எஸ்.என்.டி.பி ஒரு அறிமுகம் சுரேந்தரின் கட்டுரை

சுரேன் சுரேந்தர் முகநூல் இணைப்பு ..
கட்டுரையாளர் சுரேந்தர் 


சாதிசங்கம் குறித்த  ஒரு  பதிவு  என்றாலும்  சங்கங்கள்  எப்படி  இருந்திருந்தால்  நன்றாக  இருந்திருக்கும்  என எண்ண வைத்த பதிவு.

நந்தனின்  பகிர்வை மலர்தருவில் வெளியிடுவதில் மகிழ்வு.

சுரேந்தருக்கு  நன்றிகள்


கோட்டயம் மாவட்டம் பாலா தாலுகாவில் பைகா என்றொரு சிற்றூர் உள்ளது. பாலா தாலுகாவைப் பற்றி மேலதிகம் தகவல் ஒன்றும் உள்ளது. நமது ஆதர்ஸ நாயகி மியா ஜார்ஜ் மற்றும் பாடகி ரிமி டாமி இருவரின் சொந்த ஊர் அது. இப்படிப் பட்ட வளப்பமான ஊருக்கு அருகில் இருக்கிறது பைகா.

பைகாவில் இருந்து விளக்குமாடம் செல்லும் வழியில் ஒதுங்கினார்போல் ஒரு சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. சிறிய கோவில் ஆனால் பழமையானது. இதில் பூஜை புனஸ்காரங்கள் செய்ய நாயர்களுக்கு மட்டுமே உரிமை இருந்து வந்துள்ளது. பூஜை மட்டுமல்ல வழிபாடு செய்யவும் அவர்களுக்கும் , அவர்களுக்கும் மேலே உள்ள சாதி மக்களுக்கும் தான் உரிமை. புலையர்கள் , ஈழவர்கள் எல்லாம் ரோட்டின் ஓரமிருந்து கன்னத்தில் போட்டுக் கொண்டு , சில்லரையை உண்டியலில் போடலாம் அவ்வளவே.


பத்து இருபது வருடங்கள் முன்பு வரை இதுதான் வழக்கம். ஈழவர்கள் பார்த்தார்கள். விளக்குமாடத்தில் தங்களுக்கென ஒரு பகவதி கோவிலை நிர்மாணித்தார்கள். புலையர்கள் முதல் நம்பூதிரி வரை யார் வேண்டுமானாலும் வந்து வழிபாடு செய்யலாம் என்றார்கள். சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த பெரும் கூட்டம் பகவதி கோவிலுக்குத் திரும்பியது.

சாமுண்டீஸ்வரி கோவிலில் வருமானம் கெட்டது . ஒரு நாளில் கோவில் நிர்வாகம் சாமுண்டீஸ்வரியை கைவிட்டது. பூஜை செய்து வந்த நான்கு நாயர் குடும்பங்கள் வருமானம் இல்லாமல் எட்டுமானூருக்கு பெயர்ந்தது. SNDP ( Sri Narayana Dharma Paripalan ) அதன் பகைச் சங்கமான NSS ( Nayar Service Society ) உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. SNDP ஈழவர்களுடையது. NSS பெயரில் உள்ளது போல் நாயர்களுடையது.

அதன்படி சாமுண்டீஸ்வரி கோவிலை ஈழவர்களே எடுத்து நடத்திக் கொள்ளலாம் என்றொரு வரலாற்று சிறப்புமிக்க உடன்படிக்கை ஏற்பட்டது. கிழ நாயர்கள் தம் கையால் துகிலுரியப்பட்ட ஈழவப் பெண்டிரின் பேத்திகள் பட்டாடை உடுத்திக்கொண்டு கோவிலுக்குள் நுழைவதை வஞ்சகத்துடன் பார்த்தார்கள். கைவிட்டுப் போன கோவிலுக்குள் இனி நுழைவதில்லை என்று சில நாயர்கள் காலை வழிபாட்டிற்கு பரணிங்கானம் வரைச் சென்று வந்தார்கள்.


மேலும் சில விஷமிகள், ஈழவர்கள் கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் செய்வதாக ஊதிப் பெருக்கினார்கள். SNDP அதற்கும் ஒரு ஏற்பாடு செய்தது. கோவில் நிர்வாகத்தில் அனைத்து சாதியினருக்கும் இடம் அளித்தது. சுழற்சி முறையில் அனைத்து சாதியினருக்கும் பதவிகள் வழங்கப்பட்டன. கடைசி தந்திரமும் பலிக்காமல் நாயர்கள் முற்றிலுமாக இப்பொழுது கோவிலைப் புறக்கணித்து விட்டார்கள்.


நாராயண குரு ஈழவ மக்களின் காட் பாதர். SNDP இன்றைய கேரளத்தில் மிகப்பெரிய சாதிச் சங்கம். ஒரு சாதிச் சங்கத்தை ஆதரித்து எழுதிக் கொண்டிருப்பது கூட அருவருப்பாக இருக்கிறதென்றாலும் தவிர்க்க முடியவில்லை. SNDP வன்முறையால் வளர்ந்த சங்கம் இல்லை. அதன் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளும் திட்டங்களும்தான் காரணிகள்.

தமது இன பிள்ளைகளை உயர்சாதிப் பள்ளிகள் அனுமதிப்பது இல்லை என்பதால் அவர்களாகவே மரத்தடி பள்ளிகளைத் தோற்றுவித்தார்கள். அவை இன்று வளர்ந்து ஆலமரங்களைப் போல் நிற்கின்றன. நம்பூதிரிகள் தம்மைக் கோவிலுக்குள் அனுமதிப்பது இல்லை என்று அவர்களாகவே கோவில்களைக் கட்டிக் கொண்டார்கள். அவற்றில் இன்று நம்பூதிரிகள் வந்து பூஜை செய்கிறார்கள்.

சுய உதவிக் குழுக்களின் முன்னோடி SNDP . அவர்களுக்குள்ளாகவே குழுக்கள் ஏற்படுத்திக் கொண்டு சொசைட்டிகள் மூலமாக தொழிற்கடன் , கல்விக் கடன் , விவசாயக் கடன் என்று ஒவ்வொருவரும் இன்னொருவரைத் தூக்கி விட்டுக் கொண்டார்கள்.

தமது வீட்டு பையனோ பெண்ணோ காதலித்து விட்டால் , கழுத்தறுப்பது , உத்தரத்தில் தொங்கிக் கொள்வது போன்ற ஈனச் செயல்களை அவர்கள் செய்வதில்லை. SNDP தாமாக முன்வந்து சம்மந்தப்பட்ட பையனுடனோ பெண்ணுடனோ பேசுகிறது . நல்லவன்/நல்லவள் என்று தெரிந்தால் அதுவே திருமணம் நடத்தி வைக்கிறது. ஈழவப் பெண்கள் இந்த காரணத்தினாலே ஓடிப்போவது இல்லை ( சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் ) . " Ask Not, Say Not, Think Not, Caste " என்கிற நாராயண குருவின் வார்த்தைகளை தீவிரமாகப் பின்பற்றுகிறார்கள்.

பத்து சவரன்களுக்கு மேல் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரை நிர்பந்தித்தல் கூடாது. அதற்கு மேல் செய்வது பெண் வீட்டாரின் விருப்பம் என்றொரு விதிமுறை வைத்திருக்கிறார்கள் . இதை அவர்கள் சிரத்தையுடன் செயல்படுத்தவும் செய்கிறார்கள். 'இனத்தை மேம்படுத்தல்' என்கிற கொள்கையோடு உருவாகிற ஒரு சங்கம் என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் செய்கிறது.
//Without Differences of Caste
Nor enmities of creed
Here it is, the model of an abode
Where all live like Brothers at Heart//
1888ல் அருவிப்புரம் அருகில் நாராயண குருவால் நிர்மாணிக்கப் பட்ட ஒரு சிவன் கோவிலின் சுவர்களில் எழுதப்பட்ட வரிகள் இவை. சற்று பொறாமையாகவும் இருக்கிறது.
நம் ஊரிலும் சாதிச் சங்கங்கள் இருக்கின்றன .. cry emoticon cry emoticon

பதிவு இரண்டு

நேற்றைய பதிவின் தொடர்ச்சி . ஒரு சாதிச் சங்கத்தை ஆதரித்து நீங்கள் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று பலரும் இன்பாக்ஸ் வந்து இருக்கிறீர்கள். அனைவருக்கும் தனித்தனியாக பதில் எழுதுவதை விட பதிவாகவே போட்டு விடலாம் என்று தோன்றியது.

முதலில் புகார்கள் :
SNDP பெரிய பூதம். கேரள மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு ஈழவர்கள். ஆகையால் அது மிகப்பெரிய அரசியல் சக்தியாக விளங்குகிறது. தேர்தல் சமயங்களில் பெரிய கட்சிகளுடன் பேரம் நடத்தி காரியங்கள் சாதித்துக் கொள்கிறது. அதன் தலைவர் வெல்லாப்பள்ளி நடேசன் ஒரு சாராய வியாபாரி. சில ஆண்டுகளுக்கு முன்பு 'லவ் ஜிகாத்' என்னும் கட்டுக்கதையை கிருஸ்தவர்கள் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் அவிழ்த்து விட்டது.
விளக்கம் :
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் ஈழவ பெண்கள் ரவிக்கை அணிந்து சாலையில் செல்ல முடியாது. ஈழவ ஆண்கள் வேஷ்டி கட்டிக்கொள்ள முடியாது. உயர் சாதி இந்துக்களுடன் சமமாக அமர்ந்து கல்வி கற்க முடியாது. ஆலய நுழைவு என்பது கனவு. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஈழவர்கள் சமூக அந்தஸ்திலும் பொருளாதாரத்திலும் மேனன்களுக்கும் , பணிக்கர்களுக்கும் நிகராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நூறு ஆண்டுகளில் இவ்வளவு பெரிய மாற்றத்தை என்னால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. SNDP யின் செயல்பாடுகளைக குறைத்து மதிப்பிட முடியாது.

வைக்கம் சிவன் கோவில் தெருவில் நாராயண குரு மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்த போது அவர் இறக்கி விடப்பட்டார். காலியான வண்டி மட்டுமே தெருவைக் கடந்து சென்றது. நாராயண குரு நான்கைந்து தெருக்கள் சுற்றி வந்து மீண்டும் வண்டியில் ஏறிக்கொண்டார். புலையர் தலைவர் அய்யன்காளிக்கும் இது நடந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே வைக்கம் சிவன் கோவிலுக்குள் சூத்திரர்கள் பிரவேசம் செய்ய வேண்டும் என்கிற குரல் வலுத்தது. SNDP , காங்கிரஸ் மற்றும் நாட்டின் இதர சத்யாகிரகிகள் சேர்ந்து ஆலயப் பிரவேசத்தைச் சாதித்துக் காட்டினர்.

அம்பேத்கர் மற்றும் நாராயண குரு இருவரின் இலக்கும் ஒன்றுதான். ஒடுக்கப்பட்டவர்களை சம அந்தஸ்துடன் வாழ வைப்பது. ஆயினும் இருவரின் வழியும் வெவ்வேறானது. முன்னவரது கருத்து எந்த மதத்தின் பெயரால் தாம் ஒடுக்கப் படுகிறோமோ அதைப் புறக்கணிப்பது. அதைச் செயல்படுத்தவும் செய்தார். இரண்டாமவரின் சித்தாந்தம் வேறு. இவர் ஆன்மீகவாதி. இந்துவாகவே நீடிப்பது. சொந்தாமகக் கோவில் கட்டிக் கொள்வது. அதை அனைவருக்கும் திறந்து விடுவது. கடவுள் எல்லோருக்கும் பொது என்றவர். SNDP கோவில்களையும், கல்விச் சாலைகளையும் கேரளம் முழுவதும் நிறுவ ஆரம்பித்தது.

சரியான பாதையில் சென்று கொண்டிருந்த SNDP தடம் புரள ஆரம்பித்தது வெல்லாப்பள்ளி நடேசனின் வருகைக்குப் பிறகுதான். காவிச் சிந்தனை உடையவர். லவ் ஜிகாத் என்ற கற்பனைவாதம் எல்லாம் அன்னார் கிளப்பிவிட்டதுதான். மாபெரும் மக்கள் சக்தியை அரசியல் பேரங்களுக்கு பயன்படுத்திக் கொள்வது வழக்கமாகி வருகிறது என்பதை மறுக்கவில்லை.
விளக்குமாடத்தில் ஈழவர்கள் பெரும்பான்மை. நாயர்கள் சிறுபான்மை. நாயர் குடும்பம் ஒன்று பசு மாடுகளை வளர்த்து வந்தது. தமது தோட்டத்தில் ஈழவர்கள் நுழைந்து பிரதான சாலையை அடைவதற்கு அனுமதிப்பது இல்லை நாயர். பால் கொள்முதல் நிலையத்தில் இருந்து தினமும் ஒருவர் வந்து நாயர் வீட்டில் பால் கறந்து செல்வார். கொள்முதல் நிலையம் ஈழவர்களுடையது. SNDP தலையிட்டு இனி நாயரிடம் இருந்து பால் கொள்முதல் செய்வதில்லை என்று முடிவெடுத்தார்கள். நாயர் சில நாட்கள் வைராக்கியமாக இருந்து பார்த்தார். பிறகு வேறு வழியில்லாமல் தோட்டத்து வழியைத் திறந்து விட்டார்.

இது நான் பார்க்கிற கண்ணோட்டம். ஒரு நாயரின் பார்வையில் SNDP செய்தது அராஜகமாகப் படும். எந்த கண்ணாடி கொண்டு பார்க்கிறோமோ அதுதான்.
நான் பாராட்ட நினைத்தது SNDP யின் 90 வருட தொண்டைத்தானே தவிர அதன் கடைசி பத்து பதினைந்து வருடங்களின் நிலைப்பாடுகளை அல்ல.

ஒடுக்கப்பட்ட சமுதாயம் வளர்ந்து நிமிர்ந்த பிறகு மாற்று மதத்தவரையும் இன்னபிற சாதிகளையும் ஒடுக்க நினைப்பது ஒப்புக்கொள்ள இயலாதது. ஈழவ சமுதாயத்தின் வரலாற்றைப் படிக்கப் போக , அதன் வளர்ச்சியைக் கண்டு மிரண்டவனாக அந்தப் பதிவை எழுதியதால் துதி பாடும் தொனி வந்துவிட்டது என்பது உண்மைதான். மன்னிப்பீராக

Comments

  1. நல்ல கட்டுரை...
    பகிர்வுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  2. “வைக்கம் சிவன் கோவிலுக்குள் சூத்திரர்கள் பிரவேசம் செய்ய வேண்டும் என்கிற குரல் வலுத்தது. SNDP , காங்கிரஸ் மற்றும் நாட்டின் இதர சத்யாகிரகிகள் சேர்ந்து ஆலயப் பிரவேசத்தைச் சாதித்துக் காட்டினர்” -இது இந்தப் பதிவு.
    “கேரளாவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஈ. வெ. இராமசாமி ஐந்து மாதங்கள் வரை சிறையில் இருந்தார் என்பது நினைவில் கொள்ளத் தக்கது” இது விக்கிப்பீடியாத் தகவல். ஆமா பெரியாரை இல்லாமல் வைக்கம் வரலாறு ஏது மதூ? கைவிட்ட காந்தியைச் சொல்வோர் அந்தப் பெருமைக்கு உரியாரான பெரியாரை எப்படி மறக்கிறார்கள்? கவனம் கவனம்..

    ReplyDelete
  3. கேரள ஈழவ மக்களின் கோயில் நிர்வாகம் பற்றி அறியச் செய்தமைக்கு நன்றி. எனக்கு இது புதிய செய்தி.

    ReplyDelete
  4. வணக்கம்

    நல்ல விடயத்தை ஆராய்ந்து நன்றாக எழுதியுள்ளார் சுரேந்தரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. கடைசியாக எழுதப்பட்ட வரிகள் மனதைத் தொட்டன. ஒடுக்கப்பட்ட சமுதாயம் வளர்ந்த பிறகு பிற சமூகங்களை ஒடுக்க நினைப்பது ஒப்புக்கொள்ள இயலாதது. ஆம். தமக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பிறருக்குச் செய்ய நினைப்பது என்ன நியாயம்? அதுவும் சமூக அநீதிதானே!

    ReplyDelete
  6. சாதி என்பது முற்றிலுமாக மறைய வேண்டும். அதே நேரத்தில் வீறுகொண்டு எழுந்த ஈழவர்கள், தமிழகத்து நாடார்கள் போன்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதும் அவசியம். இன்னும் பல சமூகங்கள் அதே நிலையில் தொடர்ந்து இருக்க இவர்கள் முன்னேற்றத்தை மற்றவர்களும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காகவாவது இப்படிப்பட்ட பதிவுகள் தேவை.
    த ம 3

    ReplyDelete
  7. மிக நல்ல தகவல்கள் ...அறியத்தந்ததற்கு நன்றிகள்...

    ReplyDelete
  8. மிக மிக அருமையான பகிர்வு கஸ்தூரி. நன்றி வாழ்த்துகள் தங்களுக்கும், கட்டுரையாளர் சுரேந்தர் அவர்களுக்கும். வெள்ளாம்பள்ளி கடந்த மாதம் பிடிஜேஎஸ் என்ற கட்சியை உருவாக்கிய ஈழவர் கட்சிமட்டுமல்ல அதில் நாயாடி முதல் நம்பூதிரி வரை எல்லா ஜாதியினரும் இருக்கிறார்கள். நாயர்கள் ஆங்காங்கே வைத்திருக்கும் சிறு அமைப்பு/கட்சி முதல், பிராமணர்கள் வரை அதில் இருக்கின்றார்கள். காங்கிரசும், கம்பூனிஸ்ட் கட்சியும், கிறித்தவர்களுக்கும், முகமதியர்களுக்கும் இந்துக்களை விடக் கூடுதல் சலுகைகள் - அதாவது பள்ளிகள், கல்லூரிகள் ஆரம்பிக்க சலுகைகள் - கொடுத்ததால் இந்துக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இந்தக் கட்சி உருவாகக் காரணம். மட்டுமின்றி காங்கிரசும், கம்யூனிஸ்டும் வளற அனுமதிக்கக் கூடாது என்பதால் தற்போது பிஜேபியுடன் இணைந்து வரும் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். இவர் முன்பு சாராய வியாபாரியாக இருந்தவர்தான். இப்போது அவர் சாராயம் வியாபாரம் நடத்துவதில்லை என்றும் சொல்லப்படுகிறது. அவருக்கு ஈழவர்களின் ஆதரவு முழுவதும் இருப்பதால் தொடர்ந்து மூன்று முறை ஜெனரல் செக்கரட்டரியாக தேந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 1888 ல் நாராயணகுரு அருவிப்புரத்தில் சிவன் கோயில் உருவாக்கிய போது, பிராமணர்கள் கோர்ட்டிற்குச் சென்றார்கள், "நாங்கள் பிரசிஷ்டை செய்ய வேண்டிய இறைவனை இவர் பிரதிஷ்டை செய்துவிட்டார்" என்று. அதற்கு குரு அவர்கள் "இது ஈழவருடைய சிவன் நான் அவரைத்தான் பிரதிஷ்டை செய்தேன் என்று இவர் உருவாக்கிய பெரும்பான்மையான கோயில்களில் ஈழவர்கள் பூசாரிகளாக பூசை முறைகளைக் கற்று செய்தனர். அத்வைத தத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த நாராயண குரு பின்னர் இறுதிக் காலங்கள் அந்த சித்தாந்தம் சொன்ன "உன்னுள் உறைகிறான் இறைவன்" என்பதை உணர்த்தும் வகையில் கண்ணாடிகளைப் பிரசிஷ்டை செய்தார்.
    கேரளத்தில் பிராமணர்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்லலாம் என்றிருந்த வேளையில் இங்கு கட்டுரையில் சொன்னது போல(னாங்களும் எங்கள் பதிவுகளில் சொல்லியிருக்கிறோம்...) தாழ்ந்த சாதியினர் என்று சொல்லப்பட்டவர்கள் பெண்கள் மேலாடை அணியத் தடை என்றெல்லாம் இருந்ததாலும், சம்பந்தம் என்ற முறையில்...இதைப் பற்றிச் சொல்லத் தனி பதிவே வேண்டும்...அம்மக்கள் பிற மதங்களான கிறித்தவத்தையும், இஸ்லாமையும் தழுவத் தொடங்கினார்கள் குறிப்பாகக் கிறித்தவத்தை. 1892ல் சுவாமி விவேகானந்தர் கேரளத்திற்கு வந்த போது அவரையே கொடுங்கல்லூர் ஆலயத்தில் அனுமதிக்கவில்லை. அங்கு நிலவிய தீண்டாமையைக் கண்டவர் கேரளத்தை லுனாட்டிக் அசைலம் என்று சொல்லிச் சென்றார். இதைப் பற்றித்தான் எங்கள் அடுத்தக் குறும்படம். அந்த அளவிற்கு தீண்டாமை நிலவிய கேரளத்தில் நாராயண குரு அப்போதே அங்கு தீண்டாமை ஒழிப்பில் மும்முரமாகச் செயல்பட்டதாலும், ஐயங்காளியும், மீனவர் தலைவர் பண்டர்கருப்பன் போன்றவர்களும் செயல்பட்டதாலும் தான் கேரளத்தில் சரி பாதி விகிதத்தினர் இந்துக்கள் இருக்கின்றனர் இல்லையேல் காஷ்மீர், நாகாலாந்து, மிசோரம் போன்று குறைவான இந்துக்கள் உடைய மாநிலம்காய்யிருக்கும் என்றும் சொல்லப்படுவதுண்டு. அன்று தாழ்த்தப்பட்டவர்கள் இன்று உயர்ந்து வாழ்கின்றார்கள் என்றால் நாராயண குருவும் அவரது புரட்சிக்கு ஆதரவு அளித்து வைக்கம் போராட்டம் நடத்திய நம் ஈவேரா அவர்களும் தான் காரணம் என்றால் அது மிகையல்ல. தமிழ்நாட்டைப் போல் சாதிவெறி, திருமணங்களால் கொலைகள் இன்றி வாழ்கின்றார்கள் என்பதும் இதனால்தான். கட்டுரையாளருக்குப் பாராட்டுகள் எஸ் என் டி பி பற்றி அருமையாக எழுதியதற்கு.

    ReplyDelete

Post a Comment

வருக வருக