிக்கு நிதியளிக்க
Account Name
|
SURABHI TRUST
|
A/C NUMBER
|
1013101041318
|
BANK NAME
|
CANARA BANK
|
BRANCH
|
TOWN HALL ROAD
|
CITY
|
MADURAI – 625 001
|
IFSC
|
CNRB00091013
|
MICR
|
625015009
|
நல்ல பணிகள் பல செய்து வருகிறீர்கள்! வாழ்த்துக்கள்! சுரபிக்கு உதவும் எண்ணம் வந்துவிட்டது! செய்கிறேன்! நன்றி!
ReplyDeleteநீங்கள் இப்படி ஓடி ஓடி சேவை செய்வதை பார்த்தால் வியப்பாக இருக்கிறது !
ReplyDeleteநான் மதுரையில் தான் இருந்தேன்..நினைவெல்லாம் நிலா நோக்கு நாளில் தான் இருந்தது...சுரபி அருமையான செயல் ...ஆதரவு காட்ட வேண்டும் நாமும்...எங்கள் பள்லியில் விதைக்கலாம் செயல் படும்போது நான் இருக்க முடியவில்லை என்பது வருத்தமே...செடிகளை மரமாக்கி என் நன்றியைக்காட்டுகின்றேன்..நன்றி சகோ..
ReplyDeleteஅறப் பணிகள் தொடரட்டும்.... அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete