சர் சி வி ராமன் |
சர் சி வி ராமன் கல்லூரியில் முதல் விருப்பமாக வராலாற்றை தேர்ந்தெடுத்தவர். தேசத்தை அறிவியல் வரலாற்றின் பக்கங்களில் பதிக்கப் போகும் ஒருவர் என்பதால் அவருக்கு வரலாற்றுப் பாடம் கிடைக்கவில்லை போல!
அப்படி ஒரு நிகழ்தகவில் அவருக்குக் கிடைத்த இயற்பியல் இந்தியாவிற்கு ஒரு நோபலைத்தர ராமன் விளைவு குறித்து அவர் அறிவித்த அந்த பிப் இருபத்தி எட்டினை நினவு கூறும் வண்ணம் ஆண்டுதோறும் அந்த தினம் இந்திய தேசிய அறிவியல் தினமாக கொண்டாப்படுகிறது.
பத்தாம் வகுப்பின் அறிவியல் செய்முறைத் தேர்வுகள் இருந்ததால் இராமன் விளைவை நாங்கள் கொஞ்சம் முன்னாலேயே கொண்டாட வேண்டியிருந்தது.
புதுகை ஜே.சி.ஐ சென்ட்ரலின் தலைவர் ஜே.சி.அன்பரசன் அவர்கள் பள்ளியை அணுகி அறிவியல் தினத்தை கொண்டாடும் விதத்தில் ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்ய முடியுமா என்றார்.
பள்ளியில் அந்தத் தேதியில் செய்ய முடியாத நிலை. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் துவங்கி விட்டன! அறிவியல் செய்முறைத் தேர்வுக்காக மாணவர்களைத் தயார் செய்து கொண்டிருந்தனர் ஆசிரியைகள்.
கல்வி குறித்து சரியான புரிதல் இன்னமும் இல்லாத ஒரு கிராமத்துப் பள்ளியில் மாணவர்களை தயார் செய்வது என்பது எவ்வளவு பெரிய சவால் என்பது புரிபவர்களுக்கு மட்டுமே புரியும். முக்கியமாக ஆசிரியர்கள் இருவரும் வேறு பள்ளிகளுக்கு ஆய்வாளர்களாக போகவேண்டும்.
இந்த நிகழ்வு நடைபெற வாய்பே இல்லை என்கிற நிலையில் பள்ளியை அணுகிய ஜே.சி விக்னேஷ் ஏன் இருபத்தி எட்டுக்கு முன்னரே நடத்தக் கூடாது என்று கேட்க அப்படி செய்தால் ராமன் ஏதும் கண்ணைக் குத்திவிட மாட்டார் என்கிற தைரியத்தில் சரி என இசைந்தார்கள் ஆசிரியர்கள்.
தலைமை ஆசிரியை திருமிகு.ஞானம் அவர்களின் பேராதரவோடு நிகழ்வுகள் ஆயத்தமாகின. கடந்த வாரம் முழுவதும் மாணவர்கள் தயாரிப்பில் இருந்தார்கள். இன்று மாணவர்கள் தாங்களே தயாரித்த அறிவியல் கருவிகளுடன் பள்ளியை தெறிக்க விட்டனர். (டமார், டுமீர் சத்தங்களுடன்!)
கண்காட்சியை ஜேசிஐ தலைவர் திரு அன்பரசன் திறந்துவைக்க, நிகழ்வின் பரிசுகளை வழங்க வந்திருந்த முன்னாள் மண்டலத் தலைவர் ஜே சி கோடிஸ்வரா அழகப்பன் அவர்களும், செயலர் ஜே.சி பாலாஜியும், நடுவராக வந்திருந்து சிறப்பித்த முனைவர் எம்.ராஜ் குமார் அவர்களும் அரங்கை பார்வையிட்டனர்.
ஒரு பெப்சி பாட்டிலில் காற்றை அழுந்த ஊதி திடுமென அதை வெளியேற்றி பாட்டிலை பறக்க விட்டனர். திடும் திடும் என சத்தத்துடன். அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் படைப்புடன் வர நடுவராக வந்த முனைவர் வெகு தெளிவாக பரிசுகளை அறிவித்தார். இயங்கும் மாதிரிகளை மட்டுமே பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பரிசும் எதற்காக வழங்கப் படுகிறது என்பதையும் தெளிவாக விளக்கினார்
சூரிய ஒளி மின்விசிறி, பெர்நோலியின் ஊற்று, காற்றழுத்தத்தில் பறந்த பெப்சி குடுவை, வினிகர் பொங்கிய எரிமலை, வெற்றிட சோதனை என பல அறிவியல் கண்டுப்டிப்புகள் பரிசுகளை வென்றன.
இவை வெறும் செய்திதான்
ஆனால் இன்று காலை பரபரப்பான ஏற்பாடுகளுக்கு நடுவே சில காட்சிகள் என் நினைவில் நிரந்தரமாக பதிவாயின.
மாணவர்கள் பெருத்த ஆரவாரத்துடன் அறிவியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்!
எத்துனை உற்சாகம். எங்கிருந்தது இவ்வளவு நாட்களாக?
கட்டுடைத்த உற்சாகத்துடன் மாணவர்கள் அறிவியல் ஆய்வுகளை செய்தனர்.
உண்மையில் இந்த மாதிரி அனுபவங்களுக்காகத்தான் இன்னும் ஆசிரியராகத் தொடர்கிறேன்.
சம்பளமோ, சலுகைகளோ இரண்டாம் பட்சம்தான்.
இன்று நான் அனுபவித்த உணர்வு தனித்துவம் வாய்ந்தது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது இப்படி செய்தால் நன்றாக இருக்கும்.
பள்ளியில் கடும் பணிச்சுமைக்கு இடையே அத்துணை ஏற்பாடுகளையும் செய்த ஆசிரியை திருமிகு.ஜெயலக்ஷ்மி மற்றும் அருந்ததி அவர்களும் உண்மையில் நெஞ்சார்ந்த பாரட்டுக்களுக்கு உரியவர்கள்.
நான் உணர்ந்தது போலவே அறிவியல் ஆசிரியை திருமிகு. ஜெயலக்ஷ்மி அவர்களும் உணர்ந்ததாக சொன்னது அருமை. அவர்களுக்கு கடும் சவாலைத் தந்துவிட்டோமே என்கிற உறுத்தல் இருந்தது. மாணவர்களின் உற்சாகம் அவரைப் பற்றி அவரும் ஒரு நிறைவை உணர்ந்ததாக சொன்ன பொழுது எனது குற்றவுணர்வு ஆவியாகிஇருந்தது.
இப்படி ஒரு அனுபவத்தை கொடுத்ததற்காக ஜே.சி.ஐ. புதுக்கோட்டை சென்ட்ரலுக்கும் ஒரு பூங்கொத்து.
அத்துணை மாணவர்களுக்குமே பரிசுகள் என்றும் அறிவித்திருக்கின்றனர். பரிசுகளை ஜே.சி.அழகப்பன் நிச்சயம் தந்துவிடுவார் என்பதும் ஒரு கூடுதல் மகிழ்வு.
நன்றிகள்.
கடைசியாக ஒன்று
சிறப்பு பரிசுகள் பெற்ற இரண்டு மாணவர்கள் இதற்கு முன்னர் சில சங்கடங்களைப் பள்ளிக்குத் தந்தவர்கள்!
இன்று அரங்கில் ஒலித்த கைத்தட்டுகள் அவர்கள் இன்னொரு பரிமாணத்தில் மிளிரச் செய்யும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
பார்ப்போம்.
//கல்வி குறித்து சரியான புரிதல் இன்னமும் இல்லாத ஒரு கிராமத்துப் பள்ளியில் மாணவர்களை தயார் செய்வது என்பது எவ்வளவு பெரிய சவால் என்பது புரிபவர்களுக்கு மட்டுமே புரியும்.//
ReplyDeleteஇது முற்றிலும் உண்மை சார்... கிராமம் என்றில்லை... நகரமும் கிராமமும் கலந்த ரெண்டு கெட்டான் நிலையில் இருக்கும் பள்ளிகளிலும் இது கஷ்டமே...
//இன்று அரங்கில் ஒலித்த கைத்தட்டுகள் அவர்கள் இன்னொரு பரிமாணத்தில் மிளிரச் செய்யும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.//
இனி இவர்கள் சங்கடங்களை விடுத்து சந்தோஷத்தை தருவார்கள் என்று நம்பலாம்...
அனைவருக்கும் வாழ்த்துகள்.
சிறப்பு பரிசுகள் பெற்ற இரண்டு மாணவர்கள் இதற்கு முன்னர் சில சங்கடங்களைப் பள்ளிக்குத் தந்தவர்கள்!
ReplyDeleteஇன்று அரங்கில் ஒலித்த கைத்தட்டுகள் அவர்கள் இன்னொரு பரிமாணத்தில் மிளிரச் செய்யும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
நிச்சயமாக இன்னொரு பரிமாணத்தில் மிளிர்வார்கள்
நல்லாசிரியர்...நல்ல பதிவு...
ReplyDeleteவாழ்த்துகள்..
ReplyDeleteஇது போன்ற நிகழ்வுகள் ஊக்கம் தருபவை. தொடரட்டும்.
அருமையான பதிவு!!! //கல்வி குறித்து சரியான புரிதல் இன்னமும் இல்லாத ஒரு கிராமத்துப் பள்ளியில் மாணவர்களை தயார் செய்வது என்பது எவ்வளவு பெரிய சவால் என்பது புரிபவர்களுக்கு மட்டுமே புரியும்.//
ReplyDeleteமிக மிக உண்மையான வார்த்தைகள் கஸ்தூரி! நகரங்களிலுமே இன்னும் அந்த நிலைமைதான். மிகவும் மகிழ்ந்தோம்...கேரளத்திலும் இது போன்று மாணவர்களை ஊக்குவிக்கின்றோம்.
கடைசியாக ஒன்றைச் சொன்னீர்கள் பாருங்கள்! ஆம்! அவர்கள் நிச்சயமாக மிளிர்வார்கள்! அருமையான மகிழ்வான நிகழ்வு இது இந்த மாணவர்களைக் குறித்த செய்தி!!!