மனசு றெக்கை கட்டிப்பறந்தது. சீரான தட் தட்டில் மிதந்தது புல்லட். ஆசை ஆசையாக வாங்கியது.
மாமா நீங்க ஓங்க புது கூலருடன் உங்க புல்லட்டில் வந்து இறங்குறதை எதிர்வீட்டு ரம்யா எவ்வளோ ரசிச்சு பாக்கிறான்னு தெரியுமா என்ற மனைவி தீபாவின் கிண்டலும் பெருமையும் கலந்த குரல் நினைவில் இடற முகத்தில் ஒரு புன்னகையுடன் புல்லட்டை செலுத்தினான்.
செல் அதிர ஏர்போனை ஆன் செய்தான். தீபாதான் என்னங்க பார்த்தி அப்பா எப்போ வருவார்னு படுத்துறான். கேக் வாங்கிட்டீங்கள?
இதோ வாங்கீறேன் செல்லம். கேண்டில்சும் காப்ஸும் வாங்கிட்டு வந்துறேன். அரைமணியில் அங்கே இருப்பேன். நம் ஏரியா குழந்தைகள் எல்லாரையும் பார்த்தியை அனுப்பி அழைச்சுடு. நைட் டின்னர் ஆரியபவனில் வைத்துகொள்ளலாம் சொல்லிவிட்டு போனைத் துண்டித்தான்.
பேக்கரியில் இதய வடிவில் இருந்த ப்ளாக் பாரஸ்ட்டை எழுநூற்றி சொச்சம் கொடுத்து வாங்கிக்கொண்டு, அருகே இருந்த செட்டியார் கடையில் கேப்புகளையும், பார்டி பாப்பர்ஸ்களையும் பொறுக்கிக்கொண்டு புல்லட்டை உதைத்தான்.
ஆசைபட்டுக் காத்திருந்து வாங்கிய சிவப்பு புல்லட். விரட்டி ஓட்டுவதெல்லாம் அவனுக்குப் பிடிக்காது. தட் தட் என்கிற சீரான வேகம்தான் அவனது சாய்ஸ். எப்போதும் எதிரே இருவர் விழிகளாவது வியப்பில் விரியும். வழக்கம் போல் பலர் புகையும் கண்களால் பார்ப்பார்கள். மனசுக்குள் சிரித்தவாறே கடப்பான்.
பைபாஸில் இருந்து சடாரெனத் திரும்பும் வளைவில் திரும்பி நகர்புற சாலையை அடையவேணும்.
வழக்கமான பாதை. வழக்கமான திருப்பம். திரும்பும் பொழுதுதான் அசுர வேகத்தில் வந்த அந்த ஆட்டோவை கவனித்தான். அனிச்சையாக சடார் என திரும்புகையில் டாங்கில் வைத்திருந்த கேக் பாக்ஸ் பறக்க. மனசுக்குள் ஒரு ஐயோ.
கேக் பாக்ஸை கவனித்தவன் திடுமென வந்த டிப்பர் லாரியை கவனிக்காது போக எசகு பிசகான அசைவுகளில் புல்லட் கவிழ்ந்து லாரியை நோக்கி போக அசுர வேகத்துடன் உருள ஆரம்பித்தான்.
இதயம் உடலை விட்டு வெளியே வந்து துடித்த அந்த கணத்தில் தனது இடுப்புக்கு கீழே லாரியின் பின்சக்கரங்கள் ஏறுவதைப்பார்த்தான்.
ஒரு பெரும்யுகம் ஒன்று அவனுக்கு முன்னால் விரிய ஒரு முகம் மட்டும் மனதில் மின்னியது. சம்பந்தமே இல்லாத அந்த முகம் அமானுஷ்மாக புன்னகைக்க திகைத்துப்போய் பார்த்தான்.
பல வருடங்களுக்கு முன்னால் சாலையில் உருளஉருள துரத்தி துரத்தி வெட்டிய அவன் தங்கையின் கணவன் முகம். சாதி கண்ணை மறைக்க உயிர் என்ற மரியாதை இல்லாமல் முகத்திலேயே வெட்டிச் சாய்த்த அவன் மைத்துனன் முகம்.
பாதி துண்டாகியிருந்த உடலில் வியந்தவாரே உறைந்த ஒரு புன்னகை எப்படிச் சாத்தியம் என அந்தப் பிரேதத்தை கடப்போர் துயருடன் விவாதித்தனர்.
/வலிகள் எனக்கு படைப்பைத் தருகின்றன.. நேர்த்தியான படைப்பு இல்லைதான். என் எதிர்க்குரல், சாபம், இல்லைனா கோபம்.
பொறுமையாக படித்ததற்கு நன்றிகள்.
சிறுகதை என்றே நம்புகிறேன்
சிறு கதை அருமையான முடிவுடன்..ஆழமான கருத்துடன், சமீபத்தில் நடந்த சம்பவத்தின் நினைவுகளில்....அவனை வெட்டியவர்களும் இப்படி மடிவார்கள் என்ற கோபம், சாபத்துடன்...
ReplyDeleteஅருமை கஸ்தூரி..
கீதா
சமீபத்திய சம்பவங்களை கருவாய் கொண்டு ஒரு சிறுகதை! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆத்தி மனசு பக்குனு இருக்கு...சூப்பர்.
ReplyDeleteஅதகளம். கதை உண்மையாக மாற வாய்ப்பிருக்கிறதோ?
ReplyDelete