அபெகா கலை மற்றும் பண்பாடு இயக்க நிகழ்வு

ராஜ் கிரஹா முன் திரு பன்னீர் செல்வன் அதிபா அவர்களும் முனைவர் ராம்ஜி அவர்களும் 

புதுகையின் மூத்த கலை இயக்க இயக்கங்களில்  முக்கியமான இயக்கம் அ.பெ.கா. இது மருத்துவர் ஜெயராமன் அவர்கள் புதுகையின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகளுடன் இணைந்து துவக்கிய அமைப்பு. ஞானாலயா பி.கே அய்யா முதல் தமிழ் இலக்கிய விமர்சகர் திரு. பன்னீர்செல்வன் வரை பல்வேறு தமிழ் ஆளுமைகளின் பங்களிப்பு இயக்கத்தில் உண்டு. 


அம்பேத்கர், பெரியார் மற்றும்  கார்ல் மார்க்ஸின் பெயரால் இயங்கிவரும் மாநிலம் தழுவிய வீச்சைக் கொண்ட இந்த அமைப்பு புதுகையின் அதிமுக்கியமான அடையாளங்களில் ஒன்று. 

புத்த பூர்ணிமாவான  இன்று ஒரு சிறப்பு அமர்வு இருப்பதாகவும், அழைப்பு உள்ளோர் மட்டுமே கலந்துகொள்ளலாம் என திரு. பன்னீர்செல்வன் அதிபா அவர்கள் தெரிவிக்க எனக்கு அழைப்பு உண்டா என்ன எனக் கேட்டேன் அவரிடம். தாராளமாய் வரலாம் என அவர் சொல்லவும் ஒரு முழுநாள் நிகழ்விற்கு தயாரானேன். ஆமாம் நிகழ்வு காலை ஒன்பது மணிக்கு துவங்கி மாலை ஐந்து மணிக்கு முடியும். 

நிகழ்வில் தூங்கிவிடக் கூடாது ஏதாவது உடற்பயிற்சியை செய்துவிட்டு ஒழுங்காக கவனிக்க வேண்டுமே என்ற உணர்வுதான் இருந்தது. 


ராஜ் கிராஹா (பேரச்சொன்னாவே அதிருதுல்ல), இது மரு. ஜெயராமன் அவர்களின் இல்லத்தின் பெயர்! மருத்துவர் இந்த  வீட்டைக் கட்டும் பொழுதே அதற்குள் சமூகப் பயன்பாடுகளுக்கான திட்டமிடல்களுடன் கட்டப் பட்ட வீடு! பெயருக்கு ஏற்றவாறே சமூக மேன்மைக்கான ஆய்வரங்கங்கள், திரைப்படங்கள் திரையிடல் என பல்வேறு நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருக்கும் இல்லம் இது. 

நிகழ்வின் பங்களிப்பாளர்கள் மரு. தாயப்பன் அழகிரிசாமி, தலித் முரசு புனிதப் பாண்டியன் மற்றும் பவுத்த உபாசகர் திரு. எக்ஸ்ரே மாணிக்கம் என்பதால் நிகழ்வின் ஆழம் குறித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் என்னிடம் இருந்தன. 

வருகைப் பதிவின் பொழுது ஒரு பெரும் பையில் பவுத்த நூல்களுடன் குலதெய்வ வழிபாடு குறித்த மருத்துவர் ஜெயராமன் எழுதிய நூல் ஒன்றும் வழங்கப்பட்டது. கண்கவரும் புத்தர் படமொன்றும். 

நூல்களின் மதிப்பே ஐநூறைத் தாண்டும்!  அபேகாவிற்கு இதற்காவே  ஒரு நன்றியைத் தெரிவிக்க வேண்டும். 

தலித் தளத்தில் இயங்குபவர்களை கண்டால் எனக்கு கடும் எரிச்சல் மட்டுமே வரும். ஒரு சுவற்றில் வண்ணம் பூசியிருந்தால் கூட அதற்கு ஒரு தலித் வண்ணம் தருவார்கள். அதில் ஒரு விவாதத்தை துவக்குவார்கள். நான் சந்தித்த தலித்திய நண்பர்களின் பக்குவம் இதுதான். 

நான் கவனித்த தலித்திய செயல்பாட்டாளர்களின் பிற்போக்குத்தனமான செயல்பாடுகளில் கசபுற்று "ஏன் தோற்கும் தலித்தியம்" என்கிற கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். 

இந்த கசப்பான அனுபவங்களுடன் இருந்த எனக்கு அபெகவின்  இன்றைய நிகழ்வு காரிருளில் கடலில் தத்தளிக்கும் கலம் ஒன்றிற்கு கலங்கரை வெளிச்சம் கொடுத்த நம்பிக்கையைப் போன்ற நம்பிக்கையைத்   தந்தது. 

முதலில் சமூக தளத்தில் பவுத்தம் எத்தகு மாற்றங்களை தரமுடியும் என்று பேசிய தாயப்பன் வழக்கம் போலவே அசத்தினார். கேட்டோர் பிணிக்கும் சொற்களுடன் மிக மென்மையான குரலில் வலிமையாக தனது கருத்துக்களை வைத்தார் அவர். தொடர்ந்த விவாதத்தில் தோழர் மைதிலி யாழினி மற்றும் தோழர் ஜெனிபர் தங்களது மாறுபட்ட கருத்துகளை வைத்து விவாதித்து அமர்விற்கு பொருள் கூட்டினர். 
புனிதப் பாண்டியன் மரு.தாயப்பன் அவர்களுடன்
உண்மையில் அவர்களின் கருத்துக்களோடு நான் முரண்பட்டாலும் ஒரு விசயத்தை தெளிவாக உணர்ந்தேன். கிடைக்கும் வாய்ப்புகளில் ஆண்கள் ஒரே ஒரு சாதனையைச் செய்தால் பெண்கள் ஆயிரம் சாதனைகளை செய்ய விழைகிறார்கள்! நான் ஆறுதல் படும் ஒரே விசயம் இந்த உணர்வு நிச்சயம் அவர்களால் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும். அவர்களின் கனவு நாளை நனவாகும் என்கிற நம்பிக்கையும்தான்.  

சரி நிகழ்வுக்கு வருவோம். பல்வேறு கிளைகளாக விரிந்த விவாதத்தை கண்டு திகைத்த அவையை மிகச் சாதுர்யமாக தேநீர் தயார் என்று சொல்லி ஒரு சிறிய இடைவேளை தந்தனர் அமைப்பாளர்கள். 

கமலா தியேட்டர் என்கிற அரங்கின் வெளியே  பெரிய மேசையில் தேநீரும் ரொட்டிகளும் காத்திருந்தன. ரொட்டிகளைச் சுவைத்தவாறே நண்பர்களுடன் அளவளாவ முடிந்தது. 

தொடர்ந்த அமர்வு தலித் அரசியல் என்கிற போலிக் கட்டமைப்பை விமர்சிக்கிற ஒரு முக்கியமான உரையை தந்த புனித பாண்டியன் அவர்களின் அமர்வு. சமூக, பண்பாட்டுச் சமத்துவம் இல்லாமல் நேரடியாக அரசியல் சமத்துவம் நோக்கி நகரும் போக்கு எவ்வளவு அபாயகரமானது என்பதை குறித்த தெளிவான உரையை தந்தார் அவர். பவுத்தம் இதற்கான தீர்வுகளை எப்படித் தர முடியும் என்பதையும், எவ்வகை சட்ட சிக்கல்கள் உள்ளன என்பதையும் குறித்து பேசினார் அவர். தொடர்ந்த விவாதத்தில்  அனல் பறந்தது. 

நிகழ்வின் முதல் நாள் இரவு ஒருமணி வரை கண்விழித்திருந்த எனக்கு ஒரு நிமிடம் கூட அயர்ச்சி இல்லை. அரங்கு குளிரூட்டப் பட்டது என்பது மட்டுமல்ல காரணம் இவ்வளவு தெளிவாக பேசும், தரவுகளை முன்வைக்கும், செயல்பாடுகளை முன்னெடுக்கும் அமர்வில் நான் பங்குபெறுவது இதுவே முதல் முறை. 

புனிதப் பாண்டியன் அவர்களின் புரிதல் மிகச்சரியானது, ஒவ்வொரு வாக்கியத்திலும் இருந்த தெளிவு, நகர்வுகளை முன்னெடுக்கும் வழிகள் என மிக அற்புதமான உரையைத்தந்தார் அவர். 

இன்றய  நிகழ்வின் மதிய அமர்வின் இறுதியிலேயே தலித் இயக்கங்கள் குறித்த எனது எரிச்சல் பதங்கமாகியிருந்தது. சரியான திசையில் இயங்கும், சிந்திக்கும், இயக்கங்களை கட்டமைக்கத் தூண்டும் ஆளுமைகள் இருக்கிறார்கள் என்ற புரிதல் நீண்ட நாள் உடல் உபாதை ஒன்று உடனே சரியானது போன்று மகிழ்வைத்தந்தது. 

மாஸ் மதிய உணவுடன் போதுமான அளவு இடைவெளியும் வழங்கப் பட்டது. இந்த இடைவெளி நிகழ்விற்கு வந்திருந்த ஆளுமைகளுடன் பேச அவர்கள் குறித்து நான் அறிந்துகொள்ளவும் பயன்பட்டது. இதுவும் அ.பெ.க நிகழ்வின் சிறப்பாக நான் உணர்ந்த விசயங்களில் ஒன்று. 
மரு.ஜெயராமன் தனது புதல்வர் மரு. ஜெயக்குமாருடன்

மதிய அமர்வில் திரு.எக்ஸ்ரே மாணிக்கம் அவர்களின் அவருடைய பன்னெடுங்கால தலித்திய செயல்பாடுகளை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக சரித்திர உணர்வு கொண்டர்வர்களாக இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். புத்தர் வாழ்ந்த இடங்களை தேடிச் சென்று பார்த்து உணர்வது அவசியம் என்பதையும் சொன்னார். வயது மூப்பின் காரணமாக அவருக்கு வழங்கபட்ட தலைப்பான பவுத்தம் அதன் பண்பாடு குறித்த கருத்துக்களை பேசுவதை குறைவாகவும் அனுபவங்களை அதிகமாகவும் பகிர அவரது ஆளுமையின் வீச்சினை உணராத சிலர் இதுகுறித்து புன்னகைக்கவும் செய்தார்கள். 

என்னைப் பொறுத்தவரை மிக நீண்ட காலம் ஒரு சமூக விடுதலைக்கு செயல்படும் ஒருவர் சபையில் தெரிவிக்கும் ஒவ்வொரு வார்த்தையுமே முக்கியமானது. அவ்வகையில் திரு. எக்ஸ்ரே மாணிக்கம் அவர்களின் உரை முக்கியம் என்றே உணர்ந்தேன். 

மீண்டும் தாயப்பன், மீண்டும் புனிதப் பாண்டியன். நிறைவு உரையும், பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கு விடையினைத்தந்தார்கள். 

இன்றய நிகழ்வின் இன்னொரு மகிழ்வு மரு.ஜெயராமன் அவர்களின் புதல்வர் மரு.ஜெயக்குமார் அவர்களின் பிறந்தநாள். அரங்கின் உள்ளே இருந்து வெளியே புல்வெளியில் ஏற்பாடு செய்யப்பட்ட திறந்தவெளி அரங்கில் ஜெயக்குமாரின் பிறந்தநாள் கொண்டாடப் பட்டது. தொடர்ந்து இன்னொரு நல்விருந்து. நண்பர்களுடன் விவாதம். 

அரியலூரைச் சேர்ந்த ராம்ஜி அவர்களிடம் கல்வெட்டு ஆய்வு குறித்தும் சகோ. மணிகண்டனின் தமிழ் எண்கள் ஆய்வினைக் குறித்தும் பகிர முடிந்தது. என்று அழைத்தாலும் வருகிறேன் என்றார் அவர். தரவுகளின் களஞ்சியமாக இருக்கிறார் அவர். மணிகண்டன் அவரைப் பயன்படுத்திக் கொள்வார் என்றே நம்புகிறேன். 

பவுத்தம் குறித்த சரியான புரிதலோடு இயங்கும் ஒரு ஆரோக்கியமான சமூக பண்பாட்டு இயக்கத்துடன் ஒரு முழுநாளைச் செலவிட முடித்தது இந்தக் கோடை விடுமுறையின் பம்பர் பரிசு. 

இந்தப் பரிசினைத் தந்த பன்னீர்செல்வன் அதிபா அவர்களுக்கும், மரு. ஜெயராமன் அவர்களுக்கும் நன்றிகள். 

வேண்டும் இன்னும் பல ஜெயராமன்கள். 

இன்னொரு மகிழ்வாக என்னிடம் பயின்ற கமலா ஜெயராமனை சந்திக்க முடிந்தது. ஆம் மரு. ஜெயராமன் அவர்களின் புதல்வி என்னிடம் பயின்றவர். அது ஆண்டு 1997 இன்றும் நினைவில் வைத்திருக்கிறார்! மரு.ஜெயராமன், அவரது துணைவியார், மகன் மற்றும் மகள் என முழுக் குடும்பமே நிகழ்வின் அமைப்பிலும், விருந்தோம்பலிலும் அசத்தினார்கள். பபே முறையில் உணவருந்திய எங்கள் இடம் தேடி அவரே வந்து உணவு வகைகளை பரிமாறி அசத்தினார் மருத்துவர். மாண்புக்குரிய பண்பு!

மொத்தத்தில் இந்த நாள் இனிய நாள். 

ஒரு முழுநாள் என்னை அழைக்காமல் இந்த நிகழ்வில் நான் முழுமையாக பங்குபெற வாய்ப்பளித்த எனது குடும்பத்தினருக்கும் நன்றிகள். 

அண்ணன் ராசி அவர்களுக்கு மீண்டும் ஒரு நன்றி. 

நாற்பதைக் கடந்த என்னிடம் இந்தக் கருத்துகள் ஏற்படுத்தும் விளைவுகளைவிட இளைஞர்களிடம் இது சரியான புரிதலை ஏற்படுத்துமே ஏன் அவர்களை அழைக்கவில்லை என்று மரு.ஜெயராமன் அவர்களைக் கேட்ட பொழுது அதனாலென்ன அடுத்த அமர்வு முழுக்கவே மாணவர்கள் அமர்வாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். 

எவ்வளவு பணிகள் இருக்கு இந்த தளத்தில். எந்தப் பக்கம் திரும்பினாலும் இடிபடும் நிலையிலும் கூட சரியான புரிதலோடு சரியான திசை நோக்கி பயணிக்கும் நண்பர்களைக் கண்டது மகிழ்வு. 


மகிழ்வுடன் 
மது

Comments

  1. அண்ணே முழுதும் படித்தேன்...இந்நிகழ்வில் என்னையும் பங்கெடுக்க வைத்த உங்களுக்கு நன்றி....அது மட்டுமின்றி நமது ஆய்வு சார்ந்த தகவல்களை நண்பரிடம் பெற வழிகோலியமக்கு நன்றி..

    ReplyDelete
  2. நல்ல ஓர் அமைப்பையும் செயல்பாட்டையும் பற்றிப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. மகிழ்ச்சி மிஸ் பண்ணிட்டேன்

    ReplyDelete
  4. நல்லதொரு நிகழ்வு, அமைப்பு பற்றி அறிய முடிந்தது. அபெகா வளர, பணி சிறக்க வாழ்த்துகள்

    கூடவே பௌத்தம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் நினைவும் வந்தது...

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. தலைப்பைப் பார்த்தவுடன், அ.பெ.கா என்றால்? ஒரு புதிய குழப்பம். விடை தந்தது உங்கள் பதிவு. பொதுவாகவே தலித் இயக்கங்கள் என்றாலே, சுற்றி வளைத்து எல்லாவற்றிற்கும் பிராமணியமே காரணம் என்று முடிப்பார்கள். இதில் எனக்கு உடன்பாடு கிடையாது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஏதோ வித்தியாசமாக ஒன்றை சொல்ல வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. மேலே பதிவில் குறிப்பிடப் பட்டவர்களில் ‘ராசி’ பன்னீர் செல்வம் அவர்கள் மட்டுமே எனக்கு அறிமுகம்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக