மனம்

ஆக்ஸ்போர்ட் உணவகக் கல்லூரியின் தாளாளார் திரு ஆக்ஸ்போர்ட் சுரேஷ் அவர்களின் முகநூல் பகிர்வு ஒன்றை இங்கே பகிர்கிறேன் ...


ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.



அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது.

ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான். ஐயோ என் வீடு..!!! என் வீடு...!! என்று அலறினான்.

அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான்.

இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது. இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான். அதே வீடு தான், அதே நெருப்பு தான்

ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.

சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும் வரவில்லை. வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான்.

இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.

சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும். இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான்.
இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம். கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது. மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

இங்கு எதுவுமே மாறவில்லை.
அதே வீடு, அதே நெருப்பு,
அதே இழப்பு.
இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.

இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை.
நான்,
என்னுடையது,
எனக்கு சொந்தமானது
என்ற எண்ணம் தான் பற்று.
உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை.
ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை.
அனைத்துமே அழிய கூடியது.
நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது என்பதை நாம் நினைவில் நிறுத்தினாலே போதும்.
நாம் நிம்மதியாக வாழலாம்..


Comments

  1. ``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள்
      பழைய பயனர் பெயர் மறந்து விட்டேன்
      விரைவில் இணைக்கிறேன்

      Delete
  2. நல்லதோர் பகிர்வு. நன்றி மது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஜி

      Delete
  3. வணக்கம்
    மனித வாழ்க்கை தத்துவத்தை அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர்
      வருகைக்கு நன்றி

      Delete
  4. மிக மிக நல்ல பகிர்வு கஸ்தூரி செம....பகிர்வுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  5. மனம் ஒரு குரங்கு என்பதை முழுமையாகக் காணமுடிகிறது.

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி,, நல்ல கருத்து,,

    ReplyDelete
  7. உங்கள் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல நல்லதொரு கதை உங்கள் கையில் உள்ளது. இன்று உன்னுடையது நாளை வேறொருவருடையது என்ற தத்துவத்தை இந்தக் கதை மூலம் அழகாக புரிய வைக்கலாம். ஏறத்தாழ நாம் எல்லோரும் பெரும்பாலும் அந்த வணிகனின் மன நிலையில்தான் வாழ்கிறோம் . அருமையான கதை.

    ReplyDelete
  8. வணக்கம் தோழரே...

    நலம்தானே ?...

    எதுவும் நிரந்தரமல்ல என்பதோடல்லாமல் எதுவும் கடந்துபோகும் என்ற மனநிலையுடன் வாழ்வை விலகி நின்று பார்க்க பழகிவிட்டால் நிம்மதி தானாக வரும்.

    ஜே. கே தன் வாழ்நாள் முழுவதும் பிரசங்கம் செய்தது இதனைதான் ! துக்கமும் மகிழ்ச்சியும்கூட கற்பிதங்கள் தான் !

    அனைத்தும் நன்மையாக முடியும் தோழர்...

    நன்றி
    சாமானியன்


    ReplyDelete
  9. வணக்கம் தோழரே...

    நலம்தானே ?...

    எதுவும் நிரந்தரமல்ல என்பதோடல்லாமல் எதுவும் கடந்துபோகும் என்ற மனநிலையுடன் வாழ்வை விலகி நின்று பார்க்க பழகிவிட்டால் நிம்மதி தானாக வரும்.

    ஜே. கே தன் வாழ்நாள் முழுவதும் பிரசங்கம் செய்தது இதனைதான் ! துக்கமும் மகிழ்ச்சியும்கூட கற்பிதங்கள் தான் !

    அனைத்தும் நன்மையாக முடியும் தோழர்...

    நன்றி
    சாமானியன்


    ReplyDelete
  10. தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன் நண்பரே

    ReplyDelete

Post a Comment

வருக வருக