புதுகை வலைப்பதிவர் சந்திப்பில் இருந்த யாரோ ஒருவர்தான் சசிக்கு இந்த சட்டையை மாட்டிவிட்டிருக்க வேண்டும்! |
பத்து வருடங்களுக்கு முன்
யாருப்பா இந்த பாலா ?
கவிஞர் சூர்யா சுரேஷ் பாலாவின் சேது பார்த்தாயா என்றபோது இல்லை என்றேன். அவர் நம்ம ஊர்லதான் இருக்கார் ஒரு படம் ஷூட்டிங் போய்ட்டு இருக்கு என்றார்.
பாலா? அப்படீன்னு ஒர் இயக்குனரா? நம்ம ஊர்ல படம் எடுக்கிறாரா? நம்ம ஊர் ராசி அவருக்குத் தெரியாது போலருக்கு என்ற எண்ணத்துடன் படப்பிடிப்பு நடந்ததிசையையே பார்க்காது நான்பாட்டுக்கு பள்ளிக்குப் போய்க்கொண்டு இருந்தேன்.
ஒருமுறை மாணவர் ஒருவர் ஓடி வந்து சார் ஷூட்டிங் போனேன் சார். லைலா என் கையை பிடித்துக் குலுக்கினாங்க என்று பெருமை பொங்க சொன்னபோது அதையோ அவனையோ ஒரு பொருட்டாகவே கருதாது பாடத்தைத் தொடர்ந்தேன்.
அந்த தினம் வரை சூர்யா குறித்தோ அல்லது அதிகம் பேசப்படாத படக்குழு குறித்தோ பெரிதாக ஏதும் படவில்லை எனக்கு.
ஆனால் நந்தா என்கிற அந்தப் படம் வெளியில் வந்து திரையரங்குகளை தெறிக்கவிட்டது. அப்போதும் கூட அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. நான் இருந்தது வேறு உலகம். சிக்ஸ்த் டே, ஸ்வார்ட் பிஷ் என மாதம் அறுநூறு ரூபாய்க்கு குறுந்தகடுகளை விலைக்கு வாங்கி பார்த்துகொண்டிருந்தேன். அதிகாலை எனது சுப்ரபாதமே ஸ்வார்ட் பிஷின் ரன்னிங் டைட்டில் பாடல்தான்! .
புதுகையில் ஷூட் செய்யப்படும் படங்கள் ஓடியதே இல்லை என்கிற செண்டிமெண்டை உடைத்து துகள் துகளாக பறக்கவிட்டிருந்தார் பாலா!
ஊழையும் உட்பக்கம் கண்டதாலோ என்னவோ எனக்கு அவர்மீது மரியாதை வந்தது. அதன் பின்னர் பல படங்கள் புதுகையில் எடுக்கப்பட்டன. பாண்டிராஜ் என்கிற எங்க ஊர் இயக்குனரும் வர புதுகை பி.யு.சின்னப்பா, கவிஞர் கண்ணதாசன் காலத்திற்கு பிறகு தனது முத்திரையை சினிமாவில் அழுந்தப் பதித்தது.
புதுகையை நேசிப்பவன் என்கிற முறையில் பாலா எனது நினைவில் நெருக்கமாக வந்தது இதனால்தான்.
தொடர்ந்து ஊடகங்கள் பேசிய இயக்குனராக மாறிப்போனார் பாலா. ஆனந்த விகடனில் இவன்தான் பாலா தொடர்வர நண்பர் செந்தில் (தற்போது அமெரிக்காவில்) பணங்கருக்கில் பாலா அடிபட்ட கதையைச் சொல்ல அவர் மீது கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மரியாதையான பிம்பம் விழ ஆரம்பித்தது என் மனதில்.
பாலாவின் முக்கியமான படங்களை நான் பார்த்ததே இல்லை. நான் மதிக்கும் நல்லாசிரியர் திரு.சோமு வலிய அழைத்து தம்பி வாங்க நான் கடவுள் போகலாம் என்றபோது பதறிச் சிதறினேன். ஐயோ ஒரு மாதத்திற்கு மனத்துயருடன் திரியும் எண்ணம் எனக்கு இல்லை. அவர் படத்தைப் பார்த்தல் ரெக்கவரி ஆவது ரொம்பச் சிரமம் அண்ணா என்ன விட்டுடுங்க என்றேன். (ஜாக்கி சேகர் கருத்தின் படி அது பாலாவின் ஆகச் சிறந்த படம்.)
உதாரண புருஷராக வாழ்வோரை கதை மாந்தர்களாக வைத்து செய்யப்பட்ட திரைப்படங்கள் வெற்றி பெறுவதும் ஏற்பை பெறுவதும் இயல்பான விசயம்.
வீழ்ந்தவர்களின் கதையைக் கையாள சிந்திக்கவும் திரையாக்கவும் ஓர் அசாத்தியத் துணிச்சல் வேண்டும். அப்படியே செய்தாலும் அது ரசிகர்களின் ஏற்பை பெறுவது கேள்விக்குறியே.
இரத்தக் கண்ணீரைக் கூட வீழ்ந்த மனிதனின் கதை என்று வைத்துக் கொண்டாலும் செல்வச் சீமான் தெருவுக்கு வரும் இடத்தில் நாயக பாத்திரம் மேல்தட்டு என்று அடிபட்டுப் போகிறது.
ஆனால் பாலாவின் பிரதான பாத்திரங்கள் எல்லாம் நாம் வாழ்வின் ஏதோ ஒரு தருணத்தில் சந்தித்தவர்கள்தான். நம்மில் பெரும்பாலோனோர் அவர்களின் இருப்பைக்கூட உணராதவர்கள்தான்.
இப்படி நம்மிடையே இருந்தும் நம்மால் தவிர்க்கப்படும் ஏன்
அருவருக்கப்படும் மனிதர்களின் உலகினை அதன் எல்லாத் தரவுகளோடும் தரும் இயக்குனர் பாலா.
இந்த ஜானரை தொடுவதும் அதில் வெற்றிபெறுவதும் எளிதானது இல்லை. பாலா தொடர்ந்து அந்த உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறார். விமர்சகர்கள் சொல்கிறமாதிரி மார்பிட் மூவிஸ் (நோயுற்ற மனநிலை படங்கள்) வெளிவந்து கொண்டே இருகின்றது இந்தக் கலைஞரிடம் இருந்து.
தாரை தப்பட்டை
மார்பிட் மன்னர் இம்முறை நம்மை அழைத்துச் சென்றிருப்பது திருவிழா ஆட்டக்காரர்களின் வாழ்வியலுக்கு. அதன் இயல்புகளோடும், அத்துணைக் கோரங்களுடனும் சொல்லும்போதே காதலை உணரவைக்கிற இடத்தில் இருக்கு பாலா மேஜிக்!
நாம் மறந்துவரும் பாரம்பரிய இசை நடன வடிவங்களின் சீரழிவின் வரலாற்றை ஒரு துன்பியல் காதல் கதையுடன் சொல்லியிருக்கிறார் பாலா. மூன்று தலைமுறைகளை ஒன்றிணைக்கும் கதையில் முதல் தலைமுறைக் கலைஞன் ஜனரஞ்சக சமரசங்களை மறுக்க, அவனது மகன் சூழலின் அழுத்தத்தால் ஜனரஞ்சகமாக மாற, அவன் கண் முன்னே அவனது நண்பர்கள் ஒன்னாருவா பிளேடு என்று பாடுகிறார்கள்.
ஒரு செய்வியல் கலையை யார் சிதைத்தது, சமூக அழுத்தங்களே என்கிற விசயத்தை படத்தில் வைத்திருக்கிறார் பாலா. ஆனால் அதை எத்துனை பேர் உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை.
அருகே அமர்ந்திருந்த சத்யா சார் காயத்திரி ரகுராம் ஏன் இப்படி செஞ்சாங்க, என்ன ஒரு கோரியோகிராபர் அவங்க என விரக்தியாகக் கேட்டார். அந்த மரண ஆட்டம் முடிந்த அந்த நிமிடத்தில் பிரேமில் தெரியும் மடிந்து உட்காரும் விரக்தியான சசியின் முகத்தில் இருக்கிறது அவர் கேள்விக்குப் பதில்.
நினைவில் வந்த இரண்டு எழுத்தாளர்கள்,
எஸ்.ராமகிருஷ்ணன், ஒரு முறை உணவகம் ஒன்றில் ஒழுங்காக பணியாற்றாத, முதலாளியிடம் அடிக்கடித் திட்டு வாங்கிய பணியாளர் ஒருவரைத் தனியே அழைத்துப் பேசியபொழுது அவர் சொன்னதாக ஒரு விசயத்தை சொல்லியிருப்பார்.
அந்தப் பணியாளர் அதுவரை ஒரு கோவிலில் நாயனம் ஊதுபவராக இருந்ததையும் ரிக்கார்ட் ப்ளேயர்கள் வரவிற்கு பின்னர் அவரது இருப்பு நிர்வாகச் சுமையாக கருதப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டதாவும் சொன்னதாக சொல்வார் எஸ்.ரா. என் மனசில் அப்படியே சூடு போட்டமாதிரி பதிந்து போன விசயம் இது. படத்தின் பல காட்சிகளில் இது என் நினைவில் வந்தது.
இரண்டாவது எழுத்தாளர்
லக்ஸ்மி சரவணக்குமார்
லக்ஸ்மி சரவணக்குமாரின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆங்கிலப் படங்களைத் தழுவி மேம்படுத்தி ஒரு தமிழ்க் கதையைக் கொடுப்பது. பேர்ட் மேன் படத்தைக் தழுவி எழுதிய சிறுகதையை நினைவூட்டிய பல காட்சிகள் படத்தில் இருந்தது. குறிப்பாக தங்கைக்கு ஆடை அலங்காரம் செய்துவிடும் அண்ணன்! ஆடை மாற்றும் அறைக்குள் நாய்கள் மாதிரி நுழையும் ஊர் பெரிசுகள் இவை எல்லாமே லக்ஷ்மியின் கதை ஒன்றில் இருக்கிறது.
வெகு அருவருப்பான முக்கால் நிர்வாண நடனத் தயாரிப்பில் இருக்கும் குழுவில் வரலெட்சுமி செய்யும் அதகளம், சசியை வம்பிற்கு இழுத்து அவர் கையால் மேக்கப் போட்டுக் கொள்ளும் இடத்தில் அத்துணை அருவருப்பையும் மீறி அரங்கை நிறைக்கிறது காதல். பாலா உண்மையிலேயே ஒரு மஜீசியன்தான்!
சன்னாசியின் குழு மரபு இசை வடிவத்தை ஜனரஞ்சகமாக மாற்றி ஆட்டத்தை தொடர்கிறது. குழுவின் நட்சத்திர ஆட்டக்காரி சூறாவளி சன்னாசியின் முறைப்பெண்.
எனக்குத் தெரிந்து திரையில் தோன்றும் முதல் காட்சியிலேயே சரக்கைப் போடும் கதாநாயகி சூறாவளிதான். எந்த கதாநாயகனும் இவ்வளவு விரிவாய், இயல்பாய் ரசித்து ரசித்து சரக்கடித்ததை பார்த்ததே இல்லை. திரை நாயகிகளின் பெண் சமத்துவத்தை ஒரு மாதிரியாய் நிறுவி விட்டார் வரலட்சுமி.
வரலட்சுமி இனி நடிக்கவே வேண்டாம். மவளுக்கு இந்தப் படமே போதும். படத்தின் முதல் பாதியில் போதையிலேயே கழிக்கிறார்! அதுவும் சுரீர் சுரீர் எனும் வசனங்களோடு.
கப்பலில் சரக்கு கேட்டு திட்டுவாங்கி மெல்ல சசிக்குமாரிடம் வந்து மாமா சரக்குப் கப்பல்ன்னா சரக்கே இல்லை எனச் சலும்பும் பொழுதும் பாதி அரங்கம் வெடித்துச் சிரிக்கிறது.
அப்போ மீதி அரங்கம்?
ஆயிரம் வாட் வயர் ஒன்றை சீட்டில் போட்ட மாறியே உட்கார்ந்திருக்காங்க!
இப்படி ஒரு கதாபாத்திரம் இதுவரை கற்பனையில் கூட இல்லை!
ஆத்தங்கரையில் சசி வேறு ஒருவனை மணக்கச் சொல்லும் இடத்தில் மெல்ல எழுந்து பின்னே போய் ஓங்கி விடுகிறாரே ஒரு உதை!
ஆடல் காட்சிகளில் எல்.ஐ.சி பில்டிங்கே எழுந்து வந்து ஆடுவது மாதிரி இருக்கிறது. பேருக்குத்தான் காஸ்ட்யூம் மற்றபடி முக்கால் நிர்வாண ஆட்டங்கள்தான் படம் முழுதும். (யார் வீட்டிலோ பூரிகட்டையை பார்சல் செய்கிறமாதிரி இருக்கே)
நல்லவேளை திரீ டி இல்லை. அப்படி இருந்துச்சுனா கொஞ்சநாளைக்கு சில அண்டர்பான்ட்ஸ் மூஞ்சிக்கு முன்னாலே ஆடியிருக்கும். தியேட்டரில் பயத்தில் பயல்கள் சீட்டுக்கு அடியில் பதுங்கி இருக்கவேண்டும்.
இது பாலா படமா வரலெட்சுமி படமா என்கிற கேள்வியை தயங்காமல் எழுப்பலாம். அந்த அளவிற்கு இருக்கு பாப்பா பர்பாமென்ஸ்.
இசை
கிடைக்கும் ஒவ்வொரு நொடியிலும் ஏதாவது ஒரு இசையைப் புகுத்த யோசிக்கும் இந்த தலைமுறை இசையமைப்பாளர்கள் அசந்துபோவர்கள். படத்தின் வெகு அழுத்தமான காட்சிகளில் இசையே இல்லை. வசனம் அல்லது தனிக்குரல் பாட்டு!
ஆயிரமாவது முத்திரை வெகு அழுத்தமான முத்திரை.
காமிரா
செழியன் முதல் காட்சியில் எப்படி தஞ்சைப் பெரிய கோவிலைக் காட்டினார். ஹீரோ கேம் பொருத்தப்பட்ட டிரோன் ஷாட்டா இல்லை பலூன்ஷாட்? சில வினாடிகளே வரும் அந்த ஒரு ஷாட் செழியனின் பெயர் சொல்லும். என்னைமாதிரி காமிரா பித்தர்கள் அந்த ஒரு சில வினாடிகளுக்காவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம்!
கிளைமாக்ஸ் சண்டை ஏதோ சீ.ஜி மாஜிக்காக இருக்க வேண்டும். ஒரு சாதரணச் சண்டைதான் அது. இருந்தும் கதையின் வேகத்தை அப்படியே டெக்னிகலாக பிரதிபலிக்கிறது. பிரேம் ரேட்டில் ஏதோ வித்தை காட்டியிருக்கிரார்கள்.
வசனங்கள் செமையாக இருந்தாலும் அவற்றை டெலிவரி செய்திருப்பது அவற்றைவிட அற்புதமாக இருக்கிறது.
பெரியாளுங்க வந்திருக்காங்க ...
அப்போ நான் யார்ரா?
அதைவிட
டேய் வாண்டை... (இம்புட்டு தில் ஆகாதுப்பு)
வரலட்சுமி பேசும் என் மாமன் பட்டினி கிடந்தால் நான் அம்மணமாகக் கூட ஆடுவேன் (புதுமைப் பித்தனின் காசநோய்க்காரனின் மனைவி நினைவில் வந்தாள்)
தமிழ் கலாச்சாரத்தின் பேசப்படாத ஒரு பக்கத்தை அதீதமாய்த் திறந்திருக்கிறது இந்தப் படம். தடைகள் ஏதும் வரவில்லை என்றால் சரி.
எனது நட்பு வட்டத்தில் பாலாவின் டை ஹார்ட் ரசிகர்கள் கார்த்திக் மற்றும் மலையைப் பொறுத்தவரை படம் பாலா படம் இல்லை என்கிறார்கள்.
ஆனால் எனக்கு இது பாலா என அழுந்த முத்திரை குத்திய படம்தான்.
அப்புறம் வேறு என்ன?
வாழ்த்துக்கள் பாலா ...
ஒருவழியாய் உங்கள் படத்தை பார்க்கிற மனத்துணிவு வந்துவிட்டது எனக்கு.
உங்களுக்குத் தெரியுமா? படம் முடிந்ததும் என்ன வேகத்தில் வெளியில் போனாங்க தியேட்டருக்கு வந்தவங்கன்னு. அம்புட்டு கோவம், ஆற்றாமை, பொருமல். வழக்கம் போல உங்கள் முத்திரைப்படம்.
சந்திப்போம்
அன்பன்
மது
அப்புறம் ஒரு விசயம்
திரையரங்கில் இயக்குனர் பாண்டிராஜை சந்திக்க முடித்தது. சில நிமிடங்கள் பேசினேன். மனிதர் வெகு இயல்பாய் ஜனத்திரளோடு இருக்கிறார். இவர்தான் பாண்டிராஜ் என பலருக்கு தெரியாததால் அவர் பாட்டுக்கு அமைதியாக படத்தைப் பார்த்தார்.
எங்க ஊர் படைப்பாளி ஒருவர் ஒரு ஆடி கியூ செவனில் வருவது எனக்கு கொஞ்சம் பெருமிதமாக இருந்தது.
“தாரை தப்பட்டை” இன்னும் பார்க்கவில்ல. அது பாலாவின் முத்திரை பதிந்த படம் என்றால், இது மதுவின் முத்திரை பதிந்த விமர்சனம்.. அந்த ஆடிக் கார்தான் பாண்டிக்கு பசங்க-2க்காக சூர்யா பரிசாகக் கொடுத்ததுன்னு சொன்னாங்க. நல்ல இயக்குநர்களுக்கு நல்ல தயாரிப்பாளர் அமைவது வரம். படத்தைப் பார்த்துட்டு மீண்டும் வர்ரேன். த.ம.2
ReplyDeleteஎனக்கு படம் பிடித்திருகிறது...
Deleteஉங்களுக்கு எப்படி என்று தெரிந்துகொள்ள ஆவல் ...
படத்தைப் பற்றிய விமர்சனம் நன்று. படத்தைப் பார்க்கும் ஆவல் அதிகமாகிவிட்டது.
ReplyDeleteஉங்கள் கருத்தையும் அறிய ஆவலாக இருக்கிறேன் முனைவரே
Deleteவிக்கி பணிகள் எப்படி இருக்கின்றன
நல்ல விரிவான விமர்சனம் படத்தை காணும் ஆவலை சினிமா காணாத எனக்கும் தூண்டி விட்டது தோழரே
ReplyDeleteதமிழ் மணம் 3
இன்றய கிராமத்தின் வள்ளித் திருமண நாடக வசனங்களை ஒருமுறை கூட கேட்காத மனிதர்கள் வெறிக் கூச்சல் போடுகிறார்கள்..
Deleteபாலா சைக்கோ, ராஜ அநியாயம் பண்ணிட்டார் என...
மீண்டும் ஒரு பதிவை எழுத இருக்கிறேன் தோழர்
எல்லோரும் ஓட்டு ஓட்டுன்னு விரட்டறாங்க! நீங்கதான் பாராட்டி இருக்கீங்க! பார்ப்போம்! நன்றி!
ReplyDeleteஎன்னைப் பொறுத்த வரை இது ஒரு முக்கியமான படம் ..
Deleteசமூகத்திற்கு அல்ல என்று நீங்கள் வாதிட்டாலும் சினிமாவிற்கு இது அவசியம்..
பின்னால் பேசுவோம் ஸ்வாமிகள்
Dazzling review of "தாரை தப்பட்டை": பாலாவை masochistன்னும் அவர் படங்களை bizarreன்னும் சொல்லிட்டுத் திரியுற popcorn குஞ்சுகள் அவசியம் படிக்கணும்...
ReplyDeleteபயந்து அலறும் யாரும் நம்ம கிராமத்து திருவிழாக்களை ஒருமுறை கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கேன்.
Deleteகுடும்பத்தோடு... குழந்தைகளோடு... பார்க்க வேண்டாம் என்று சொல்கிறார்களே...
ReplyDeleteகுடும்பத்தோடு பார்க்க முடிந்த படங்கள் மட்டுமே பார்க்கமுடியும் எங்களுக்கு..பிள்ளைகளை விட்டுவிட்டுப் பார்க்கும் வாய்ப்பு இல்லாததால் சினிமா விசயத்தில் நாங்கள் பின்தங்கி இருப்பதாக நண்பர்கள் கேலி செய்கிறார்கள் :)
Deleteகிரேஸ்! இதை நீங்க ஒரு பெருங்குறைபோல் சொன்னாலும், எதில் பின் தங்கி இருக்கணுமோ அதில்தான் பிந்தங்கி இருக்கீங்கனு எங்களுக்கு விளங்காமல் இல்லை!:)))
Deleteகிரேஸ் இது முற்றிலும் உண்மை என் நற்பாதிக்கு திரையரங்கம் போவது பிடிக்கும் ஆனால் தற்போது வரும் படங்கள் இருவர் மட்டுமே பார்க்க முடியும், சிறுவர்கள் கெட்டுப் போகிறார்கள் என்று சொல்லும் ஊடகங்கள் அதற்கு ப்ளான் போட்டுத் தரும் பெற்றோரை என்ன சொல்லியிருக்கின்றன
Deleteபக்கத்தில் அப்பா அம்மா இருக்கும் பொழுதே எல்லா விவரத்தையும் பார்க்கும் அடுத்த தலைமுறை அதை ப்ராக்டிகலாக செய்யத் தலைபடுவது அவர்கள் தவறே அல்ல.
விளைவுகள் தெரியாது வினையை விதைக்கும் மூத்த தலைமுறையின் தவறு அது...
இந்த விசயத்தில் இப்போது நாங்களும் பின்தங்க ஆரம்பித்திருக்கிறோம் ..
வருண், நாங்கள் குறையாக நினைக்கவில்லை :-)
DeleteWe enjoy whatever we can see. And yes, இதில் பின்தங்குவது நல்லதே :-))
உண்மை அண்ணா. இல்லாவிட்டால் ஓபனாக இது தவறென்றும் சரியென்றும் பெற்றோர் பேசவும் வேண்டும்.
Deleteஇந்த பின்தங்குதல் அவசியமும் நல்லதும் என்று ஆகிவிட்டது இல்லையா அண்ணா
செம விமர்சனம் கஸ்தூரி! பார்த்துரணும்....
ReplyDeleteபார்த்துட்டு சொல்லுங்க
Deleteஇது என் பார்வை
விமர்சனம் மிக அருமை. ஆனால், நான் கொஞ்சம் வேறுமாதிரி கேள்விபட்டேன். பாலாவின் படம் ஒரேமாதிரி இருக்கிறது மனநலம் பிறழ்ந்த மனிதர்கள்தான் இதிலும் கதாபாத்திரங்கள். கிட்டத்தட்ட ஒரேமாதிரி கதை அமைப்பு போரடிக்கிறது என்று சொல்கிறார்கள்.
ReplyDeleteத ம 3
வாருங்கள் வித்தகப் பதிவரே,
Deleteபாலா படங்கள் ஒரு விதத்தில் சமூகத்தின் பிரதிபலிக்கும் கண்ணாடி..
சமூகத்தின் செல்பி...
அசிங்கமா கீது என்று கதறுவது எல்லாம் அவா முகத்தை பார்த்துதான் என்பது எப்போதும் புரியாது
இன்னொரு பதிவு எழுதணும் போல
பூக்களை மட்டுமே ரசிக்கும் கண்களுக்கு விதைத்தவனின் வியர்வையும் தெரியவேண்டும்..இல்லையா தோழர்.
இந்த கொரங்கு பொம்மை என்ன விலை என்று கேட்கும் வடிவேலுவை போன்றவர்கள்தான் பாலா படத்தை கண்டு அலறுபவர்கள்.
அவசியம் பார்க்கிறேன் நண்பரே
ReplyDeleteநன்றி
பார்த்துட்டு சொல்லுங்க நண்பரே
Deleteநான் கடவுளிலிருந்து பாலாவின் ரசிகன். அதன்பின் அதற்கு முந்தைய படங்களையும் பார்த்து மனம் சஞ்சலப்பட்டு கிடந்தபோது இவன்தான் பாலா வாசித்தேன். பரதேசியில் தேனீரில் ஒழிந்திருக்கும் கண்ணீரை உதிர்த்து காட்டியவர். நிச்சயம் பார்க்க வேண்டும். அருமையான விமர்சனம் சார். :-)
ReplyDeleteபார்த்துட்டு சொல்லுங்க
Deleteவிமர்சனம் தூள் கிளப்புகிறது அண்ணா.
ReplyDeleteஎன்னுடைய விமர்சனம் பொது விமர்சனங்களில் இருந்து முற்றாக மாறுபட்டிருக்கிறது...
Deleteதினமலர் அரைப்பக்கத்துக்கு அலறியிருகிறது ..
வேறு வழியே இல்லை இன்னொரு பதிவு எழுதணும் போல
ஆமாம் அண்ணா , சில நண்பர்களும் அலறியிருக்கிறார்கள்.
Deleteயப்பா ..ஒரு படத்தை அணுவணுவா எப்படி ரசிக்கனுமுன்னு கஸ்தூரி கிட்டத்தான் தெரிஞ்சுக்கணும்!
ReplyDeleteசேது,பரதேசி..மறக்கமுடியுமா பாலா படங்களை!
நான் படத்தைப் பார்த்துட்டுப் அப்புறம் பேசுறேன்!
அய்யா மேடைப் புயல் எப்படி வலை புயலாக மாறியது..
Deleteதங்களை இங்கே சந்தித்தது இந்த ஆண்டின் பம்பர் பரிசு
மது சார்
ReplyDeleteநீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். படம் பார்த்துவிட்டு மறுபடியும் வருகிறேன்.
ஊடகங்கள் எல்லாம் படத்திற்கு எதிராக எழுதிவரும் வேளையில் ஏன் இப்படி எழுதினேன் என்பதற்காவே இன்னொரு பதிவை எழுத வேண்டும் போல
Deleteஇந்த படம் பற்றி விமர்சனைகளை பற்றி கவலைபடாமல் ரசித்து பார்த்தல் தான் புரியும் இப்போ வரும் மொக்கையான படங்களை விட இந்த படம் ரொம்ப மேல். பாலு சாரின் தலைமுறைகள் திரைப்படத்துக்கு பிறகு மிகவும் இயல்பாக எடுக்கப்பட்ட திரைகாவியமாக இருப்பது தான் படத்தின் பலம் ....
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கு நன்றிகள் தோழர்
Deleteஎழையாக வாழ்ந்து பழக்கப்பட்டவனுக்கு ஏழ்மை சாதாரணம்தான். அவ்வாழ்க்கை பழக்கப் படாத நமக்கு அதை கதையிலோ அல்லது திரைப்படத்திலோ பார்த்து சகிப்பது கடினம். அப்பாவிச் சிறுமியரைக் கடத்திச் சென்று பாலியல்தொழிலாளியாக பலிகொடுத்து விடுகிறார்கள் சில கயவர்கள். குமரியாகி, பெரிளம்பெண்ணாக ஆன அவள் நாளடைவில் அவ்வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு விடுகிறாள். கவனிக்கவும்!! அவளும் வாழ்வில் சிரிக்கிறாள், சில நேரங்களில் சந்தோஷமாக இருக்கிறாள். சில நேரங்களில் சோகமாக இருக்கிறாள். அவள் அந்த 20 ஆண்டுகள் அவ்வாழக்கையில் தான் பாழாக்கப்பட்டதை நினைத்து ஒவொரு நிமிடமும் அழுதுகொண்டே இருப்பதில்லை!
ReplyDeleteஇதெல்லாம் எதுக்கு சொல்றேன்ன்னா கரகாட்டக்காரர்கள் வாழக்கையும் பழக்கப்பட்டுப்போகும். அவர்கள் வாழக்கை அவர்களுக்கு அருவருப்பாகத் தெரியாமல்ப் போய்விடும்தான். ஆனால் நமக்கு? அதை சினிமாவில் பார்க்கும் நமக்கு? நாம் பழக்கப்படாத நமக்குத் தெரியாத ஒரு வாழ்க்கை. கேள்விகள்! இதை படைப்பவன் சொல்வதெல்லாம் உண்மையா? இல்லை அவன் இதில் தன் சொந்தக்கற்பனையைக் கலக்கிறானா? அந்தக் கற்பனைக் கலவையை நாம் ஒரு சிலர் உண்மை என்று எடுத்து ஏமாறுகிறோமா? நாம் ஏமாற்றப்படுகிறோமா??
எனக்கு பாலா என்கிற படைப்பாளி மேலே இதுபோல் பல சந்தேகங்கள் உண்டு. உண்மைபோல் சில கற்பனைகளை கட்டி விட்டுகிறாரோ? இல்லை இவர் புரிதலில் இவருக்கே பிரச்சினையா? இல்லை இவர் மனநிலைக்கேட்ப ஒரு விசயத்தை, ஒருவர் வாழக்கையை இவர் வசதிக்கேற்ப புரிந்துகொள்கிறாரோ? இவர் புரிந்துகொண்ட "அரைவேக்காட்டுத்தனத்தை" படைப்பில் "உலக நடப்பாக"க் காட்டி பலரையும் குழப்பி விடுகிறாரோ?
இன்னும் வரும், மது.. :)
படம் பார்த்தேன். பார்த்து முடித்துவிட்டு வெளியில் வந்து கொஞ்ச நேரம் பேச்சு ஏதும் எழாமல் மௌனியாக நடந்தேன் . மனசுக்குள் ஒரு பாதிப்பை உணராமல் இருக்கவே முடியவில்லை.
ReplyDeleteஇருந்தாலும் கரகாட்டக்காரர்களின் உண்மை நிலையை இன்னும் அழுத்தமாக பதிக்கவில்லையோ என்ற ஆதங்கம் இருந்தது. அவருடைய வழக்கமான கிளிஷேக்கள் இந்தப் படத்திலும் இருப்பதை அவர் ஏன் தவிர்ப்பதில்லை ? வணிக ரீதியில் திணிக்கப்பட்ட காட்சிகளும் இருந்தன. அது சரி . கலை வளர்க்கவா படம் எடுக்கிறார்கள்?
இசையை நீக்கிவிட்டு இந்தப் படம் பார்த்தோமென்றால் உயிரில்லா ஒளி பிம்பமாக மட்டுமே தெரியும். இளையராஜா இன்னும் சிங்கம்தான் என்பதை ஒரு காட்டு காட்டிவிட்டுப் போய்விட்டார். நீங்கள் சொன்னதைப் போல இப்போதுள்ள இசையமைப்பாளர்கள் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் . ' நான் ஓய்ந்து போய்விட்டேன் என்றாடா சொல்கிறீர்கள்? ' என அவர் கேட்பது போல் தெரிகிறது. ' சாமிப் புலவர் ' சிம்பாலிக்காக இளையராஜாவை பிரதிபலிக்கிறாரோ?
படம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. இளையராஜாவின் 1000வது படம் என்று முதலில் ஷமிதாப் பைச் சொன்னார்கள். அதற்கு மும்பையில் விழா எடுத்து இராவுக்கு எதோ பெரிய கேடயமெல்லாம் கொடுத்தார்கள். இப்போது தாரை தப்பட்டை 1000 என்கிறார்கள். இளையராஜாவின் இசை என்றாலே எல்லா பதிவர்களும் வம்படியாக ஒரே வார்ப்பில் செய்யப்பட்டதுபோல பின்னணி இசையில் கிளப்பி விட்டார். இன்னும் இருக்கிறேன் என்று காட்டிவிட்டார் என்று சொல்லிச் சொல்லியே ஓய்ந்துவிட்டார்கள். கொஞ்சம் பஜனையை மாத்துங்கப்பா.
ReplyDeleteபாலா ஒரு போலி யதார்த்தவாதி. மனநிலை பிறழ்ந்தவர். ஆர் எஸ் எஸ் சார்பு கொண்டவர். அவர் படங்கள் நம் சமூகத்துக்கு கொஞ்சமும் தேவையில்லாத ஆபாசமும் அருவருப்பும் நிறைந்தவை. அப்படியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு ஒரு வீட்டில் சமையலறை, தூங்கும் அறை, கழிப்பறை எல்லாமே உண்டு. பாலா கழிப்பறையை காட்சிபடுத்துகிறார்.
அவரால் இந்த சமூகத்தில் நடக்கும் அவலட்சணங்களை மட்டும்தான் காட்டமுடியும் என்று அவருக்கு பாதுகாப்பாக உங்களைப் போன்றவர்கள் பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
தனியாகச் சென்று பார்க்கவேண்டிய படங்களை சிலாகிப்பது குறித்து கொஞ்சம் கவலை கொள்ளுங்கள் மது. இது மிக ஆபத்தான போக்கு. தமிழிலும் torture-porn வகைப் படங்கள் வருவது நமது சமூகத்துக்கு நல்லதல்ல. பாலா தான் இந்த விஷ வித்தை விதைத்துள்ளார்.