எது தேசவிரோதம்? - கரன் தாப்பர்

இந்த முக்கியமான கட்டுரையை தமிழாக்கம்  செய்தவர் வெள்ள நிவாரண நட்சத்திரம் திரு ஷாஜகான், புது தில்லி.

எது தேசவிரோதம்?
- கரன் தாப்பர்
(இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்)
நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் ரோகித் வெமுலா குறித்து நடைபெற்ற விவாதமும், கடந்த வாரம் ஜேஎன்யு விவகாரத்தில் கன்னையா குமாருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி அளித்த கருத்துகளும் வியப்புக்குரிய ஒரு கேள்வியை எழுப்பியுள்ளன : எது தேச விரோதம், எது தேசவிரோதம் இல்லை என்பது குறித்து நமக்கு தெளிவாகத் தெரியுமா? இல்லை என்றே நினைக்கிறேன். இரண்டு தரப்பிலும் நாம் பிடிவாதமான கருத்துகளைக் கொண்டிருக்கிறோம், ஆனால் நமது தீர்ப்பில் நமது ஆர்வங்களின் தாக்கம் ஏற்பட்டு, நாம் முன்பைவிட குழம்பிப் போகிறோம்.


இன்னும் இரண்டு கேள்விகளைப் பற்றி யோசித்தால் இன்னும் கொஞ்சம் தெளிவு கிடைக்கும் : முதலாவது, அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வெளிப்படையாக விமர்சித்தால் அது தேச துரோகம் ஆகுமா? ஆம் என்கிறார் வெங்கையா நாயுடு. இல்லை என்கிறார் ப. சிதம்பரம்.
உச்சநீதிமன்றம் தவறு செய்திருக்க முடியுமா என்பதில் தொங்கிக் கொண்டிருக்கிறது இதற்கான பதில். இதற்கு, 1976இன் புகழ்பெற்ற ஹேபியஸ் கார்ப்பஸ் தீர்ப்பை நினைவுகூர வேண்டும். அதில் நீதிமன்றம் தனது முடிவை மாற்றிக்கொண்டது, நீதிபதி பி.என். பகவதி வருத்தம் தெரிவித்தார். இதை நினைவுகூர்ந்தீர்கள் என்றால், உச்சநீதிமன்றம் தவறே செய்யாதது அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
உச்சநீதிமன்றம்தான் இறுதி அமைப்பு, உச்ச அமைப்பு என்பதாலேயே அதன் முடிவு எப்போதுமே சரியானது என்று ஆகி விடாது. ஆக, நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்க மக்களாட்சியில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. அப்படிச் செய்வது தேச விரோதம் ஆகாது.
ஆனாலும், மெல்லிய எல்லைக்கோடு ஒன்று உண்டு, அதைத் தாண்டிவிடக்கூடாது. நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றாலும், அதன் முடிவுடன் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அதை மதித்து நடந்தாக வேண்டும். தீர்ப்புக்கு உள்நோக்கங்கள் கற்பிக்கக் கூடாது. அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
இதன் அடிப்படையில் பார்த்தால், அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தமைக்காக நீதிமன்றத்தை விமர்சிக்கும் மாணவர்கள் தேச விரோதிகள் ஆக மாட்டார்கள். இதைக் கேட்பதற்கு கசப்பாக இருக்கலாம், ஏற்க முடியாததாக இருக்கலாம், ஆனால் அது தேசவிரோதம் ஆகாது. அத்துடன், ஃபாலி நாரிமன் சொன்னதை நான் சரியாகப் புரிந்து கொண்டேன் என்றால், இந்திய எதிர்ப்பு (தேச விரோதம்) என்பது குற்றம் ஆகாது, அது ராஜதுரோகமும் (செடிஷன்) ஆகாது. பிப்ரவரி 17ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் அதைத்தான் அவர் எழுதினார்.
இப்போது இரண்டாவது கேள்விக்கு, சர்ச்சைக்குரிய விஷயத்துக்கு வருவோம் : எது தேசவிரோதம், எது தேச விரோதம் ஆகாது? பிரிவினை கோரி அமைதி வழியில் இயக்கம் நடத்துவது தேச விரோதம் ஆகுமா? பெரும்பாலானவர்கள் ஆமாம் என்றுதான் இதற்கு பதில் சொல்வார்கள். ஆனால் அது சரியானதல்ல.
1962 மே மாதம் 1ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் முதல்முறையாக உரையாற்றிய சி.என். அண்ணாதுரை, திராவிடர்களுக்கு சுய நிர்ணய உரிமையையும், “தென்னிந்தியாவுக்கு தனி நாட்டையும்” கோரினார். அப்போது அது தேசவிரோதமாக்க் கருதப்படவில்லை. அப்படியானால், இன்று கஷ்மீருக்கு சுதந்திரம் என்று கோருவது மட்டும் ஏன் தேச விரோதமாகப் பார்க்கப்படுகிறது?
பிரிட்டனின் ஸ்காட்டிஷ் தேசியவாதிகள், கனடாவின் கெபெக்வா கட்சியினர், அல்லது ஸ்பெயினின் கேடலான் கட்சியினர் பிரிவினை கோரி இயக்கம் நடத்துகிறார்கள்; ஆனாலும் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள், தேச விரோதிகளாகப் பார்க்கப்படுவதில்லை. இதிலிருந்து தெரிவது என்ன? முதிர்ச்சி பெற்ற ஜனநாயகத்தில் பிரிவினை கோரிக்கைகளை தேசவிரோதம் என்று கருதுவதில்லை. இந்தியாவிலும் நாமும் அந்த முதிர்ச்சியைத்தானே அடைய விரும்ப வேண்டும்?
1995இல் பல்வந்த் சிங் வழக்கில், காலிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் ராஜதுரோகம் ஆகாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதே தீர்ப்பு பாகிஸ்தான் ஜிந்தாபாத், அல்லது கஷ்மீருக்கு விடுதலை என்று கோஷமிடுபவர்களுக்கும் பொருந்தும்.
உண்மையைச் சொன்னால், இந்த உதாரணங்கள் தேசியம் குறித்து இன்னும் பல அடிப்படையான கேள்விகளுக்கு இட்டுச் செல்லும். எல்லா இந்தியர்களும் தேசபக்தர்கள்தான் என்று ஏற்கவும், நம் கருத்துடன் உடன்படாதவர்களை தேச துரோகிகள் என்று முத்திரை குத்துவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டதா?
மேற்கத்திய ஜனநாயகத்தில் தேசியவாத்த்தை முன்வைப்பது குறித்து மக்கள் சந்தேகக் கண்ணுடன்தான் பார்க்கிறார்கள். சர்வாதிகாரத்தையும், சகிப்பின்மையையும் திணிப்பதற்கான தந்திரம் என்றுதான் இதைப் பார்க்கிறார்கள். இந்தியா என்ற கருத்தாக்கத்தை நாம் தவறாகப் பயன்படுத்துவதும் அதே போன்றதே என்றுதான் நான் நினைக்கிறேன்.
1775இல் சாமுவேல் ஜான்சன் சொன்னார் – “துஷ்டர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி”. நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று சாக்ஷி மகராஜ் சொன்னபோது, ஜான்சன் சொன்னது சரி என்பதை நிரூபணமானது. அப்சல் குருவைப் பாராட்டும் கோஷமிடுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் பாஜக, தனது சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் உளறல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கும்போது... தேச விரோதம் என்பது தேசம் என்பதன் கொள்கைகளுக்காக அல்லாமல் தமது வசதிக்கேற்ப, (அரசியல் லாபங்களுக்கு ஏற்ப) அரசியல் தந்திரமாகவே பயன்படுத்தப்படுகிறதோ என்ற கேள்வி எழாமல் இருக்காது.

Comments

  1. மிக அருமையான பகிர்வு! நன்றி மது அவர்களே!

    இதன் அடிப்படையில் பார்த்தால் தனித்தமிழ் நாடு கோருவதும் நாட்டு எதிர்ப்பு (தேச விரோதம்) இல்லை என ஆகிறது. நன்றி!

    ReplyDelete
  2. இந்தியர்களின் சுயநலம் எந்த இடத்திற்குச் சென்றாலும் மாறாது என்பதை மெய்பிக்கும் நிகழ்வு . எழுத்தாளர் சொல்ல வருவது அதை மட்டும்தான் !

    ReplyDelete

Post a Comment

வருக வருக