வகுப்பறை அனுபவங்கள் |
பல்லன் கோவில் தலைமையாசிரியர் திரு.சோமசுந்தரம் ஓர் மிகநல்ல ஆசிரியரும்கூட. அவர் பள்ளியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்திய திருவிழா ஒன்றைப் பகிர்ந்துகொண்டார்.
நான் கண்ட நல்லவர் திருவிழா!
பேராளுமைகளை கொண்டாடுவதுபோல் இயல்பு வாழ்வில் எதிர்வரும் சாதாரணர்களை நாம் கொண்டாடுவதில்லை. கொண்டாடுவது எவ்வளவு அவசியம் என்பது நமக்குப் புரிவதே இல்லை. இதன் மாதிரி நிகழ்வாக திருமிகு.சோமு அவர்கள் நான் கண்ட நல்லவர் என்ற தலைப்பில் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் பகிர்ந்துகொண்ட விசயங்களை என்னிடமும் பகிர்ந்துகொண்டார்.
பட்டுக்கோட்டை பக்கத்தில் இருந்து தனது உறவினர் ஒருவரை திருச்சி மருத்துவமனையில் சேர்க்க ஒரு வாடகை மகிழுந்து ஒன்றை அமர்த்தியிருக்கிறார் சோமண்ணா.
ஒரு ஓட்டை அம்பாசிடர்ரில் தலைமுடியெல்லாம் கலைந்து, அழுக்குமுகத்தோடு வந்திருக்கிறார் ஓட்டுனர். பார்த்தாலே டாஸ்மார்க்குக்கு நேர்ந்துவிட்ட ஆள்மாதிரி இருக்கானே. நல்லபடியா நம்மைத் திருச்சியில் கொண்டே சேர்ப்பானா அல்லது உடல் நிலை சரியில்லாத தனது உறவினர் பக்கத்தில் இன்னொரு படுக்கையில் இருக்க நேருமோ என்று பயத்துடனே துவங்கியிருக்கிறார் பயணத்தை.
எதிர்பார்ப்புக்கு மாறாக நல்லபடியாக திருச்சி மருத்துவமனையை அடைந்தது பயணம். உறவினரை நல்லபடியாக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அதே வண்டியில் புதுகை திரும்ப விரும்பியிருக்கிறார் அண்ணா.
வண்டியை எடுத்த ஓட்டுனர் அய்யா ஒரு ஐம்பது ரூபாய் கொடுங்க என்று கேட்கவும். அடப்பாவி நல்லபடியா புதுக்கோட்டை போக முடியாதோ என்றுதான் நினைத்திருக்கிறார். கிலியூட்டும் விதமாக ஐம்பதைப் பெற்றுக்கொண்ட ஓட்டுனர் பேருந்து நிலையத்தின் பக்கம் இறங்கி ஒரு செய்தித்தாள் சுருளுடன் திரும்பியிருக்கிறார்.
ஆகா பாட்டிலோடு வராப்லே. நாம இனி புதுக்கோட்டைக்கு இதே வண்டியில் போவோமா என்று குழம்பிய சோமு அண்ணா மீள்வதற்குள் வண்டி புதுகைச் சாலையில் விரைந்தது.
களமாவூர் ரயில்வே கிராசிங்கில் வண்டியை நிறுத்திய ஓட்டுனர் கையில் அந்த செய்திதாளில் சுருட்டப்பட்ட பொட்டலத்தை எடுக்க சோமு அண்ணாவின் சட்டைக்காலர் கொஞ்சம் கொஞ்சமாக உஷ்ணமாகத் துவங்கியிருக்கிறது.
வண்டிக்கு முன்னால் நடந்த ஓட்டுனர் அந்த செய்தித்தாள் சுருளை விசையோடு உதற சாலை ஓரத்தில் பறந்திருக்கின்றன வாழைப்பழங்கள். மரங்களில் இருந்த குரங்குகள் ஆளுக்கு ஒரு பழத்தை எடுத்துக்கொண்டு சாப்பிடத் துவங்க சோமு குழம்பிப் போய் கேட்டிருக்கிறார்.
என்ன பண்றீங்க?
இந்த பகுதி முழுதும் வயல்களும் மரங்களும் நிறைந்து இருந்தது ஒருகாலத்தில். அப்போது இந்தக் குரங்குகள் உணவிற்கு எந்தக் கஷ்டமும் படவில்லை. இன்னைக்கு வயல்கள் காணாமல் போய்விட்டன. மரங்களை வெட்டியாச்சு. இந்தக் குரங்குகள் சாப்பாட்டுக்கு எங்கே போகும்?
எனக்கு பசிச்சா உங்களைக் கேப்பேன் எதுனா வாங்கித் தருவீங்க. குரங்குகளுக்கு பசிச்சா யாருகிட்டே கேட்கும்? என்ன பண்ணும் அவை? எப்போ இந்த ரூட்ல வந்தாலும் இதைப் பண்ணுவேன் சார் என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.
அதுவரை அவரை வேறுமாதிரி பார்த்துக்கொண்டிருந்த சோமுஅண்ணாவிற்கு கொஞ்சம் வெட்கமாகக்கூட இருந்திருக்கிறது. இந்தச் சம்பவத்தை மாணவர்களிடம் பகிர்ந்துகொண்ட சோமு சொல்லியிருக்கிறார் அந்த ஓட்டுனர்தான் நான் கண்ட நல்லவர். நான் ரொம்பப் படிச்சிருக்கேன். நல்லா சம்பளம் வாங்குறேன், ஆனா அவர் குறைவாப் படிச்சிருக்கிறார் இருந்தாலும் என்னைவிட பல மடங்கு நல்லவர் அவர். அவர் கேட்ட கேள்வியை இன்னும் மறக்க முடியவில்லை? குரங்குக்குப் பசிச்சா யாருகிட்டே கேட்கும்? இந்த சிந்தனை படிச்ச எனக்கு வந்ததே இல்லை ஆனா படிக்காத அவருக்கு வந்துருக்கு என்று சொல்லி ஆசிரியர்களையும் மாணவர்களையும் அதே தலைப்பில் பேசச் சொல்ல நான் கண்ட நல்லவர் திருவிழா கலை கட்டியிருக்கிறது!
நல்ல விசயமாகீதே நம்ம வகுப்பில் செய்வோமா என்று செய்துபார்த்தேன். வாயைத் திறக்கவே மறுத்த குழந்தைகள் ஒருவழியாக பேச ஆரம்பித்தனர். பெரும்பாலும் இப்படித்தான் இருந்தது.
நான் வண்டியில் இருந்து கீழ விழுந்துட்டேன் எங்க குடும்பத்தோட பகையாளி ஒருத்தர் வந்தார் பகையை மறந்துட்டு என்னைத் தூக்கிவிட்டார். எனக்கு ஒருவர் பஸ் டிக்கட்டுக்கு பணம் கொடுத்தார், இழுப்பூரில் கொண்டே இலவசமாக என்னை இறக்கிவிட்டார் என தன்னை மட்டும் பிரதானப் படுத்தி பேசினார்கள் பிள்ளைகள்.
ஒரு குழந்தை சொன்னாள் அப்பா வேலைக்கு போகமாட்டார், தண்ணியப் போட்டுட்டு வந்து தகராறு பண்ணுவார், அம்மாவை அடிப்பார் ஆனால் அம்மா அதையெல்லாம் எங்களிடம் காட்டவே மாட்டாங்க, அம்மாதான் வேலைக்குபோய் எங்களைப் படிக்க வைக்கிறாங்க நான் பார்த்த நல்லவர் எங்க அம்மாதான். அந்தப் பிள்ளை நன்றாகப் படிக்கக் கூடியவள் என்பது எனக்கு பெரும் ஆறுதல்.
அதே சமயம் இந்த பகிர்வு அவளுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை வரவழைத்துவிடக் கூடாது என்று எத்துனை பேர் வீட்டில் இது நடக்குது என்று கேட்டபோது உயர்ந்தன முப்பது கரங்கள். (இவர்களில் பலரை வீட்டுப் பாடம் செய்யவில்லை என்று கடுமையாக திட்டிய தினங்கள் என் நினைவில் வந்தது- what a stupid I was!)
பகிர்வுகள் முடிந்தவுடன் மாணவர்களில் யார் சொன்ன நல்லவர் அமோக ஆதரவோடு இருக்கிறார்கள் என்று பார்க்க ஓட்டெடுப்பு ஒன்றை நடத்தினேன். முதல் இடம் ஒரு ஓட்டுனருக்கு, இரண்டாம் இடம் நடத்துனருக்கு மூன்றாவது இடம் கலாம் பெயரைச் சொல்லி மரக்கன்றுகள் தரும் ஒரு அமைப்பிற்கு.
வல்லத்திராகோட்டை அருகே நடந்தது இது.
ஓட்டுனர் தனது பேருந்தின் எதிரே வந்த போதை மனிதர்களை பார்த்திருக்கிறார். மூன்றுபேர் ஒரே வண்டியில் வந்திருக்கிறார்கள். மூன்று பேருக்கும் அதே இடத்தில் சுவர்க்கமோ நரகமோ உறுதி என்கிற வினாடியில் வண்டியை வளைத்து பக்கத்தில் இருந்த மரத்தில் மோதி நிறுத்தியதில் ஒரு கையை உடைத்துக் கொண்டவர் இவர். மாணவர்களின் ஏகோபித்த தேர்வு இவர்தான். (இதுகுறித்து நிறைய பேசுதல் உள்ளே இறங்கி ஆராய்தல் தவறு) நானும் ஆமோதித்தேன்.
நடத்துனர்.
இலுப்பூர் வழியில் பேருந்து விரைந்துகொண்டிருக்க தண்ணீர் கேட்டு ஒரு குழந்தை அழுதிருக்கிறது. யாரிடமும் தண்ணீர் இல்லாத நேரத்தில் பேருந்தை நிறுத்தி ஒரு கடையில் தானே இறங்கிப் போய்த் தண்ணீர் வாங்கித் தந்து விசிலை ஊதியிருக்கிறார் இந்த நடத்துனர்.
கலாம் இயக்கம்
இவர்கள் குறித்து முழு விவரம் தெரியவில்லை. ஏதோ ஒரு கிராமத்தில் கபடிப் போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் அனைவருக்கும் ஒரு மரக்கன்றைக் கொடுத்து வளர்க்க சொல்லியிருக்கிறார்கள்.
மகிழ்வுடன் நிறைவானது அன்றைய வகுப்பு.
நீங்கள் சிரிக்க ஒரு பகிர்வு
வகுப்பின் புறா வேட்டைக்கார மாணவர் ஒருவர் இருக்கிறார். நிறைய புறாக்களை பிடித்து விற்பதே இவர் பணி. வெறும் கையில் ஒரு கல்லை எடுத்து விசையுடன் வீசி பல புறாக்களை காலி செய்தவர் இவர். வேட்டையை இவர் பள்ளியிலும் தொடரவே ஒரு நாள் அழைத்து சத்தியம் வாங்கிக் கொண்டேன். இன்றுவரை புறாக்களை பிடிப்பதில்லை என்கிறார் இவர்.
நாங்கள் சிரித்தது இவரது பகிர்வின் பொழுதுதான். எங்களுக்கும் எங்க மாமாவிற்கும் சண்ட சார். பேசிக்க மாட்டோம். ஆனா ஒரு நாள் ஒரு டாட்டா ஏஸ் எங்க ஆட்டை அடித்துவிட்டு நிற்காமல் போனது. அப்போ நாங்க சத்தம்போட்டோம் ரோட்டல மரம் வெட்டிக்கொண்டிருந்த மாமா ஒரு கிளையை எடுத்து குறுக்கே போட வண்டி போகாமல் நின்றது. நாங்க சண்டைப் போட்டு ஐநூறு ரூபாய் வாங்கினோம். ஆடும் பிழைச்சுக்கிட்டு, அது போக வண்டியில் இருந்த ஐந்து பலாப்பழங்களை எடுத்துக் கொண்டோம். ஒன்ன எங்க மாமாவுக்கும் கொடுத்தோம். எங்களோட பேச்சு வார்த்த இல்லைன்னாலும் வண்டிய நிறுத்திய எங்க மாமாதான் நான் கண்ட நல்லவர். (எப்படி பேசுது பாருங்க!)
உரையாடல்கள் தேவையா?
ஆம், ஆளுமை வளர்ச்சி வெறுமே பாடத்தை மட்டும் படிப்பதால் நிகழ்வதில்லை. மாணவர்களுக்கு சரியான முன்மாதிரிகளை இனம் காட்டுவதும் அவசியம். எனவே செலவிட்டோம் ஒரு நாற்பத்தி ஐந்து நிமிடங்களை. மன்னிக்கவும் முதலீடு செய்தோம் என்பதே சரி.
சந்திப்போம்
அன்பன்
மது
பல்வேறு பணிகளுக்கு இடையிலும் மெனக்கிட்டு ஒரு நல்ல பகிர்வை தட்டச்சு செய்து இருக்கிறீர்கள். திருச்சி to புதுக்கோட்டை வழியில் உள்ள களமாவூர் பக்கம் முன்புபோல் அதிகம் குரங்குகள் இல்லை; உங்கள் பதிவைப் படித்ததும்தான் காரணம் தெரிந்து கொண்டேன். அடிக்கடி இதுபோல் நிறைய எழுதவும்.
ReplyDeleteஅப்பப்பா...ரொம்ப நல்லவங்க இவ்வளவு பேர் இருக்காங்களா?!.
ReplyDeleteஇதுதான் உண்மையான கல்வி. வாழ்த்துகள்..!
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நல்லவரைப் பார்த்திருப்பாங்க... அதில் குழந்தைகள் பார்த்த நல்லவர்கள் இப்படியான சிலர்... நல்ல பகிர்வு.
ReplyDeleteஒருநல்ல விஷயத்தை தொடங்கி வைத்த சோமு சாருக்கு வணக்கங்கள்.
ReplyDeleteஅதை தொடர்ந்து உங்கள் வகுப்பில் பயன்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்.
அப்புறம் ரெண்டு விஷயம்
பல இடங்களில் எழுத்துப்பிழைகள். நான் மாணவர் உரையாடல் பகுதியை கூறவில்லை. தூக்கக்கலக்கம் என நினைக்கிறேன்:)
ஆமோதித்தல் என்பதன் சரியான பொருள் ஏற்றுகொள்கிறேன் என்பதுதானா?? எனக்கு பல நாள் சந்தேகம்.
மிக அருமையாக வகுப்பு எடுக்கிறீர்கள்! குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்!
ReplyDeleteதோழார் மது! குடோஸ் உங்களுக்கு. அருமையான பகிர்வு...உங்கள் முயற்சியும்....உரையாடல் என்பது நீங்கள் சொல்லியிருப்பது போல் ஆளுமை வளர்ச்சிக்கு மிக மிக அவசியம்...உங்களுக்கு ஒரு பொக்கே! எங்கள் சார்பில்...நல்ல முதலீடு ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது!!!
ReplyDeleteவாழ்த்துகள்! மனமுவந்த பாராட்டுகள். தமிழில் பேச வைப்பது போல், அது நன்றாக வந்ததும், அப்படியே ஆங்கிலத்திலும் சிறிது சிறிதாகப் பேச வையுங்கள்...தாய் மொழி தமிழ் நன்றாக வந்துவிட்டால் ஆங்கிலம் என்ன எம்மொழி வேண்டுமானாலும் பேசிவிடலாம்...
இது சகோ கீதாவா துளசியா
Deleteயாராக இருந்தாலும் நன்றிகள்
இனி ஆங்கிலத்தில் பேச வைப்பதே நமது கடமை தோழர் ..
நன்றிகள் தோழர்
Deleteமது சார்
ReplyDeleteஉங்கள் அனுபவங்கள் சுவாரசியமானவையாக உள்ளன. ஆசிரியர் எப்போதும் கற்றுக் கொடுப்பவராகவே இருக்க முடியாது. மாணவர்களிடமிருந்து கற்றுக் கொள்பவராகவும் இருக்க வேண்டும் . இந்த நிதர்சனத்தை புரிந்திருக்கும் நீங்கள் சிறந்த ஆசிரியராக இருப்பீர்கள் என்பதில் ஐயமேயில்லை. உங்கள் மாணவர்கள் போலவே எல்லா அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் சிந்தனை சில நேரங்களில் ஆசிரியரையும் ஆச்சரியப்பட வைக்கும். நாட்டில் இருக்கும் நல்ல மனிதர்களில் நிறைய பேர் அந்த குழந்தைகளிடமே ஒளிந்து கொண்டிருப்பார்கள்.