ஒரு டைரி பக்கம், விதைக் கலாம், வீதி, வெங்கட் நாகராஜ்,

நிகழ்வில் மைத்துனர் கார்த்திக் மற்றும் சகோ சுமதி
மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டிய நாட்களில் சமூகம் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது. எத்துனை உணர்வுகள்? எத்துணைக் கேள்விகள்?

நெல்லிக்காய் மூட்டை போல இருந்தாலும் இந்தமாதிரித் தருணங்களில் நமது சமூகம் இயங்கும் விதம் தனித்துவம் வாய்ந்தது.


மனிதர்களை அவர்களின் கீழ்மைகளில் இருந்து மீட்கும் நாட்களாக இருக்கின்றன வலிமிகுந்த அந்த நாட்கள்.

கம்ப ராமாயணத்தில் நீசம் நிறைந்த மனது குறித்து ஒரு விவரணை வரும்.
பாசி படர்ந்த குளத்தில் ஒரு கல்லை விட்டு எறிந்தால் சிறிது நேரத்திற்கு பாசி விலகி தண்ணீர் தெரியும். ஆனால்  வெகு  குறுகிய காலத்தில் பாசி மீண்டும் சேர்ந்து படரும் என்பார் கம்பர். நீசம் நிறைந்த மனதில் நல்ல எண்ணங்கள் வருவதும் அத்போலத்தான் என்பார் கம்பர்.

உண்மைதானே!

அப்படி கலாம் அவர்களின் மரணம் இந்தியர்களின் மனப்  பாசியின் மீது கல்லெறிந்து அதை அலைகளில் நெகிழ்த்தி நகர்த்தியிருந்த ஒரு தருணத்தில் இளவல் ஸ்ரீயிடம் இருந்து ஒரு அழைப்பு.

சார் கலாம் அய்யா நினைவாக மரம் நடும் ஒரு  அமைப்பை ஆரம்பிக்கிறோம் உங்கள் தலைமையில் என்றார்.
நிறுவனர்கள் பாலாஜி, மற்றும் மலையப்பன் 

என் வயதை திருப்பிப் போட்டால் வருகிற வயதில் உள்ள இளைஞர் பட்டாளம் அது. அவரது குழுவில் சிலர் என்னுடைய மாணவர்களாகவும் இருந்தவர்கள். இளைஞர்கள் தனித்துச்  செயல்பட வேண்டும் தலைமைக்கு வரவேண்டும் என்று பேசும் எனக்கு அந்த அழைப்பு உவப்பாக இல்லை.

பாடையில்போனால் கூட பதவியோடுதான் போகவேண்டும் என்பது நமது பொதுவாழ்க்கைப் பிரதிநிதிகளின் வெட்கம்கெட்ட நிலைப்பாடு  இதை நான் நண்பர்களிடம் பலமுறை பலவிதத்தில் பேசியிருக்கிறேன்.
விமர்சித்திருக்கிறேன்.

மைத்துனர் மாணிக்கம் நிகழ்வில் 
அத்தகு ஆளுமைகளைக் கடும் விமர்சனம் செய்யும் நான் எப்படி முழுக்க முழுக்க இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் இயக்கத்தில் அவர்களின் தோளில் ஏறி அமர்வேன்?

முதல் அழைப்பிலேயே அதை நான் உறுதியாய் மறுத்தேன். என் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினேன்.

ஆனால் உணர்வுப் பாசிகள் மீண்டும் சேர்ந்தால் இயக்கம் கனவிலேயே போய்விடும் என்பதும் எனக்குத் தெரியும்.

உடனே ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து  விவாதித்து முடிவெடுங்கள் ஸ்ரீ. நான் பாரதி தனிப்பயிற்சி நிலையத்தில் கேட்கிறேன் கூட்ட அரங்கிற்கு என்றேன்.

பி.டி.சி. நிறுவனர் திரு.செல்வராஜ் உடனே செய்யுங்கள் என்றார். முதல் கூட்டம் நிகழ்ந்தது. தலைவர்கள் என யாரும் அறிவிக்கப்படாமலேயே. விதைக்கலாம் என்கிற பெயரினைத் முன்மொழிந்த பிரபாகரன் தியாகராஜன் கூட்டத்தின் இறுதியில் ஒரு பதிலைத் தர அது எனது நினைவில் எவர்கிரீனாக பதிந்து போனது.

தொடர்ந்து வகுப்புகள் நடக்கும் பி.டி.சியை தொல்லை செய்யாமல் அடுத்தக் கூட்டத்தை ஆக்ஸ்போர்ட் உணவகக் கல்லூரியில் வைத்துக்கொண்டோம். புதிதாக நிறைய  உறுப்பினர்கள்.

இந்தக் கூட்டத்திற்கு முதல் முதலாக வந்தக் கார்த்திக் எதுவுமே பேசாமல் முழுதுமே அமைதியாக இருக்க பேசுங்க கார்த்திக் என்றேன் நான். மனிதரின் முதல் கேள்வியை அந்தக் கூடத்திற்கு வந்த யாரும் மறந்திருக்க முடியாது.

கூட்டத்தின் மிக முக்கிய முடிவாக உடனே செயல்படுங்கள் என்று சொன்ன ராமலிங்கம் (ஆங்கில ஆசிரியர் ஏ.மாத்தூர்) இயக்கத்தை செயலுக்குத் தள்ளியதில் முதல்வர்.

முப்பது பேர் பேசி முதல் நிகழ்வை திட்டமிட்டு ஞாயிறு களத்தில் இறங்கிய பொழுது வந்தவர்கள் பத்துப் பேருக்கும் குறைவே.

இழுப்பூரில், அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலில் துவங்கியது இயக்கம் தனது பணியை. முதல் முதலில் தந்து பள்ளி வளாகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து அதற்கு தலைமை ஆசிரியரின் அனுமதியையும் பெற்ற விதைக்கலாமின் முக்கிய நெறியாள்கை உறுப்பினர் திரு.காசிப் பாண்டியின் பள்ளி அது.

அடுத்த இடம் எங்கேப்பா
முதல் நிகழ்வில் கடப்பாரைபிடித்துக் காய்த்துப்போன வடு என் உள்ளங்கையில்  இருக்கும்போதே  அமைப்பின் உறுப்பினர்கள்  261 கன்றுகளை அடைந்திருகிறார்கள்.

எப்படி இவர்களால் இயங்க முடிகிறது என்று சில நேரம் ஆச்சர்யமாகத் தோன்றும். இது ஞாயிறு மட்டுமே நடக்கும் இயக்கமாக இல்லை இப்போது!

நிகழ்வுக்கு இடத்தை தேர்வு செய்கிறார்கள். இது பெரும்பாலும் உறுப்பினர்களால் முன்மொழியப்படும்.

அடுத்து புதன் கிழமையே இடத்தைப் பார்த்து குழிகளை எடுத்து வைக்கிறார்கள். (ஒருமுறை கூட இதற்கு நான் சென்றதில்லை)

குழிகள் மூன்று தினங்கள் ஆறியவுடன் ஞாயிறு அதிகாலை ஐந்தரைக்கு ஒன்று கூடி ஆறுமணிக்கு புறப்பட்டு கன்றுகளை நடவு செய்து ஒன்பதுக்கெல்லாம் திரும்பிவிடுகிறார்கள்.

பல்வேறு கேள்விகள் பல்வேறு புரிதல்களை தரும் இயக்கமாக இருக்கிறது எனக்கு. இப்படி தீ போல வேலைபார்க்க இவர்களை இணைப்பது எது?

உறுப்பினர்கள் பாக்கியராஜ், கார்த்திக் போன்றோரின் அர்பணிப்புக்கு காரணம் என்ன?

இதுவரை இந்த இயக்கத்திற்கு நன்கொடை கொடுத்தவர்கள் விவரம்.

கவிஞர் முத்து நிலவன். 1000/-, திரு.மணி, முன்னாள் மேலாளர், பாரத ஸ்டேட் பாங்கு, ரூபாய் 5000/-, திரு. டேவிட், ஆசிரியர் விதைக்கலாம் இயக்கத்திற்கு 5000/- இயக்கம் திரட்டிய வெள்ள நிவாரணத்திற்கு 2000/-. திரு.ஜெயராஜ், தலைமை ஆசிரியர் அவர்கள் 2000/-.

இவர்கள் யாரையும் இயக்கம் நிதிக்காக அணுகவில்லை. அவர்கள் தானாகவே முன்வந்தவர்கள்!

இப்படி வருகிற பணம் கன்றுகளுக்கும், கூண்டுகளுக்கும் மட்டுமே செலவிடப் பட வேண்டும் என்பது திரு.காசிப்பாண்டியின் உறுதியான வேண்டுகோள். இதுவரை அப்படியே செலவிடப்பட்டுள்ளது.

பொறியாளர் ரகுபதி முதல் வருகை 
நிகழ்வின் கன்றுகள், கூடுகள் மற்றும் கழிகள் மட்டுமே இந்தப் பணத்தில் இருந்து பெறப்பட்டன.

நிகழ்விற்கு சென்றதெல்லாம் உறுப்பினர்களின் சொந்தச் செலவு. தேனீர் கூட நட்புப் பகிர்தல்தான்!

இப்படி செலவிட்டதால்தான் 261 கன்றுகளை அடைய முடிந்திருக்கிறது.

இப்போது தன்னார்வ நன்கொடை சுழியில் வந்திருக்கிறது. ஆனால் உறுப்பினர்கள் நிகழ்வை நிதியிண்மை காரணமாக நிறுத்தப் போவதில்லை.

நிச்சயம் தொடரும் இந்தப் பயணம். 

நான் முதல் கூட்டத்தில் சொல்லியிருந்தேன். பதினேழு நிகழ்வுகளுக்குப் பின்னர் நான் விடைபெறுவேன் என. ஆனால் இருபத்திமூன்றில் இருக்கிறேன். இன்னும் இயக்கம் முறைப்படுத்தப்படவில்லை, பதிவு செய்யப்படவில்லை. இதற்கு பின்னர் விடைபெற்றுத்தான் ஆகவேண்டும் என்கிறது மனசாட்சி. பசங்க சரியான திசையில் போய்க்கொண்டிருக்கும் பொழுது நமக்கு அங்கே ஒன்றும் அதிகம் வேலை இல்லையே.

இன்னொரு நல்ல விசயம் எனது அமெரிக்க நண்பர்  ஒருவர் யு கே கார்த்திக் அவர்களின் வங்கிக் கணக்கு எண்ணைப் பெற்றுள்ளார். தேவை எனில் கேளுங்க என்றும் சொல்லியிருக்கிறார். அவசியப் படாது என்றாலும் அவர் இணைய வங்கிக் கணக்கில் இப்போது விதைக்கலாம் கார்த்தியின் எண்ணும் இருப்பது கூடுதல் மகிழ்வு.

வாரநாட்களில் தாமதமாக எழும் நான் ஞாயிறுகளில் அதிகாலை எழுவது எனது  அண்டைவீட்டாருக்கு வினோதமாகப்படலாம். 

விதைக் கலாம் என்னை தொடர்ந்து ஆச்யர்ப்படுத்தி வருகிறது. அதிகாலை அழைத்தால் மிட் நைட்டில் யாருப்பா கூப்பிடுவது என்று கேட்கும் சிவாஜி கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து வருவது இயக்கத்தின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது என்பதைச் சொல்கிறது. தனது பிறந்த நாளுக்கு பூவாளிகளையும் மண்வெட்டியையும் பரிசளித்த நாகுவின் மூலம் இயக்கத்திற்கு அறிமுகமானவர்  சிவாஜி. புதிதாக  இணைந்திருக்கும் விதைக் கலாமின் முகங்களில் இரண்டு தலைமை ஆசிரியர்களும் இரண்டு பொறியாளர்களும் இருப்பது நம்பிக்கையத் தருகிறது. புது வரவுகள்  வசந்த், ரகுபதி, மற்றும் தலைமை ஆசிரியர்கள் உயர்திரு கண்ணன் மற்றும் குருமூர்த்தி ஆறுமுகம் ஆகியோருக்கு என் அன்பு கலந்த நன்றிகள்!

விதைக்கலாமின் முகங்களை தொடர்ந்து எழுதவே விருப்பம். எனது வேகம்தான் உங்களுக்குத் தெரியுமே. மெல்லத்தான் எழுதுவேன்.

இந்த வார நிகழ்வு முப்பத்தி ஐந்து வருடங்களாக என்னுடன் நட்பில் இருக்கும் மைத்துனர் கார்த்திக் அவர்களின் புதிதாக எழும்பும் இல்லத்தில். தங்கை சுமதியுடன் இன்னொரு மைத்துனர் மாணிக்கமும்வர மகிழ்வானதொரு நிகழ்வானது.


இந்த நிகழ்வுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. என்னிடம் பயின்ற அரசுப் பள்ளி மாணவர்களில் சிலர் மட்டுமே பொறியியல் படிப்பினை முடித்திருக்கின்றார்கள்.  அப்படி முடித்துவிட்டு சென்னையில் பணியில் இருந்த இருவர் வெள்ளத்திற்கு பின்னர் பணிக்கு திரும்பவில்லை. ஒருவருக்கு அழைப்பு இல்லை. இன்னொருவருக்கு வேலை காலி. (வேலைதான், வாழ்க்கை அல்ல) இப்படி இருவர் என்னுடன் இந்த  நிகழ்வில் கலந்து கொண்டனர். ரகுபதி, (கட்டிடப் பொறியியல் பட்டதாரி), வசந்த் (இயந்திரவியல் பட்டயக் கல்வி) இருவரும் நிகழ்வில் வந்தது மகிழ்வு.

இருப்பினும்  நிகழ்வின் பின்னர் நீண்ட நேரம் செலவிட முடியவில்லை. டெல்லியில் இருந்து பதிவர் வெங்கட் நாகராஜ் அவர்கள் வீதி இலக்கியக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்ததே காரணம்.


தேநீர் அருந்தித் தான் போகவேண்டும் என்ற மைத்துனர் கார்த்தியின் அழைப்பை நிராகரித்து வசந்துடன் ஒரு கடப்பாறை ஒன்றை எமது பங்காக   எடுத்துக்கொண்டு புதுகை விரைந்தோம்.

அதற்குள் வெங்கட் ஜி தமிழ் இளங்கோ அய்யாவோடு புதிய பேருந்து நிலையத்தில் பேசிக்கொண்டிருப்பதாக சொல்ல லேசான குற்றவுணர்வு வேறு. முன்னதாகவே அவர் இவ்வளவு அதிகாலையில் வருவேன் என்று சொல்லியிருந்தால்  காலைச்  சிற்றுண்டியை ஒன்றாக எடுத்துக் கொண்டிருக்கலாம்!


வருத்தங்கள்தான்.

வீதிக் கூட்டம் துவங்க சில நிமிடம் மட்டும் இருவரும் ஒன்றாக பேச முடிந்தது.  இளங்கோ அய்யாவின் வருகை மகிழ்வைக் கூட்டியது. வீதிக் கூட்டம் குறித்து கவிஞர் கீதா அருமையாக எழுதியிருக்கிறார்கள்.

எத்துனைப் புதிய முகங்கள் வீதியில்!

அமைப்பாளர்கள் வைகறை மற்றும் சகோ கீதா ரொம்பவே மெனக்கட்டு புதுரத்தம் பாய்ச்சியிருக்கிறார்கள்.

கே.வி என்று அழைக்கப்படும் கிருஷ்ணவரதராஜன் பேசியது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. முனைவர் துரைக்குமரன் அவர்கள் உப்புவேலியை (நூல்) அற்புதமாக அறிமுகம் செய்தார்.

ஒளியோவியர் செல்வா ஒரு சிறுகைதையினை வாசித்தார். தங்கை நிலா பாரதி அருமையான கவிதைகளை வாசித்தார். கவிஞர் பலர் அருமையாக எழுதுவார்கள் ஆனால் வாசிக்க சொன்னால் தயங்குவார்கள்.சிலர் மொக்கையாக எழுதுவார்கள் குரல் வித்தையில் கவிதைதான் போல என்று நாம் நினைதுவிடுவோம். ஆனால்  நிலா அருமையாக எழுதுறார். அற்புதமாக படிக்கிறார். வளரட்டும் இந்த நிலவு.

இறுதியில் சிறப்புரையாற்றிய பயணப் பதிவர் வெங்கட் நாகராஜ் தனது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். பங்கேற்பாளர்கள் தாங்களும் அவருடன் பயணித்ததது போல உணர்ந்ததாக  சொன்னது அவரது வெகு இயல்பான பேச்சாற்றலை என்னை உணரவைத்தது.

வெங்கட் ஜி யின் தளத்தில் பலமுறை என்ன காமிரா பயன்படுத்துறீங்க என்று கேட்டுகொண்டே இருந்தேன். ஆனால் நிகழ்வில் பலமுறை நானே அவரது காமிராவை பயன்படுத்துவேன் என்று நினைக்கவில்லை.

லென்ஸ் காப் ஒன்றை எங்கோ வைத்துவிட்டு தேடி எடுத்துக் கொடுத்தேன்.  ஜி அவ்வளவு கவனமாக இருந்தது எனக்கு ஒரு வழிகாட்டி அனுபவம். பலமுறை இதே போல் நான் தொலைத்திருக்கிறேன்.

வீதியில் எதிர்பாரா நல்விருந்தாக எனது மூத்த சகோதரி நீலா அவர்களின் இயற்கை அங்காடியில் தயாரான வாழைப்பூவடையும், வரகரிசிப் பாயசமும், சிறுதானிய அவியலும் கிடைத்தது.

ஆலங்குடியில் சகோதரியின் இயற்கை அங்காடி செழிக்கட்டும்.

ஆலங்குடியில் இருக்கும் எனது நண்பர் பட்டாளத்துடன் அங்காடிக்குச் செல்ல இருக்கிறேன். எதற்கும் அங்காடியில் ஆட்டுக்கல் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு போக வேண்டும்.

ஷாஜகான் அவர்களின் சக்கரக்காலனை பரிசளித்த பொழுது
சந்திப்போம்

அன்பன்
மது. 

Comments

  1. அன்றைய நிகழ்வுகள் இன்னமும் நெஞ்சில் பசுமையாய்.....

    நாம் பேசிக்கொள்ள முடிந்தது வெகு சில நிமிடங்களே என்பதில் எனக்கும் வருத்தம் உண்டு. நேற்று காரைக்குடி செல்லும் வழியில் முத்துநிலவன் ஐயாவினை மட்டுமே சந்திக்க முடிந்தது. அடுத்த முறை தமிழகம் வரும்போது ஒரு ஞாயிறில் விதைக்கலாம் நிகழ்வுக்கு வர வேண்டும்......

    நன்றி நண்பரே......

    ReplyDelete
  2. பதிவர் சந்திப்பில் முதல் நிகழ்ச்சியாக .மரம் நட்டோமே..அது வளர்ந்து விட்டதா ஜி :)

    ReplyDelete
  3. நல்ல நிகழ்வுகளின் தொகுப்பாய்...
    அருமை...

    ReplyDelete
  4. தங்களது பணி சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. விதைக்கலாம் பெருவிருட்சமாக வளர வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  6. அருமையான அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்திருக்கின்றீர்கள்.

    //எதற்கும் அங்காடியில் ஆட்டுக்கல் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு போக வேண்டும்.// ஹஹஹஹ் எதற்கு? அவ்வளவு விலை அதிகமா...மாவாட்ட வேண்டி வந்துருமோனு பயமோ..ஹஹஹஹ்...போய்வந்த பின் அதையும் பதிவாக்குங்கள். அங்கு வந்தால்....வந்தால் என்ன வருவேன்...அப்போது ஒரு கை பாத்துரலாமேனுதான்...ஹஹஹ்

    கீதா

    ReplyDelete
  7. விதைத்தலோடு, விதைக்கலாம் நண்பர்கள் பணி முடிந்து விடுகிறதா? தண்ணீர் யார் ஊற்றுகிறார்கள்? ‘மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றாமலா போய் விடுவான்?’ என்பது பழமொழி. இந்த பதிவினில் எனது பெயரைக் குறிப்பிட்டதற்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

வருக வருக