முனைவர் பிரபு ஆர்.எம்.எஸ்.ஏ பயிற்சிகளின் மூலம் அறிமுகம், தொடர்ந்து படித்து வருபவர், அவரது வாட்சப் உரையாடல் ஒன்றை உங்களுடன் பகிர்வதில் மகிழ்வு ...
இவரது எழுத்துப் பாணி தனித்துவம் மிக்கது என்னுடைய விருப்பதிற்குரிய ஒன்று
உங்களுக்கு எப்படி
எண் உங்களும்தான் அவரோடு பேசலாமே
[10/17/2015, 2:29 PM] +91 94432 11985: பிரதேச பாஷைகளும் ‘இந்திய’ பாஷையும்
[முனைவர் எம். பிரபு]
இந்தியா பல நூறு மொழிகள் பேசப்படும் பிரதேசமாகவே எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட செவ்வியல் கலாச்சாரங்களைக் கொண்ட ஒரே பூமி இது. பழமையான ஒன்றுக்கொன்று வேறுபட்ட இனப் பாரம்பரியங்களைக் கொண்ட நிலவியலும் கூட. இவைகளில் பெரும்பாலானவை வளர்ந்தும் செழித்தும் வந்திருக்கின்றன. வேறு நாடுகளிலிருந்தும் மொழிகள் பல காரணங்கள் பொருட்டு இங்கு நுழைந்து செல்வாக்கை அடைந்திருக்கின்றன. மதம், அரசியல், வணிகம் போன்றவை பொருட்டு நுழைந்த மொழிகள் தவிர்த்து, இங்கிருந்து வெளியே சென்றவர்கள் கொண்டு வந்த மொழிகளும் இந்த மண்ணுடைய வரலாற்றில் உண்டு. புலம் பெயர்ந்தவர்கள் புது மண்ணின் அழகில், சிறப்பில் மயங்கி அங்கிருந்த இலக்கியங்களை இந்திய மொழிகளில் பெயர்த்த சம்பவங்கள் நிறைய உண்டு. இந்திய பாஷைகளை மொழியியல் ஆய்வுக்குட்படுத்துகிற போது, அவைகள் குறைந்த பட்சம் நான்கு வேறுபட்ட மூல மொழிகளில் இருந்து கிளைத்துள்ளதை அறிய முடியும். இந்திய மொழிகளையும் அவற்றின் வட்டார வழக்குகளையும் கணக்கிட்டால், ஆயிரத்தைத் தாண்டும்.
இந்தியாவின் “தேசிய மொழி” என்று எந்த ஒற்றை மொழியையாவது அறிவிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் இந்த உண்மைகளையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டார்களா என்று தெரியவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 22 மொழிகளை தேசிய மொழிகள் என்று அறிவிக்கிறது. இந்திய பணத் தாள்களில் மதிப்பு பதினேழு மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது. குறைந்தது பத்தாயிரம் நபர்களாவது பேசும் அட்டவனையிடப்படாத மொழிகள் நூறுக்கு மேல் உள்ளன. “செத்துப் போன மொழிகளும்” கோயில்களில் தஞ்சம் புகுந்து பிழைத்து வரும் பெரும் புண்ணிய பூமி இந்தியா.
“இந்தியாவில் ஆங்கிலம்” என்பதை இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். எங்கிருந்தோ வந்து, மெதுவாக தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டவாறு வணிகத்தை முதலில் வசப்படுத்தியது ஆங்கிலம். நிர்வாகம், கல்வி மூலமாக எங்கும் வியாபித்து இந்திய துணைக் கண்டத்தையே இணைக்கும் பாலமாக இன்று விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. இதைத் தங்களுடைய மொழியாகவே பாவிக்கும் இந்தியர்கள், இதன் மூலமாகவே பல இலக்கிய அந்தஸ்துகளையும் பெற்றுத் துலங்குகின்றனர். [தாகூர், முல்க்ராஜ் ஆனந்த், ராஜாராவ், ஆர் கே நாராயண், விக்ரம் சேட், ரோஹின்டன் மிஸ்திரி, அமிதவ் கோஷ், நயன்தாரா சேகல், கமலா தாஸ், ஷோபா டே, அருந்ததி ராய், சேட்டன் பகத் உள்ளிட்ட எத்தனையோ எழுத்துக்காரர்கள்].
இது மட்டுமன்றி, இந்தியாவைப் பொறுத்தவரை, ஆங்கிலம் அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரும் மூலாதாராமாகவும் உள்ளது. வெளிநாடுகளுக்கு பிழைப்புக்காக செல்லும் இந்தியர்களின் ஆங்கில மொழி வன்மை அவர்களுக்கு எத்தனையோ வழிகளில் அனுகூலமாகிறது. உலோகப் பயன்பாட்டு அறிவியலில் முனைவர் பட்ட ஆய்வுக்காக ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரிலிருந்து இருநூறு மைல் தொலைவில் இருக்கும் நியுரம்பெர்க் [இரண்டாம் உலகப் போர் புகழ்!] என்ற சிறு நகருக்கு சென்றிருக்கும் நண்பரின் மகன் தனது ஆய்வையும், ஆசிரியப் பணியையும் ஆங்கிலத்திலேயே மேற்கொண்டு வருகிறார் என்ற செய்தி, முற்றிலும் நவீனமயமான மேற்கத்திய நாடுகளிலும் ஆங்கிலம் பெற்றுள்ள செல்வாக்கை விளக்கப் போதுமானது.
[10/17/2015, 3:25 PM] +91 94432 11985: மெக்காலே – பெரியார் – அம்பேத்கர் – இங்கிலீசு – இண்டியன்ஸ்
[முனைவர் எம். பிரபு]
கி.பி.1600-ல் இந்திய மண்ணில் நிறுவப்பட்ட கிழக்கிந்திய கம்பெனியோடு ஆங்கிலமும் உள்ளே நுழைந்தது. இந்தியர்கள் பொறுத்தவரை இந்த அன்னிய பாஷையை விருப்பத்தோடு முதலில் அணுகியது சூரத் நகரத்து பார்சி வணிகர்கள்தான். கம்பெனிக்காரர்களுக்கும் இந்தியக் குடிகளுக்கும் இடையே தரகர்களாக தங்களைப் பாவித்துக் கொண்ட சூரத் பார்சி வணிகர்கள் பெரும் பணம் ஈட்ட முடிந்தது. நாளடைவில் இந்த விருப்பம் மற்ற ஆதிக்க சாதீயர்களிடமும் தொற்றிக் கொண்டது. நிலைமை இப்படி இருக்க, 1830 வாக்கில் கம்பெனியார் எடுத்த ஒரு முடிவானது, துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை, நிர்வாகம் மற்றும் கல்வி அமைப்புக்களில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்தது. இன்னமும் சொல்லப் போனால், இந்தியாவில் ஆங்கில பாஷையின் வளர்ச்சிக்கான விதையே இதுதான். பிரிட்டிஷ் பாராளுமன்றம் இந்தியாவில் உயர் கல்வியை பரவலாக்கம் செய்ய எந்த வகையான முகாந்திரங்களை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்க கம்பெனியாரைக் கேட்டுக் கொண்டது. இதற்காகவென ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய்களை ஒதுக்கீடு செய்யவும் முன்வந்தது.
உயர் கல்வியை எந்த மொழியில் இந்தியர்களுக்கு அளிப்பது? இந்தியர்களின் பாரம்பரிய அறிவையே உயர்கல்வி வரை படிப்பிப்பதா? அல்லது ஐரோப்பாவின் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை உயர் கல்வி நிலையில் இந்தியாவில் ஆங்கிலத்தின் மூலம் வளர்த்தெடுப்பதா? இந்திய கல்வி முறை முழுமைக்குமே ஆங்கில வழி போதனை சிறந்த ஒன்றா? என்ற படியெல்லாம் சூடான விவாதங்கள் கிளம்பின. ஆனால் ஒரு தனி மனிதர் இத்துணை கேள்விகளுக்கும் அசைக்கமுடியாத பதில்களை வைத்திருந்தார்: அவரின் தீர்க்கமான கருத்து இந்தியாவை இரண்டாக பிளந்து போட்டது என்றாலுங்கூட. இந்திய துணைக் கண்டத்தில் நிர்வாகம், கல்வி ஆகியவற்றில் ஆங்கிலம் பிற்காலத்தில் செலுத்தப் போகும் நம்ப முடியாத செல்வாக்கை துவக்கி வைத்தது அவருடைய தீர்மானங்கள்தாம். இந்திய பொது கல்விக் குழுவின் [Indian Committee for Public Instruction] தலைவராக நியமிக்கப்பட்டிருந்த மெக்காலே மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் குழப்பமே இல்லாத விடைகளைக் கண்டறிந்து விட்டார். இந்த விடைகளில் இந்திய சாதீயம் தூளாகிவிட்டது என்பதை அவரால் யூகிக்க முடிந்ததா என்பதை எந்த இந்திய ஜோசியராலும் சொல்ல முடியாது என்று நாம் சொன்னால் காழியூர் நாராயணன் கோபிக்கலாம்.
இந்திய பாரம்பரிய அறிவை அரேபிய மற்றும் சமஸ்க்ருத மொழிகளில் இந்தியர்களுக்கு கற்பிப்பதைக் காட்டிலும் ஐரோப்பாவின் நவீன அறிவியலை ஆங்கிலத்தின் மூலம் கற்பிப்பது அவர்களுக்கு மிகப்பெரிய நன்மையை அளிக்கும் என்று வாதிட்டார். மெக்காலேவின் மொழி அகங்காரமானது. இந்திய பாரம்பரிய அறிவைப் பற்றியதான அவரது வெறுப்பு பிரசித்தமானது. இருந்தபோதிலும், அவரது வாதங்களுக்கு வேறொரு கோணத்தில் நியாமும் கனமும் இருக்கத்தான் செய்தன. நாள் பட்டுப்போன, ஒன்றுக்கும் உதவாத பாரம்பரிய அறிவை வழக்கொழிந்து போன மொழிகளில் கற்பிப்பதால் இந்தியா முன்னேற்றப் பாதையில் நகராது என்ற பரிந்துரைகளை தன்னுடைய புகழ்பெற்ற சாசனத்தில் தெரிவித்தார். ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்வதற்காக இந்திய மாணவர்கள் பணம் கட்டிப் படிப்பதற்கும் ஆயத்தமாக இருக்கிறார்கள் என்றுணர்ந்த மெக்காலே, மரணப் படுக்கையில் மூச்சு விட சிரமப்படும் சில இந்திய செவ்வியல் மொழிகளை காப்பாற்ற கொஞ்சம் கம்பெனி பணத்தை “செலவிட்டுத் தொலைக்கலாம்” என்று கருணை காட்டவும் முன்வந்தார். இந்திய பாரம்பரிய அறிவைக் கற்பதினால் எவரும் வேலை வாய்ப்புக்களை பெற முடியாது. அப்படிப்பட்டவர்கள் மற்றவர்களுக்கும், ஏன் தங்களுக்குமே கூட சுமையாகி விடுவார்கள் என்ற அவரின் தரிசனம் முழுவதும் தவறா என்பது ஒரு பெரிய விவாதத்திற்குரிய விடயம்.
மேற்கொண்டு இதைப்பற்றி பேசிய மெக்காலே, ஐரோப்பிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை கற்கும் இந்தியர்கள் அவற்றை தங்கள் நாட்டு மக்களிடைய பரப்ப வேண்டும் என்றும் இந்திய மொழிகளை ஐரோப்பிய தொழில்நுட்பம் மற்றும் அறிவியலை ஏந்திச் செல்லும் வல்லமை படைத்த மொழிகளாக சக்தியேற்றும் ஏற்பாட்டை இந்த முதல் தலைமுறை ஐரோப்பியக் கல்வி பெற்ற இந்தியர்கள்தான் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பெரும்பாலான இந்தியர்கள் ஐரோப்பிய அறிவைப் பெற்றிருக்கும் நாளில், இந்திய மண்ணை விட்டு பிரிட்டிஷ் அமைப்புகள் வெளியேற வேண்டி வரும் என்றும் அத்தகைய ஒரு பெரு ஞானம் அவர்களுக்கு ஆங்கில மொழிக் கல்வி மூலம் மட்டும்தான் உருவாகும் என்றும் தீர்மானமாகவே மெக்காலே தெரிவித்தார்.
மெக்காலேவின் பரிந்துரைகள் முற்று முழுமையாக 1835-ம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டு விருப்பமுள்ள இந்தியர்களுக்கு ஆங்கில மொழிக் கல்வி நாடு முழுவதும் பரவலாக துவக்கப்பட்டது. சரியாக 22 ஆண்டுகள் கழித்து, அதாவது 1857-ல், இந்திய துணைக் கண்டத்தில் ஐந்து பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டன. மெட்ராஸ், கல்கத்தா, அலகாபாத், பம்பாய் மற்றும் லாகூர் நகரங்களில் துவக்கப்பட்ட இந்த பல்கலைக் கழகங்களின் நோக்கம் ஐரோப்பிய கல்வி முறையை இந்திய மண்ணிலே பரவலாக்க வேண்டும் என்பது மட்டுமன்றி, இங்கு ஆட்சி மொழியாக இருந்த பெர்சிய மொழியை அகற்றிவிட்டு, அவ்விடத்திலே ஆங்கிலத்தை அமர்த்துவதே. அன்று வேகம் எடுக்கத் துவங்கிய ஆங்கில மொழி வளர்ச்சி வெறும் நிர்வாகம், கல்வி போன்ற அமைப்புகளோடு மட்டும் நின்று விடவில்லை. தனக்கும் தன் குடும்பத்திற்கும் சுபிட்சமான வாழ்வை விரும்பும் ஒவ்வொரு இந்தியனும் பெரு விருப்பத்தோடு கற்கும் மொழியாக இன்றுவரை ஆங்கிலம் இருந்து வருவது கண்கூடு. இது மட்டுமன்றி, இந்திய துணைக் கண்டத்தில் ஆங்கிலத்தின் உச்ச பட்ச சாதனை எதுவென்றால், இந்தியர்கள் அனைவரையும் சாதி, மத, இன வேறுபாடு இன்றி ஒரே கூரையின் கீழ் அருகருகே ஆறு மணி நேரத்திற்கு மேலாக தினந்தோறும் உட்கார வைத்ததுதான் என்று சுலபமாக சொல்லலாம். ஆறாயிரம் வருடங்களாக நடந்திராத அதிசயம் இது. நிலச்சுவான்தார்களாலும், ராஜாக்காளாலும், ஜமீன்தார்களாலும், உயர் சாதீயர்களாலும் ஜீரணிக்க முடியாத, ஆனால் ஏற்றுக் கொண்டேயாக வேண்டிய ஒரு சமூக மாற்றத்தை மெக்காலே துவக்கி வைத்தார் என்று சொல்வது, இன்றைய அரசியல் சூழலில் சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும், மிகச் சரியாகவே இருக்கலாம்.
பத்தொன்பதாம் ஆரம்ப வருடங்கள் தொடங்கி இற்றைய நாள் வரை இந்திய பெரும் நிலப்பரப்பில் நடந்திருக்கும் சமதர்மத்தை நோக்கிய அத்தனை சமுதாய மாற்றங்களையும் ஆங்கிலம் ஊனாக உயிராக ஆத்மாவாக ஊடுருவி நடத்தி வந்திருக்கிறது என்ற உண்மையை விளங்கிக் கொள்பவர்கள், மதவாத சக்திகளும் எதேச்சதிகார அரசியல் சக்திகளும், ஆறாயிரம் வருட இந்தியப் பாரம்பரிய விழுமியங்களை மீட்டுக் கொண்டு வருவதில் இன்று தீவிரமாக இயங்கி வரும் விளிம்புநிலைக் குழுக்களும் ஏன் ஆங்கிலத்தை வன்மத்தோடு எதிர்க்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்வார்கள்.
[10/20/2015, 7:52 PM] +91 94432 11985: விட்டில்பூச்சி விழுங்கிய விளக்கு
[டாக்டர் எம். பிரபு]
பிரிந்திருப்பதுதான் ஆரம்பம். ஒற்றைச் செல் பல்லுயிரியானதின் ஆதி தனிமைதான். தனியாக இருக்கிறோம். போவதும் தனியாகவே. ஆனால் தங்கியிருக்கும் காலத்தில்தான் எதோ ஒன்றைப் பற்றவும் பற்றியதை கலக்கவும், சேர்ந்து நடக்கவும் தணியாத ஆசை. இங்கிருந்து அங்கு போக எதனாலோ ஆன பாலம் ஒன்று தேவை. ஒரு விடுபடாத நீண்ட சாலையின் நடுவே எத்தனை பாலங்கள்! பாலங்களால் இணைக்கப்படாத சாலை தனது அடிப்படை நோக்கத்தையே இழந்து யாரையும் எங்கும் கூட்டிப்போகாமல், தானும் நகர முடியாமல் நதிதீரங்களில் எதிர்க்கரையை ஏக்கத்துடன் பார்த்து நின்றவாறே முடிந்து போகும். சொல்லப்போனால், பாலங்கள்தான் சாலையே. இன்னும் வேறொரு பார்வையில், எல்லாச் சாலைகளும் பாலங்களே. சாலையில்லாத ஊரும், பாலமில்லாத சாலையும் உறவில்லாத ஜீவனைப் போன்றதே.
வெற்றிகரமான வாழ்க்கை வெகு நீளமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சுவையான வாழ்க்கையும் அப்படித்தான். அதிபெரும் சுவைகள் நாக்கில் பட்ட நல்ல அல்வாவைப் போல. பட்டவுடன் கரைந்தாலும் அதன் சுவை நாக்கிருக்கும் வரை நீடிக்கிறதல்லவா! பள்ளிக் காலத்தில் சுவைத்த தின்பண்டங்களின் சுவை நாக்கிலும் நெஞ்சிலும் இன்னும் மாறாமலிருப்பது செய்து கொடுத்த அப்பச்சியின் கைப்பக்குவத்தாலா அல்லது அந்த பொக்கைவாய் கிழவியின் பேரன்பாலா? என்னுடைய கிருத்துவ நண்பர்கள் கூறுவதுண்டு. தான் நேசிப்பவரை கிருத்துவானவர் விரைவிலேயே தன்னிடம் அழைத்துக் கொள்கிறார் என்று. விருப்பமானவர்கள் அதிக நாட்கள் கிருத்துவிடம் மட்டுமல்ல, சாதாரண மனிதர்களாகிய நம்மிடமும் நிலைப்பதில்லை. திடீரென்று வந்து நினைத்திராத தருணங்களைத் தருபவர்கள் கண்ணிமைக்கும் பொழுது நம்மை விட்டு விலகி ஓடுவது நமது வாழ்க்கையின் வேதனையா அல்லது எதிர்பாராமைகளால் நிறைந்திருக்கும் ஜீவிதத்தின் நிதர்சனமா?
The Brdiges of Madison County என்ற திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். பார்க்க வேண்டியிருந்தது. கனத்துப் போன மனசின் சுமையை வேறெங்கோ இறக்கி வைக்க திட்டமிடும் போதெல்லாம் பிடித்த புத்தகத்தை மீண்டும் ஒருமுறை படிப்பதோ அல்லது பிடித்த திரைப்படத்தை இன்னொரு முறை பார்ப்பதோ சில தசாப்தங்களாகவே கூட இருக்கும் பயனுள்ள ஒரு பழக்கம். இவைகள் என்னை எமாற்றுவதேயில்லை. Clint Eastwood என்ற hollywood நடிகர் குதிரைவீரர் படங்களில் நடித்து பெரும்புகழ் ஈட்டியவர். தன்னுடைய 50களிலே திரைப்படங்களை இயக்கத் தொடங்கிய பொழுது, தான் நடித்ததற்கும் சற்றும் சம்பந்தமில்லாத கருப்பொருட்களையே தேர்ந்தெடுத்தார். இவர் இயக்கிய திரில்லர் வகைப் படங்களிலும் அடிநாதமாக மனிதர்களுக்கிடையேயான அன்பின் சரடொன்று காணக் கிடைக்கும். அன்பை நோக்கி கதாபாத்திரங்கள் இவரது படங்களில் ஓடிய வண்ணமே இருக்கிறார்கள். அன்பை வேண்டுகிறார்கள். அன்பிற்காக மிரட்டுகிறார்கள். அன்பின் பொருட்டே விலகுகிறார்கள். ஏன், அதன் காரணமாகவே கொலையும் செய்கிறார்கள்.
The Brdiges of Madison County நடுத்தர வயது குடும்பத் தலைவி ஒருத்தியின் நான்கு நாள் வாழ்க்கையையும், அந்த நாட்கள் அவளது பிந்தைய வாழ்க்கையின் முழு அர்த்தமுமாக மாறிப்போன விந்தையையும் நமக்கு ஒரு அற்புதமான திரை மொழியில், ஒரு பேராறு பல மலைகளில் ஆர்ப்பரித்து விழுந்து சமவெளிக்கு வந்து நீண்ட நெடும் பயணத்திற்குப் பின் அகன்ற மணற்படுகைகளில் மெல்ல அமைதியாக நகருகின்ற அழகோடு, பிரான்செஸ்கா ஜான்சனின் பாலைவனச்சோலையே போன்ற தருணங்களை, விவரிக்கிறது. Bari என்ற இத்தாலிய சிறு நகரத்தில் இளம் பெண்ணாக இருந்தபொழுது படைவீரராக அங்கு வந்த ரிச்சர்ட் ஜான்சனிடம் காதல் வயப்பட்ட பிரான்செஸ்கா அவனைத் திருமணம் செய்த கையோடு அவனுடைய சொந்த ஊரான அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் உள்ள Madison County என்ற சின்னஞ்சிறு கிராமத்திற்கு குடித்தனம் செய்ய வருகிறாள். இத்திரைப் படம் துவங்கும் பொழுது, பதினேழு மற்றும் பதினாறு வயதுகளில் மகனும் மகளும் இருக்க அவர்களை கூட்டிக்கொண்டு கணவன் ரிச்சர்ட் மகள் கலந்து கொள்ளும் ஒரு போட்டியின் பொருட்டு வெளியூருக்கு செல்கிறான். திரும்பி வர நான்கு நாட்கள் ஆகும் என்ற நிலையில் மற்ற மூவரும் இல்லாத வெறுமையைப் போக்க வீட்டின் வெளியே நிற்கையில் பச்சை நிற வேன் ஒன்றிலிருந்து இறங்கிய நபர், தனது பெயர் ராபர்ட் என்றும், அங்கு எங்கோ இருக்கும் ரோஸ்மான் பாலத்திற்கு வழிகாட்ட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளும் போது, பிரான்செஸ்காவின் கண்களிலும் ஒரு பாலத்தின் ஆரம்பம் பிரதிபலிக்கிறது. தான் கூடவே வந்து வழிகாட்டுவதாக முன் வரும் பிரான்செஸ்கா ராபர்ட்டிடம் நிகழ்த்தும் சம்பாஷணையில் தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்து இராத ஏதோ ஒன்று முதன்முறையாக நிகழ்வதை உணர்கிறாள். அவர்களின் உரையாடலிலே இருவருமே என்றோ இழந்திருந்த ஒரு நூலிழையின் அறுபட்ட பகுதி மீண்டும் நெருங்கிவருவதாகவே உணர்கிறார்கள். அவளின் ஆளுமையையும் ரசனையையும் மெல்ல கேட்டு கண்டுணரும் ராபர்ட் அவள் அத்தனை எளிதான ஒரு கிராமத்துப் பெண் அல்ல என்று கண்டுபிடிக்கிறான். தான் எப்பொழுதுமே சந்திக்க விரும்பிய, ஆனால் சந்திக்கவே முடியாத – தன்னை முழுவதுமாய் ஒரு பெண்ணாக உணர்த்தும் ஆண் ஒருவனை முதன்முறையாக வந்தடைகிறாள் பிரான்செஸ்கா. திரும்பி அவளை வீட்டில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது தேநீருக்காக உள்ளே அழைக்கப்படும் அவன் இரவு உணவிற்காகவும், பின்னர் அடுத்தடுத்த நாட்களின் பெரும்பகுதி நேரங்களையுமே பிரான்செஸ்காவின் அருகிலும் படுக்கையிலும் தன்னை அவளுக்கு கொடுக்கிறான். அவளில் தன்னை புதிதாக கண்டுபிடித்தும், காதலின் விசித்திரமான பரிமாணங்களை உணர்ந்தபடிக்கு இருக்கிறான். National Geographic என்ற புகழ்பெற்ற சஞ்சிகைக்கு புகைப்படக் கலைஞனாக பணிபுரியும் ராபர்ட் தான் விவாகரத்தானவன் என்றும் இந்த உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பணி நிமித்தமாய் செல்கிற பொழுது பல தோழியரும் தனக்கு நேர்ந்ததுண்டு என்றும் பிரான்செஸ்காவிடம் தெரிவிக்கும்பொழுது, ஆற்றாமையால் துவளும் அவள் அவர்களில் ஒருத்திதான் தானா என்ற வேதனையில் வெடிக்கிறாள். அதற்கு பதிலிறுக்கும் வண்ணம் ராபர்ட் சொல்கிறான்: “This kind of certainty comes but once in a lifetime.” தன்னை அவனோடு கூட்டிச்சென்று விடும்படி கதறும் கணத்திலேயே எளிமையான தனது கணவனும் குழந்தைகளும் நினைவிலாட ஒரு உணர்வின் அதிவேகச் சுழலில் மாட்டிக்கொண்ட அபலையாய் தெரிகிறாள். அவளின் நிதர்சனத்தை உணர்ந்தவனாய் கையறு நிலையில் விடைபெறுகிறான் ராபர்ட்.
அடுத்த நாள் காலையில் வீடு திரும்பும் கணவனையும் குழந்தைகளையும் வரவேற்கும் பிரான்செஸ்கா தனக்கென தனியான விருப்பங்களை கொண்ட பெண் அல்ல; இயந்திரங்களின் அத்தனை தன்மைகளோடும் ஆண்டுக்கணக்கில் ஒரே மாதிரியாக தன்னை இயக்கத் தெரிந்த சராசரி குடும்பத் தலைவி. அந்த வாரத்திலேயே, கணவனோடு ஒரு மாலை நேர மழையில் காரில் பயணிக்கும் பிரான்செஸ்கா, இந்தப் படத்தின் இறுதி காட்சியில், முன்னாள் நகரும் காரில் ராபர்ட் ஊரைவிட்டு போவதை கண்ணுருகிறாள். அவளை கவனித்துவிட்ட ராபர்ட் அவள் கொடுத்த கழுத்துச் செயினை அவளிடம் rear view mirror-ல் காண்பித்து அவளின் நினைவுகளை தன்னுடன் கொண்டு செல்வதை உணர்த்துகிறான்.
இந்தப் படம் பிரான்செஸ்காவின் இறப்பிற்குப் பிறகு அவளுடைய உயிலையும், சாவிற்குப் பின்னரே திறந்து பார்க்கும்படி சொன்ன ஒரு பெட்டியையும் அவர்களது குடும்ப வக்கீல் அவளின் மகள் மகன் முன்னிலையில் விவாதிப்பதிலிருந்து துவங்குகிறது. தன்னுடைய உடலை எரியூட்டும்படியும், சாம்பலை ரோஸ்மான் பாலத்திலிருந்து கீழே நதியில் தூவும்படியும் கேட்டுக்கொண்டிருந்த தன்னுடைய தாயை மகனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ராபர்ட்டுடன் பகிர்ந்து கொண்ட அந்த நான்கு நாட்களின் ஒவ்வொரு நொடியையும் தேர்ந்த புகைப்பட கலைஞன் ஒருவனின் அதி உன்னதமான படைப்பைப் போல வெகு நுட்பமாக மூன்று நோட்டுப் புத்தகங்களில் பிரான்செஸ்கா எழுதியிருந்த பதிவுகளைப் படிக்க நேர்ந்த பிறகே அவளின் மகனும் மகளும் தாய் என்ற கடமையிலிருந்து கொஞ்சமும் வழுவாத அவளுடைய நேர்மையையும், நான்கு நாட்களே வீசிய அந்த தென்றலின் சுகத்தை ஜீவிதம் முழுவதும் அனுபவித்தபடியே தவித்த பரிதாபத்திற்குரிய பெண் ஒருத்தியையும் அவர்கள் உணரும் நிமிடம், அவர்களுக்கும் வரவே முடியாத இடத்திற்குப் போய்விட்ட அவர்களது தாயான பிரான்செஸ்காவிற்கும் மேம்பட்ட புரிதலால் ஆன ஒரு பாலம் உருவாகிறது.
அது ஜன்மங்களை இணைக்கும் பாலம். சொல்லப்போனால், அந்த மாதிரியான பாலங்களை எதிர்நோக்கிய படிதான் சாலைகளின் ஜனங்கள் பயணித்த வண்ணம் இருக்கிறார்கள். சாலைகளும், மனிதர்களும், பயணங்களும் உண்மையில் பாலங்களை நோக்கித்தான். பாலத்தை வந்தடைந்தவர்கள் பாக்கியசாலிகள்.
[Dr. M. Prabu]
ஜெயமோகன் அவர்களின் 'இன்றைய காந்தி' படித்துக் கொண்டிருக்கிறேன். அளவைப் பொறுத்த வரை, மிகப்பெரிய புத்தகம். காந்திய இலக்கியம் பல்லாயிரம ்புத்தகங்களால் ஆனது. இந்திய மொழிகள் அனைத்திலும் எழுதப்பட்டு பல கோடிமக்களால் வாசிக்கப் பெற்றுவரும் காந்திய இலக்கியம், ஆங்கிலத்தில் மிகவும் சிறப்பாக கடந்த ஒரு நூற்றாண்டாக எழுதப்பட்டு வருகிறது. புகழ் பெற்ற தொழில்முறை Biographers தவிர, காந்தி என்ற ஆளுமையால் கவரப்பட்டு தங்கள் நாட்டை விட்டு, அவருடனேயே தங்கி அவரை கூர்மையாக அவதானித்து எழுதியவர்களைத் தவிர, அவரின் கொள்கைகள், போராட்டங்கள், வாழ்க்கை. குடும்பம், அரசியல், பின்பற்றிய மருத்துவ முறைமைகள், ஆன்மீகம், உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களைப் பற்றி லட்சக்கணக்கான பக்கங்கள் எழுதப்பட்டாகி விட்ட நிலையில்,ஜெயமோகன் காந்தியைப் பற்றி இடதுசாரிகள், மற்றும் தலித்தியர்கள் எழுதிவரும் விமரிசனங்களுக்கு பதிலாக தன்னுடைய புத்தகத்தை வடிவமைத்துள்ளார் என்று முதல் இருநூறு பக்கங்கள் படித்துள்ள நிலையில் தெரிகிறது.
ஜெயமோகன் காந்தியைப் பற்றி எழுதியுள்ளதைத்தான் படித்திருக்க முடியும்.காந்தியை நேராக அவதானித்திருக்க முடியாது. காந்திக்குப் பிறகான இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர். காந்தியைப் பற்றி மேற்கத்திய ஆய்வாளர்கள் எழுதியுள்ளதில் சிறப்பான சில நூற்களைப் படித்துள்ளார் என்பதும், சில காந்தியர்களிடம் தீவிரமான விவாதங்களை நடத்தியுள்ளார் என்பதும், காந்தியத்தை தன்னுடைய உள்ளம் ஆன்மா சார்ந்து புரிந்துகொள்ள முயன்றுள்ளார் என்பதையும் ஒருவாறு அனுமானிக்க முடிகிறது.
படித்த வரையில் ஒன்று சொல்ல முடியும். கீழே வைக்க முடியாத நடை. தமிழ் உரைநடையில் ஜெயமோகன் ஒரு முக்கியமான ஆளுமை. விவாதத்தை அடுக்கும் முறை படிப்பவரை ஜெயமோகனின் கருத்துக்களோடு ஒத்துக் கொள்ள வைக்கும். கவனமாகப் படிக்க வேண்டும் இந்த காரணத்தாலேயே.இன்னொரு குறையும் உண்டு. தன்னால் ஒரு பெரிய ஆய்வும், களங்களுக்குச் சென்று முதல் நிலை தரவுகளை எடுக்கவும் ஆர்வம் இல்லை என்றும், தன்னுடைய புத்தகம் தன்னுடைய உள்ளுணர்வாலேயே எழுதப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கும் ஜெயமோகன், மேற்கோள் காட்டியிருக்கும் ஆசிரியர்கள் அனைவருமே உள்ளுணர்வை ஜாக்கிரதையாகத் தவிர்த்து, முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை தரவுகளின் அடிப்படையிலேயே எழுதியுள்ளனர் என்பதை நம்மால் கவனிக்கத் தவறமுடியாமல் போவதுதான் ஜெயமோகனின் பலவீனமா?
[10/22/2015, 10:09 AM] +91 94432 11985: எஸ்தர்
[Dr M. Prabu]
வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்' படித்த கையோடு அவரின் சிறுகதை தொகுப்பான'எஸ்தர்' படிக்க ஆரம்பித்து கீழே வைக்க முடியாமல் ஒரே இரவில் முடித்தாகி விட்டது.சில சமயங்களில் உடம்புக்கு சொகமில்லாமல் போவது எவ்வளவு நல்லது!
வண்ணநிலவன் வாழ்க்கையின் கறுமையைப் பற்றி மட்டுமே பேசுகிறார்.நடுத்தரக் குடும்பத்துக்காரனின் வறுமை ஏழையின் வறுமையைவிட கேவலமானது. ஏழையிடம் மறைக்க எதுவுமில்லை. ஆனால்,நடுத்தரக் குடும்பத்துக்காரன் தன்னுடைய வறுமையை மறைத்தாக வேண்டும்.வறுமையை மறைக்கிற பொறுப்பு வறுமையை விட கேவலமானது. கிட்டத்தட்ட இந்த தொகுப்பில் உள்ள எல்லா கதைகளிலும் வறுமை ஊடுபாவாக இழைந்துள்ளது.
வறுமைக்கு அடுத்தபடியாக,வண்ணநிலவன் அவர்களை எது பாதிக்கிறது? ஒவ்வொருவனும் ஒவ்வொருவளும் தான் கல்யாணம் முடிக்க முடியாதவர்களையே நினைத்துக் கொண்டு,புருஷனோடோ மனைவியோடோ குடும்பம் நடத்துகிறார்கள். நிறைவேறாத காதலின் அவலம் நிறைந்தவைகள் இந்தக் கதைகள். நிறைய கணவன்களும் மனைவிகளும் அவர்களின் துணைகளின் முன்னாள் அன்பர்களைப் புரிந்தவாறே, மிச்சமிருக்கும் குடும்ப வாழ்க்கையை அன்பைக் கொண்டு நிரப்ப முயன்ற வண்ணம் உள்ளார்கள்.நமது அன்பானவர்களின் காதல் நம்முடையதும் அல்லவா!
வண்ணநிலவன் தமிழ் நவீன இலக்கியத்தில் மிக முக்கியமானவர்.என்னைக் கேட்டால், ஜெயகாந்தனுக்கு நிகரானவர். தன்னை முன்னிருத்திக் கொள்ள தெரியாதவர். ஆனால், காலம் அதைச் செய்யும். இவரிடமும் அசோகமித்திரனிடமும் ஒரு தட்டையான மொழி - ஆங்கிலத்தில் objective அல்லதுindifferent என்று சொல்லலாம் - வசப்பட்டிருக்கிறது. இது இவர்களை காலத்தைக் கடந்த உரைநடைக்குசொந்தமானவர்களாக ஆக்கியிருக்கிறது.
இந்த தொகுப்பில் 'எஸ்தர்' சிறுகதை மிகவும் முக்கியமானது. இந்தக் கதையில் சம்பந்தப்பட்டுள்ளது கருணைக்கொலையா?படித்துவிட்டு சொல்லுங்கள்!
['எஸ்தர்' - வண்ணநிலவன், நற்றிணைப் பதிப்பகம் வெளியீடு, உரூபா 90/-]
வணக்கம்
ReplyDeleteபுத்தகம் பற்றி அற்புத விளக்கம்... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅனைத்துத் தகவல்களையும் நிதானமாக வாசித்தாயிற்று....நல்ல புத்தகங்கள், சினிமா, ஜெயமோகனின் எழுத்தாளுமை பற்றியும் எல்லாம் கலந்து கட்டி பகிர்ந்தமைக்குமிக்க நன்றி...
ReplyDeleteMarket your product & services using WhatsApp – The Tool for Next Generation Marketers India is one of the fastest-growing markets for instant 123eworld.com
ReplyDelete