ஞாயிறுகளில் காலை ஒன்பது மணிவரை விதைக்கலாம் அமைப்புக்கு என்பது நிகழ்வு தொடங்கியதிலிருந்தே நான் கடைபிடிக்கும் பழக்கம். மட்டிலா ஆர்வத்துடன் செயலில் இறங்கும் ஒரு பெரும் படையுடன் சில மணிநேரங்கள் செலவிடுவது என்னை மீளக் கட்டமைக்கும் அனுபவம் எனவே தொடர்ந்து விதைக்கலாம் நிகழ்வுகளில் இருக்கிறேன்.
இன்றைய விதைக்கலாம் எஸ்.எஸ். நகரில் என்று முடிவு, காலை எங்களுக்கு முன்னரே திரு ரபீக் சுலைமான் அவர்கள் இம்பாலா உணவகம் முன்னர் காத்திருந்தார்! இனிய ஆச்சர்யம். பார்த்தவுடன் வணக்கம் சொல்லி ஒரு சுயமி கோல் ஒன்றை (செல்பி ஸ்டிக்) தந்தார். எனக்கோ வடிவேல் பட வசனம் நம்மைப் பார்த்தாலே படம் பிடிகிறவன்னு கண்டுபிடிச்சுடுறாங்க என்ற எண்ணத்துடன் கைகளில் வாங்கினால் உங்களுக்குத்தான் தோழர், பரிசு என்றார் !
அதிர்வும் மகிழ்வும். சரி என்று நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு சென்றால் நிகழ்வைக் கோரியவர் இடத்தில் இல்லை அவரது பெற்றோருக்கோ எந்த இடத்தில் கன்றுகளை நடுவது என்கிற குழப்பம்!
இந்த மாதிரி குழப்பமான சூழலில் நட்டால் பின்னர் பிடுங்கி எறியப்படும் அபாயம் அதிகம் என மனசு சொல்ல அவசரமாக யூ.கெ டெக் கார்த்தியை தேடினால் ஆளைக் காணோம்.
ஒரு நிகழ்வு நடைபெறும் இடத்தில் கார்த்திக் இல்லை என்றால் ஏதொ ஒரு முக்கிய பணியில் இருக்கிறார் என்பதே கடந்த நிகழ்வுகளின் வரலாறு. ஒன்று ஒரு இடத்தில் கன்றுகளுக்கான குழிகளை அகழ்ந்துகொண்டிருப்பார் அல்லது கூண்டுகளை தாங்கும் கழிகளை வெட்டிக் கொண்டிருப்பார்.
இன்று சத்தம் இல்லாமல் அவர் செய்தது அப்படிப்பட்ட ஒரு காரியத்தைத்தான். அருகே இருந்த தடிகொண்ட அய்யனார் கோவிலை அணுகி அங்கே மரக்கன்றுகளை வைக்க அனுமதி கோரிப் பெற்றுவிட்டார். குழப்பமான ஒரு மனநிலையில் கன்றுகளை நடுவதைவிட சிறப்பு மிக்க தடி கொண்ட அய்யனார் கோவிலில் கன்றுகளை நடுவது என்பது இரட்டிப்பு மகிழ்வு.
விதைக்கலாம் படை கோவிலில் ஐந்து குழிகளை அகழ்ந்து கன்றுகளை நட தயார் செய்துவிட்டனர். சில மணித்துளிகளில்! முதல் கன்றினை திரு.ரபீக் சுலைமான் அவர்கள் வைக்க, இரண்டாம் கன்றினை தேவதா தமிழ் அவர்களும் மூன்றாவது கன்றினை தமிழக ஆசிரிய முன்னேற்ற சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.மணிகண்டன் ஆறுமுகம் அவர்களும் வைத்தார்கள்.
நான்கும் ஐந்தும் சத்தமின்றி விதைக்கலாம் செயல் புயல்களால் விரைந்து வைக்கப்பட்டுவிட, அடுத்த குழு நடப்பட்ட கன்றுகளுக்கு கூண்டுகளை அமைத்து நீர் சொரிய நிகழ்வு மகிழ்வுடன் நிறைவு பெற்றது.
விதைக்கலாமின் மரபாக கன்று நடவு செய்யப்பட்ட இடத்தில் ஒரு வட்டமாக அமர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மூவரையும் அறிமுகம் செய்து விதைக்கலாம் உறுப்பினர்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யும் சுற்று. இதுவும் பலத்த சிரிப்பொலிக்கிடையே நடந்தது.
இந்த நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர் திரு. ரபீக் சுலைமான் அவர்கள் வைகறை நல நிதியாக ரூபாய் ஐயாயிரத்தை கவிஞர் தேவாத தமிழ் என்கிற கீதா அவர்களிடம் வழங்கினார்.
விதைக்கலாம் உறுப்பினர்கள் தங்கள் பங்காக இருபத்தி ஏழு ஆயிரம் ரூபாய்களை வைகறை குடும்ப நல நிதிக்கு சேர்ப்பித்து இது முதல் தவணைதான் என்றனர்.
கவிஞர் கீதா விதைக்கலாம் வளர்சிக்காக ரூபாய் ஆயிரத்தை வழங்கி சிறப்பித்தார். தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு ஒரு கோப்பை மனிதத்தை அவர் தோழர் ரபீக் அவர்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்த கிங் பேக்ஸ் தேநீர் நிகழ்வில் விதைக்கலாம் உறுப்பினர்கள் விடைபெற அருமைத் தோழர் ரபீக் அவர்களுடன் சற்று உரையாட முடிந்தது. திடீரென மணிகண்டன் கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரன் அவர்களை சந்திக்க விருப்பமா என்றார்.
பெரும் பயணத் திட்டங்களிடையே இருந்தாலும் தோழர் ரபீக் கல்வெட்டு ஆய்வாளரை சந்திக்கலாமே என்றார். ஸ்ரீ ஒரு ஆம்னியை அழைக்க எங்கள் பயணம் துவங்கியது.
நற்சாந்து பட்டியின் ஓர் எளிய உணவகத்தில் சில இட்டலிகளை உள்ளே தள்ளி விட்டு கல்வெட்டு ஆய்வாளருக்காக காத்திருந்தோம். திடீரென எதிர்பட்டார் நல்லாசிரியர் ஒருவர். புதுகை மாவட்டத்தின் நல்லூர் பள்ளியின் அறிவியல் ஆசிரியர், திரு. முரளி, இவரும் எங்களுடன் கலந்து கொண்டார். தனது மிக முக்கியமான இல்லறப் பணிகளைக்கூட தவிர்த்து விட்டு எங்களுடன் இணைந்தார் கல்வெட்டு ஆய்வு நிபுணர் திரு. ராஜேந்திரன். அவரது விவரணைகளைக் கேட்டுக் கொண்டே கல்வெட்டுக்கள் நிறைந்த பக்கத்து ஊரை அடைந்தோம்.
கோவில் பூட்டப்பட்டிருந்தது. ஸ்வாமிகள் வீடு எங்கே என்ற ஸ்ரீ தனது தனிப்பட்ட செல்வாக்கால் கோவிலைத் திறக்க கல்வெட்டுக்களை தரிசிக்க முடிந்தது.
இதைத் தொடர்ந்து எனது நீண்ட நாள் கனவான பூலாங்குறிச்சிப் பயணம் எதிர்பாரா விதமாய் இன்று. முதல் முதலில் அந்தக் கல்வெட்டை கண்டறிந்த உயர் திரு ராஜேந்திரன் அவர்களுடனே பார்க்கும் வாய்ப்பு. இவைகுறித்த பதிவுகளை தனியே எழுத இருப்பதால் இப்போதைக்கு டாட்.
காலை ஏழுமணிக்கு துவங்கிய பயணம் மாலை நான்கு வரை நீண்டது. இருப்பினும் எவ்வளவு தகவல்கள் எனது இந்த நாளை நெகிழ்வாக, இனிதாக பொருள்மிக்கதாக மாற்றிய நண்பர்களுக்கு நன்றி.
கூடவே மணவைத் திருவிழாவிற்கு சென்றிருக்கும் எனது குடும்பத்தினருக்கும்! (மச்சான் மதுரை தமிழன் அவர்களின் மேலான கவனத்திற்காக)
அன்பன்
மது
மறக்க முடியாத இனிமையான காலைப்பொழுது....வாய்ப்பிற்கு நன்றி...விதைக்கலாம் நண்பர்களுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteவெறும் மரக்கன்றுகளை மட்டுமல்ல, வாராவாரமும் -37ஆவது ஞாயிறாக- விதைக்கலாம் இளைஞர்கள் நடுவது அன்பையும் சேர்த்தே என்பதை முன்னரே அறிந்திருந்தாலும், இம்முறை வைகறை குடும்ப நிதியாக ரூ.27,000 தந்துள்ளதை -அதிலும் நீங்கள் மட்டுமே ரூ.10,000 - என்பதை அறிந்து நெகிழ்ந்தேன்.. அன்போடு பண்பும் விதைக்கப்படுவதை உலகோர் பாராட்டத் தொடரட்டும் பயணம். அன்பின் திரு சுலைமான் அவர்களுக்கும் நம் விதைக்கலாம் தம்பிகளுக்கும் என் வணக்கத்தையும் அன்பையும் தெரிவிக்க வேண்டுகிறேன். வணக்கம்.
ReplyDeleteபணிகள் தொடர்ந்து இலக்கை அடைய வேண்டுமே அண்ணா ..
Deleteஇனிமையான நிகழ்வுகள்......
ReplyDeleteபாராட்டுகள் நண்பர்களே....
நல்லதொரு பணியில் ஈடுப்டும் தங்களுக்கும் விதைக்கலாம் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதடிகொண்டு அய்யனாரை காண்பித்த திருமிகு.ராமதாஸ் அவர்களுக்கும், மற்ற விதைக்கலாம் நண்பர்களுக்கும் வந்து சிறப்பு செய்த ரபீக் சார் கீதா அம்மா மணி அண்ணன் அவர்களுக்கும் நன்றிகள் பல... அதன்பின் அறிய வாய்ப்பினை ஏற்படுத்திய மணி அண்ணனுக்கு மறுமுறை மனமார்ந்த நன்றிகள்
ReplyDelete